"தாவீதின் மகனே, இயேசுவே, என் மீது இரக்கம் வையும்"
(மாற்கு 10: 47)
இயேசுவும் அவர் சீடரும் ஒரு பெருங்கூட்டமும் வழியே. சென்று கொண்டிருந்தபோது வழியோரத்தில் உட்கார்ந்திருந்த கண் தெரியாத பிச்சைக்காரன் ஒருவன்
இயேசுதான் அவ்வழியே செல்கிறார் என்று கேள்வியுற்று,
"தாவீதின் மகனே, இயேசுவே, என் மீது இரக்கம் வையும்" எனது சப்தமாகச் சொன்னன்.
பேசாதிருக்கும்படி பலர் அவனை அதட்டியும் கேளாமல் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தான்.
இயேசு நின்று, "அவனை அழைத்து வாருங்கள்" என்றார்.
அழைத்து வந்தார்கள்.
இயேசு, "உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று அவனைக் கேட்க,
குருடன், "ராபூனி, நான் பார்வை பெற வேண்டும்" என்றான்.
இயேசு அவனை நோக்கி, "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்" என்றார்.
அவன் உடனே பார்வை பெற்று, இயேசுவுக்குப் பின்னே வழி நடந்தான்.
அவனுக்கு உடல் ரீதியாகக் கண் தெரியவில்லை.
அவன் திரும்ப திரும்ப கத்திக் கொண்டிருந்ததை இயேசு கேட்டு அவனைக் கூப்பிட்டு குணமாக்கினார்.
நாம் அநேக சமயங்களில் ஆன்மீக ரீதியாக கண் தெரியாது இருக்கிறோம்.
அநேக ஆன்மீக விஷயங்கள் நமக்கு விளங்குவதில்லை.
முதலில் நமக்கு விளங்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குருடன் தன்னை குருட்டுத தனத்திலிருந்து விடுவிக்க இயேசுவை வேண்டிக் கொண்டது போல,
நாமும் நமது அறியாமையிலிருந்து விடுவிக்க இயேசுவை திரும்ப திரும்ப வேண்டிக் கொள்ள வேண்டும்.
இயேசு பூமியில் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலத்தில் சென்றவிடமெல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார்.
ஆன்ம ரீதியாக பாவிகளை மன்னித்தார்.
உடல்ரீதியாக நோய்களை குணமாக்கினார். உடல் நோய்களை குணமாக்கும் போது கூட இயேசு முதலில் நோயாளிகளுக்கு விசுவாசத்தை இலவசமாகக் கொடுத்து விட்டு
(விசுவாசம் எப்போதுமே இறைவன் கொடுக்கும் நன்கொடை தான்.)
பின் நோய்களை குணமாக்கி,
" உனது விசுவாசம் உன்னை குணமாகிற்று"
என்று சொல்லுவார்.
ஆக இயேசு உடல் நோய்களை குணமாக்கியதிலும் ஆன்மீகம் இருக்கிறது.
அவர் எதைச் செய்தாலும் ஆன்மீக நோக்கோடு தான் செய்வார்.
குணமானவர்கள் மட்டுமல்ல அதை பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டார்கள்.
அதே இயேசு இன்று நம்முடனும் நமது குருக்கள் உருவிலும்,
திவ்ய நற்கருணையிலும் உயிரோடு இருக்கிறார்.
எந்த நோக்கத்தோடு உலகுக்கு வந்தாரோ அதே நோக்கத்தோடு தான் இன்றும் நம்மோடு வாழ்கிறார்.
குருக்கள் மூலமாக நமது பாவங்களை மன்னிக்கிறார்.
விசுவாசத்தோடு கேட்பவர்களுக்கு ஆன்மீக நோக்கத்தோடு உடல் நோய்களையும் குருக்கள் மூலமாக சுகமாக்குகிறார்.
பாவசங்கீர்த்தனம் மூலம் நமது பாவங்களை குருக்கள் மூலம் மன்னிக்கும் இயேசு
விசுவாசத்தோடு கூடிய செபத்தின் மூலம் குருக்கள் வழியாகவே நோய்களையும் குணமாக்குகிறார்.
நமது குருக்கள் நடத்தும் ஜெப கூட்டங்களில் பாவசங்கீர்த்தனம் கேட்கப்படுவதோடு, நோய்கள்
குணமாவதற்கான ஜெபமும் சொல்லப்படுகிறது.
இயேசுவின் மேல் நமக்குள்ள உறுதியான விசுவாசத்தோடு அதில் பங்கெடுக்கும் போது குணம் பெறுகிறோம்.
விசுவாசம் இன்றி எதுவும் நடக்காது.
நாம் எந்த அளவுக்கு நமது குருக்கள் மூலம் செயல்புரியும் இயேசுவை பயன்படுத்திக் கொள்கிறோம்?
நம்மில் அநேகர் குருத்துவம் இல்லாத பிரிவினை சபையார் நடத்தும் செபக் கூட்டங்களில் பங்கெடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அங்கு யாருக்கும் கிடையாது.
உண்மையான இயேசுவை தேடி வராமல் இயேசுவின் பெயரை மட்டும் சொல்லிக்கொண்டு வருபவர்களை அண்டிச் செல்பவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல.
உடல் கண் தெரியாதவர்களுக்கு உலகிலுள்ள எந்த பொருளும் தெரியாது.
ஆன்மீக கண் தெரியாதவர்களுக்கு ஆன்மீக விஷயங்கள் புரியாது.
பைபிள் வாசிக்கும்போது சில வசனங்களுக்கு நமக்குப் பொருள் தெரியவில்லை. அதாவது ஆன்மீக கண் மங்கலாக இருக்கிறது.
அதை சரிசெய்ய வேண்டுமென்றால் நாம் எங்கே செல்லவேண்டும்?
இயேசுவிடம்.
அன்று இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவரது நற்செய்தியைக் கேட்கவும்,
பாவமன்னிப்பு பெறவும்,
உடல் நோய் குணமாகவும்
மக்கள் அவரை தேடிச் சென்றது போல
நாமும் இன்று நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அதே இயேசுவை தேடிச் செல்ல வேண்டும்.
நம்மில் எத்தனை பேர் நற்செய்தியை வாசித்துவிட்டு அதற்கு விளக்கம் பெறுவதற்காக பங்கு குருவை தேடிச் செல்கிறோம்?
அவரது பிரசங்கத்தைக்கூட வேறு வழி இல்லாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
பாவமன்னிப்பு பெறவும், நற்செய்தி வாசகங்களுக்கு விளக்கம் பெறவும் பங்குக் குருவை தேடி செல்பவர்கள்தான் உண்மையான விசுவாசிகள்.
வேறு வார்த்தைகளில்,
நற்செய்தியை அறிந்து கொள்ளவும், மீட்பு பெறவும் குருவானவர் உருவத்தில் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவை தேடி செல்பவர்கள்தான் உண்மையான விசுவாசிகள்.
இயேசு நம்மைத் தேடி வந்தது போல நாமும் அவரை தேடி செல்வோம்.
விசுவாசத்தோடு பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் குருவானவரில் வாழும் இயேசு கண்ணுக்குத் தெரிவார்.
முதலில் நமது விசுவாச கண்ணைத் திறக்கும்படி இறைவனை மன்றாடுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment