Saturday, June 19, 2021

"அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார்."(மாற்கு. 4:38)

"அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார்."
(மாற்கு. 4:38)

இயேசுவின் வாழ்வின் போது அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும், செய்த ஒவ்வொரு செயலும் அவருடைய சீடர்களாகிய நமக்கு பாடம் கற்பிப்பனவாகவே   அமைந்திருந்தன.

இயேசு கடற்கரையில் அமர்ந்திருந்த கூட்டத்தினருக்கு படகில் இருந்தவாறு போதித்தார்.

மாலையில் சீடர்களிடம், "அக்கரைக்குச் செல்வோம்" என்றார்.

அவர்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு அவரை அப்படியே படகில் அழைத்துச் சென்றனர்.

அப்போது கடலில் நிகழ்ந்த நிகழ்வை இயேசு முக்காலமும் அறிந்த இறைவன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு தியானிக்க வேண்டும்.

சிறிது நேரத்தில் கடலில் புயல் வீசப்போவது அவருக்குத் தெரியும்.

அலைகள் படகின்மேல் மோதப்போவதும் அவருக்குத் தெரியும்.

சீடர்கள் பயத்தினால் கத்தப்போவதும் அவருக்குத் தெரியும்.

ஆனாலும்  அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார்.

சீடர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் விசுவாசத்தின் அவசியம் பற்றி போதிக்கவே இயேசு  புயலை அனுமதித்துவிட்டு அவர் எதுவும் தெரியாதவர் போல தூங்கிக்கொண்டிருந்தார்.

சீடர்கள் அவரை எழுப்பி, "போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?" என்றவுடன்,

அவர் புயலை அடக்கிவிட்டு,

"ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?" என்றார்.

நம்மைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு செயலும் நடக்கும்போது மட்டும்தான் தெரியும்.

ஆனால் இறைவனைப் பொறுத்தமட்டில் நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலும் நித்திய காலமாய் இறைவனுக்குத் தெரியும்.

ஒரு முறை ஒரு பிறவி குருடனை குணமாக்கும் முன்பு,

அவன் குருடனாய் பிறந்ததன் காரணத்தை சீடர்கள் கேட்ட போது,

"கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்." (அரு. 9:3)

என்று இயேசு கூறியிருந்தார்.

பாவம் தவிர உலகில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் இறைவனின் நித்திய திட்டத்தின்படிதான் நடைபெறுகிறது என்பதற்கு பிறவிக் குருடன் ஒரு சான்று.

 நமக்கு பரிபூரண மன சுதந்திரம் கொடுத்துவிட்டபடியால் 

அதில் இறைவன் குறுக்கிடுவது இல்லை.

நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் போது கூட,

 அதாவது நாம் பாவம் செய்யும்போது கூட,

கடவுள் தடுப்பது இல்லை.

ஆனாலும் நமது பாவத்தை  
நம் மீது அவர் கொண்டுள்ள 
அளவற்ற அன்பை வெளிப்படுத்த பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 இறைவன் நம்மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பை   பாவப் பரிகாரமாக தான் பட்ட  பாடுககளின் மூலமாகவும்,

 அடைந்த மரணத்தின்  மூலமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்!

புதுமை மூலம் பிறவிக் குருடனை குணமாக்குவதின்  மூலம் இறைவனின் மகிமையை வெளிப்படுத்துவதற்காகவே 

அவனை பிறவிக் குருடனாக இறைவன் படைத்தார்.

தான் இயற்கையின் மீதும்  சர்வ அதிகாரம் கொண்ட கடவுள்  என்பதை   சீடர்களுக்கு புரிய வைப்பதற்காகவும், 

தன்மீது சீடர்களுக்கு அசைக்கமுடியாத விசுவாசம் இருக்க வேண்டும் 

என்பதை புரிய வைப்பதற்காகவும்  புயலை வீசச் செய்தார்.

இயற்கை இறைவன் கொடுத்த விதிகளின்படி தான் இயங்குகிறது!

பிரபஞ்சத்தில் உள்ள கோள்களின் இயக்கம், கடல் கொள்ளுதல், கண்டங்கள் தோன்றுதல், நில நடுக்கம், சுனாமி போன்ற எல்லா இயற்கை நிகழ்வுகளும் இறைவனது நித்திய கால திட்டத்திற்கு உட்பட்டவை.

இயற்கை நிகழ்வுகளின் விளைவுகளும் இறைவனது நித்திய கால திட்டத்திற்கு உட்பட்டவை.

அவரது திட்டமின்றி ஒரு அணு கூட அசையாது.

இறை இயேசு அன்று   கடலில் புயலை ஏற்படுத்திவிட்டு  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது போலவே,

இன்றும் இயற்கை நிகழ்வுகளை ஏற்படுத்திவிட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அன்று கடலில் புயலை ஏற்படுத்தியது தனது சீடர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காகவே.

அலைகள் படகில் மோதியதால் தான் சீடர்கள்,

"போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?"

 என்று சத்தமாக செபித்தார்கள்.

இயேசுவும் காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இசையாதே, சும்மாயிரு" என்றார். 

காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.

பின், அவர் அவர்களை நோக்கி, "ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?" என்றார்.

இயற்கையைப் படைத்த கடவுள் தம்மோடுதான் இருக்கிறார்  என்ற விசுவாசம் சீடர்களுக்கு இருந்திருந்தால்,

இயற்கையின் சீற்றத்திற்குப் பயந்திருக்கவே மாட்டார்கள்.

கடல் சீறிக்கொண்டிருந்ததால்தான் சீடர்கள் இயேசுவின் உதவியை தேடினார்கள்.

இயேசு இயற்கையை அடக்கிவிட்டு, விசுவாசமின்மைக்காக சீடர்களைக் கண்டிக்கிறார்.

ஒரு அணு கூட தானாக தோன்றியிருக்க முடியாது.

இன்று அலையலையாக வந்து நம்மீது மோதிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தானாக தோன்றியிருக்க முடியாது.

எல்லாவற்றிற்கும் ஆதி காரணர் கடவுள் ஒருவரே.

அன்று தனது மகிமை வெளிபடுவதற்காக ஒரு மனிதனை பிறவி குருடனாக படைத்த அதே கடவுள்தான்,

அன்று சீடர்களுக்கு விசுவாசத்தின் அத்தியாவசத்தை வலியுறுத்துவதற்காக கடலில் புயலை வீச செய்த அதே கடவுள்தான்,


நமக்கு விசுவாசத்தின் அத்தியாவசத்தை வலியுறுத்துவதற்காக,

நம்மை அவரை நோக்கி ஜெபிக்க வைப்பதற்காக 

கொரோனா அலையை மோதச் செய்திருக்கிறார்.

இன்று உலகம் முழுவதும் இறைவனை உதவிக்கு அழைக்கிறது.

நல்லதுதான்.

ஆனால் விசுவாசத்தோடு அழைக்கின்றதா?


உண்மையான விசுவாசம் நமக்கு இருந்தால்,

இயற்கையை படைத்த கடவுள் நம்முள்தான் இருக்கிறார் எந்த விசுவாசம் இருந்தால்,

நாம் கொரோனாவைக் கண்டு பயப்படவே மாட்டோம்.

தாயின் கைப்பிடியில், இடுப்பில் அமர்ந்து கொண்டிருக்கும் குழந்தை தாய் மீது முழுமையாக நம்பிக்கை இருந்தால் தான் விழுந்து விடுவோமோ என்று பயப்படவே செய்யாது.

பயப்பட்டால் தாய் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

நமக்கு உண்மையான விசுவாசம் இல்லை.

அதென்ன உண்மையான விசுவாசம்?

சர்வத்தையும்  படைத்து காத்து வரும் எல்லாம் வல்ல இறைவனின் கையில் தான் நாம் இருக்கிறோம்.

அவர் நம்மை கீழே போடமாட்டார் என்று உறுதியாக விசுவாசிப்பது தான் உண்மையான விசுவாசம்.

கடவுளின் கையில் இருந்துகொண்டே கொரோனாவிற்குப் பயந்தால் நம்மிடம் உண்மையான விசுவாசம் இல்லை.

பயப்படாமல் இருந்தால் கொரோனாவால் மரணம் வராதா?

விசுவாசம் என்றால் இறைவனை விட்டு பிரிய மாட்டோம் என்று உறுதியாக நம்புவது.

மரணத்தால் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்க முடியாது.

இறைவனிடமிருந்து பிரியாமல் வாழும் வாழ்வே விசுவாச வாழ்வு.

எங்கிருந்தாலும் இறைவனோடு இருப்போம் என்று உறுதியான விசுவாசத்தோடு வாழ்வோம்.

அப்படியானால் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா?

இப்படிக் கேட்பது,  ஆன்மாவின் மீட்பிற்காக வாழ்வோம் என்று சொல்லும்போது 

"அப்படியானால் சாப்பிட வேண்டாமா?" என்று கேட்பது போல் இருக்கிறது.

விசுவாச வாழ்வு விண்ணக வாழ்வை மையமாகக் கொண்டது.

விண்ணகத்திற்காக வாழ்பவன் உலகைப் பற்றி கவலைப்பட மாட்டான்.

உலகைப் பற்றி கவலைப்படாதவன் உலகைவிட்டு  போய் விடுவோமோ என்று பயப்பட மாட்டான்.

நம்மைப் படைத்து உலகில் விட்டவர் இறைவன். உலகில் எவ்வளவு காலம் வாழவேண்டும் என்பது இறைவன் கையில் தான் இருக்கிறது.

அவரது திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. 

அவரது திட்டத்தை ஏற்று நடப்போர் எதற்கும் பயப்பட மாட்டார்.

அவரை மீறி கொரோனாவால் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது.

அன்று இயேசு எழுந்து, காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இறையாதே, சும்மாயிரு" என்றார். காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.

இன்று அவர்  கொரோனாவை நோக்கி,

"பிரச்சனை பண்ணாதே, சும்மாயிரு" என்பார்.

அதுவும் நின்று விடும். உலகில் மகிழ்ச்சி உண்டாகும்.

விசுவசிப்போம்.


"நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்:

 நம்பிக்கையில் தளராதே, ஏனெனில் நாம் உன் கடவுள்:

 உன்னை உறுதிப்படுத்துவோம், உனக்கு உதவி செய்வோம்:

 நம்முடைய வலக்கை உன்னைத் தாங்கிக் கொள்ளும்."
(இசையா. 41:10)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment