உண்மையான பக்தன் யார்?
நாம் எல்லோருமே பக்தி என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறோம்.
ஆனால் எத்தனை பேருக்கு அந்த சொல்லின் உண்மையான, முழுமையான பொருள் தெரியும் என்று நமக்கு தெரியாது.
சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒத்து வருவது தான் உண்மையாக வாழ்க்கை.
பக்தி என்ற சொல்லின் உண்மையான பொருளைத் தெரிந்து கொண்டால் நமது வாழ்க்கை எந்த அளவுக்கு பக்தி உள்ளது என்பது நமக்கு புரியும்.
நம் ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் கட்டளைகள் இரண்டு.
1.எல்லாவற்றிற்கும் நேராக உனது கடவுளை அன்பு செய்.
2.உன்னை நீ அன்பு செய்வது போல உனது அயலானையும் அன்பு செய்.
நமது முழுமையான கிறிஸ்தவ வாழ்க்கையே இந்த இரண்டு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதில்தான் அடங்கி இருக்கிறது.
இந்த இரண்டில் இறைவன்மீது நாம் கொள்ளவேண்டிய அன்பைத்தான் பக்தி என்ற சொல்லால் குறிக்கிறோம்.
இறைவனோடு நாம் கொண்டுள்ள ஆன்மீக உறவின் அடிப்படையே
பக்திதான் அதாவது அன்புதான்.
பக்தி என்றால் அன்பு என்பதுதான் பொருள்.
ஆன்மீக ரீதியாக நம்மைவிட உயர்ந்தவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பை பக்தி என்று அழைக்கிறோம்.
ஆன்மீக ரீதியாக நம்மைவிட உயர்ந்தவர்கள்
இறைவனும் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு கொண்டிருக்கும் புனிதர்களும்தான்.
அன்பின் அடிப்படை பண்புகள் எல்லாம் பக்திக்கும் பொருந்தும்.
மனிதகுலம் படைக்கப்படுவதற்கு உன்னாலே நித்திய காலமாக இருந்து வருவது
அன்பு மயமான கடவுள் மட்டும்தான்.
கடவுளின் கண்ணோக்கிலிருந்து பார்த்தால் அன்பில் அடிப்படை பண்புகள் நமக்கு புரியும்.
1. கடவுள் தனது அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் மனித குலத்தை படைத்தார்.
அன்பு தன்னைத்தானே பகிர்ந்து கொள்ளும் தன்மை உடையது.
2.கடவுள் தன்னைத்தானே அன்பு செய்வது போலவே நம்மையும் அன்பு செய்கிறார்.
அன்பினால் மற்றவர்களை அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
3.கடவுள் நம் மீது கொண்ட அன்பின் காரணமாகத்தான் நம்மைப்போல் மனித உரு எடுத்தார்.
அன்பு தன்னால் அன்பு செய்பவர்களைபோலவே மாற ஆசை கொள்ளும்.
4.மனித உரு எடுத்த அன்பு மயமான கடவுள் தன்னால் நேசிக்கப்பட்ட மனித குலத்திற்காக தன்னையே பலியாக்கினார்.
அன்பு தன்னால் அன்பு செய்ய பாடுபவர்களுக்காக தன்னையே தியாகம் செய்யும்.
5.தன்னோடு முடிவற்ற
காலம் ஒன்றித்து வாழ்வதற்காகவே மனித குலத்தைப் படைத்தார்.
'
ஒன்றித்து வாழ்வது அன்பின் இயல்பு.
6.கடவுள் நம் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்றால்
நாம் அவருக்கு விரோதமாக செய்த நமது பாவங்களுக்கு அவரே பரிகாரம் செய்து
நம்மை மன்னிப்பதற்காகவே மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.
அன்பு மன்னிக்கும் குணமுடையது.
நமது உலகியல் ரீதியான அன்பிலும் சரி ஆன்மீக ரீதியான அன்பிலும் சரி இந்த அடிப்படை பண்புகள் இருக்கும்.
1. தனிமையைப் போல் கொடுமையான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது.
யாரையாவது அன்பு செய்ய வேண்டும், யாராலுமாவது அன்பு செய்யப்படவேண்டும்.
நண்பர்களே இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கை ஆகிவிடும்.
நண்பர்களோடு அன்பையும் எண்ணங்களையும் பரிமாறிக்கொள்வதைவிட இன்பமான காரியம் எதுவும் இருக்க முடியாது.
ஆன்மிகத்தில் தன்னிடம் உள்ளதெல்லாம் இறைவன் தந்த பகிர்வே என்பதை உணரும்போது தன்னை முழுவதும் இறைவனிடம் கையளித்து அவருக்காக மட்டுமே வாழ்வதுதான் உண்மையான பக்தி.
தங்களிடம் இறைவன் மேல் முழுமையாக பக்தி உள்ளதா என்பதை கண்டுபிடிக்க விசுவாசிகள் தங்களைத் தாங்களே ஆன்மீக பரிசோதனை செய்ய வேண்டும்.
ஒரு வினாடி கூட தங்களது சுய திருப்திக்காக வாழாமல் இறைவனுக்காக மட்டுமே வாழ்பவன் தான் உண்மையான பக்தன்.
2. உண்மையான பக்தனால் தன் அயலானை அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
ஏனெனில் இறையன்பின் இயல்பு அது. எவன் பிறர் பணியே இறைபணி என்பதை உணர்ந்து தனது வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியையும் பிறர் பணிக்காக அர்ப்பணிக்கிறானோ அவனே உண்மையான பக்தன்.
3. அன்பு தன்னால் அன்பு
செய்பவர்களை போலவே மாற ஆசை கொள்ளும்.
சர்வ வல்லமை வாய்ந்த கடவுள் பலகீனங்களால் நிறைந்த மனித உரு எடுக்க அவரைத் தூண்டியது இந்த ரகசியம்தான். உலகம் எல்லாம் பராமரித்து வரும் இறைவன் தன்னைப் பராமரிக்க அவரால் படைக்கப்பட்ட அன்னை மரியாளிடமும் சூசையப்பரிடமும் ஒப்படைக்கச் செய்தது இந்த ரகசியம் தான்.
இறைவனைப் போல நிறைவானவனாக ஆசைப்படுபவனே உண்மையான இறை பக்தன்.
"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48) என்று நமக்கு கட்டளையிட்டு இருப்பவர் நம் ஆண்டவராகிய இயேசுவே.
நிறைவே நோக்கி பயணிப்பவனே உண்மையான இறை பக்தன்.
இறைவனின் அத்தனை பண்புகளையும் தனது ஆக்கிக் கொள்வதற்காக வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.
இறைவன் தனது முழுமையான அன்பினால் நம்மை அன்பு செய்கிறார். உண்மையான இறை பக்தன் தன்னால் எவ்வளவு அன்பு செய்ய முடியுமோ அவ்வளவையும் பயன்படுத்தி இறைவனையும் தன் அயலானையும் அன்பு செய்வான்.
தனது சக்தியை முழுவதும் இறைவனுக்கும் அயலானுக்காகவும் பயன்படுத்துபவனே உண்மையான இறை பக்தன்.
வானகத் தந்தை நிறைவு உள்ளவராக இருப்பது போல் நாமும் நிறைவு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசுவே வாழ்ந்து காண்பித்து இருக்கிறார்.
"என்னைப் பார்க்கிறவன் என் தந்தையை பார்க்கிறான்"
என்று அவரே சொல்லியிருக்கிறார்.
ஆக இயேசு எப்படி வாழ்ந்தாரோ அப்படியே அவரது பண்புகளுடன் நாமும் வாழ்ந்தால் நாம் வானகத் தந்தையை போல நிறைவு உள்ளவர்களாக மாற முடியும்.
இயேசுவைப்போல் நாமும் ஏழ்மையில் பற்று உள்ளவர்களாக,
தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக,
பகைவர்களையும் நேசிப்பவர்களாக,
தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்பவர்களாக,
மன்னிக்கும் குணம் உள்ளவர்களாக,
மற்றவர்களுக்காக நமது உயிரையும் தியாகம் செய்பவர்களாக,
மகிழ்ச்சியுடன் நமது சிலுவையை சுமப்பவர்களாக
வாழ்ந்தால் இயேசு சொன்னபடி நிறைவு உள்ளவர்களாக வாழ்வோம்.
இயேசு வாழ்ந்தபடியே வாழ்பவர்கள் எல்லோரும் இறை பக்தர்கள்.
4. அன்பு தன்னால் அன்பு செய்ய பாடுபவர்களுக்காக தன்னையே தியாகம் செய்யும்.
இறைப்பணிக்காகவும் பிறர் பணிக்காகவும் தன் வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்து தன்னையே தியாகம் செய்து வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.
தியாகம் இல்லாமல் பக்தி இல்லை.
இறை பணிக்காக தன்னையே தியாகம் செய்ய துணிபவன்தான் உண்மையான இறை பக்தன்.
"என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்." (மத்.16:25)
(இவ்வுலகில் இறைவனுக்காக மரிப்பவன் விண்ணுலகில் நிலை வாழ்வை அடைவான்)
5. ஒன்றித்து வாழ்வது அன்பின் இயல்பு.
நம்மோடு இறைவன் பகிர்ந்துகொண்ட அன்புதான் நம்மை அவரோடு ஒன்றித்து வாழ வைக்கிறது.
"வாழ்வது நானல்ல என்னில் இறைவன் வாழ்கிறார்"
என்று சொல்லும் அளவிற்கு இறைவனோடு ஒன்றித்து வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.
நம்மை காண்பவர்கள் நம்மில் இறைவனைக் காண வேண்டும்.
நமது வாழ்க்கையை பார்ப்பவர்கள்
"இவனது வாழ்வு முழுக்க முழுக்க கிறிஸ்துவையே பிரதிபலிக்கிறது"
என்று சொல்லும் அளவிற்கு வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.
6. அன்பு மன்னிக்கும் குணம் உடையது..
மற்றவர்களது குற்றங்களை மன்னிக்க தெரியாதவன் அன்பு செய்ய தெரியாதவன்.
நாம் நமக்கு விரோதமாக மற்றவர்கள் செய்த குற்றங்களை மன்னித்தால்தான் இறைவனுக்கு விரோதமாக நாம் செய்த குற்றங்களை அவர் மன்னிப்பார்.
நாம் எந்த அளவால் மற்றவர்களுக்கு அளக்கிரோமோ அதே அளவால்தான் இறைவன் நமக்கு அளப்பார்.
ஆகவே மற்றவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வோம். இறைவனும் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார்.
மன்னிப்பவனே உண்மையான இறை பக்தன்.
நற்செய்தியை வாசிப்பவன் அல்ல,
நற்செய்தியை வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.
ஒரே வாக்கியத்தில்
மறு கிறிஸ்துவாக வாழ்பவனே உண்மையான இறை பக்தன்.
திருப்பலி காண்பது, ஜெபிப்பது,
ஒறுத்தல் முயற்சிகள் செய்வது,
தர்மம் செய்வது போன்றவை பக்தி முயற்சிகள்.
முயற்சிகளால் மட்டும் நம்மை பக்தன் ஆக்கிவிட முடியாது.
பக்தன் செய்யும் முயற்சிகளே பக்தி முயற்சிகள்.
பக்தி உள்ளவன்தான் பக்தன்.
முதலில் இறை பக்தனாக மாறுவோம்.
அப்போதுதான் நாம் செய்யும் பக்தி முயற்சிகளுக்கு பலனுண்டு.
இப்போது ஒரு கேள்வி:
இறைவனுக்காக வாழ்பவர்கள் இறை பக்தர்கள்.
மாதா பக்தர்கள் யார்?
ஒவ்வொரு புனிதருக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்?
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment