Sunday, May 9, 2021

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."(அரு.15:13)

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13)


நண்பர்,  உயிர்,  அன்பு ஆகிய மூன்று கோணங்களிலிருந்து இந்த இறைவாக்கை தியானிப்போம்.

உலக கண்ணோக்கத்தில்  நமக்கு நண்பர்களும் உண்டு, நண்பர்கள் அல்லாதோரும் உண்டு.

விரோதிகள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை, ஏனெனில் நண்பர்கள் அல்லாதோர் எல்லோரும் நமது விரோதிகள் அல்ல.

நமக்கு மிகவும் நெருக்கமாக உறவில் உள்ளவர்களை நண்பர்கள் என்று அழைக்கிறோம்.

நெருக்கத்தின் அளவு குறைய குறைய நட்பின் அளவும் குறைந்து கொண்டே செல்லும்.

100% நட்பு இல்லாதவர்கள் கூட நமக்கு தெரியாதவர்களாக இருக்கலாம், விரோதிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

வெறுப்போடு நமது அழிவை விரும்புகிறவர்கள் மட்டுமே நம்முடைய விரோதிகள்.

இது  உலகியலில்.

ஆன்மீகத்தில் அன்பின் அளவை வைத்து நட்பின் அளவைக் கணக்கிடுவது இல்லை.

ஏனெனில் ஆன்மிகம் புறப்படுவது அன்பே உருவான கடவுளிடம்  
 இருந்து.

கடவுளின் அன்பிற்கு அளவே கிடையாது.

அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அளவற்ற விதமாக அன்பு செய்கிறார்.

அன்பு செய்வது அவரது இயல்பு.

அவரால் யாரையும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

ஏனெனில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் அவருடைய அன்பின் விளைவுதான்.

அவரது அன்பின் அடிப்படையில் மனுக்குலத்தைச் சேர்ந்த அனைத்து மனிதர்களும் அவருக்கு நண்பர்கள்.

அவர் நல்லவர்களையும் அன்பு செய்கிறார், கெட்டவர்களையும் அன்பு செய்கிறார்.

பரிசுத்தவான்களையும் அன்பு செய்கிறார், பாவிகளையும் அன்பு செய்கிறார்.

எல்லோரையும் அளவற்ற விதமாய் அன்பு செய்கிறார்.

ஒவ்வொருவரையும் அளவற்ற விதமாய் அன்பு செய்கிறார்.

இது இறைவனின் பார்வையிலிருந்து.

பிரச்சனை கிளம்புவது 
மனிதரிடமிருந்துதான்.

எல்லா மனிதர்களும் அவரது அன்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பம்.

ஆயினும் அவர் மனிதர்களுக்கு மன சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக தனது சுதந்திரத்தை பயன்படுத்துகிறான்.

அன்னை மரியாள் தனது சுதந்திரத்தை பயன்படுத்தி,

 அதையே இறைவனுக்கு முற்றிலுமாக  காணிக்கையாக்கி, 

இறை அன்பை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டாள்.

ஆதலால்தான் அவளை அருள் நிறைந்தவள் என்று அழைக்கிறோம்.

மற்ற மனிதர்களில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இறை அன்பை  ஏற்றுக் கொள்கிறார்கள், அல்லது ஏற்றுக் கொள்வதில்லை.

அன்பை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக கடவுளை வெறுப்பவர்களும் மனிதருள் இருக்கிறார்கள்.

 இறைவனை ஏற்றுக் கொள்ளாததின் விளைவுதான் பாவம்.

பாவிகள் இறைவனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது கடவுளை நேசிக்க வில்லை.

ஆனால் கடவுள் அவர்களையும் நேசிக்கிறார்.

சில மனிதர்கள் கடவுளை தெரிந்த ஒருவராக ஏற்றுக் கொள்கிறார்கள். நண்பராக அல்ல.

சில மனிதர்கள் கடவுளை நண்பராக ஏற்றுக் கொள்கிறார்கள்.

அவர்களது நட்பின் அளவுக்கு ஏற்ப இறைவனோடு அவர்களது நெருக்கம் இருக்கும்.

அவர்களது நெருக்கத்தின் அளவுக்கு ஏற்ப அவர்களது புனிதத் தன்மையும் இருக்கும்.

மனிதர்களின் நட்பில்  எவ்வளவு  வித்தியாசங்கள் இருந்தாலும் இறைவனது நட்பில் வித்தியாசம் இல்லை.

அவர் மாறாதவர்.

அவர் அளவற்ற விதமாய் அனைவரையும் நேசிக்கிறார்.

அனைவரையும் நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறார்.

இறைவனை முழுமையாக ஏற்றுக் கொள்கிறவர்கள் அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் இறைவனை ஏற்றுக்கொள்வது  போலவே நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

இறைவனை ஏற்றுக் கொள்பவர்களுக்கு அனைத்து மனிதர்களும் நண்பர்களே. அதாவது அன்புக்கு உரியவர்களே.

ஆகையினால்தான், நாம், அதாவது இறைவனை ஏற்றுக் கொள்பவர்கள், 

இறைவனையும் நேசிக்கவேண்டும், 

அயலானையும் நேசிக்க வேண்டும்.

இறைவன் எப்படி எல்லோரையும் நல்லவர் கெட்டவர் என்று பார்க்காமல் நேசிக்கிறாரோ

 அதேபோல் நாமும் நல்லவர்களையும் நேசிக்க வேண்டும் கெட்டவர்களையும் நேசிக்க வேண்டும்.

நமது பிறரன்பு நமது சிந்தனை, சொல், செயலில் வெளிப்பட வேண்டும்.

இதுதான் உண்மையான ஆன்மீகம்.

உயிர்:

நமது ஆன்மா உடலோடு சேர்ந்து வாழும்போது நாம் உயிர் வாழ்கிறோம்.

ஆன்மா உலகை விட்டு பிரியும் போது நமது உயிர் பிரிகிறது.

நமது உடலையும், நமக்கு உரிமையாக கருதுகின்ற நமது சொத்துக்களையும் விட ஆம் முக்கியமாக கருதுவது நமது உயிரைத்தான். 

நமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக நமது உடல் உறுப்புகளை கூட நாம் இழக்கத் தயார்.

நாம் வாழும் இல்லத்தைக் கூட இழக்கத் தயார்.

நமக்கு வருமானத்தை தரக்கூடிய வேலையையும் இழக்க தயார்.

நமது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கத் தயார்.

எதுவுமே இல்லாவிட்டாலும் உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆன்மீகத்தில் நமது உயிரை விட மேலானதாக ஒன்று இருக்கிறது.

அதுவே இறைவனிடமும் அயலானிடமும்  நாம் கொண்டுள்ள நட்பு.

உயிர் வாழ்வதற்காக உடைமைகள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கும் நாம்  

இறைவனுக்காகவும், நமது அயலானுக்காகவும் நமது உயிரையும் இழக்க தயாராக இருக்க வேண்டும்.

இறைவனுக்காகவும் அயலானுக்காகவும் உயிரை கொடுக்க தயாராக இருப்பவனே உண்மையான நண்பன்.

இதுவரை நாம் உயிர் என்று சொன்னது நமது ஆன்மா  உடலோடு ஒன்றித்து இருப்பதை.

நமது உடலுக்கு ஆன்மா உயிராக இருப்பது போலவே நமது ஆன்மாவுக்கு இறைவனது அருள் உயிராக இருக்கிறது.

நமது ஆன்மா பாவத்தினால் இறைவனின் அருளை இழக்கும்போது ஆன்மா இறந்து விட்டது என்று கூறுவோம்.

இதைத்தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறுகிறோம்,

 அதாவது நமது ஆன்மீக மரணம்,

 இறைவனின் அருளை இழந்துவிடும் மரணம்.

நமது முதல் பெற்றோர் ஒரு பழத்திற்காக இறைவனது அருளை இழந்தார்கள்.

நாம் எதற்காகவும், யாருக்காகவும் நமது ஆன்மீக உயிரை இழந்துவிடக்கூடாது. அதாவது பாவம் செய்யக்கூடாது.

இந்த உலகமே பரிசாக கிடைத்தாலும் அதற்காக நமது ஆன்மீக உயிரை இழந்துவிடக்கூடாது.

உயிரை கொடுத்தாவது உயிரை காப்பாற்ற வேண்டும். 

அதாவது,

உடலைச் சார்ந்த உயிரை கொடுத்தாவது ஆன்மாவின் உயிரை காப்பாற்ற வேண்டும்.

அதாவது,

மரணமே நேர்வதாக இருந்தாலும் பாவம் செய்ய இணங்க கூடாது.

இறையருளால் உயிர்வாழும் நமது ஆன்மா உடலை விட்டு பிரிந்தால் அது இறைவனிடமே போய் சேரும்.


ஆனால் இறையருளை இழந்த ஆன்மா இறைவனை சேர முடியாது.

ஆன்மீகத்தில் இறை அருளோடு இருப்பவனே உயிரோடு இருக்கிறான்.


அன்பு:

நாம் உயிர் வாழ்வதே நம்மைப் படைத்த இறைவனோடும், அவரால் படைக்கப்பட்ட நமது   அயலானோடும்  நட்புடன் இருப்பதற்காகத்தான்.

நட்புக்கு உயிர் அன்பு.

இறைவன் நம்மை படைத்திருப்பதே நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் இறைவனையும் அயலானையும் அன்பு செய்வதற்கே.

அதற்காகத்தான் கடவுள்  தன்னுடைய அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆன்மீக வாழ்வின் உயிரே அன்புதான்.

அன்பு செய்யத் தெரியாதவன் வாழ்ந்தும் பயனில்லை.

அன்பு செய்யத் தெரிந்தவன் தனது அன்பருக்காக மட்டுமே வாழ்வான்.

நாம் வாழ்வது நமக்காக அல்ல.  

இறைவனுக்காகவும், நம் அயலானுக்காகவுமே வாழ்கிறோம். 

இறைவன் நமக்கு கொடுத்திருப்பது இரண்டே இரண்டு கட்டளைகள்தான். 

1. இறைவனை நேசி.
2. உனது அயலானை நேசி.

இறைவனையும், அயலானையும் நேசிப்பதற்காகத்தான் நம்மையும் நம்மிடம் உள்ளவற்றையும் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இறைவனையும், அயலானையும் நேசிப்பதற்காக நம்மையும் நம்மிடம் உள்ள, உயிர் உட்பட அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

இயேசு இதை வாழ்ந்தே காண்பித்தார்.

  நமக்காகத்தானே தனது உயிரை சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார்!

நமக்காக பலியாகத்தானே அவர் மனிதனாகப் பிறந்தார்.

அவர் தனக்காக மனிதனாக பிறக்கவில்லை. 

நமக்காக மட்டுமே பிறந்தார், நமக்காக மட்டுமே வாழ்ந்தார், நமக்காக மட்டுமே பாடுகள் பட்டார், நமக்காக மட்டுமே மரணம் அடைந்தார்.

அவரைப் பின்பற்றி நாமும் நம்மைப் படைத்த இறைவனுக்காகவும், அயலானுக்காகவும் மட்டுமே வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
.
அதனால் தான்

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை." என்கிறார்.

இப்பொழுது நினைவில் கொள்வோம்: 

இறைவனும் அவரால் படைக்கப்பட்ட அனைவரும் நமது நண்பர்கள்.

நமது நண்பர்கள் மீது தமக்குள்ள அன்பை நிரூபிப்பதற்காக 

நாம் மிகவும் மேலானதாக் கருதும் நமது உயிரையும்  தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

நினைவில் கொள்ள வேண்டியது,
நம்மை விரும்புபவர்கள் மட்டுமல்ல நம்மை வெறுப்பவர்களும் நமது நண்பர்களே.

 நம்மை நேசிப்பவர்களை மட்டுமல்ல, பகைப்பவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment