Wednesday, May 19, 2021

"நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."(அரு.17:14)

"நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."
(அரு.17:14)

இயேசு தனது மரணத்திற்கு முந்திய நாள் வியாழக்கிழமை தனது சீடர்களோடு மனம் விட்டு பேசுகிறார்.

கெத்சமனி தோட்டத்திற்கு சீடர்களோடு புறப்படுவதற்கு முன்னால் தனது தந்தையுடன் பேசுகிறார்.

தந்தையோடு பேசியதை சீடர்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ,


மற்றவர்களைவிட அருளப்பர் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

தனது நற்செய்தியில் இயேசுவின் ஜெபத்தை முழுவதும் பதிவு செய்துள்ளார்.


ஒவ்வொரு வசனமும் ஆழ்ந்த தியானத்துக்கு உரியது.

இப்போது நாம் தியானத்திற்கு எடுத்துக்கொண்ட ஜெப வசனம்:

"நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."

தனது சீடர்கள் எப்படி வாழ வேண்டும் என்று தன் தந்தையிடம் சொல்லுகிறார்.

தான் சொல்வது சீடர்களின் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காகத்தான் சத்தமாக சொல்லுகிறார்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அருளப்பரும்   தனது நற்செய்திநூலில்  பதிவு செய்திருக்கிறார்.

உலகையும், சீடர்களையும் படைத்தவர் இயேசுவே.

உலகம் படைத்தவருக்குத்தான் சொந்தம்.

தான் படைத்த உலகையே தான்   சார்ந்தவன் அல்ல என்று சொல்கிறார்.

குருவைப் போலவே சீடர்களும் இருக்க வேண்டும்.

அவர்களும் உலகை 
சாராதவர்களாக இருக்க வேண்டும்.

உலகில் வாழ்வது வேறு,

 உலகை சார்ந்து வாழ்வது வேறு.

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு புகைவண்டியில் பயணிக்கிறோம்.

ஆனால் நாம் புகைவண்டியைச் சார்ந்தவர்கள் அல்ல.

குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் ரயில் வண்டியை விட்டு இறங்க வேண்டியவர்கள்.

நமது வாழ்க்கை புகைவண்டியைச் சார்ந்து இருக்கவில்லை.

ஆனால் நாம் குடியிருக்கும் வீட்டை சார்ந்து வாழ்கிறோம்.

குடியிருக்க வீடு இல்லாவிட்டால் நாம் தெருவை சார்ந்தவர்களாக மாறிவிடுவோம்.

இது உலகியல் வாழ்க்கையில்.

ஆன்மீக வாழ்வில் விண்ணகம் தான் நமது சொந்த வீடு.

நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் விண்ணகத்தை நோக்கி பயணிப்பதற்காக நாம் பயன்படுத்தவும் புகைவண்டி.

உலகில் நமது பயணம் முடிந்தவுடன் அதை விட்டு விட்டு சொந்த வீடாகிய விண்ணகத்திற்குள் நுழைந்து விடுவோம்.

அதன் பிறகு விண்ணகத்தில்தான் நித்தியமும் வாழ்வோம்.

உடல்ரீதியாக நாம் வாழ்வது இவ்வுலகில்தான்.

ஆன்மீக ரீதியாக உலகில் பயணிக்கிறோம், வாழவில்லை.

பயணம் முடிவுள்ளது.

ஆன்மாவின் வாழ்வு முடிவே இல்லாதது.

இறைமகன் மனித உருவெடுத்து உலகிற்கு வந்தது நிரந்தரமாக இங்கே வாழ்வதற்கு அல்ல.

33 ஆண்டுகள்தான் இயேசு உலகில் வாழ்ந்தார்.

33வது ஆண்டு மரணம் அடைந்து, உயிர்த்து, விண்ணகம் சென்றுவிட்டார்.

33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்தது நம்மையும் விண்ணக வாழ்விற்கு அழைத்துச் செல்வதற்காக.

நம்மை மீட்டு விண்ணக வாழ்விற்கு அழைத்துச் செல்வதற்காகத்தான்

 உலகில் நற்செய்தியை அறிவித்தார், 

பாடுகள் பட்டார், 

சிலுவையில் உயிரையே பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

தமக்குச் சொந்தமான விண்ணக வீட்டில் நம்மையும் நிரந்தரமாக வாழ வைப்பதற்கு நம்மை அழைத்துச் செல்லவே இயேசு இவ்வுலகில் வாழ்ந்தார்.

நாமும் நமக்குச் சொந்தமான விண்ணக வீட்டில்  நிரந்தரமாக வாழ்வதற்காக  பயன்படுத்தும் பயணப்பாதையாகவே இவ்வுலகைக் கருத வேண்டும்.

இயேசு எப்படி இவ்வுலகை சாராமல் வாழ்ந்தாரோ

அப்படியே நாமும் உலகை சாராமல் வாழ வேண்டும்.

We are in this world, but not of this world.

இதைச் சீடர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் 

அவர்களுக்கு கேட்கும்படியாக சத்தமாக தந்தையை நோக்கி செபிக்கிறார்.

நாம் இவ்வுலகைச் சார்ந்து வாழ்கின்றோம் என்றால் இவ்வுலக வாழ்வே நமக்கு நிரந்தரமானது என்று நினைத்து வாழ்கிறோம். 

இவ்வுலகம் சடப்பொருள் ஆல் ஆனது. நமது உடல் இவ்வுலகில் இருந்து எடுக்கப்பட்டதாகையால் அது உலக இன்பத்தில் நாட்டம் கொள்கிறது.

ஆனால் நமது ஆன்மா  விண்ணக வாழ்வுக்கென்றே படைக்கப்பட்ட ஆவிப் பொருள்.

நமது உடல் நாட்டம் கொள்கிற உலக இன்பத்தால் ஆன்மாவை திருப்திபடுத்த முடியாது.

ஆன்மாவை திருப்திப்படுத்த விண்ணக வேந்தனாகிய இறைவனால் மட்டுமே முடியும்.

நமது ஆன்மா உடலோடு சேர்ந்து படைக்கப் பட்டிருந்தாலும்  அது உலக இன்பங்களுக்காக படைக்கப்படவில்லை.

விண்ணக பேரின்ப வாழ்வுக்காக மட்டுமே படைக்கப்பட்டது.

அதை அடைந்தால் மட்டுமே அது திருப்தி அடையும்.

இறைவனோடு இணைந்து வாழும் விண்ணக வாழ்வுக்காக ஆன்மா படைக்கப்பட்டிருப்பதால் 

இறைவனால் மட்டுமே அதை திருப்திப்படுத்த  முடியும்.

ஆகவே நாம் இவ்வுலகில் வாழ்ந்தாலும் இறைவனுக்காகவே வாழ்கிறோம்.

இறைவனுக்காக வாழ்கின்ற வாழ்வு ஆன்மீக வாழ்வு.

நாம் ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறோம்.

ஆகவே நாம் விண்ணை மட்டும் சார்ந்தவர்கள், மண்ணை அல்ல.

அப்படியானால் நமது உடல் எதற்கு?


விண்ணை சார்ந்த வாழ்வை வாழ்வதற்கு நமது ஆன்மாவிற்கு உதவிகரமாய் இருப்பதற்காக மட்டுமே நமது உடல்.

நாம் மூச்சு விடுவது, உண்பது, உடுத்துவது, உறங்குவது, உலகில் வேலை பார்ப்பது, பணம் ஈட்டுவது,
வீடு கட்டுவது போன்றவற்றைத்தானே நாள் முழுவதும் செய்கிறோம். 

இவைகளை செய்யாமல் வாழ முடியாதே.

ஆன்மீக வாழ்வு வாழ நேரம் எங்கே இருக்கிறது?


இவைகளை செய்யாமல் வாழ முடியாது. ஆனால் இவைகளை செய்வதற்காக வாழவில்லை.

வாழ்வதற்காகத்தான் இவற்றை செய்கிறோம்.

ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகத்தான் உடல்சார்ந்த இந்த வேலைகளைச் செய்கிறோம்.

அலுவலகத்திற்கு செல்வதற்காக பேருந்தில் பயணிக்கிறோம். ஆனால் பேருந்தில் பயணிப்பதற்காக அலுவலகத்திற்கு செல்லவில்லை.

அதே போல் தான் ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகத்தான் உடல் சார்ந்த வாழ்வையும் வாழ்கிறோம்.

ஆண்டவருக்காக வாழ்வதே ஆன்மீக வாழ்வு.

உடல்சார்ந்த வாழ்க்கையையும் ஆண்டவருக்காக வாழ்ந்தால் அது ஆன்மீக வாழ்வாக மாறிவிடுகிறது.

அலுவலகத்தில் வேலை செய்வதற்காக பேருந்தில் பயணிக்கும்போது

பேருந்து பயணமும்  அலுவலக வேலையாக மாறிவிடுகிறது.

பேருந்தில் பயணித்து அலுவலகத்திற்குச் சென்று நமது அலுவலகம் சாராத பணிகளைச் செய்தால் பேருந்து பயணம் அலுவலகம் சார்ந்தது அல்ல.

உடல் வாழ்வதற்காக மட்டுமே மூச்சு விட்டால் அது லௌகீகம்.

ஆண்டவருக்காக மூச்சு விட்டால் அது ஆன்மீகம்.

அவ்வாறே ஒவ்வொரு செயலும்.

உலகைச் சார்ந்த 
சிற்றின்பங்களுக்காக வாழ்வது லௌகீகம்.

இறைவனுக்காக வாழ்வது ஆன்மீகம்.

ஆக இவ்வுலகிலேயே நமது உடலின் உதவியாலே ஆன்மீக வாழ்வு வாழலாம், வாழ வேண்டும்.

நமது செயலின் தன்மையை தீர்மானிப்பது அதன் நோக்கமே.

இறைப்பணி செய்வதற்காக நமது உடலை பயன்படுத்தி வாழ்ந்தால் அது ஆன்மீக வாழ்வு.

உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக நமது ஆன்மாவை பயன்படுத்தி வாழ்ந்தால் அது லௌகீக வாழ்வு.

ஆண்டவரின் அருளை ஈட்டுவதற்காக கோவிலுக்குச் சென்றால் அது ஆன்மீகம்.

பங்கு சாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கோவிலுக்குச் சென்றால் அது லௌகீகம்.

இறைவனின் மகிமைக்காக நாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்தால் அது ஆன்மீகம்.

நம்மை நாமே விளம்பர படுத்திக் கொள்வதற்காக மற்றவர்களுக்கு உதவிகள் செய்தால் அது லௌகீகம்.

ஒரு அப்பா  மகனிடம்:

"ஒரு அண்ணன் இன்ஜினியர் ஆகிவிட்டான்.

 ஒரு அண்ணன் டாக்டர் ஆகிவிட்டான்.

 நீ சாமியாரா போயேன்.''

"ஏம்பா?''

"அது நமது குடும்பத்திற்கு பெருமை தானே!"

"குடும்ப பெருமைக்காக சாமியாராகப்போவது  தவறு.
எனக்கு தேவ அழைத்தல் இருந்தால் மட்டுமே போகலாம். இருக்கிறது மாதிரி தெரியல."

நல்ல காரியங்கள் கூட நோக்கம் தப்பாக இருந்தால் வேண்டாத காரியங்கள் ஆகிவிடுகின்றன!

நாம் எதை செய்தாலும் அதன் நோக்கம் ஆன்மீகம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.  

 லௌகீகம் சார்ந்ததாக இருக்கக் கூடாது.

ஏனெனில் ஆன்மீக வாழ்க்கை வாழ்வதற்காக தான் படைக்கப் பட்டிருக்கிறோம்.

 இந்த உலகைச் சார்ந்த எதுவுமே ஆன்மீகம் ஆகாது.

ஆண்டவரைச் சார்ந்த வாழ்வு மட்டுமே  ஆன்மீக வாழ்வு.

ஆன்மீக வாழ்வு வாழ்பவர்கள் மட்டும்தான் இயேசுவின் சீடர்கள்.

ஆன்மீக வாழ்வு வாழ்பவர்கள் தங்கள் வாழ்வில் என்ன கஷ்டங்கள் வந்தாலும் வருத்தப்பட மாட்டார்கள்.

நமது குருவே கஷ்டப்படுவதற்காகத்தான் பிறந்தார்.

தங்கள் கஷ்டங்களை அவரிடம் ஒப்புக் கொடுத்துவிட்டு எப்போதும் போல் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இந்த மகிழ்ச்சியே நிரந்தரமானது.

மண்ணுலகை சார்ந்து வாழ்பவர்களின் மகிழ்ச்சி மண்ணுலகைப் போலவே நிரந்தரமற்றது.

விண்ணுலகைச் சார்ந்து வாழ்பவர்களின் மகிழ்ச்சி விண்ணுலகைப் போலவே நிலையானது.

விண்ணுலகைச் சார்ந்து வாழ்வோம்.

நிலை வாழ்வை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment