Thursday, May 6, 2021

"நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."(அரு.15:10)

"நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."
(அரு.15:10)

நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுறுத்தும் போதெல்லாம் இயேசு நம்மை தன்னோடும், தந்தையோடும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.  

கடவுளோடு ஒப்பிடப்பட நாம் சிறிதுகூட தகுதி அற்றவர்கள்.

கடவுள் படைத்தவர், நாம் ஒன்றும் இல்லாமையிலிருந்து அவரால் படைக்கப்பட்டவர்கள்.

கடவுள் அவரது பண்புகளில் அளவற்றவர். அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட அவரது பண்புகளில் அளவு உள்ளவர்கள்.

அவர் துவக்கமும் முடிவும் இல்லாதவர். நாமோ உலகில் பிறப்புக்கும் இறப்புக்கும் உட்பட்டவர்கள்.  

ஆனாலும் அவர் நம்மை கடவுளாகிய தன்னோடும் தந்தையோடும் ஒப்பிட்டு பேசுவது ஏன்?

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத்.5:48)

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"
(அரு.17:21)

"நான் என் தந்தையினுள்ளும்,

 நீங்கள் என்னுள்ளும், நான் உங்களுள்ளும் இருப்பதை

 நீங்கள் அந்நாளில் அறிந்துகொள்வீர்கள்."
(அரு.14:20)

அளவற்ற ஞானமும் அளவற்ற வல்லமையும் உள்ள தன்னோடும் தன் தந்தையோடும்

 ஒன்றுமில்லாத நம்மை ஒப்பிடும்போது 

அவர் நம்மை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்றும், நம்மிடம் எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறார் என்றும் தெரிகிறது.


கடவுளால் மட்டுமே நிறைவாக இருக்க முடியும். நமது குறைவை நிறைவாக்கவே முடியாது.

ஆனாலும் அவர் நம்மிடம்

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

என்று சொல்லும்போது, குறைவு உள்ளவர்கள் ஆகிய நாம், பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்கு 
நிறைவானவராகிய தந்தையோடு ஒன்றித்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

பரிசுத்தராகிய இறைவனோடு ஒன்றித்து இருக்க வேண்டுமென்றால் நாமும் 
பாவமாசின்றி பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

நாம் பாவமாசின்றி 
பரிசுத்தமானவர்களாக வாழ வேண்டும் என்பதுதான் நம்மைப் பற்றி அவருக்கு உள்ள ஆசை.

இயேசு தந்தையினுள்ளும் தந்தை இயேசுவினுள்ளும் இருப்பதுபோல் இருக்க நம்மால் முடியாது.

ஏனெனில் தந்தையும் மகனும் ஒரே கடவுள். நாம் எவ்வளவு முயன்றாலும் கடவுளாக முடியாது. ஆனாலும் நமது ஆன்மீக தூய்மையால் கடவுளோடு 
ஒன்றித்திருக்க முடியும்.

ஒன்றாக முடியாவிட்டாலும் ஒன்றித்திருக்க முடியும்.

தண்ணீரை பாலாக்க முடியாது. ஆனால் தண்ணீரை பாலோடு கலக்க முடியும், பிரிக்க முடியாத அளவுக்கு கலக்க முடியும்.

பாலோடு கலந்துள்ள தண்ணீரை பார்ப்பவர்கள் பாலைத்தான் பார்ப்பார்கள்.

நாம் நமது தூய்மைத்தனத்தால் இறைவனோடு ஒன்றித்திருந்தால் நம்மை பார்ப்பவர்கள் நம்மில் வாழும் இறைவனை பார்ப்பார்கள்.

நாமும் புனித சின்னப்பருடன்  ஒன்று சேர்ந்து

"வாழ்வது நானல்ல, இறைவனே என்னில் வாழ்கிறார்."

என்று கூற முடியும்.

அத்தகைய ஒன்றிப்பைதான் இயேசு விரும்புகிறார்.

 அந்த நோக்கத்தோடுதான் தன்னையே நமக்கு உணவாக தருகிறார்.

எப்படி உணவை உண்ணும்போது அது நமது உடலாக மாறி விடுகிறதோ

அதேபோல நமது ஆன்மா இயேசுவை உண்ணும்போது இயேசு தனது பண்புகளுடன் நமது ஆன்மாவோடு ஒன்றித்து  விடுகிறார்.

அதற்குப்பின் இயேசுவே நம்மில் வாழ்கிறார்.

இயேசுவின் அனைத்து பண்புகளும் நம்மோடு கலந்து விடுவதால் ஒரு வகையில் நாமும் இயேசுவாகவே மாறிவிடுகிறோம்.


இன்றைக்கு தியானத்திற்கு எடுத்துக்கொண்ட இறைவாக்கு:

"நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல, 

நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."


இயேசு அவரது தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல, 


நாமும் அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.


இயேசுவும் அவரது தந்தையும் ஒரே கடவுள்.

ஒரு கடவுளுக்குள் இரண்டு சித்தங்கள் இருக்க முடியாது.

தந்தையின் சித்தம் தான் மகனின் சித்தமும்.

மகன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றும்போது தனது சித்தத்தை தான் நிறைவேற்றுகிறார்.

ஏனெனில் தந்தையும் மகனும் ஒரே கடவுள்.

இயேசுவுக்கு தன் தந்தையின் சித்தத்தை,

 அதாவது,

 தன் சித்தத்தை நிறைவேற்றுவதில் ஒரு கஷ்டமும் இருக்க முடியாது.

உண்மையில், நிறைவேற்றாமல் இருக்க முடியாது.

ஆனால் இயேசுவின் சித்தமும் நமது சித்தமும் ஒரே சித்தமாக இருக்க முடியாது.

ஆனாலும் இயேசுவின் சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக்கொண்டு அதை அவருடைய உதவியால் நம்மால் நிறைவேற்ற முடியும்.

இயேசுவை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிப்பவர்களால்தான் இது முடியும். 

உலக வாழ்விலும் கூட நாம் யாரை அதிகமாக நேசிக்கிறோமோ அவர்கள் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வோம்.

தன்னை நேசிப்பது போல தனது கணவனையும் நேசிக்கும் மனைவி அவன் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வாள்.

நேசிக்காவிட்டால் என்ன சொன்னாலும் செய்ய மாட்டாள்.

நமது ஆன்மீக வாழ்விலும் நாம் இயேசுவை எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்தால் அவர் சொல்வதை அப்படியே நிறைவேற்றுவோம்.

அவர் சொல்வதை நிறைவேற்றாவிட்டால் அவர் மீது நமக்கு அன்பு இல்லை என்று அர்த்தம்.

இறை தந்தைக்கும், இறை மகனுக்கும் ஒரே அன்பு, ஒரே சித்தம்.

இறைவனின் சித்தத்தை நமது சித்தமாக ஏற்று செயல்பட வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

தந்தையின் சித்தத்தை மகன் நிறைவேற்றும்போது இடையே இடையூறு எதுவும் ஏற்பட முடியாது,

ஏனெனில் தந்தையும் மகனும் ஒருவர்தான், அதாவது, ஒரே கடவுள்தான்.

ஆனால் கடவுளின் சித்தத்தை நாம் நிறைவேற்ற முயற்சி செய்யும்போது 

நமது அளவுள்ள தன்மை காரணமாகவும்,

 இயலாமை காரணமாகவும்

பாவத்தால் பாதிக்கப்பட்ட நமது மனித சுபாவத்தின் (Fallen nature) காரணமாகவும் 

பிழைகள் ஏற்படலாம். 

ஆனாலும் நமது ஜெப வாழ்வின் மூலம் இறைவனின் அருளைப் பெற்று பிழைகளை குறைத்து நிறைவாக வாழ முயற்சி செய்ய வேண்டும்.

இறைவன் நமது முயற்சியை ஆசீர்வதிப்பார்.

திருப்பலி காணும்போது நமது மனம் முழுமையாக 
திருப்பலியோடு ஒன்றித்திருக்க வேண்டும்.

அது எவ்வளவு கடினம் என்று அனுபவபூர்வமாக நமக்கு தெரியும்.

ஆனாலும் இறைவனின் அருளை கேட்டு நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்ய வேண்டும்.

நமது இயலாமை கடவுளுக்குத் தெரியும்.

ஆனாலும் ஜெபத்தின் மூலமாக முயற்சி செய்தால் இறைவன் நமக்குத் துணையாக வருவார்.

அவரது சித்தத்தை ஒழுங்காக நிறைவேற்ற அவரே நமக்கு உதவி செய்வார்.

அவரது சித்தத்தை நிறைவேற்றும் போது தான் நாம் அவரது அன்பில் நிலைத்திருப்போம்.

இறையன்பு நம்மிடம் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அது செயலாக மாறி, நமது வாழ்வாக மாற வேண்டும்.

செயல் வடிவம் பெறாத அன்பு குறைந்து கொண்டே வரும்.

வாழ்வாக மாறும் அன்பு வாழ வாழ அதிகரித்துக் கொண்டே வரும்.

இறை அன்பில் வளர நாம் அன்பை நமது வாழ்வாக மாற்ற வேண்டும்.

இறையன்பு நமது வாழ்வாக மாறும் போது இயேசுவின் மகிழ்ச்சி நமக்குள் இருக்கும்.

நமது மகிழ்ச்சி நிறைவுபெறும்.

நமது மகிழ்ச்சி நிறைவுபெறும் போது நாம் விண்ணகத்தில் இறைவனோடு ஒன்றித்திருப்போம்.

இறைவனோடு ஒன்றித்து நிலைவாழ்வு வாழவே இறைவன் நம்மை படைத்தார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment