"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." (மத். 5:24)
திரியேக தேவன் நம்மை அவர் சாயலில் படைத்தார், நாம் அவரைப் போல வாழ வேண்டும் என்பதற்காக.
தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களும் அன்புறவில் ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.
தான் ஒரே கடவுளாக இருந்தாலும் மூன்று ஆட்களாக இருப்பதால்தான்,
நம்மையும் தனித்து வாழக்கூடிய தனி மனிதனாக படைக்காமல் குடும்பமாக படைத்தார்.
ஆட்கள் பலர் ஆயினும் குடும்பம் ஒன்று.
குடும்பங்கள் பல ஆயினும் சமூகம் ஒன்று.
ஆட்கள் குடும்பமாகவும், சமூகமாகவும் வாழ்கிறோம்.
நாம் குடும்பமாகவும், சமூகமாகவும் வாழ்வதற்கு ஆதாரமாய் இருப்பது இறைவன் நமக்கு தந்துள்ள அன்புறவு.
அன்பு இல்லையேல் உறவு இல்லை.
உறவு இல்லையேல் குடும்பமும் இல்லை, சமூகமும் இல்லை.
அன்புறவில் வாழ்வதற்கு மற்றொரு பெயர் சமாதானமாய் வாழ்வது.
இறைவன் நமது முதல் பெற்றோரை தன்னோடு அன்புறவில் இருப்பவர்களாகத்தான் படைத்தார்.
படைக்கப்பட்ட உடன் இறைவனுக்கும் மனிதருக்கும் இடையில் அன்புறவு, அதாவது, சமாதானம் நிலவியது.
ஆனால் மனிதன் தான் செய்த பாவத்தினால் இறைவனோடு தனக்கிருந்த உறவை அதாவது சமாதானத்தை முறித்துக்கொண்டான்.
மனிதன் இழந்துவிட்ட சமாதானத்தை மீட்டுக் கொடுக்கவே
இறைமகன் மனிதனாய் பிறந்து, பாடுகள் பட்டு, மரித்து மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்தார்.
இயேசு தனது மரணத்தினால் மனிதன் இழந்த சமாதானத்தை மீட்டுக் கொடுத்தார்.
ஆகவேதான் இயேசுவை சமாதானத்தின் தேவன் என்கிறோம்.
அன்புறவின் மறு பெயர் தான் சமாதானம்.
நாம் கடவுளை நேசிக்க வேண்டும் என்றால் இறைவனோடு சமாதானமாக இருக்க வேண்டும் என்று பொருள்.
அயலானை நேசிக்க வேண்டும் என்றால் அவலானோடு சமாதானமாக இருக்க வேண்டும் என்று பொருள்.
அன்பு முறியும் போது சமாதானம் முறியும்.
இறைவனுக்கு விரோதமாக நாம் பாவம் செய்யும்போது அவருக்கும் நமக்கும் இடையே இருக்கும் சமாதான உறவு முறிகிறது.
பாவம் மன்னிக்கப்படும் போது சமாதானம் திரும்புகிறது.
ஆகவேதான் பாவசங்கீர்த்தனம் முடிந்தவுடன் குருவானவர் நம்மிடம் "சமாதானமாய் போ" என்கிறார்.
நமது அயலானின் மனதை நோகப்பண்ணும்போதும் நாம் இறைவனின் மனதைத்தான் நோகப்பண்ணுகிறோம்.
நமது அயலானின் மனதை நோகப்பண்ணும்போது அவனோடு நமக்கு இருந்த சமாதானம் முறிகிறது.
சமாதானத்தை மீட்க நாம் இறைவனிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும், அயலானிடமும்
மன்னிப்புக் கேட்க வேண்டும்.
நமது அயனான் இறைவனின் பிள்ளையாகையால், பிள்ளையோடு சமாதானமாக இருந்தால்தான் தந்தைக்கு மகிழ்ச்சி.
ஆகையால்தான் நாம் தந்தையோடு பேசப் போகும்போது நம்மிடம் அவர் சொல்கிறார்,
"நீ உனது சகோதரர்களோடு சமாதானமாக இருந்தால்தான் எனக்கு மகிழ்ச்சி.
ஆகவே என்னோடு பேச வரும்போதும் சரி, எனக்கு காணிக்கை தர வரும்போதும் சரி முதலில் உனது சகோதரனோடு சமாதானம் செய்துவிட்டு வா.'' என்கிறார்.
"நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது,
உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,
அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு,
முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்.
பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து."
நம் சகோதரனுக்கு நம்மீது மனத்தாங்கல் இருந்தால்கூட நாம்தான் சமாதானம் செய்ய வேண்டும் என்று ஆண்டவர் சொல்கிறார்.
ஆண்டவர் செய்ததும் அதைத்தானே.
பாவம் செய்தது நாம். பரிகாரம் செய்தது ஆண்டவர். நாம் செய்த பாவத்திற்கு அவர் பரிகாரம் செய்திருக்காவிட்டால் நம்மால் மீட்புப் பெற முடியுமா?
நாம் நித்திய காலம் வாழ வேண்டும் என்பதற்காக அவர்தானே சிலுவையில் மரணம் அடைந்தார்!
இன்றைய உலகில்
குடும்பத்திலும் சரி,
சமூகத்திலும் சரி,
நாட்டிலும் சரி
எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம்
அன்பு உறவு இல்லாமை, அதாவது சமாதானம் இல்லாமை.
"அன்பு பொறுமையுள்ளது,
பரிவுள்ளது.
அன்பு அழுக்காறு கொள்ளாது.
பெருமை பேசாது,
இறுமாப்பு அடையாது,
இழிவானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது,
சீற்றத்திற்கு இடந்தராது,
வர்மம் வைக்காது.
அநீதியைக் கண்டு மகிழ்வுறாது: உண்மையைக் கண்டு உளம் மகிழும்.
அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்: பிறர் மீது நல்லெண்ணம் இழப்பதில்லை: நம்பிக்கையில் தளர்வதில்லை: அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்."
(1கொரி.13:4 - 7)
இத்தனை பண்புகள் உள்ள அன்பு அனைவரிடமும் இருந்தால் உலகில் சமாதானத்திற்கு பஞ்சமே இருக்காது.
அனைவரையும் அன்பு செய்வோம்.
அனைவரோடும் உறவோடு இருப்போம்.
அனைவரோடும் சமாதானத்தோடு இருப்போம்.
இதுவே இயேசுவிற்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய காணிக்கை!
லூர்து செல்வம்
No comments:
Post a Comment