Sunday, June 13, 2021

கடவுளரசு நிலத்தில் விதையைப் போட்ட ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது.

கடவுளரசு நிலத்தில் விதையைப் போட்ட ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது.


27 அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.

28 நிலம் தானாகவே பலன் அளிக்கிறது: முதலில் பயிர், பின், கதிர், அதன்பின் கதிர்நிறைய மணி. (மாற்கு. 4:26 - 28)


கடையிலிருந்து மாம்பழம் ஒன்று வாங்கி வந்தேன். வெட்டி சாப்பிட்டேன். ருசியாக இருந்தது. கொட்டையைத் தூர போட மனதில்லாமல் வீட்டுத்தோட்டத்தில் ஒரு இடத்தில் ஊன்றி வைத்தேன். அப்புறம் அதை பற்றி மறந்துவிட்டேன். 

இரண்டு வாரங்கள் வெளியூருக்குப் போக  வேண்டியிருந்தது.

இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்தபோது தோட்டத்தில் ஒரு மான்கன்று நின்றது.

இவ்வளவுக்கும் கொட்டையை ஊன்றியபின் நான் அதற்கு தண்ணீர் ஊற்றவில்லை.

பெய்த மழையில் முளைத்திருக்கிறது.

அதன் பின்பு கூட மாங்கன்று அப்பப்போ பெய்த மழைத் தண்ணீரிலும், வீசிய காற்றிலும், அடித்த வெயிலிலும் வளர்ந்தது.

சில ஆண்டுகளில் அது வளர்ந்து, மரமாகி பூத்து காய்க்க ஆரம்பித்தது.

விதை ஊன்றிய பின் அதைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாத நான் 

பழங்களை பறித்து பிள்ளைகளுக்கும், கொடுத்து நானும் சாப்பிட்டேன். 

எல்லாம் விதை ஊன்றியதன் பலன்.

 கடவுளரசு நிலத்தில் விதையைப் போட்ட ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு சொல்கிறார்.

நிலத்தில் விதையைப் போட்ட ஒருவன் நாமாக இருக்கலாமே!

தினமும் பைபிள் வாசிக்கிறோம். 
வாசிக்கும் ஒவ்வொரு வசனமும் இறைவனுடைய வாக்குதான்.

வாசிக்கும் இறை வாக்குகளை தியானிப்பதன் மூலம் அவற்றை நமது மனதில் பதிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு இறை வாக்கும் நாம் 
ஊன்ற வேண்டிய விதை.

ஊன்ற வேண்டிய நிலம் எது?

நாம் சந்திக்கும் மனிதர்களின் உள்ளம்.

நாம் நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதில்லை. பல இடங்களுக்குப் போகிறோம். பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். அவர்களோடு பேசுகிறோம். பலவிதமான விஷயங்களை பற்றி பேசுகிறோம். நாட்டு நடப்புகள், அரசியல், கல்வி, வேலை போன்ற எத்தனையோ விஷயங்களை பற்றி பேசுகிறோம்.

 பேசும்போது அவர்களே அறியாமல்,
பேச்சோடு பேச்சாக,  இறைவாக்கை அவர்களின் மனதில் ஊன்றி விடலாமே!

ஒரு உதாரணத்திற்கு நம்மோடு பேசும் நண்பர் ஒருவர் அவருக்கு மற்றவர்களால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை பற்றி பேசுகிறார் என்று வைத்துக் கொள்கிறார்கள்.

நாம் பேச்சோடு பேச்சாக நமக்கு துன்பம் கொடுத்தவர்களை மன்னித்துவிடுதல், தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்தல் போன்ற இறை வாக்குகளை அவருடைய மனதில் விதைத்து விடலாம்.

இயேசுவின் பெயரையும் அதோடு சேர்த்து விதைத்து விடலாம்.

நண்பர்கள் பிற சமயத் தவறாய் இருந்தால் நாம் இயேசுவின் பெயரை கூறியவுடன் அவர்களது சமயக் கருத்துக்களையும் கூற ஆரம்பித்து விடுவார்கள்.

அதை தடுக்க கூடாது. அவர்கள் சொல்வதையும் கேட்டுக் கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டால்தான் நாம் சொல்வதை அவர்கள் கேட்டுக் கொள்வார்கள்,

இதற்குப் பெயர்தான் உரையாடல் (Dialogue) மூலம் நற்செய்தி அறிவிப்பது.

இறைவாக்கு என்ற விதையை ஊன்றி ஆகிவிட்டது. அதற்குப்பின் நபரை சந்திக்க முடியாமல் கூட போகலாம்.

அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இப்படி எங்கெங்கே  போய்கிறோமோ, யார் யாரை சந்திக்கிறோமோ அவர்கள் மனதிலும் விதையை ஊன்றி விட வேண்டும்.  

நாம் ஊன்றிய விதை எப்போதாவது முளைக்கும். மனம் நல்ல மனதாக இருந்தால் முளைத்தது, வளர்ந்து, பலன் தரும்.

முளைத்து வளர நாட்கள் ஆகலாம், வருடங்கள் கூட ஆகலாம். அந்த ஆட்களை நம்மால் சந்திக்க முடியாமல் கூட போகலாம்.

ஆனாலும் நாம் விதைத்த இறையரசின் விதை முளைத்து வளர்ந்து மரமாகி பலன் தரும்.

ஒவ்வொரு நாளும் இறைத் தந்தையை நோக்கி,

"உமது அரசு வருக"

என்று ஜெபிக்கிறோம்.

"இறையரசு" என்று எதைக் குறிக்கிறோம்?

இறைவனாகிய அரசர் எங்கும் இருக்கிறார்.

விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ நமது உள்ளத்திலும் இருக்கிறார்.

உள்ளத்தில் இருந்துதான் நம்மைப் பராமரித்து வருகிறார்.

 உள்ளத்தில் இருக்கும் இறைவனை நமது அரசராக ஏற்றுக்கொள்ளும்போது நம் உள்ளத்தில் இறையரசு வந்துவிட்டது.

இறைவனை நமது அரசராக ஏற்றுக்கொள்ளும்போது அவரது கட்டளைகளையும், விருப்பங்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.

அவரது கட்டளைகளையும், விருப்பங்களையும் ஏற்றுக் கொள்ளும்போது அவற்றின்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.

இறைவனது விருப்பம்போல் நாம் வாழ ஆரம்பிக்கும்போது நம்மிடம் இறையரசு முழுவதுமாக வந்துவிட்டது.

"உமது அரசு வருக"  என்று நாம் நமது மனதில் மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து மக்களின்   மனதிலும் இறைவனுடைய அரசு வரவேண்டும் எங்கு ஜெபிக்கிறோம்.

"எங்கள் தந்தையே" என்று தானே இறைவனை அழைக்கிறோம்!

"எங்கள்" எந்த வார்த்தையால் உலகோர் அனைவரையும் நமது சகோதர சகோதரிகளாக ஏற்றுக் கொள்கிறோம்.

உலகிலுள்ள அனைவரையும் படைத்தவர் கடவுள்தானே.

நமது ஆண்டவர் உலகில் உள்ள அனைவருக்காகவும் தானே பாடுகள் பட்டு, தன்னையே பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்! 

மீட்பு வட்டத்திற்குள் அனைவரும் வரவேண்டுமே!

 அனைவரும் இறையரசை ஏற்றுக் கொண்டால் தானே இது சாத்தியமாகும்!

ஆகவேதான்,

 "தந்தையே, உமது பிள்ளைகளாகிய எங்கள் அனைவரையும்  உமது அரசுக்குள் கொண்டு வாரும்."

என்று நம் தந்தையிடம் வேண்டுகிறோம்.

இந்த ஜெபத்தை நமக்கு கற்றுத்தந்த நமது ஆண்டவராகிய இயேசு, 

அவர் நாம் அனுசரிக்கும்படி நமக்கு தந்த இரண்டு கட்டளைகளையும்  நாம் ஏற்றுக்கொண்டதாக தந்தையிடம் தெரிவிக்கும் வகையில் இந்த   ஜெபத்தை அமைத்துள்ளார்.

1. "தந்தையே நாங்கள் உம்மை நேசிக்கிறோம்.

2. உம்மால் படைக்கப்பட்ட உலகத்தினர் அனைவரையும் நேசிக்கிறோம். ஆகவே அனைவரையும்   உமது அரசின் கீழ் கொண்டு வாரும். விண்ணகத்தில் வாழ்வோர் அனைவரும் உமது  சித்தத்தை ஏற்றுக் கொள்வது போல, உலகில் வாழும் அனைவரும் உமது சித்தத்தை ஏற்று அதன்படி வாழ வரம் தாரும்.


நமது இறை அன்பையும் பிறர் அன்பையும் தந்தையிடம் தெரிவித்தால் மட்டும் போதாது.

நமது பிறர் அனைவரையும் தந்தையின் ஆட்சியின் கீழ் கொண்டுவர நம்மால் இயன்ற அளவு முயல வேண்டும்.

அதற்காகத்தான் நாம் எங்கு சென்றாலும், யாரைப் பார்த்தாலும் 

அவர்களின் மனதில் இறையரசின் விதையை ஊன்ற வேண்டும்.

அது முளைத்து வளர வேண்டியதை இறைவன் பார்த்துக்கொள்வார்.

இறைவாக்கை விதைப்போம். இறையரசை பரப்புவோம்.

நாம் பெற்ற   இன்பத்தை எல்லோரும் பெற வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment