"மகளே, தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று"
(மத்.9:22)
இயேசு தலைவன் ஒருவனின் வேண்கோளுக்கு இணங்க இறந்த ஒரு பெண்ணிற்கு உயிர் கொடுப்பதற்காக தனது சீடர்களோடு போய்க் கொண்டிருந்தார்.
அப்போது பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி பின்புறமாக வந்து, அவர் போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.
"நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து,
"மகளே, தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார்.
அந்நேரமுதல் அவள் குணமாயிருந்தாள்.
இந்தப் புதுமையில் சுகமில்லாத பெண் தன்னைக் குணப்படுத்தும்படி இயேசுவிடம் கேட்கவும் இல்லை.
இயேசு "சுகமாகுக" என்று சொல்லவும் இல்லை.
அவள் செய்தது எல்லாம் "இயேசுவின் போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன் "
என்று விசுவசித்தது மட்டுமே.
நமது வாழ்நாளில் பல முறை இப்புதுமையை வாசித்திருப்போம்.
ஒரு முறையாவது அந்த பெண்ணை போல நாமும் விசுவசிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறோமா?
ஏதாவது ஒரு செயலில் உதவி தேவைப்படும் போது
"எனக்கு என்ன தேவை என்று இயேசுவுக்கு தெரியும்.
அவரை நினைத்துக் கொண்டு செயலில் இறங்குவேன்.
எனக்கு எது தேவையோ அதை அவர் தர வேண்டிய நேரத்தில் தருவார்.
அவரது நினைவில் என்ன நடந்தாலும் அது அவரது சித்தப்படியே நடக்கும்.
அவரது சித்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்வேன்."
என்று எண்ணி செயல்பட்டிருக்கிறோமா?
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதும் சரி,
பிறந்த உடனேயேயும் சரி,
அது வளர்ந்து கொண்டிருக்கும் போதும் சரி
அதற்கு என்னென்ன தேவை என்று தாய்க்குத் தெரியும்.
குழந்தை கேட்காமலேயே அதற்கு தேவையானவற்றை தாய் செய்து கொண்டிருப்பாள்.
குழந்தை சிந்திக்க ஆரம்பித்தவுடன் தான் ஆசைப்படுவதை தாயிடம் கேட்கும்.
ஆனால் அது ஆசைப்படுவது அதற்கு நல்லதா, கெட்டதா என்று அதற்குத் தெரியாது.
தாய்க்குத் தெரியும்.
ஆகவே அது கேட்கும்போது கேட்பது குழந்தைக்கு உபயோகமாய் இருந்தால் தாய் கொடுப்பாள்.
கெடுதியாய் இருந்தால் கொடுக்க மாட்டாள்.
நம்மைப் படைத்தவர்தான் நமக்குத் தாய்.
நாம் உருவான நாளிலிருந்து நம்மைப் பராமரித்து வருபவர் அவர்தான்.
நாம் நமது பராமரிப்பைப் பற்றி கவலைப்படாமல் நம்மை படைத்தவரது கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்போமே.
நமக்கு எது நல்லதோ அது நடக்கும்.
மரம் வைத்தவனுக்கு தண்ணீர் ஊற்றத் தெரியும்.
மரம் அதைப்பற்றி கவலைப் படுவதை விட்டுவிட்டு,
வளர்ந்து, பூத்து, காய்த்து, பழுத்து, பலன் தர வேண்டியதுதானே!
அது மட்டும்தானே அதன் வேலை.
நாம் நமது ஆன்மிகத்தில் வளர்கின்றோமா,
இறைவனையும், அயலானையும் அன்பு செய்கிறோமா,
நமது அன்பை செயல்களாக மாற்றுகிறோமா,
இறைவன் தரும் அருளை பயன்படுத்துகிறோமா,
இறைவனது சித்தப்படி நடக்கின்றோமா
என்பதை மட்டும் கவனிப்போம்.
நமது தேவைகளை நம்மை படைத்தவர் நிறைவேற்றுவார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment