Tuesday, May 18, 2021

"நீர் எனக்குச் செய்யக் கொடுத்த பணியைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்.". (அரு.17:4)

"நீர் எனக்குச் செய்யக் கொடுத்த பணியைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்."
(அரு.17:4)

உலகியலில் பிள்ளைகள் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவது பெற்றோருக்குப் பெருமை.

ஆன்மீகத்தில் இறைவனின் விருப்பத்தை நாம் நிறைவேற்றுவதே அவருக்கு மகிமை. 

இறைவனுக்கு மகிமை என்று சொல்லும்போது ஒரு முக்கியமான இறையியல் தத்துவத்தை மனதில் மறக்காமல் வைத்திருக்க வேண்டும்.

இறைவன் சர்வத்திலும் 
நிறைவானவர்.

அவரது நிறைவை நம்மால் கூட்டவும் முடியாது குறைக்கவும் முடியாது.


அவரது நிறைவை கூட்டவோ, குறைக்கவோ அவர் நம்மை படைக்கவில்லை.

அவரிடம் உள்ளவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்ளவே நம்மை படைத்தார்.

மனுக்குலமே   அவரது விருப்பத்தை நிறைவேற்றாமல் போனாலும் அவரது மகிமையில் இம்மி கூட குறையாது.

அவ்வாறே மனுக்குலமே   அவரது விருப்பத்தை நிறைவேற்றினாலும் 
நிறைவான அவரது மகிமை கொஞ்சம் கூட கூடாது.

அவரது மகிமைக்காக நாம் செயல் புரியும்போது அந்த மகிமையை இறைவன் நம்மோடுதான் பகிர்ந்து கொள்கிறார்.

ஆகவேதான் இயேசுவே சொல்கிறார்:

"நீர் எனக்குச் செய்யக் கொடுத்த பணியைச் செய்து முடித்து, 

நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்."

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றியதன் மூலம் இயேசு தந்தையை மனிதருக்குள் மகிமைப்படுத்தினார்.

அதாவது தந்தையின் மகிமையில் நாம் பங்கு பெற்றிருக்கிறோம்.

இறைவனின் பிள்ளைகள் என்ற மகிமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

அந்த மகிமையை அனுபவிக்க நாம் மறு உலகில் மூவொரு தேவனோடு  இணைந்து வாழ்வோம்.

We will live in heaven in union with the Holy Trinity enjoying His glory.

தந்தை அவருக்குச் செய்யக் கொடுத்த பணியே,

அவரோடு நாம்  நித்தியமாக  விண்ணுலகில் வாழ்வதற்காக நமது பாவங்களிலிருந்து நம்மை மீட்பது தான்.

அந்தப் பணியை நிறைவேற்றியதன் மூலம் 

இயேசு தந்தையை உலகில் மகிமைப்படுத்தியிருக்கிறார். 

நாம் வாழும் உலகமும், நாமும் படைக்கப்படுவதற்கு முன்னாலேயே 

இறைவன் நித்திய காலமும் தனது நிறைவான பண்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தனது நிறைவான பண்புகளை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இறைவன் நம்மை படைத்தார்.

நாம் பாவம் செய்ததில் மூலம் அவரோடு நமக்கு இருந்த ஆன்மீக உறவை துண்டித்துக் கொண்டோம்.

நாமே துண்டித்துக் கொண்ட உறவை ஒட்ட வைப்பதற்காகத்தான் இறைமகன் இயேசு உலகிற்கு வந்தார்.

உறவு இல்லாத காலங்களில் இறைவனால் தம்மை நம்மோடு பகிர்ந்து கொள்ள இயலாது.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக உலகிற்கு வந்த இயேசு தனது பாடுகளாலும், மரணத்தாலும் இறை மனித உறவைப் புதுப்பித்து விட்ட படியால்,

 இனி இறைவன் தமக்கு   உரியதை நம்மோடு பகிர்ந்து கொள்ள இயலும்.  

இனி நாம் எதைச் செய்தாலும் இறைவனது மகிமைக்காகவே செய்தால் விண்ணக மகிமையை இறைவன் நம்மோடு பகிர்ந்து கொள்வார்.

இறைவன் அன்பு மயமானவர்.

அன்பில் இயல்பே எல்லோரையும் அன்பு செய்வதுதான்.

  தன்னால் அன்பு செய்யப்படுகின்ற யாவரும்  தன்னோடு ஒன்றித்து வாழவேண்டும் என்றுதான் அன்பு விரும்பும்.

தனக்கு உரியனவற்றை எல்லாம் அன்பர்களோடு பகிர்ந்து கொள்ளவே அன்பு விரும்பும்.

அன்பு மயமான கடவுள் நம்மை படைத்ததே  தன்னை  நம்மோடு நித்திய காலமாக பகிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

அதாவது அவரோடு ஒன்றித்து முடிவில்லா காலமும் விண்ணக பேரின்பத்தில் வாழவேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் நம்மை படைத்தார்.

இதை உணர்ந்து நாமும் நம்மை முற்றிலுமாக அவரிடம் கையளித்து, அவரோடு ஒன்றித்து, அவருக்காகவே வாழ வேண்டும்.

மூச்சுவிடுவது உட்பட நமது அனைத்து செயல்களையும் அவருக்காகவே செய்ய வேண்டும்.

அவருடைய அன்புக்காகவும், மகிமைக்காகவும்  செய்ய வேண்டும். 

இயல்பிலேயே நிறைவான மகிமையோடு நித்திய காலமும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை, 

அனைவரும் அறிந்து கொள்ளும்படியாக நாம் வாழ வேண்டும்.

உலகோர் அனைவரும் அவரது மகிமையில் பங்குபெற வேண்டும்  என்ற விருப்பத்தோடு அவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாக நமது வாழ்க்கை இருக்க வேண்டும்.

அதாவது நாம் இறைவனுக்காகவும், நமது அயலானுக்காகவும் வாழ வேண்டும்.

அதனால்தான் இயேசு பத்து கட்டளைகளையும் இரண்டே இரண்டு கட்டளைகளாக சுருக்கி நமக்கு தந்திருக்கிறார்.

இறைவனை நேசி.

 உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசி.

நாம் இறைவனுக்காக வாழும்போது அயலானுக்காகவும் வாழ்கிறோம்.

அயலானை நேசிக்காமல் இறைவனை மட்டும் நம்மால் நேசிக்க முடியாது.

இறைவனை நேசிக்காமல் அயலானை மட்டும் நம்மால் நேசிக்க முடியாது.


இறைவன் நமக்குச் செய்யக் கொடுத்த பணியை நாம் செய்யும் போது,

நாம் இறைவனை உலகில் மகிமைப்படுத்துகிறோம். 

இதற்கு பெயர்தான் நற்செய்திப் பணி.

இறைவனை நமது வாழ்க்கையினால் மற்றவர்களுக்கு அறிவிக்கும் பணி.

எதைச் செய்தாலும் இறைவனின் அதிமிக மகிமைக்காக மட்டும் செய்வோம்.

நாம் பிறரன்பு பணி செய்யும்போது இறைவனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியைத் தான் செய்கிறோம்.


"உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக"

என்று தினமும் இறை தந்தையிடம் வேண்டும்போது இதற்காகத்தான் வேண்டுகிறோம்.

"உலகோர் அனைவரும் உம்மை அறிந்து, உமக்காகவே வாழும்படி செய்யும்."

என்பதுதான் இந்த செபத்தின் பொருள்.

நமக்காக அல்ல, இறைவனின் மகிமைக்காக மட்டுமே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment