Wednesday, May 26, 2021

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்." (மாற்கு 10:44)

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்." (மாற்கு 10:44)

இயேசு தனது பன்னிரு சீடர்களோடு
யெருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது,

 "மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப் படுவார். 

அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு, அவரைப் புறவினத்தாரிடம் கையளிப்பர்.

அவர்கள் அவரை எள்ளிநகையாடி, துப்பி, சாட்டையால் அடித்துக் கொல்லுவார்கள். 

அவரோ மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்" 

என்று  தனது பாடுகளை பற்றியும்,
மரணத்தைப் பற்றியும், உயிர்ப்பை பற்றியும் விளக்கிக் கொண்டிருந்தார்.

சீடர்கள் புத்திசாலிகளாக இருந்திருந்தால் அவர் சொன்னதை பற்றி கூடுதல் விவரம் கேட்டிருப்பார்கள்.

ஆனால் யாகப்பரும் அருளப்பரும் அவரிடம்

 "நீர் உம் மாட்சிமையில் வீற்றிருக்கும்போது, எங்களுள் ஒருவர் உமது வலப்பக்கமும், மற்றவர் உமது இடப் பக்கமுமாக அமர அருளும்" 

என்று கேட்டார்கள்.

அதாவது அவர் அரசாள வரும்போது அவர்களுக்கு உயர்ந்த பதவிகள் வேண்டும் என்று கேட்டார்கள்.

இயேசு மெசியா என்பதை நம்பினார்கள். ஆனால் மெசியா யூதர்களுக்கு அரசாட்சியை மீட்டு தருவார் என்ற உலகியல் கண் நோக்கிலேயே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு விண்ணகம் எய்துவதற்கு
கொஞ்ச நேரத்திற்கு முன்புகூட,

"ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு அரசாட்சியை நீர் மீட்டுத்தரும் காலம் இதுதானோ?" 

என்று கேட்டவர்கள் சீடர்கள்.

ஆகவேதான் இயேசு தன் பாடுகளைப் பற்றி கூறியதை கூட கருத்தில் வாங்காமல் தங்களது பதவியை பற்றி பேசினார்கள்.

இயேசு "புறவினத்தார்தான் பதவிகளுக்கு ஆசைப்படுவார்கள்,

ஆனால் நீங்கள்  அப்படி இருக்கக்கூடாது. உங்களுக்குள் எவன் பெரியவனாய் இருக்க விரும்புகிறானோ, அவன் உங்கள் பணியாளனாய் இருக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்." என்றார்.

அதாவது அஞ்ஞானிகள்தான் அதிகாரம் செலுத்துவதை பெருமையாக எண்ணுவார்கள்.

ஆனால் இயேசுவின் சீடர்கள் ஊழியம் செய்வதை பெருமையாக எண்ண வேண்டும்.

இயேசு கடவுள். இந்த உலகமே அவரது அதிகாரத்தின் கீழ் தான் இருக்கிறது. 

ஆனால் அவர் அதைப்பற்றி கவலைப்படாமல் ஊழியம் செய்வதற்காகவே மனிதனாக பிறந்திருக்கிறார்.

ஊழியம் செய்வதுதான் ஆட்சி செய்வதற்கு சமம்.

ஆகவே இயேசுவுக்கு சீடர்களாக இருக்க விரும்புவோர் மற்றவர்களுக்கு பணிபுரியும் ஊழியர்களாகவே இருக்க வேண்டும்.

இதை வலியுறுத்தவே இறுதி வியாழனன்று இயேசு தனது  சீடர்களின் கால்களைக்  கழுவினார்.

இயேசு ஒரு வாய்ச்சொல் வீரர் அல்ல. சாதனையாளர். 

அவரது போதனைகளை எல்லாம் வாழ்நாளிலேயே சாதித்து காண்பித்திருக்கிறார்.

அவர் நினைத்திருந்தால் ஒரு அரச குடும்பத்தில் பிறந்திருக்கலாம்.

ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தார்.

30 ஆண்டுகள் கீழ்படிந்துதான் வாழ்ந்தார்.

அவர் நற்செய்தி போதித்த காலத்தில் தலை சாய்க்க கூட அவருக்கு சொந்த இடம் இருந்ததில்லை.

கிடைத்த இடத்தில் கிடைத்த உணவை உண்டார்.

மரித்தது கூட குற்றவாளிகளுக்கு உரிய சிலுவை மரத்தில்தான்.

அடக்கம் செய்யப்பட்டது அடுத்தவரது கல்லறையில்.

நாம் அவருடைய சீடர்கள். எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

இயேசுவின் வாழ்க்கைமுறையை சிறிது தியானித்து விட்டு  அதோடு நமது வாழ்க்கை முறையை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஊழியராக வாழ்கின்றோமா?
பிறரை அதிகாரம் செய்பவர்களாக வாழ்ந்தோமா?

பிறரை வழிநடத்த வேண்டிய பதவி நமக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட பதவி உணர்வு இல்லாமல் சேவை உணர்வோடு பணிபுரிய வேண்டும்.

நமக்கு கீழ் உள்ளவர்களும் நம்மை அவர்களில் ஒருவராக கருதும்படி நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

இறைவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்ற அன்னை மரியாள் எந்த அளவிற்கு தன்னை அடிமை நிலைக்கு தாழ்த்தி  தாழ்ச்சியோடு வாழ்ந்தாள் என்பதை நாம் அறிவோம்.

அன்னை மரியாளைப் போல அடிமை உணர்வுடன் பணிபுரிபவர்கள்தான் மரியாளின் மைந்தனுக்கு ஏற்ற சீடர்கள்.

பதவி என்பது தரப்பட்ட பொறுப்புதானேயொழிய பெருமை படத்தக்க உரிமைப் பொருள் அல்ல.

பொறுப்பை நிறைவேற்றுவது நமது கடமை.

அரசன் தனது பொறுப்பை நிறைவேற்றுவதும் கடமைதான்.

வேலைக்காரன் தனது பொறுப்பை நிறைவேற்றுவதும் கடமைதான்.

கடமையை பொறுத்தமட்டில் அரசனுக்கும் வேலைக்காரனுக்கும் வித்தியாசம் இல்லை.

இருவருமே பணி உணர்வோடு கடமையை நிறைவேற்ற வேண்டும். 

சர்வ வல்லமையுள்ள இறைமகனே

 தந்தை தந்த பணியாகிய 

மனித மீட்புக்காக  மனிதனுடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக  

மனித சுபாவம் எடுக்கும் அளவிற்கு தன்னையே தாழ்த்தி

 தந்தையின் சித்தத்தை நிறைவேற்றும் உணர்வோடு 

 பாடுகள் பட்டு, சிலுவை மரணத்தையும் ஏற்றுக்கொண்டார்.

இறைமகன் தனது படைப்புகளாகிய சீடர்களின் பாவங்களைக் கழுவும் அறிவிற்கு தன்னையே தாழ்த்திக் கொண்டார்.

ஒன்றுமில்லாமையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் நாம்.

ஊழியனாக பணி செய்ய நமக்கு கிடைத்ததே பெரிய பாக்கியம்.

அதிலும், சர்வ வல்லப கடவுளுக்கு ஊழியம் செய்ய நமக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்.

கடவுளுக்கு பணிசெய்யும் உணர்வோடு ஊழியம் செய்வோம்.

விண்ணக பாக்கியம் நமதே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment