Thursday, May 13, 2021

"இன்னும் சிறிதுகாலத்தில் என்னைக் காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள்."(அரு.16:16)

"இன்னும் சிறிதுகாலத்தில் என்னைக் காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள்."
(அரு.16:16) 

இறுதி உணவு வியாழனன்று இயேசு சீடர்களோடு மனம் திறந்து பேசியபோது சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல்  உருவகமாய்ச்  சொல்கிறார்

அப்படி உருவகமாய் சொன்ன வசனம் தான்:

"இன்னும் சிறிதுகாலத்தில் என்னைக் காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள்."

உருவகமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு நேரடியாக பொருள்தேடி ஒன்றும் புரியாமல் சீடர்கள்,

"இந்தச் "சிறிது காலம்" என்பது என்ன ? அவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே! " என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இயேசு கூறியதன் பொருள் சீடர்கள் யாருக்குமே தெரியவில்லை.

சாதாரணமாக பேசும்போதே சீடர்கள் பொருள் புரியாமல் ஒருவர்  முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இயேசு உருவகமாக பேசினார் என்பதே அவர்களுக்கு புரியவில்லை.  

பொருள் தெரியாமல் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்ததை கவனித்த இயேசு அவர்களை நோக்கி ஒரு ஒப்புமை கூறுகிறார்:

"குழந்தை பிறக்கும்போது தாயானவள் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் துன்புறுகிறாள்:

 குழந்தையைப் பெற்றெடுத்த பின்போ, உலகில் மனிதன் ஒருவன் தோன்றினான் என்ற மகிழ்ச்சியால் தன் வேதனையை மறந்துவிடுகிறாள்."
(அரு.16:21)

குழந்தை பிறக்கும் போது தாய்க்கு பேறுகால வேதனை தாங்க முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது.

ஆனால் குழந்தை பிறந்த பிறகு அதே தாய்க்கு குழந்தையை பார்த்தவுடன் வேதனையில் அளவைவிட பன்மடங்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. பேறுகால  வேதனை மறந்து விடுகிறது.

இயேசு தந்தையிடம் சென்றபின் சீடர்களுக்கு ஆன்மீக ரீதியாக இது போன்ற ஒரு அனுபவம் கிட்டும்.

முதலில் சீடர்கள் நற்செய்திப் பணியில் இறங்கும்போது அளவுக்கு அதிகமான துன்பங்கள் ஏற்படும்.

நற்செய்தியை அறிய விரும்பாத உலகம் அவர்களை வெறுக்கும.

அவர்களைத் துன்புறுத்தும்.

இயேசுவை விரும்பாதவர்கள் அவர்களைச் செபக்கூடத்திற்குப் புறம்பாக்குவார்கள்.

 அப்போது அவர்களைக் கொல்லுபவர்கள் கடவுளுக்குப் பலி செலுத்துவதாக எண்ணிக்கொள்வார்கள்.

அவர்கள் அழுவார்கள், புலம்புவார்கள், 

ஆனால் அதைப் பார்க்கும் உலகமோ மகிழும்.

இயேசுவின் சீடர்கள் என்பதனாலேயே அவர்கள் துன்பப்பட வேண்டியிருக்கும்.


ஆனாலும் துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல.

அவர்கள் அனுபவித்த  துன்பம் இன்பமாக மாறும்.

அவர்கள் அனுபவிக்கப் போகும் துன்ப காலத்தை 
'இன்னும் சிறிதுகாலத்தில் என்னைக் காணமாட்டீர்கள்,'
என்றும்,

அதன்பின் அனுபவிக்கப் போகும் இன்ப காலத்தை
 "பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள்."
என்றும் இயேசு உருவகப்படுத்தி முதலில் சொல்லியிருக்கிறார்.

துன்பங்களை அனுபவிக்கும் போது இயேசு நம்மை விட்டு சென்று விட்டதுபோல் தோன்றும்.

இன்பம் திரும்பியவுடன் இயேசு நம்மிடம் வந்துவிட்டது போல் தோன்றும்.

இயேசு அவர் சொன்ன உருவகத்தை விளக்கிய பிறகு 

சீடர்கள்,

 "இப்பொழுதுதான் தெளிவாகப் பேசுகிறீர்: 

உருவகம் ஒன்றும் இல்லை! 

 உமக்கு எல்லாம் தெரியும், 

யாரும் உம்மைக் கேள்விகேட்கத் தேவையில்லை என்று இப்பொழுது தெரிகிறது.

 கடவுளிடமிருந்து நீர் வந்தீர் என்று இதனால் விசுவசிக்கிறோம்" என்றார்கள்.

இறைவாக்கை தியானித்த நமது மனதில் பதியவேண்டிய உண்மை:

இயேசுவுக்காக நாம் துன்பப்படும் போது இயேசு நம்மோடு இல்லாமல்
நம்மைத் தனியே விட்டுவிட்டு போய் விட்டது போல ஒருவித உணர்வு தோன்றும். 

ஆனாலும் இயேசு நம்மை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

துன்ப காலம் முடிந்து ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சியில் காலம் ஆரம்பிக்கும் போது இயேசு நம்மோடு இருப்பது நமக்கு புரியும்.


உண்மையில் நாம் துன்பப்படும் போதும் சரி,

 துன்பங்களைக் கடந்த பின்னும் சரி 

இயேசு தந்தையோடும் தூய ஆவியோடும் திரியேக தேவனாய் நமக்குள் தான் இருக்கிறார்.

"உலகம் முடியும் மட்டும் உங்களோடு தான் இருக்கிறேன்" என்று சொல்லிவிட்டுதான் விண்ணகம் எய்தினார்.

நாம் இயேசுவுக்காக துன்பங்களை அனுபவித்துக்கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் விண்ணகம் நம்மோடுதான் இருக்கிறது.

நமது உடல் என்னும் திரை அதை நமது  பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டிருக்கிறது.

திரை விழுந்த விநாடியே நாம் விண்ணகத்தில் இருப்போம்.

 பேறுகால வேதனையை அனுபவிக்காமல் குழந்தையைப் பார்க்கும் , இன்பத்தை அனுபவிக்க முடியாது.

அதுபோலவே இவ்வுலகில் இயேசுவுக்காக வாழும்போது ஏற்படும் துன்பங்களை அனுபவிக்காமல் 

விண்ணுலக பேரின்ப வாழ்வுக்குள் நுழையமுடியாது.

இறைவனுக்காக வாழும்போது துன்பங்கள் ஏற்படும் என்பதும் உறுதி.

சிலுவையைத் தூக்காமல் இயேசுவுக்கு சேவை செய்ய முடியாது.

இயேசுவுக்கு சேவை செய்யாமல் விண்ணகம் செல்ல முடியாது. 

இயேசுவுக்கு சேவை செய்யும் போது துன்பங்கள் வரும். தவிர்க்க முடியாது.

இயேசுவுக்காக அவற்றை ஏற்றுக் கொண்டால் பேரின்பம் தொடரும். உறுதியாக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment