"வெளிவேடக்காரனே, முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்து எறி: பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாகக் கண் தெரியும். "
( மத். 7:5)
நமது உடலில் உள்ள அழுக்கை கழுவ வேண்டுமென்றால் சுத்தமாக தண்ணீரில் குளிக்க வேண்டும்.
சாக்கடைத் தண்ணீரில் குளித்தால் அழுக்குப் போகாது, மேலும் அசுத்தம் சேரும்.
பிறருடைய குறைகளை நீக்க அவர்களுக்கு புத்திமதி சொல்லும் எவரும்
எந்த குறைகளை நீக்குவதற்காக புத்திமதி சொல்லுகிறாரோ
அதே குறைகள் புத்திமதி சொல்பவரிடம் இருக்கக்கூடாது.
இயேசு இறைமகன்,
கடவுள்,
அவரிடம் குற்றம் குறைகள் இருக்க முடியாது.
நாம் மனிதர்கள்.
பாவிகள்.
பாவிகளாகிய நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக
பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக மனித அவதாரம் அவர் எடுத்தபோது,
நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அவரது மனித சுபாவத்தில் வாழ்ந்து காண்பித்தார்.
அவருடைய போதனைகள் வெறும் வார்த்தைகளினால் ஆனவை அல்ல.
சாதனைகளினால் ஆனவை.
எப்படி வாழ வேண்டும் என்று போதித்தாரோ அப்படியே வாழ்ந்து காண்பித்தார்.
"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."
(லூக்.6:20)
என்று போதித்தார்.
இயேசு ஏழையாகப் பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார்,
ஏழையாக மரித்தார்.
பிறப்பதற்கு ஒரு வீடு கூட கிடைக்காமல் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.
படுக்க கட்டில் கிடைக்காமல் மாடுகளின் தீவனத் தொட்டியில் படுத்திருந்தார்.
ஏழைகளே அவரை பார்க்க வந்தார்கள்.
நாசரேத்து ஊரில் தச்சுத் தொழில் செய்தே வாழ்ந்தார்.
அவரது பொது வாழ்க்கையின் போது தலை சாய்க்கக் கூட அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
குற்றவாளிகளுக்கு உரிய சிலுவை மரத்தில்தான் இறந்தார்.
அடுத்தவர்களுக்குரிய கல்லறையில்தான் அடக்கம் செய்யப்பட்டார்.
இதைவிட ஏழையாக யாராலும் வாழ இயலாது.
"உன்னை நேசிப்பது போல் உன் அயலானையும் நேசி, உனது விரோதிகளையும் நேசி, உனக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்." என்று போதித்தார்.
அவர் மனித அவதாரம் எடுத்ததே அதற்காகத்தான். பாவம் இறைவனுக்கு எதிரான செயல். பாவம் செய்பவர்கள் அனைவரும் அவருக்கு விரோதிகள்.
பாவிகளை,
அதாவது அவரது விரோதிகளை,
இரட்சிக்கவே,அதாவது அவர்களை தனது நண்பர்களாக, சகோதரர்களாக ஏற்றுக் கொள்வதற்காகவே
மனிதனாகப் பிறந்தார்.
''தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
என்று இயேசு சொன்னார்.
அவர் அதைவிட ஒருபடி மேலே போய் தனது விரோதிகளுக்காக தன் உயிரை கொடுத்தே அவர்களை நண்பர்களாக மாற்றினார்!
தன்னைச் சிலுவையில் அறைந்து கொன்றவர்களை மன்னிக்கும்படி தனது தந்தையிடம் வேண்டியதன் மூலம் தீமை செய்தவர்களுக்கு அவர் நன்மை செய்தார்.
இயேசு பரிசுத்தமான தண்ணீராக இருப்பதால்தான் நமது ஆன்மாவில் படிந்துள்ள பாவ அழுக்கை நன்றாகக் கழுவுகிறார்.
நாம் கிறிஸ்தவர்கள்,
கிறிஸ்துவாக வாழ வேண்டியவர்கள்.
கிறிஸ்துவின் நற்செய்தியை உலகமெங்கும் அறிவிக்க கடமைப்பட்டவர்கள்.
கிறிஸ்துவுக்காக நம்மைச் சுற்றி வாழ்பவர்களின் குறைகளை நீக்க அவர்களுக்கு உதவ வேண்டியவர்கள்.
மற்றவர்களின் குறைகளை நீக்க அவர்களுக்கு உதவ வேண்டுமானால் நாம்
முதலில் நமது குறைகளை முதலில் நீக்க வேண்டும்.
நமது கண்ணில் விட்டம் இருந்தால் மற்றவர்களது கண்ணில் இருக்கும் துரும்பு எப்படி நமக்குத் தெரியும்?
ஒரு குருடனால் மற்றொரு குருடனுக்கு வழி காட்ட முடியாது.
உலகெங்கும் கிறிஸ்துவின் அன்பைப் பரப்ப வேண்டுமானால் நாம் முதலில் கிறிஸ்துவின் நண்பர்களாக மாற வேண்டும்.
உலகெங்கும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்ப வேண்டுமானால் முதலில் நாம் நற்செய்தியை நன்கு தெரிந்து, அதன்படி வாழ வேண்டும்.
பாவிகள் மனம் திரும்ப நாம் உதவ வேண்டுமானால் முதலில் நாம் மனம் திரும்ப வேண்டும்.
கிறிஸ்துவைப் போல
நாமும் நமது விரோதிகளை நண்பர்களாக மாற்ற வேண்டுமானால்
முதலில் நாம் நமது விரோதிகள் நமக்கு எதிராக என்ன கெடுதி செய்திருந்தாலும் அதை மன்னித்து விடவேண்டும்.
மன்னிப்பு ஒன்றால்தான் விரோதிகளை நண்பர்களாக மாற்ற முடியும்.
நாமும் கிறிஸ்துவைப் போல் ஏழைகளாக, உலக பொருள்களின் மீது பற்று இல்லாதவர்களாக வாழ்வோம்.
"நானே உலகின் ஒளி" (அரு. 8:12)
என்று கூறிய இயேசு,
"உலகிற்கு ஒளி நீங்கள்'' (மத். 5:14)
என்றும் கூறியிருக்கிறார்.
உலகின் ஒளி இயேசுவே.
இயேசுவோடு, இயேசுவாக நாம் வாழும்போது நாமும் ஒளியாக மாறுகிறோம்.
இயேசுவின் ஒளி நம்மிடம் இருந்தால் தான் இயேசுவை உலகிற்கு அறிவிக்க முடியும்.
ஒளியால்தான் ஒளியை பரப்ப முடியும்.
நாம் இருட்டாக இருந்தால்,
அதாவது இயேசுவாக வாழாதவர்களாக இருந்தால்,
நம்மால் எப்படி இயேசுவாகிய ஒளியை உலகிற்குத் தர முடியும்?
நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருந்தால்தான்,
கிறிஸ்துவை உலகிற்குத் தர முடியும்.
முதலில் கிறிஸ்துவாகிய ஒளியாக மாறுவோம்.
மாறியபின் ஒளியைக்கொண்டு உலகின் இருட்டை நீக்குவோம்.
கிறிஸ்துவாகிய ஒளியை எங்கும் பரப்புவோம்.
உலகெங்கும் கிறிஸ்தவத்தைப் பரப்ப ஆசைப்படுமுன்
நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment