Friday, May 21, 2021

"நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல் அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்". (அரு. 17:23)

,"நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல் அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்"
(அரு. 17:23)


 தந்தையை நோக்கி இயேசு செபிக்கும் ஒவ்வொரு   வசனமும் நம்மை பரிசுத்த திரியேக தேவ ரகசியத்துக்குள்  அழைத்துச் செல்கிறது.

"இவ்வாறு நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால்,

 அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக:

 இங்ஙனம், நீர் என்னை அனுப்பினீர் என்றும், 

நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல்

 அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் 

உலகம் அறிந்துகொள்ளும்."

தந்தை மகனுள்ளும், 
தூய ஆவியுள்ளும்.
 
 மகன் தந்தையுள்ளும்,
தூய ஆவியுள்ளும்,

தூய ஆவி தந்தையுள்ளும், மகனுள்ளும்,

ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.

இயேசு சீடர்களுக்குள்ளும் 
சீடர்கள் அவருக்குள்ளும்
 இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

குறைவுதான் நமது இயல்பு.

நிறைவு கடவுளின் இயல்பு.


குறைவு நிறைவை நோக்கி வளரலாம், நிறைவாக முடியாது.

ஆனால் 

இயேசு, "தந்தை நிறைவு உள்ளவராக இருப்பது போல நீங்களும் நிறைவு உள்ளவர்களாக இருங்கள்" 

என்று சீடர்களிடம்   சொல்லியிருக்கிறார்.

இது சீடர்களும் கடவுளைப்போல்   ஆக வேண்டுமென்ற,

அதாவது

 அந்த அளவிற்கு வளர்ச்சியடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு வாழ வேண்டும் 

என்ற அவரின் ஆசையை வெளிப்படுத்துகிறது .

ஆங்கிலத்தில் Aim, objective என்று இரண்டு வார்த்தைகள் உண்டு.

Aim என்றால் இறுதி (Ultimate) நோக்கம். 

இறுதி நோக்கத்தை அடைய பல படிகள் உண்டு. 

ஒவ்வொரு படியாக ஏறி இறுதி நோக்கத்தை அடைய வேண்டும்.

ஒரு படிக்கு அடுத்த படி objective.

எல்லா படிகளையும் ஏறி aim ஐ அடைந்த பின்  வளர்ச்சி முற்றுப்பெறும்.

நமது வாழ்க்கையின் aim இறைவன்.


நமது ஆன்மீக வாழ்க்கை குறைகள் நிறைந்தது. ஒவ்வொரு குறையாக நீக்கி, வளர்ந்து, நிறைவோடு (இறைவனோடு) இணைய வேண்டும்.

இணையும் போது நமது குறை  நிறைவுக்குள் சென்று  விடும்.

அதன்பின் நாமும் நிறைவோடு முழுமையாக இணைந்து விடுவோம். 

இந்நிலை விண்ணக வாழ்வில்தான் நடக்கும்.

இறைவனோடு முற்றிலும் இணையும்போது,

நாம் கடவுளாக மாறாவிட்டாலும்,

கடவுளோடு முற்றிலும், பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றித்து விடுவோம்.

அப்போது,

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)

என்ற இயேசுவின் ஆசை நிறைவேறும்.

கடவுள் நிறைவானவராக இருப்பதால்தான்

அவர் எல்லோரையும்,

நல்லவர்களையும், கெட்டவர்களையும் நேசிக்கிறார்.

நம் அன்பு குறைவானதாக இருக்கலாம். 

அந்த குறைவான அன்பையும் முழுமையாக பயன்படுத்தி 

நாமும் எல்லோரையும் நேசிக்க ஆரம்பிக்கும் போது 

நாம் நிறைவாக விண்ணகத் தந்தையை போல் வாழ முயற்சிக்கிறோம்.

"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: 

உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்:

 உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.


45 அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள். 

அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். 

நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்."

இயேசுவின் இந்த ஆசையை நாம் நிறைவேற்றி விட்டால் 

நாம் தந்தையைப் போல் நிறைவாக மாற முயற்சி செய்கிறோம்.

அதாவது விண்ணக வாழ்விற்கு ஏற்றவர்களாக மாறிவிட்டோம்.


"நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல் அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்"

இந்த ஜெப வசனத்தில் இயேசு தந்தையை நோக்கி:

"தந்தையே, நீர்  என்னை அன்பு செய்வது போலவே 

உம்மால் படைக்கப்பட்ட அவர்களையும் அன்பு செய்கிறீர்"

என்று சொல்கிறார்.

பரிசுத்த மூவொரு தேவன் தன்னைத் தானே அன்பு செய்வது போலவே நம்மையும் அன்பு செய்கிறார்,

என்ற உண்மையை இயேசு சீடர்களுக்கு அறிவிக்கிறார்.

"உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய்,

ஏனெனில் என்னை நான் அன்பு செய்வது போல உன்னை நான் அன்பு செய்கிறேன்."

என்று சொல்கிறார்.

இறைவனின் அன்பு அளவற்றது.

அளவற்ற அன்பினால்தான் நம் ஒவ்வொருவரையும் அவர் அன்பு செய்கிறார்.

 நாம் அவரை அன்பு செய்யும் போது நம்மால் அளவற்ற அன்பினால் அன்பு செய்ய முடியாது. 

ஏனெனில் நமது அன்பு அளவு உள்ளது. 

ஆனால் நமது அளவுள்ள அன்பை முழுமையாக பயன்படுத்தி அவரை அன்பு செய்ய முடியும். 

ஏழைக் கைம்பெண் காணிக்கையாக சிறிது கொடுத்தாலும் 

அவளிடம் உள்ளதை எல்லாம் கொடுத்து விட்டாள். 

உள்ளதை எல்லாம் கொடுத்தது கடவுளுக்கு ஏற்றதாய் இருந்தது.

 அதேபோல நம்மால் அதிகபட்ச அளவு எவ்வளவு அன்பு செய்ய முடியுமோ அவ்வளவு முழுமையாக அன்பு செய்தால் 

நம்மிடம் உள்ளதை எல்லாம் இறைவனிடம் கொடுத்து விட்டதாகத்தான் பொருள். 

 கடவுள் 'அவரிடம் உள்ளதை எல்லாம்' நமக்குத் தருகிறார்.

நாமும் 'நம்மிடம் உள்ளதை எல்லாம்' அவருக்கு கொடுக்கிறோம்.

ஆகவேதான் நமது அன்பை இறை அன்போடு ஒப்பிடுகிறார்.

தம திரித்துவம் என்ற இறைக் குடும்பத்திற்குள் நம்மையும் இணைத்துக் கொள்கிறார்.

மூவொரு தேவனுக்குள் நாமும் சென்று விடுவோம்.

மூவொரு தேவன் நம்முள் வாழ்வது போல நாமும் அவருள் வாழ்வோம்.

இதைவிட பெரிய பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்?

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment