Monday, July 12, 2021

''தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமிக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன்." (மாற்கு: 10:35)

''தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமிக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன்."
(மாற்கு10:35)

திருப்பதியில் இந்து மக்களிடையே உரையாடல்கள் மூலம் நற்செய்தியை அறிவித்து வந்தார் அருட்திரு.G. மிக்கேல்   சேசு சபை  அடிகளார்..

பிரசங்கங்கள் மூலம் அறிவிப்பதை விட  உரையாடல்கள் மூலம் அறிவிப்பது கடினமாக இருந்தாலும், எளிதானது.

 ஒரே பிரசங்கத்தில் ஆயிரம் பேருக்கு நற்செய்தியை அறிவித்து விடலாம். ஆனால் உரையாடல்கள் மூலம் அறிவிக்க வேண்டும் என்றால் தனித்தனியே ஆட்களை சந்திக்க வேண்டியிருக்கும். இது கொஞ்சம் கடினம்.

ஆனால் தனித்தனியே ஆட்களை சந்தித்து பேசும்போது நமது கருத்துக்களை அவர்களிடம் பதிய வைப்பது எளிது.

அவரது எளிமையாலும், அணுகுமுறையாலும் கவரப்பட்ட ஒரு இந்து இளைஞன் அவனாகவே தேடிவந்து அவரைச் சந்திக்க ஆரம்பித்தான்.

அவரது உரையாடல்கள் மூலம் கிறிஸ்தவம்தான் உண்மையான சமயம் என்பதை  புரிந்துகொண்டான்.

அவனும் கிறிஸ்தவனாக ஆசைப்பட்டான்.

ஆனால் அவனது பெற்றோர் தீவிரமான இந்துக்கள். கிறிஸ்தவத்தை வெறுப்பவர்கள்.

ஆனாலும் இளைஞனுக்கு பெற்றோர்கள்பால் மட்டற்ற மரியாதை இருந்தது.

தந்தையின் அனுமதியுடன்தான் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று தீர்மானித்தான்.

ஆனால் இந்துத்துவத்தின் தீவிரமும், கிறிஸ்தவத்தின் மீது வெறுப்பும் கொண்ட தந்தை அவனுக்கு எப்படி அனுமதி வழங்குவார்?

ஆனாலும் அந்த குருவானவர்,

 "கவலைப்படாதே உனது தந்தையின் அனுமதி கட்டாயம் கிடைக்கும், " என்று உறுதிபடக் கூறினார்.

எப்படி கிடைக்கும் என்பது தான் அவனுக்கு புரியவில்லை.

 ஒரு நாள் முயன்று பார்ப்போமே எந்த துணிச்சலில், தந்தையிடம் சென்று,

" ,அப்பா, இதுவரை நான் கேட்டது எதையும் நீங்கள் மறுக்கவில்லை.

ஆகவே இப்போது கேட்கப்போவதையும் கட்டாயம்  தருவீர்கள் என்று நம்புகிறேன்.'

என்று பீடிகை போட்டான்.

"இப்படி அசட்டு நம்பிக்கை எல்லாம் கூடாது. முதலில் கேள். தரவா வேண்டாமா என்று நான் முடிவு எடுத்துக் கொள்கிறேன்."

தந்தையை எதிர்த்துதான் அனுமதி பெற  வேண்டியிருக்கும். இருந்தாலும் துணிந்து விட்டான்.

எதிர்த்தாவது தந்தையின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தான். 

"நமது குடும்பம் தீவிரமாக இந்து குடும்பம் என்பது எனக்கு தெரியும்.

ஆனாலும் எனக்கு கிறிஸ்தவ சமயத்தின்பால் பற்று இருக்கிறது.

நான் கிறிஸ்தவனாக உங்கள் அனுமதி வேண்டும்.

அனுமதி கிடைக்குமென்ற நம்பிக்கை என்னுள் இருக்கிறது."

என்று முகத்தை பார்க்காமல் சொல்லிவிட்டு,

முகத்தைப் பார்த்தான்.

அவ்வளவு கோபமான முகத்தை அதுவரையும் அவன் பார்த்ததில்லை.

ஒரு மூடை சோளத்தை அவரது முகத்தில் கொட்டினாலும் 
நொடியில் அது அவ்வளவும் பொரியாக மாறிவிடும்!

கோபத்தில் அவர் வார்த்தைகளை பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.

அவற்றை இங்கே எழுதினால் அவற்றின் வெப்பத்தில் எனது Cell phoneஏ எரியாமலே சாம்பலாகிவிடும்!

ஆகவே அவர் பொரிந்த வார்த்தைகளை எழுதாமல் விஷயத்தை மட்டும் எழுதி விடுகிறேன்.

''என்னது உயிரே போனாலும். கிறிஸ்தவத்தில் சேர உனக்கு அனுமதி கிடையாது.

யாரோ இந்த  ஆசையை உன் மனதில் ஊட்டியிருக்கிறார்கள்.

யாராக இருந்தாலும் இனிமேல்  நீ அவரை சந்திக்கக்கூடாது.

சந்தித்தால்...." வாக்கியத்தை முடிக்காமலே வெளியே சென்றுவிட்டார்.

இருதலை கொள்ளி எறும்பு போல் தவிக்க ஆரம்பித்தான் இளைஞன்.

யாரோடும் பேசுவதை நிறுத்தினான்.

குருவானவருக்கு ஒரு கடிதம் எழுதினான்.

அவரோ பதிலில்,

"கவலைப்படாதே, கட்டாயம் உனது தந்தையின் மூலமே அனுமதி கிடைக்கும்."
என்று மட்டும் எழுதினார்.

எப்படி கிடைக்கும் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

ஒரு நாள் அவனது தந்தை அவனிடம் ஒரு பொட்டலத்தை கொடுத்தார்.

"இங்கே பார். இது வெங்கடாசலபதி ஆலய பிரசாதம். பொட்டலத்தை பிரித்து பிரசாதத்தை சாப்பிடு. உனக்கு வழி தெரியும்." என்றார்.

அவனோ பொட்டலத்தைப் பிரிக்காமல் மேஜையின் மேல் வைத்தான்.

 தந்தை விடவில்லை.

 "இப்போது என் கண் முன்னே நீ பொட்டலத்தை பிரிக்க வேண்டும்.
பிரசாதத்தை சாப்பிட வேண்டும்."
என்று கோபத்துடன் சொன்னார்.

வேறு வழி இல்லாமல் பொட்டலத்தை எடுத்து பிரித்தான்.

பிரித்த உடனே அவனது முகம் மலர்ந்தது.

தந்தைக்குப் காரணம் புரியவில்லை.

",அப்பா, மிகவும் நன்றி,  வழி பிறந்து விட்டது. கொஞ்சம் சிரியுங்கள்!"

புரியாமலேயே தந்தை ஒரு புன்முறுவல் பூத்தார்.

மகன் தன் பக்கம் வந்துவிட்டான் என்பது அவர் நினைப்பு.

"தங்கள் அனுமதிக்கும் புன்முறுவலுக்கும் நன்றி!"

என்று கூறி பிரித்த பொட்டலத்தை பிரசாதத்துடன் தந்தையிடம் கொடுத்தான்.

அவர் ஒன்றுமே புரியாமல் பிரசாதத்தை எடுத்து வாயில் போட்டு விட்டு பொட்டலம் பொதிந்திருந்த பேப்பரைப் பார்த்தார்.

முகத்தில் தோன்றிய எதிர்வினையை யாராலுமே கணிக்க முடியாது.

 பேப்பரை  மகன் வாங்கிக்கொண்டான்.

"அப்பா, வரட்டுமா?"

என்ன செய்கிறோம் என்பதை உணராமலேயே தலையசைத்தார்.

மகிழ்ச்சியோடு பேப்பரையும் எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

நேரே குருவானவரிடம் சென்றான்.

"சாமி,  அனுமதி கிடைத்துவிட்டது. அதுவும் அப்பா மூலமாகவே!"

 என்று சொல்லிக்கொண்டே சுவாமியிடம் பேப்பரைக்  கொடுத்தான்.

சுவாமி வாசித்தார்.  அவர் முகமும் மலர்ந்தது.

 அப்படி அதில் என்ன எழுதியிருந்தது?

" இயேசு, "தன் வீட்டையோ, சகோதரர் சகோதரிகளையோ, தாய் தந்தையரையோ, மக்களையோ, நிலபுலங்களையோ 

என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் துறந்துவிடும் எவனும்,


30 இம்மையில் இன்னல்களோடு

 கூட, வீடு, சகோதரர், சகோதரி, தாய், பிள்ளை, நிலபுலங்களை நூறு மடங்காகவும், 

மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மாற்கு, 10:29, 30) 

"எதற்காக பைபிளிலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்துக் கொண்டு வந்திருக்கிறாய்?"

'நான் கிழிக்கவில்லை, சாமி.  எல்லாம் கடவுளிடைய விளையாட்டு.

அப்பா வெங்கடாசலபதி கோவிலுக்கு போயிருக்கும்போது

 அங்கு இந்த பேப்பரில் பிரசாதம் கொடுத்திருக்கிறார்கள்.

 அதை அவர் என்னிடம் கொண்டு வந்து,

'' இந்த பொட்டலத்தைப் பிரித்து உள்ளிருக்கும் பிரசாதத்தை சாப்பிடு. வழி பிறக்கும்" என்றார். 

நான் பொட்டலத்தைப் பிரிக்கும்போதுதான் இது  பைபிளிலிருந்து கிழிக்கப்பட்ட தாள் என்று."

"உள்ளே இருந்த  கோவில் பிரசாதத்தை சாப்பிட்டாயா?"

"அதை எப்படி சாமி சாப்பிடுவேன்?
பேப்பரில் உள்ள ஆண்டவருடைய வாக்காகிய பிரசாதத்தைச் சாப்பிட்டேன். வழி பிறந்துவிட்டது. வந்துவிட்டேன்."

"ஆண்டவருடைய விளையாட்டை பார்த்தாயா?

தீமையிலிருந்து ஒரு நன்மையை கடவுளால் கொண்டுவரமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

யாரோ ஒரு ஆள் பைபிளை பழைய பேப்பர் கடையில் போட்டிருக்கிறார்.
அது ஒரு தீமை.

வெங்கடாசலபதி கோவிலிலிருந்து
பிரசாதம் பொதிவதற்காக அதை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.

அது சரியான நேரத்தில் உனது அப்பா கையில் கிடைத்திருக்கிறது.

அதற்குள் பைபிள் வசனம் இருப்பது எனது அப்பாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடவுள் யார் மூலமோ இவ்வசனத்தை பழைய பேப்பர் கடைக்கு மாற்றி, 

அங்கிருந்து  வெங்கடாசலபதி கோவிலுக்கு மாற்றி,

 அங்கிருந்து உனது அப்பா கைக்கு மாற்றி,

 அங்கிருந்து உனக்கு கொண்டு வந்திருக்கிறார்.
 
என்ன விளையாட்டு பார்த்தாயா?

இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும்.

சரி, அப்பா என்ன சொன்னார்?"

"அவருக்கு சொல்ல என்ன இருக்கிறது? 

"அப்பா, வரட்டுமா?"  என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்."

"அப்புறம் என்ன திட்டம்?"

"உங்கள் கையாலேயே ஞானஸ்நானம் பெற்று , நல்ல கிறிஸ்தவனாக வீட்டிற்குச் சென்று அப்பாவைப் பார்க்க வேண்டும்."

குருவானவர் மறுக்கவில்லை.
ஒரு ஆன்மா கிடைக்கும்போது மறுக்க முடியுமா?

அன்றே இளைஞன்  தேர்ந்தெடுத்த 'மிக்கேல்' என்ற பெயரை இட்டு ஞானஸ்நானம் கொடுத்தார்.

இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.

வீட்டிற்கு வந்தபோது அப்பாவும் அம்மாவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

மகனைப் பார்த்தவுடன் அப்பா,

"அப்போ நினைத்ததைச் சாதித்து 
என்னை விட்டு பிரிந்து விட்டாய்!"

"நானாகப் பிரியவில்லை. இயேசு என்னைப் பிரித்துவிட்டார், தன்னுடன் சேர்த்துக் கொள்வதற்காக.

இயேசுவின் சமாதானம் என்னை தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டது.

இயேசுவின் சமாதானம் உங்களையும் அழைக்கிறது.

இருவரும் அழைப்பை ஏற்றுக்கொண்டால் பிரிந்தவர் கூடி பேரானந்தம் அடையலாம்!"

" இப்பொழுது என்ன பெயர் வைத்திருக்கிறாய்?"

"மிக்கேல்."

"எங்கேயோ கேட்ட பெயர் மாதிரி இருக்கிறது!"

"இப்போ நான் தானே சொன்னேன். உங்கள் காதில் விழுந்திருக்கும்.

ஆனாலும், அப்பா, முதல் முதலில் நான் உங்களிடம் கிறிஸ்தவன் ஆக வேண்டும் என்ற ஆசையை சொன்னபோது 

அவ்வளவு கோபப்பட்ட நீங்கள் எப்படி இவ்வளவு சாந்தமாக மாறினீர்கள்?"

"கிறிஸ்தவனாக அனுமதி கொடுக்க மறுத்த என் மூலமாகவே

 கிறிஸ்து உனக்கு  அனுமதியை பெற்றுத்தந்த  அதிசயம்தான் என்னை சாந்தமாக மாற்றிவிட்டது.

அதுவும் பைபிள் வசனம் வெங்கடாசலபதி கோவில் பிரசாதம் வழியே உனக்கு வந்தது உண்மையிலே அதிசயம் தான்!"

''உண்மையிலேயே இயேசுவின் வழிகள் அதிசயமானவைதான்!"

லூர்து செல்வம்.






"
.

No comments:

Post a Comment