Friday, May 7, 2021

"நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்.''(அரு.15:14)னன

"நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்.''
(அரு.15:14)

"உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்.....நீங்கள் என் நண்பர்கள்.''

ஊழியர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

ஊழியர்கள் எப்போதும் தங்கள் எஜமானர் கூடவே இருப்பார்கள்.

நண்பர்கள் எப்போதும் தங்கள் நண்பர்கள் கூடவே இருப்பார்கள்.

எஜமானர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதே 
ஊழியர்களுடைய வேலை.

நண்பர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதே நண்பர்களுடைய இயல்பு.

வேலைக்கும், இயல்புக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

சம்பளத்துக்காக மட்டுமே செய்யப்படுவது வேலை.

நண்பர்களுடைய விருப்பத்தை தாமாகவே நிறைவேற்றுவது நண்பர்களின் இயல்பு.

இயல்பிலேயே கடவுள் அன்பானவர்.

ஆகவே அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

அன்பு செய்வதற்கும், அன்பு செய்யப் படுவதற்கும் என்றே மனிதனை படைத்தார்.

அதற்காகவே தன்னுடைய அன்பை மனிதனோடு பகிர்ந்து கொண்டார்.

படைக்கப்பட்ட நிலையில் மனிதன் கடவுளின் அன்புறவில்தான் வாழ்ந்தான்.

ஆனால் பாவம் செய்த நொடியில் கடவுளோடு கொண்டிருந்த அன்பிற்கு களங்கம் விளைவித்ததோடு,

அன்புறவையும் துண்டித்துக் கொண்டான்.

ஆனால் கடவுள் அவன்மீது கொண்ட அன்பு சிறிது கூட குறையவில்லை.

மனிதனாகவே துண்டித்துக் கொண்ட அன்பை மீட்டுத் தரவே இறைமகன் மனிதன் ஆனார்.

கடவுளிடமிருந்து நமது பாவத்திற்கான மன்னிப்பை பெற்ற நொடியிலேயே நமது முதல் பெற்றோரால் இழக்கப்பட்ட இறையுறவை நாம் திரும்பவும் பெறுகிறோம்.

பாவமற்ற நிலையில் அன்பு நமது இயல்பு ஆகிறது.

பாவமற்ற நிலையில் நாம் இறைவனை அன்பு செய்கிறோம்.

இறைவனை நமது இறைவன் என்பதற்காக மட்டுமே அன்பு செய்கிறோம்.

 இறைவன் நம்மை அன்பு செய்கிறார், நாமும் அவரை அன்பு செய்கிறோம்.

இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு அன்புறவு.

கடவுளும் நாமும் அன்பர்கள், அதாவது நண்பர்கள்.

அன்பர்களுக்கு இடையே உள்ள அன்பு நிபந்தனை அற்றது.

நிபந்தனையற்ற அன்பினால் நாம் இணைக்கப்பட்டிருப்பதால் தான்

இயேசு நம்மிடம்,

"நீங்கள் என் நண்பர்கள்." என்கிறார்.

நண்பர்கள் ஒருவர் மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது இயல்பு.

இறைவனது விருப்பத்தைத்தான் நாம் அவரது கட்டளைகள் என்கிறோம்.

ஆகவேதான் இயேசு

"நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்.'' என்கிறார்.

இயேசுவின் கட்டளையே,

"அன்பு செய்யுங்கள்" என்பதுதான்.

"நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை."


ஊழியர்களும் எஜமானரின் கட்டளையை நிறைவேற்றுகிறார்கள்,

 ஆனால் அன்பினால் அல்ல அவர்கள் ஊழியர்கள் என்பதற்காகவே.

"உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்: ஏனெனில், தலைவன் செய்வது இன்னது என்று ஊழியனுக்குத் தெரியாது."

எஜமானர் தன்னைப்பற்றிய ரகசியங்கள் எதையும் ஊழியனுக்கு தெரிவிக்க மாட்டார்.

என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே ஊழியனிடம் சொல்லுவார்.

 எதற்காக என்று அவனுக்கு தெரியாது.

ஆனால் இயேசுவோ தன்னைப் பற்றிய ரகசியங்களை  நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


"உங்களை நண்பர்கள் என்றேன்:

 ஏனெனில், தந்தையிடமிருந்து நான் கேட்டதையெல்லாம் உங்களுக்கு அறிவித்தேன்."

அவர் நமக்கு 
சொல்லியிருக்காவிட்டால் பரிசுத்த தம திரித்துவத்தைப் பற்றிய ரகசியம் நமக்கு எப்படி தெரியும்?

நம்மை அவர் நண்பர்களாக கருதுவதால்தான் தன்னைப்பற்றிய உண்மைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

உலகியல் ரீதியாக பார்த்தோமென்றால் ஏறக்குறைய சம அந்தஸ்து உள்ளவர்கள் இடையே தான் நட்பு மலரும்.

அலுவலகத்தில் பணி புரியும்  
peonக்கும், கம்பெனி முதலாளிக்கும் இடையில் நட்பு மலரும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால் சர்வ வல்லப கடவுளுக்கும், ஒன்றுமே இல்லாத நமக்கும் இடையில் நட்பு மலர்ந்திருக்கிறது என்றால்,

அது நமது தகுதியினால் அல்ல,

இறைவனின் பெருந்தன்மையாலும் (Magnanimity)

தாராள குணத்தினாலும் (Generosity)

அளவுகடந்த அன்பினாலும்தான்.

இயேசு வெறுமனே சொல்லளவில் நம்மை நண்பர்கள் என்று அழைக்கவில்லை.

உண்மையிலேயே நம்மை அவரது நண்பர்கள் ஆக்கிவிட்டார்.

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13)

என்று அவர் சொன்னதோடு நிற்கவில்லை.

பிறப்பு இறப்பு இல்லாமல் நித்தியராய் வாழ்ந்து கொண்டிருக்கும் 

அவர் பிறப்புக்கும் இறப்புக்கும் கட்டுப்பட்டு மனிதனாகப் பிறந்ததே அவரது நண்பர்களாகிய நமக்காகத்தான்.

பிறந்தது மட்டுமல்ல, அவர் சொன்னபடியே நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக தனது உயிரையும் கொடுத்து தனது உண்மையான அன்பை நிரூபித்திருக்கிறார்.

அன்பிற்கு ஒரு இயல்பு உண்டு. அன்பு செய்வது போல செய்யப்படவும் ஆசைப்படுவது அன்பு.

நமது உலகியல் வாழ்வில் கூட நாம் யாரையாவது அன்பு செய்தால், அவரும் நம்மை அன்பு செய்ய ஆசைப்படுவோம். காதலனுக்கும், காதலிக்கும் இடையே நிலவும் அன்பு நமக்கு அனுபவப் 
பூர்வமானது. 

இயேசு நம்மை உண்மையாகவே அன்பு செய்கிறார். நாமும் அவரை உண்மையாகவே அன்பு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

 அவர் நம்மை எப்படி அன்பு செய்கிறாரோ அப்படியே நாமும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அதாவது அவருக்காக நமது உயிரையும் தியாகம் செய்ய அளவிற்கு நமது அன்பின் அளவு இருக்கவேண்டும் என்று ஆசிக்கிறார்.

அவர் சிலுவையை சுமந்து பாடுகள் பட்டது போலவே நாமும் அவருக்காக  நமது சிலுவையை சுமக்க வேண்டுமென்றும், அவருக்காக கஷ்டப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்.

துன்பங்கள் வருவது இயல்பு, ஆனால் அவற்றை நாம் நமது ஆண்டவருக்காக ஏற்றுக் கொள்ளும்போது நாம் அவருடைய நண்பர்களாக செயல்படுகிறோம்.

அவரது அன்பு அளவற்றது. நாம் அளவு உள்ளவர்கள் ஆகையால் அவரது அன்புக்கு ஈடாக நம்மால் அன்பு செய்ய இயலாது.

 ஆயினும் நம்மால் நமது உயிரை அவருக்காக கொடுக்கும் அளவிற்கு அன்பு செய்ய முடியும்.

அதுவே நமது அதிகபட்ச அன்பு.

அதை இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காகவே,

 நமக்கு அயலானை தந்து

 நம்மை நாம் அன்பு செய்வது போலவே நமது அயலானையும் அன்பு செய்ய வேண்டும் என்று

 அன்பின் கட்டளையை 
கொடுத்திருக்கிறார்.

நமது அயலானை அன்பு செய்யும் போது அவரைத்தான் அன்பு செய்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்

அயலான்மீது நாம் கொண்டுள்ள அன்பு நமது சொல்லிலும், செயலிலும் மலர வேண்டும்.

செயலில் மலராத அன்பு செத்த அன்பு.

நமது அயலானுக்காக நமது உயிரைத் தியாகம் செய்தால் நாம் இயேசுவுக்காகவே தியாகம் செய்கிறோம்.

நாம் இயேசுவின் நண்பர்களாக இருப்பது போலவே இவ்வுலகில் நம்முடன் வாழும் அனைத்து மனிதர்களும் நம்முடைய நண்பர்களே.

 இயேசு நிபந்தனை இன்றி நம் அனைவரையும் அன்பு செய்வது போல 

நாமும் அனைத்து மக்களையும் நிபந்தனையின்றி அன்பு செய்ய வேண்டும்.

அவர்களும் நம்மைப் போலவே கடவுளின் பிள்ளைகள் என்பதற்காகவே அவர்களை நாம் அன்பு செய்ய வேண்டும்.

அவர்களுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இயேசுவுக்காகவே செய்கிறோம்.

"நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்.''

இயேசு நமக்கு தந்திருக்கும் இறையன்பு, பிறரன்பு சார்ந்த இரண்டு கட்டளைகளையும் நிறைவேற்றும் போது தான் நான் அவருடைய நண்பர்கள்.

இறைவனோடு நமக்குள்ள நட்பு வளரும்படி வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment