சர்வ வல்லப கடவுளாகிய இயேசு சாதாரண மனிதர்களாகிய சீடர்களை தனது நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறார்.
நட்பு ஏற்ற, தாழ்வு பார்க்காது.
உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒருவர் குறைந்த அந்தஸ்து உள்ள ஒருவரை நண்பராக ஏற்றுக்கொண்டார் என்றால்,
மனதளவில் அவரைத் தன் அளவிற்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
முதலாளி ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளி ஒருவரை நண்பராக ஏற்றுக் கொண்டால்
நட்புக்காலத்தில் அவரைத் தனது நண்பராக தான் கருதுவாரேயொழிய தொழிலாளியாக அல்ல.
அதனால்தான் இயேசு அப்போஸ்தலர்களைப் பார்த்து
"நீங்கள் என் நண்பர்கள்.
உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்."
அந்த வகையில் இயேசுவின் சீடர்களாகிய நாமும் அவரது நண்பர்கள்தான்.
அவரது அன்புறவில் வாழ்பவர்கள்.
அன்பு அன்பு செய்யப்படுவோரை அன்பர்கள் என்றுதான் பார்க்குமே ஒழிய தன்னை விட தாழ்ந்தவர்கள் என்று பார்க்காது.
அதனால் தான் நம்மைப் படைத்த கடவுள் நம்மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக நாம் அவரது ஒன்றிப்பில் முடிவற்ற காலம் விண்ணகத்தில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அவர் நம்மை படைத்ததே இவ்வுலகில் நிரந்தரமாக வாழ வேண்டும் என்பதற்காக அல்ல.
மறு உலகில் அவரோடு ஒன்றித்து நித்திய காலமும் பேரின்ப நிலையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
இவ்வுலகில் நாம் வாழ்வது மறுஉலக வாழ்விற்காக நம்மை தயார்படுத்தி கொள்வதற்காகத்தான்.
இவ்வுலகில் நாம் எப்படி வாழவேண்டும் என்று நமக்கு இயேசுவே வாழ்ந்து காண்பித்திருக்கிறார்.
நமது வாழ்வில் ஏழ்மை இருக்கிறதே என்று கவலைப்பட வேண்டாம்,
ஏனெனில் இயேசுவே ஏழையாக வாழ்ந்து காண்பித்திருக்கிறார்.
மற்றவர்களுக்கு நாம் பணிந்துபோக வேண்டியிருக்கிறதே என்று கவலைப்பட வேண்டாம்,
.
ஏனெனில் இயேசுவே தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களான மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்து காண்பித்திருக்கிறார்.
நாம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி இருக்கிறதே என்று கவலைப்பட வேண்டாம்,
ஏனெனில் இயேசுவே தனது 33 வருட வாழ்நாளில் 30 ஆண்டுகள் தச்சு வேலை செய்தே வாழ்ந்திருக்கிறார்.
நமது வாழ்வில் கஷ்டங்கள் நிறைந்து இருக்கின்றனவே என்று கவலைப்பட வேண்டாம்,
ஏனெனில் இயேசுவும் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரைக்கும் கஷ்டங்களை அனுபவித்தே வாழ்ந்து இருக்கிறார்.
பலர் நம்மை வெறுக்கிறார்களே என்று கவலைப்பட வேண்டாம்,
ஏனெனில் இயேசுவே அவரது நற்செய்தியை பிடிக்காத பரிசேயர்களாலும், சதுசேயர்களாலும், மறை நூல் அறிஞர்களாலும் வெறுக்கப்பட்டே வாழ்ந்திருக்கிறார். அவர்களாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்.
நமக்கு வேண்டியவர்களே நமக்கு துரோகம் செய்து விட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம்,
ஏனெனில் அவருடைய 12 சீடர்களில் ஒருவனே அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டான். அவனையும்கூட இயேசு "நண்பனே" என்றுதான் அழைத்தார்.
மரணம் வரப்போகிறதே என்று நாம் கவலைப்பட வேண்டாம்,
ஏனெனில் இயேசுவே சிலுவையில் மரணம் அடைவதற்காகவே பிறந்தார்.
வசதியாக வாழ வேண்டும்,
அதிகாரம் செய்தே வாழ வேண்டும்,
உழைக்காமல் உண்ண வேண்டும்,
எல்லோரும் நம்மை விரும்ப வேண்டும்,
துன்பப்படாமல் வாழ வேண்டும்,
யாருமே நமக்கு துரோகம் செய்துவிடக்கூடாது,
நமக்கு மரணம் வரக்கூடாது
என்ற காரணங்களுக்காக நாம் கிறிஸ்தவர்களாக வாழவில்லை.
ஏழ்மையோடு,
கீழ்படிதலோடு,
உழைத்து,
மற்றவர்கள் நம்மை வெறுக்கிறார்களே என்று கவலைப்படாமல்,
துன்பங்களை அனுபவித்துக் கொண்டு,
நமக்கு துரோகம் செய்பவர்களையும் மன்னித்து கொண்டு,
எல்லாவற்றையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து கொண்டு
ஒவ்வொரு வினாடியும் மரணித்து விண்ணுலகம் செல்ல தயாராக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்
கிறிஸ்தவர்களாக வாழ்கிறோம்.
வாழ்வின் துன்பங்களை கண்டு கவலைப்படவே கூடாது.
சிலுவையில் தொங்கும் அவரை பார்த்து ஆறுதல் அடைய வேண்டும்.
துன்பங்களோடு வாழும்போதுதான் இயேசுவைப்போல் வாழ்கிறோம்.
இயேசுவோடு நிலைவாழ்வு வாழ இவ்வுலகில் இயேசுவாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment