Tuesday, May 25, 2021

உண்மையான பக்தன் யார்? (தொடர்ச்சி)

உண்மையான பக்தன் யார்?
(தொடர்ச்சி)

நமது பிரிவினை சகோதரர்கள் நம்மிடம் எழுப்பும் ஒரு கேள்வி:

''இறைவன்தானே நம்மைப் படைத்து, பரமரித்து வருகிறார்.

நம்மைப் படைப்பதற்கோ, மீட்பதற்கோ அவருக்கு யாருடைய சிபாரிசும் தேவைப்படவில்லையே.

 நாம் ஏன் அவரிடம் பேசுவதற்கு சிபாரிசுக்கு ஆட்களைத் தேடி அலைய வேண்டும்?

 நாம் சிபாரிசுக்காகத் தேடும் புனிதர்கள் இறந்த மனிதர்கள் அல்லவா!"

பைபிள் மட்டும் போதும் என்று சொல்லிக்கொண்டு செல்லுமிடமெல்லாம் அதை எடுத்துச் செல்பவர்கள்  

 அதை ஒழுங்காக வாசித்திருந்தால் ஒரு உண்மை புரிந்திருக்கும்.

நமது அனுமதி இன்றி நம்மை படைத்த கடவுள் 

நமது அனுமதி இருந்தால்தான் நம்மை இரட்சிப்பார்.

ஏனெனில் அனுமதி இல்லாத செயல்களை செய்து பாவங்கள் புரிபவர்கள் நாம்தான்.

இரட்சிக்கப்பட
நமது அனுமதியை பெறுவதற்காகத்தானே

 இறைமகன் விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி வந்து

பாடுபட்டு, சிலுவையிலே தன்னையே பலியாக்கினர்!

இயேசு மனிதர்களுடைய நோய் நொடிகளை  குணமாக்க மூன்று விதமான நடைமுறைகளை கையாண்டார்.

சிலருடைய நோய்களை  நோயாளி கேளாமல் கூட  அவராகவே குணமாக்கினார்.

உ.ம்.

ஒரு கைம்பெண்ணின் மகன் இறந்து விட்டான்.

அவள் அழுது கொண்டிருந்தாள்.

 இயேசுவிடம் உதவி எதுவும் கேட்கவில்லை. 

ஆனால் ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார்.

பின்பு முன்னால் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிவந்தவர்கள் நின்றார்கள். நின்றதும், "இளைஞனே, உனக்கு நான் சொல்லுகிறேன், எழுந்திரு" என்றார்.

15 இறந்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். தாயிடம் அவனை ஒப்படைத்தார்.


சிலருடைய நோய்களை நோயாளிகள் கேட்டதன் பேரில் குணமாக்கினார்.

உ.ம்:
பிறவிக் குருடனைக் குணமாக்கியது.

பத்து தொழு நோயாளிகளைக் குணமாக்கியது.


சிலருடைய நோய்களை மற்றவர்களுடைய சிபாரிசின் பேரில் குணமாக்கினார்.

உ. ம்
நூற்றுவர் தலைவன் ஒருவன்
இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, யூதரின் மூப்பரை அவரிடம் அனுப்பித் தன் ஊழியனைக் காப்பாற்ற வருமாறு வேண்டினான்.

4 அவர்களும் இயேசுவிடம் வந்து, வருந்திக் கேட்டதாவது: " உம்மிடம் இவ்வரம் பெறுவதற்கு அவர் தகுதியுள்ளவரே.

5 ஏனெனில், நம் மக்கள்மீது அவருக்கு அன்பு மிகுதி. நமக்கெனச் செபக்கூடம் கட்டியிருக்கிறார்."

சிபார்சு செய்தவர்களை இயேசு தடுக்கவில்லை.

"இயேசு அவர்கள்கூடப் போனார்"

இயேசு மற்றவர்களுக்காக பரிந்து பேசுகிறவர்களைத் தடுக்கவில்லை.


"சிபாரிசுக்கு ஆள் எதற்கு? கடவுளிடம் நேரடியாக கேட்க வேண்டியது தானே"

என்று கூறும் பிரிவினை நண்பர்கள் ஏன் ஜெபக் கூட்டங்கள் நடத்தி நோயாளிகளுக்காக ஜெபிக்கிறார்கள்?

காணிக்கை பிரிப்பதற்காக மட்டுமா?

 இவர்களே மற்றவர்களுக்காக செபிக்கும் போது புனிதர்கள் ஏன் செபிக்கக்கூடாது?

கேட்டால் உடனே கூறுவார்கள், "உயிரோடு உள்ளவர்கள் செபிக்கலாம். இறந்தவர்கள்  செபிக்க முடியாது" என்று.

ஆனால் நமக்குத் தெரியும், "இறந்தவர்களுடைய ஆன்மா தொடர்ந்து உயிர் வாழ்கிறது.

வெறுமனே உயிர் வாழவில்லை,
இறைவனோடு ஒன்றித்து  உயிர் வாழ்கிறது.

உலகில் இறைவனை பார்க்க முடியாத நிலையிலும் அவரை நோக்கி செபிக்க முடிந்தவர்களால் ஏன் அவரோடு ஒன்றித்து வாழும்போது செபிக்க முடியாது?

கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்துவின் ஞான உடல்.

தலை கிறிஸ்து.

உலகில் வாழும் கிறிஸ்தவர்களும்,
உத்தரிக்கிற தலத்தில் உத்தரிக்கும்
 கிறிஸ்தவர்களும், மோட்சத்தில் வாழும்  கிறிஸ்தவர்களும்

ஞான உடலின் உறுப்புக்கள்.

ஞான உடலின் உறுப்புக்கள் 
கிறிஸ்துவில் உயிர் வாழ்பவர்கள்.

அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும்.

மோட்சத்தில் வாழ்பவர்களுக்கு நமது உதவி தேவை இல்லை. ஏனெனில் அவர்கள் வாழ்வின் நோக்கத்தை அடைந்து விட்டார்கள்.

உத்தரிக்கிற தலத்தில் இருப்பவர்களுக்கும், நமக்கும் மற்றவர்களின் செப உதவி தேவை.

மோட்சத்தில் வாழ்பவர்களும்,உத்தரிக்கிற தலத்தில் இருப்பவர்களும் நமக்காக செபிக்கலாம்.

மோட்சத்தில் வாழ்பவர்களும், நாமும் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக செபிக்கலாம்.

செபிக்க வேண்டும்.

விண்ணகத்தில் வாழ்பவர்களும் நமது சகோதர, சகோதரிகளே.

நமக்காக செபிக்கும்படி நாம் அவர்களை வேண்டலாம். அவர்களும் நமக்காக செபிக்கிறார்கள்.

இது தாய் திருச்சபையின் போதனை.

திருச்சபையை சேராதவர்கள் அதன் போதனைகளை ஏற்றுக் கொள்ளாதது பற்றி நமக்கு கவலை இல்லை.

நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் புனிதர்கள்  மீது நமக்குள்ள பக்தியை எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதுதான்.

ஒரு அடிப்படை உண்மையை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இறைவனோடும் புனிதர்களோடும் நமக்குள்ள உறவு நூற்றுக்கு நூறு ஆன்மீக உறவு.

நாம் அவர்களிடம் கேட்கும் உதவி ஆன்மீக வளர்ச்சி சம்பந்தப் பட்டதாக இருக்கவேண்டும். 

நாம் விண்ணுலக வாழ்வு அடைய தேவைப்படும் உதவிகளாக இருக்க வேண்டும்.

உலக வாழ்வு சம்பந்தப்பட்ட உதவிகளை செய்யும்படி புனிதர்களை கேட்க கூடாதா? 

நாம் உலகில் வாழ்வதால், நமது ஆன்மீக வாழ்வுக்கு உலகத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதிருப்பதால்,

நமது ஆன்மீக வாழ்விற்கு பங்கம் விளைவிக்காத எந்த உலக உதவியையும் கேட்கலாம்.

ஆன்மீக வாழ்வுக்கு பங்கம் விளைவிக்கும் எதையும் கேட்டால் அதை இறைவன் நமக்கு தர மாட்டார். 

ஆன்மீக வாழ்வுக்குஉதவிகரமாய் இருக்குமானால் புனிதர்கள் அதற்காக வேண்டுவார்கள்.    இறைவனும்  அதை கட்டாயம் நமக்கு தருவார்.

இது விண்ணப்பங்கள் பற்றி.


எல்லாவிதமான உறவுகளுக்கும் அடிப்படை அன்பு.

அந்த வகையில் புனிதர்கள் மீதான 
பக்திக்கும் அடிப்படை அன்பு.

அன்பின் பண்புகள் நமக்குத் தெரியும்.

அன்பு தனது அன்பராகவே மாறிவிடும். நாம் யாரை அன்பு செய்கிறோமோ அவராகவே நாம் மாறிவிடுவோம். 

அதாவது அன்பரின்  பண்புகள் அனைத்தும் நமது பண்புகளாக மாறிவிடும்.

நாம் எந்த புனிதர் மீது பக்தி வைத்திருக்கின்றோமோ அவராகவே நாம் மாறிவிட்டால்தான் நாம் அவரது உண்மையான பக்தன்.

அன்னை மரியாள் மீது நமக்கு உண்மையான பக்தி இருந்தால்  அவளுடைய பண்புகள் யாவும் நமது பண்புகளாக மாறிவிடும்.

நாமும் அவளைப் போலவே தாழ்ச்சி உள்ளவர்களாகவும்,

கற்பு நெறி வழி வாழ்பவர்களாகவும்,

 இயேசுவின்  பணிக்கு நம்மை முழுவதும் அர்ப்பணித்து 
விட்டவர்களாகவும், 

ஆண்டவரின் அடிமைகளாகவும்,

இயேசுவுக்காக எல்லாவிதமான கஷ்டங்களையும் அனுபவிக்கிறவர்களாகவும், 

அவள் இயேசுவின் சீடர்களுக்கு உதவிகரமாய் இருந்ததுபோல இறைப் பணியாளர்களுக்கு உதவிகரமாய் இருப்பவர்களாகவும்

மாறிவிடுவோம்.

அப்படி மாறினால்தான் நாம் உண்மையிலேயே மாதா பக்தர்கள்.

மாதாவின் திருத்தலங்களுக்கு அடிக்கடி திரு யாத்திரை போவதால் மட்டும் மாதா பக்தர்களாக மாற முடியாது.

மாதாவிடம் ஜெப உதவி கேட்டுக் கொண்டிருப்பதால் மட்டும் மாதா பக்தர்கள் ஆக முடியாது.

அவளுக்கு பிடித்தமான செபமாலையை சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் மாதா பக்தர்கள் ஆக முடியாது.

நாள் முழுவதும் செபமாலை சொல்லிவிட்டு துன்பம் வரும்போது முணுமுணுக்க ஆரம்பித்தால்

நமது செபமாலைக்குப் பொருளே இல்லை.

வியாகுல மாதா தான் இயேசுவின் தாய் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மாதாவை நோக்கி ஜெபித்துக் கொண்டே இருப்பதால் மட்டுமல்ல,

மாதாவாக வாழ்ந்தால் மட்டுமே நாம் மாதா பக்தர்கள்.

நாம் எந்தெந்த புனிதர்களின் மீது பக்தி வைத்திருக்கிறோமோ அந்த புனிதர்களாக வாழ்ந்தால்தான் அவர்களின் பக்தர்கள்.

செவ்வாய்க்கிழமை தோறும் திருப்பலி காண்பதாலும்
(திருப்பலிக்கு உரிய பலன் உண்டு)

 அந்தோனியார் திருத்தலங்களுக்கு வருடாவருடம் திருயாத்திரை போய் வருவதாலும் அந்தோனியார் பக்தர்கள் ஆக முடியாது.

அந்தோனியாரின் பண்புகளோடு வாழ்ந்தால்தான் அந்தோனியார் பக்தர்கள்.

புனிதர்கள் பக்தி புனிதர்களை நோக்கி  செபிப்பதில் அடங்கி இருக்கவில்லை.

அவர்களாக வாழ்வதில்தான்  அடங்கியிருக்கிறது.

புனிதர்களின் புனிதத்தன்மையே அவர்கள் இறைவனுக்காக வாழ்ந்ததில்தான் அடங்கி இருக்கிறது.

இறைவனுக்காக வாழ்பவர்களே உண்மையான  பக்தர்கள்.

புனிதர்கள் மீது நமக்கு இருக்கும் உண்மையான பக்தி நம்மை புனிதர்களாக மாற்றிவிடும்.

புனிதர்கள் மீது பக்தி கொள்வோம்.

புனிதர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment