Wednesday, June 2, 2021

"வானகத்தில் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்." (மாற்கு 12:25)

"வானகத்தில் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்." 
(மாற்கு 12:25)


உலகத்தின் இறுதி நாளில் இறந்தோர் உயிர்பெற்று எழுவர்.

நல்லவர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்த உடலோடு விண்ணக வாழ்விற்குள் நுழைவர்.

 இயேசுவின் காலத்தில் வாழ்ந்த சதுசேயர்களுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லை.

தங்கள் நம்பிக்கை இன்மைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் அவர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.

"சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் ஒருத்தியை மணந்து மகப்பேறு இன்றி இறந்தான்.

 இரண்டாம் சகோதரனும் அவளை மணந்து மகப்பேறு இன்றி இறந்தான்.


மூன்றாம் சகோதரனும் அப்படியே.

 இவ்வாறு எழுவருக்கும் மகப்பேறு இல்லாமல் போயிற்று.

 எல்லாருக்கும் கடைசியில் அப்பெண்ணும் இறந்தாள்.

உயிர்ப்பு நாளில் அவர்கள் உயிர்த்தெழும்போது அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்?"

என்பது அவர்கள் கேட்ட கேள்வி.

"எழுவரையும் மணந்த அவள் விண்ணகத்தில் யாரோடு குடும்பம் நடத்துவாள்" என்று கேட்டார்கள்.  

அவர்களது கேள்வியே தவறு.

உடலுறவுடன் கூடிய குடும்ப வாழ்வு இவ்வுலகிற்கு மட்டுமே உரியது.

இயேசு கூறினார்,

"வானகத்தில் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்." 

தேவதூதர்கள் உடல் இன்றி படைக்கப்பட்டவர்கள்.

ஒவ்வொருவரும் தனித்தனியே படைக்கப்பட்டார்கள்.

நம்மைப்போல குடும்ப வாழ்வில் பலுகியவர்கள் அல்ல.

அவர்களுக்கு குடும்ப வாழ்வு கிடையாது.

சடப் பொருளாலான உடலை உடையவர்களுக்கு மட்டுமே உரியது குடும்ப வாழ்வு.

ஆனால் தேவதூதர்கள் ஆவிகள்.

நாம் இறுதி நாளில் உயிர்த்தெழும் போது 

எப்படி இயேசு 
உயிர்த்தெழும்போது அவரது சடப் பொருளாலான உடல் (Material body)
ஆன்மிக உடலாக (spiritual body) மாறியதோ,

அதேபோல நமது உடலும் ஆன்மீக உடலாக மாறி இருக்கும்.

விண்ணகத்தில் நமது வாழ்வும் முற்றிலும் ஆன்மீக வாழ்வாகவே இருக்கும்.

வானதூதர்களைப் போலவே நாமும் விண்ணகத்தில் வாழ்வோம்.

"ஊனும் இரத்தமும் கடவுளின் அரசை உரிமையாகப் பெற முடியாது: அழிவுள்ளது அழியாமையை உரிமையாகப் பெறாது." (1 கொரி.15:50) 

"ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ... அனைத்தையும் தமக்குக் கீழ்ப்படுத்த வல்ல ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை, மாட்சிமைக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார்."
(பிலிப்.3:21)


ஊனும் இரத்தமும் ஆன்மீகமாக மாறிய பின்புதான் அது அழியாத நிலையை அடையும்.

ஆன்மீக உடல் இடம், காலத்திற்கு அப்பாற்பட்டது. (Beyond space and time)

விண்ணகத்தில் வாழ்வதற்கு இடமும் தேவையில்லை, காலமும் தேவையில்லை. 

விண்ணகத்தில் நாம் அனுபவிக்கப் போவது ஆன்மிகத்திற்கு மட்டுமே உரிய நித்திய பேரின்ப நிலை.

விண்ணகத்தில் இடமும் கிடையாது, காலமும் கிடையாது.

நாம் மரணிக்கும் போதே காலத்திலிருந்து நித்தியத்திற்குள் நுழைந்து விடுவோம்.

இப்போது இயேசுவும் அன்னை மரியாளும் எப்படி ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்தில் வாழ்கிறார்களோ அப்படியே நாமும் வாழ்வோம்.

இப்போது உலகில் நம்மோடு  வாழ்பவர்கள் விண்ணகம் வரும்போது அவர்கள் யார் யார், என்ன உறவு என்று நமக்குத் தெரியும்.

நமக்கு இடையே இருக்கும் உறவு,

வான தூதர்களுக்குள் இருக்கும் உறவைப் போல,

நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவைப் போல,

 முற்றிலும் ஆன்மீக அன்பினால் ஆன உறவாக மட்டுமே இருக்கும்.

விண்ணகம் எந்த வகையில் மண்ணகத்தை விட வித்தியாசமானது? 

மண்ணகம் சடப்பொருளால் ஆன இடம். (space)

விண்ணகம் ஆன்மீக வாழ்வு நிலை. (state)

மண்ணக வாழ்வு ஒருநாள் முடிந்து விடும்.

விண்ணக வாழ்வு என்றென்றும் நிலையானது.

இயேசு நமக்கு கிடைக்கவிருக்கும் விண்ணக வாழ்வை பல உருவகங்கள் மூலம் விளக்கி இருக்கிறார்.

உருவகங்கள் மூலம் விளக்கியிருப்பதற்கு சரியான விளக்கம் கொடுக்க நம்மால் முடியாது. 

, " கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது".
( 1 கொரி. 2: 9)

   கடவுள்  தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள மோட்சத்தின் அழகை 

மனித கண்கள் கண்டதில்லை, காதுகள் கேட்டதில்லை, அனை விவரிக்க நமது உள்ளத்தில் வார்த்தைகள் இல்லை.

நாம் அங்கு சென்ற பின்புதான் அதனால் அது நமக்குத் தெரியவரும்.

நமக்காக காத்திருக்கும் பேரின்பம்  இறைவனோடு நமது ஆன்மா ஒன்றிக்கும் போதுதான் நமக்கு தெரியவரும்.


விண்ணுலகம் சென்று மூவொரு தேவனோடு நாம் ஒன்றிக்கும் போதுதான் விண்ணக பேரின்ப ரகசியம் நமக்குத் தெரியவரும்.

விண்ணுலகில் இறைவனை முகத்துக்கு முகம் பார்க்கும் பொழுதுதான் அவரது அளவுகடந்த அழகு நமக்கு புரியவரும்.

இறைவனைப்  பார்த்துக் கொண்டே இருப்போம்,

 நித்திய காலமும் அவரது அழகை அனுபவித்துக் கொண்டே இருப்போம்.

நித்திய காலமும் நமது ஒரே வேலை நமது சகோதர சகோதரிகளுடனும், புனிதர்களுடனும்,

மூவொரு தேவனோடு ஒன்றித்து 

அவரது அன்பில் வாழ்வதுதான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment