Monday, May 17, 2021

"இதோ! நேரம் வருகிறது: அப்போது உருவகமாய் உங்களிடம் பேசேன்: என் தந்தையைப்பற்றித் தெளிவாய் எடுத்துச்சொல்வேன்."(அரு.16:25)

"இதோ! நேரம் வருகிறது: அப்போது உருவகமாய் உங்களிடம் பேசேன்: என் தந்தையைப்பற்றித் தெளிவாய் எடுத்துச்சொல்வேன்."
(அரு.16:25)

இறுதி இரவு உணவு வியாழன் அன்று சீடர்களோடு இயேசு பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் உருவகமாய் பேசியது எதுவும் சீடர்களுக்குப் புரியவில்லை.

சீடர்கள் படப்போகும் துன்பங்களைப் பற்றியும்

 அதைத்தொடர்ந்து அடையப் போகும் மகிழ்ச்சியை பற்றியும் உருவகமாகச் சொன்னதை அவர்களுக்கு விளக்கிவிட்டு,

இயேசு சொன்னார், 

"இதோ! நேரம் வருகிறது: அப்போது உருவகமாய் உங்களிடம் பேசேன்: என் தந்தையைப்பற்றித் தெளிவாய் எடுத்துச்சொல்வேன்."

இங்கு இயேசு 'நேரம்' என்று குறிப்பிடுவது தனது பாடுகளுக்காக நித்திய காலமாக திட்டமிட்டிருக்கிற நேரம்.

இறுதி இரவு உணவு வியாழனோடு பேசும் நேரம் முடிந்துவிட்டது.

இனி தொடரப் போவது செயல் நேரம். 

எந்த செயலுக்காக தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தாரோ அந்த செயல் நேரம்.

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு

 அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு.3:16)

தந்தை உலகின் மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கிறார்.

 அந்த அன்பின் காரணமாகவே உலக மீட்பிற்காக தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

இது தந்தையின் திட்டம்.

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13)

இது அன்பை பற்றி இயேசுவின் விளக்கம்.

தனது தந்தையின் அன்பை, அதாவது, தனது அன்பை,

 தனது பாடுகளின் மூலமும், சிலுவை மரணத்தில் மூலமும் உலகிற்கு வெளிப்படுத்தவும், நம்மைப் பாவத்திலிருந்து மீட்கவும்  உலகிற்கு வந்தார்.

பாடுகள் பட்டு, சிலுவையில் தன்னையே பலியாக்கி, தந்தையின் அன்பை உலகிற்கு வெளிப்படுத்தும் நேரம் நெருங்கி வருகிறது.

வியாழன் இரவு சீடர்களோடு பேசி முடிந்தவுடன் அந்த நேரம் ஆரம்பிக்கிறது.

அன்று இரவே அவர் தன்னை எதிரிகள் வசம் ஒப்படைக்கப் போகிறார்.

வெள்ளிக்கிழமை இயேசு தன் அன்பை பேச்சினால் அல்ல, செயலினால் வெளிப் படுத்தப் போகிறார். 

தன் தந்தையைப்பற்றித் தன் மரணத்தினால் தெளிவாய் எடுத்துச் சொல்லப்போகிறார்.

வெள்ளிக்கிழமை சீடர்கள் இயேசுவின் அன்பை நேரடியாக, தெளிவாக பார்க்கப் போகிறார்கள்.

வெள்ளிக்கிழமை இயேசுவின் அன்பிற்கான செயல் நேரம்.

உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு தனது உயிரை பலியாக்கப் போவதுதான் அந்த செயல்.

இயேசுவின் அன்பை விட மேலான அன்பு யாரிடமும் இருக்க முடியாது.

உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருப்பதற்காகவே இரவு உணவு வியாழனன்று இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அந்த நோக்கத்திற்காகவே குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

  திவ்விய நற்கருணையில் இயேசு நம்முடன் இருக்கிறார்.

இருப்பது மட்டுமல்ல தன்னையே நமக்கு உணவாகவும் தருகிறார்.

நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை குருக்களிடம் கொடுத்தார்.

ஆக இப்போது இயேசு நம்மோடு வார்த்தைகளை விட செயல் மூலம்தான் அதிகமாக செயல்படுகிறார்.

தினமும் பைபிள் வாசிக்கிறோம். பைபிள் மூலம் இயேசு நம்மோடு பேசுகிறார். அவரது வார்த்தைகளைத் தியானிக்கிறோம். பைபிள் வாசகங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இவை எல்லாம் நல்ல காரியங்கள்தான். 

ஆனால் வாசிப்பதோடும், பகிர்ந்து கொள்வதோடும் நின்று விட்டால்,

 உணவை சமைத்து விட்டு, உண்ணாது இருப்பவர்களுடைய வயிறு பட்டினி கிடப்பது போல்,

நமது ஆன்மாவும் பட்டினி கிடக்கும்.

ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான சத்து எதுவும் அதற்கு கிடைக்காது.

நமது பைபிள் வாசிப்பினால் நமது ஆன்மா பயனடைய வேண்டுமென்றால், வாசித்த வார்த்தைகள் நமது வாழ்வாக மாற வேண்டும்.

சிந்தனையில் இருக்கும் இறைவாக்கு நமது வாழ்வில் செயல் வடிவம் பெற்றால் தான் அதனால் நமது ஆன்மாவிற்கு பயன் கிட்டும்.

Suppose, இயேசு மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்துவிட்டு 

இறுதி உணவு முடிந்தவுடன் கெத்சமனி தோட்டத்திற்குச் செல்லாமல் விண்ணுக்கு சென்று விட்டிருந்தால்,

 அதாவது பாடுகள் படாமலேயே தந்தையிடம் சென்றிருந்தால், நமக்கு என்ன கிடைத்திருக்கும்?

ஒன்றுமே கிடைத்திருக்காது.

வெள்ளிக்கிழமை அவர் பாடுகள்பட்டு மரித்திருக்காவிட்டால்,

அதாவது தனது அன்பை பற்றிய போதனைக்கு செயல்வடிவம் கொடுத்திருக்காவிட்டால்,

இயேசு மனிதனாக பிறந்தது நமக்கு பயன் இல்லாமலே போயிருக்கும்.

ஆனால் இயேசுவோ அந்த வெள்ளிக்கிழமை பாடுகளுக்காகவும், மரணத்திற்காகவும் மட்டுமே 33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்தார்.


"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."

என்ற தனது வார்த்தைகளை தனது உயிரைப் பலிகொடுத்துதான் நிரூபித்தார்.


அதே வார்த்தைகள் நமது வாழ்விலும் செயல்வடிவம் பெற்றால்தான் நாம் இயேசுவின் சீடர்கள்.

நமது அன்பு வெறும் lip service அன்பாக மட்டும் இருந்தால் அதனால் நமக்கும் பயனில்லை நமது அயலானுக்கும் பயனில்லை.

நாம் கிறிஸ்தவனாக இருந்தால் மட்டும் போதாது,

கிறிஸ்தவனாக நடக்கவும் வேண்டும்.

வார்த்தைகளை எப்படி வாழ்வாக்குவது?

"உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி."

நம்மை நாம் எப்படி நேசிக்கிறோம்?

நாம் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு,

" என்னை நான் நேசிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு மட்டும் இருந்தால்,

சாப்பிடாமலும், உடல் வளர்ச்சிக்கு தேவையானதை செய்யாமலும் இருந்தால்

நாம் என்ன ஆவோம்?

"நான் எல்லோரையும் நேசிக்கிறேன்" எனது வாயால் மட்டும் சொல்லிக்கொண்டு

மற்றவர்களுக்குத் தேவையானவை கொடுக்காமல் இருந்தால்,

அதாவது பிறர் பணி செய்யாது இருந்தால்,

நமது உள்ளத்தில் மட்டும் இருக்கும் பிறரன்பினால் பிறருக்கு என்ன பயன்?

நண்பர் ஒருவருடைய இல்லத்திற்குச் செல்கிறோம். 

அவர் நம்மிடம் "உட்காருங்கள்" என்று சொல்லிவிட்டு, உட்கார ஆசனம் தரவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

அல்லது 

"சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்டுவிட்டு நமக்கு எதுவும் தராமல்

 அவர் மட்டும் நமது அருகே உட்கார்ந்துகொண்டு சாப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நமக்கு எப்படி இருக்கும்?

நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்றால்

 நமக்கு நாம் என்ன செய்கிறோமோ அதை மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும்.

அப்போதுதான் நம்மால் மற்றவர்களுக்கு பயன்.

"உனக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்"

என்று வாசிக்கிறோம்.

நமது வாழ்விலும் 
தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

"நமக்கு எதிராக குற்றம் செய்பவர்களை மன்னிக்க வேண்டும்"

என்று பைபிளில் வாசிக்கிறோம்.

உண்மையிலேயே நாம் மன்னிக்க வேண்டும்.

நாம் இயேசுவின் சீடர்களாக இருப்பதால் நமக்கென்று வரும் சிலுவைகளை தாங்கித்தான் ஆக வேண்டும்,

முணுமுணுத்துக் கொண்டு அல்ல, உண்மையான மகிழ்ச்சியுடன்.


மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும்,

வார்த்தைகளால் அறிவிப்பதை விட முன்மாதிரிகையான வாழ்க்கையால் அறிவிப்பதே சிறந்தது.

மற்றவர்கள் நமது வார்த்தைகளை விட வாழ்க்கையைத்தான் அதிகம் கவனிக்கிறார்கள்.

விசுவாசத்தினாலும், நற்செயல்களாலும் மட்டுமே மீட்பு பெற முடியும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment