Tuesday, May 4, 2021

"நான் உங்களுக்கு அளிக்கும் சமாதனமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று."(அரு.14:27)

"நான் உங்களுக்கு அளிக்கும் சமாதனமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று."
(அரு.14:27)


இயேசு இறுதி இரவு உணவின்போது தனது அப்போஸ்தலர்களிடம்:

"சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்: 

என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன்: 

நான் உங்களுக்கு அளிக்கும் சமாதனமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று."

என்று சொன்னார்.

''நான் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தது என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு அளிப்பதற்காகத்தான்.

நான் பிறந்த அன்று வானதூதர்கள் விண்ணில் இசைத்த கீதம் இதை விளக்கும்.

"விண்ணுலகில் இறைவனுக்கு மகிமையும் மண்ணுலகில் 
நல் மனதோர்க்கு சமாதானமும் உண்டாகுக!''

விண்ணுலகில் நித்திய காலமும் நான் சமாதானத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

 எனது சமாதானத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே உலகிற்கு வந்தேன்.

எனது நற்செய்தி சமாதானத்தின் செய்தி.

எனது வாழ்க்கை சமாதானத்தின் வாழ்க்கை.

நான் பாடுகள் பட்டு சிலுவையில் பலியாகப் போவது உலக சமாதானத்திற்காகத்தான்.

எனது சமாதானத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.

நான் தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானத்தை போன்றது அல்ல."

இது இயேசு சொன்ன வார்த்தைகளுக்கான விளக்கம்.

இயேசுவின் பார்வையில் சமாதானம் என்றால் என்ன?

உலகின் பார்வையில் சமாதானம் என்றால் என்ன?

வகுப்பில் ஒரு நாள் மறுநாள் நான் நடத்த திட்டமிட்டிருந்த Special class பற்றி மாணவர்களுக்கு அறிவித்த பொழுது,

"நாளை காலையில் சரியாக எட்டரை மணிக்கு வகுப்பு ஆரம்பிக்கும்.

நான் எட்டரை மணிக்கு வகுப்பில் இருப்பேன். 

எனக்கு முன்னாலேயே எல்லா மாணவர்களும் வகுப்பிற்கு வந்திருக்கவேண்டும்." என்று சொன்னேன்.

மறுநாள் ஒரு பையன் எட்டே முக்கால் மணிக்கு வகுப்பிற்கு வந்தான்.

"நேற்று நான் என்ன சொன்னேன்?"

"உங்களுக்கு முன்னால் நாங்கள் வந்துவிடவேண்டும் என்று சொன்னீர்கள், சார்.''

"எத்தனை மணிக்கு வகுப்பு ஆரம்பிக்கும் என்று சொன்னேன்?"

"எட்டரை மணிக்கு."

"இப்போது மணி என்ன?"

"எட்டே முக்கால் ."

''ஏன் பிந்தி வந்தாய்?"

"உங்களுக்கு முன்னால் வருவதற்காகத் தான்."

"நான் எட்டரை மணிக்கு வகுப்பிற்குள் வந்து வந்துவிட்டேன்.
நீ ஏன்‌ எட்டரைக்கு முன்னால் வரவில்லை?"

''நீங்கள் எட்டரைக்கு முன்னால் வரும்படி சொல்லவில்லை.

உங்களுக்கு முன்னால் வரும்படி தான் சொன்னீர்கள்.

இப்பொழுது நான் உங்களுக்கு முன்னால் தான் வந்து நிற்கிறேன்.

உங்களுக்கு முன்னால் வருவதற்காகத்தான் பிந்தி வந்தேன்."

அவன் ஒரு குசும்பன். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டது போல் நடித்தான்.

நாமும் இப்படித்தான் நம்மை நாமே நியாயப்படுத்தி கொள்வதற்காக அநேக வார்த்தைகளுக்கு அவற்றிற்குரிய பொருளைக் கொடுக்காமல் நம் இஷ்டத்திற்கு பொருள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒரு வார்த்தைதான் சமாதானம்.

சமாதானத்தின் தேவனாகிய இயேசுவிடமே சமாதானத்தின் பொருளை கேட்போமே:

"ஆண்டவரே சமாதானம் என்ற வார்த்தையின் உண்மையான பொருள் என்ன?"

"பரிசுத்த தம திரித்துவத்தின் மூன்று ஆட்களுக்கு இடையே நிலவும் அன்பு உறவையே சமாதானம் என்கிறோம்.

சமாதானம் என்றால் அன்பின் அடிப்படையிலான நல்லுறவு.

நாங்கள் மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே கடவுளாய் இருக்கிறோம்.

நான் தந்தையினுள்ளும், தூய ஆவியினுள்ளும் ஒரே கடவுளாய் வாழ்கிறேன்.

ஒரே கடவுளாகிய எங்கள் சமாதானத்தை நாங்கள் படைத்த மனிதனோடு பகிர்ந்து கொண்டோம்.

பாவம் அற்ற நிலையில் படைக்கப்பட்ட மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் சமாதான நல்லுறவு நிலவியது.
 
ஆதாம் செய்த பாவத்தினால் இறைவனோடு கொண்டிருந்த சமாதான உறவை இழந்தான்.

அவன் இழந்த சமாதான உறவை மீட்டுக் கொடுக்கவே இறை மகனாகிய நான் மனிதனாக பிறந்திருக்கிறேன்.

என்னோடு நீங்கள் சமாதானமாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் பாவம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

பாவம் என்னோடு உங்களுக்கு இருக்கும் நல்லுறவை முறித்துவடும்
.
பாவம் செய்ய நேர்ந்தால் அதற்காக மனஸ்தாபப்பட்டு என்னிடமிருந்து பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் பாவசங்கீர்த்தனம் என்னும் திரு அருள் சாதனத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்."

"ஆண்டவரே இப்போது புரிகிறது ஏன் நீர் மனிதனாக பிறந்த அன்று வானதூதர்கள் சமாதான கீதம் பாடினார்கள் என்று.

நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம் என்று விண்ணவர்கள் பாடினார்கள்.

இரண்டு நல்ல மனங்களுக்கு இடையில் மட்டுமே சமாதான உறவு நிலவ முடியும் என்பது இப்போது புரிகிறது.

நாங்கள் சமாதானம் என்ற வார்த்தைக்கு கொடுக்கும் பொருளே வேறு."

மனம் உள்ளவன்தான் மனிதன். 

நல்ல மனம் உள்ளவன் நல்ல மனிதன்.

மனிதர்கள் மனத்தை பற்றி கவலைப்படுவதே இல்லை.

சண்டைகள் இல்லாமல் இருப்பதே சமாதானம் என்று மனிதன் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறான்.

நாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடாமல் இருந்தால் அவை சமாதானமாக இருக்கின்றன என்பது மனிதனது நினைப்பு.

அதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் முடிவுக்கு வந்தால் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. அதாவது இனிமேல் சண்டை போடாமல் வாழ்வது என்று.

இப்படித்தான் முதல் உலகப்போர் முடிந்தவுடன் தோற்ற நாடுகள் வென்ற நாடுகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன.

உண்மையில் அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் சரத்துகள்தான் இரண்டாம் உலகப் போருக்கே காரணமாக இருந்தன.

ஒருவரை ஒருவர் அறியாத இரண்டு பேர் ஒரே புகை வண்டியில் அருகருகே அமர்ந்து பயணம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இருவரும் ஆளுக்கொரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவரையொருவர் பார்க்கவும் இல்லை, ஒருவரோடு ஒருவர் பேசவுமில்லை, ஆகவே சண்டை போடவில்லை.

 இதை வைத்து அவர்கள் சமாதானம் உள்ளவர்கள் என்று கூற முடியுமா?

சமாதானமாய் உள்ளவர்கள் சண்டை போட மாட்டார்கள்.

 ஆனால் சண்டை போடாதவர்கள் எல்லாம் சமாதானம் உள்ளவர்கள் அல்லர்.

ஒருவரை ஒருவர் நேசிப்பவர்கள் மட்டுமே சமாதானமாய் வாழ முடியும்.

உண்மையாக சமாதானம் மனதில் இருக்கிறது.

நல்ல மனது உள்ளவர்களுக்கு மட்டுமே சமாதானம் கிட்டும்.

நல்ல மனது என்றால்?

அன்பால் நிறைந்த மனது.

 இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கும் மனது.

தன்னைப்போல் தன் அயலானையும்  நேசிக்கும் மனது.

தன்னை வெறுப்பவர்களையும் நேசிக்கும் மனது.

அன்போடு ஒத்துவராத எந்த குணமும் இல்லாத மனது.

வெறுப்பு இல்லாத மனது.

யார் மீதும் கோபம் இல்லாத மனது.

மன்னிக்கத் தெரிந்த மனது.

நல்ல மனதில் இருக்கும் அன்புதான் சமாதானத்தின் ஊற்று.

நல்ல மனதில் நிரம்பி வடியும் இறையன்பும், பிறரை அன்புமே உண்மையான சமாதானத்தின் பிறப்பிடம்.

இறைமகன் இயேசு நமக்குத் தரும் சமாதானம் மூவொரு தேவனின் சமாதானம்.

அது நமது மனதில் உள்ள அன்பில் தோன்றி வாழ்வில் மலரும்.

உண்மையான சமாதானம் உள்ளவர்கள் எல்லோரையும் நேசிப்பார்கள்.

எல்லோருக்கும் நன்மையே செய்வார்கள்.

தங்களுக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்வார்கள்.

உண்மையான சமாதானம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணக வாழ்வுக்கு உரியவர்கள்.

"உங்களுக்கு சமாதானம் உண்டாகுக"

என்று சொல்வதும்,

"நான் உங்களை நேசிக்கிறேன் நீங்களும் என்னை நேசியுங்கள்''

என்று சொல்வதும் ஒன்றுதான்.

"அனைவருக்கும் சமாதானம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment