" அவர்கள் கையில் விளக்கு எடுத்துப் போனார்கள்." (மத்.25:1)
இயேசு விண்ணரசை மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துக் கன்னியருக்கு ஒப்பிடுகிறார்.
பத்துப் பேரும் கையில் விளக்குகளுடன் மணமகன் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர்களுள் ஐவர் விவேகிகள்.
ஐவர் அறிவிலிகள்
விவேகிகள் விளக்குடன் ஏனத்தில் எண்ணெயும் எடுத்துக்கொண்டார்கள்.
அறிவிலிகளிடம் போதுமான அளவிற்கு எண்ணெய் இல்லை.
மணமகன் வரக் கால தாமதம் ஆகியது.
விவேகிகளிடம் போதிய அளவு எண்ணெய் இருந்ததால் மணமகன்
வரும்போதும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
ஆனால் அறிவிலிகளிடம் போதிய அளவு எண்ணெய் இல்லாததால் மணமகன் வரும்போது அவை மங்க ஆரம்பித்தன.
மணமகன் வந்தபோது விவேகிகள் விளக்குகளுடன் அவருடன் மணவீட்டில் நுழைந்தனர். கதவு அடைக்கப்பட்டது.
ஆனால் அறிவிலிகளின் விளக்குகள் எண்ணெய் இன்மை காரணமாக எரிய மறுத்ததால் அவர்களால் விவேகிகளோடு மணவீட்டில் நுழைய முடியவில்லை.
இந்த பத்து கன்னியர் உவமையை நமது ஆன்மீக வாழ்வுடன் ஒப்பிட்டு தியானிப்போம்.
நாம் விண்ணரசு வந்தவுடன் அதனுள் நுழைய இவ்வுலகில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
உவமையில் வரும் விளக்கு நம்மிடம் உள்ள விசுவாசம். (Faith)
விசுவாச விளக்கு ஒளி வீசி எரிந்து கொண்டிருந்தால்தான் விண்ணரசுக்குள் நுழைய முடியும்.
விசுவாச விளக்கு ஒளி வீசி எரிய தேவையான எண்ணெய் நமது நற்செயல்கள்.
நற்செயல்கள் என்ற எண்ணெய் இல்லாவிட்டால் விசுவாச விளக்கு அனைந்து விடும்.
Faith will die without good works.
"ஆன்மாவை இழந்த உடல் எப்படி உயிரற்றதோ, அப்படியே செயலற்ற விசுவாசமும் உயிரற்றதே ."
(யாகப்.2:26)
நாம் செய்யும் பிறரன்பு செயல்கள்தான் நமது விசுவாசத்தை உயிரோடு வாழ வைப்பவை,
விசுவாசத்தின் மூலம் கடவுளை நமது தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம்.
நமது தந்தையையும், அவரது மற்ற பிள்ளைகளையும் நேசிக்க வேண்டியது நமது கடமை.
நமது நேசம் நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் உயிர்வாழ வேண்டும்.
மனதில் இருக்கும் இறை அன்பும், பிறர் அன்பும் சொல்லாகவும் செயலாகவும் உருப்பெற வேண்டும்.
செயலாக மாறாத அன்பு உண்மையான அன்பு அல்ல.
இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டு எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நண்பனிடம் உண்பதற்காக உணவு இருக்கிறது. மற்றவனிடம் எதுவும் இல்லை.
கையில் உணவு வைத்திருப்பவன் மற்றவனைப் பார்த்து சொல்கிறான்,
" நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்."
நண்பகல் வருகிறது.
இருவருக்கும் பசிக்கிறது.
இருவரும் ஒரு மரத்தடியில் அமர்கிறார்கள்.
உணவு வைத்திருப்பவன் உணவு பொட்டலத்தைப் பிரிக்கிறான்.
"நண்பா நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.
நான் சாப்பிட போகிறேன்.
நீயும் சாப்பாடு இருந்தால் சாப்பிடு"
என்று கூறிவிட்டு அவன் உணவைச் சாப்பிட ஆரம்பிக்கிறான்.
மற்றவனிடம் சாப்பாடு இல்லை. ஆகவே சாப்பிடுபவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
சாப்பாடு வைத்திருந்தவன் சாப்பிட்டு விட்டு ஒரு ஏப்பம் விட்டான்.
மற்றவன் சாப்பிடவே இல்லை.
சாப்பிட்டு முடித்தவன் மற்றவனைப் பார்த்து,
"நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.
நான் சாப்பிட்டு விட்டேன்.
நீயும் சாப்பாடு கொண்டு வந்திருக்கலாம்."
என்றான்.
இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளாமல் சாப்பிட்டுவிட்டு ,
"நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்."
என்று சொல்லி என்ன பயன்?
அவன் சொன்ன நேசம் உண்மையில் நேசம் இல்லை.
வெறும் வார்த்தை, பொருள் இல்லாத வார்த்தை.
வெறும் Lip service!
ஆன்மீக வாழ்விலும்
நற்செயல் செய்யாதவனிடம் அன்பும் இருக்க முடியாது, விசுவாசமும் இருக்க முடியாது.
"பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை .விசுவசிக்கிறேன்."
என்று சொல்லிவிட்டு,
அவரால் படைக்கப்பட்டவர்களுக்கு ஒரு உதவியும் செய்யாவிட்டால்
அவன் விசுவசிப்பதாகச் சொன்னது பொய்.
நற்செயல் இல்லாத விசுவாசம் உயிரற்ற விசுவாசம்.
உயிரற்ற விசுவாசத்தால் ஆன்மீக வாழ்வும் வாழ முடியாது, விண்ணகமும் செல்ல முடியாது.
எப்படி ஐந்து அறிவிலிகளால் எண்ணெய் இல்லாத விளக்குகளோடு மணவீட்டிற்குள் நுழைய முடியவில்லையோ,
அப்படியே நற்செயல் எதுவும் இல்லாத விசுவாசத்தோடு விண்ணகத்திற்குள் நுழைய முடியாது.
எப்படி ஐந்து விவேகிகளும் எண்ணெய் ஊற்றி பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்த விளக்குகளோடு மணவீட்டிற்குள் நுழைந்தார்களோ,
அப்படியே நற்செயல்களால் உயிருள்ள 'விசுவாசம் உள்ளவர்கள் விண்ணகத்திற்குள் நுழைவர்.
இயேசு வெறும் Lip service செய்பவர் அல்ல.
வெறும் வார்த்தைகளை அல்ல, சாதனைகளையே போதனையாகத் தந்தவர்.
தனது அளவற்ற அன்பை செயலாக்கி விட்டுதான்
நம்மையும் அவரை பின்பற்ற சொன்னார்.
"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13)
இது இயேசுவின் போதனை.
கடவுள் தன்னால் படைக்கப்பட்டவர்களைத் தனது பிள்ளைகளாகவும், நண்பர்களாகவும் தான் கருதுகிறார்.
''தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
என்ற அவரது போதனையை சாதித்து காண்பித்தார்.
கடவுளால் தேவ சுபாவத்தில் சாக முடியாது.
ஆகவே அவரது நண்பர்களாகிய நமக்காக உயிரைக் கொடுப்பதற்காகவே,
மனித உரு எடுத்தார்.
அவர் மனிதனாகப் பிறந்தது நம்மை மீட்பதற்காக சிலுவையில் உயிரை விடுவதற்காகத்தான்.
இறைமகன் நமது மீட்பிற்காக மனித சுபாவத்தில் மரித்தார்.
அவரை விசுவசிக்கின்ற நாமும் நமது நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
தங்கள் விசுவாசத்தை செயல்களாக மாற்றுகின்றவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும்.
"இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன்,
எனது அயலானையும் நேசிக்கிறேன்''
என்று சொல்வதால் மட்டும் மீட்பு அடைய முடியாது.
புனிதர்கள் அனைவருமே தங்களது விசுவாசத்தையும், அன்பையும் செயல்களில் வெளிப்படுத்தியவர்களே.
நமது காலத்தில் வாழ்ந்து மரித்த புனித கல்கத்தா தெரெசம்மாளே நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.
"நாம் சாதாரணமானவர்கள்தானே, அன்னை தெரசாவை போல நம்மால் வாழ்ந்து விட முடியுமா?"
என்று கேட்கலாம்.
யானை அதனால் முடிந்த சுமையை தூக்கினால்,
எறும்பும் அதனால் முடிந்த சுமையை தூக்க முடியாதா?
மனதில் உள்ள அன்பை செயலில் காட்ட அவரவர் தங்களால் இயன்ற அளவில் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு எதிரே வருபவர்களை பார்த்து ஒரு புன்னகை செய்ய முடியாதா?
"எப்படி இருக்கிறீர்கள்?" என்று விசாரிக்க முடியாதா?
கஷ்டபடுகிறவர்களுக்கு ஆறுதல் கூற முடியாதா?
நம்மால் இயன்றவரை நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாதா?
நம்மை தேடி வருபவர்களுக்கு ஒரு கப் காபி கொடுக்க முடியாதா?
மற்றவர்களைப் பற்றி கெடுத்து பேசாமல் இருக்க முடியாதா?
திருப்பலிக்கு வரும் போதாவது ஒரு அரை மணி நேரம் நற்கருணை நாதரை பார்த்துக் கொண்டிருக்க முடியாதா?
பிள்ளைகளை ஞானோபதேச வகுப்புக்கு அனுப்ப முடியாதா?
நம்மால் முடிந்த பிறர் சிநேக காரியங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
நாம் செய்யும் நற்செயல்களின் அளவுக்கு ஏற்ப நமது விசுவாசம் வலுவடையும்.
நாம் மீட்பு பெற விசுவாசம் வேண்டும்.
விசுவாசம் வலுவடைய நற்செயல்கள் புரிய வேண்டும்.
நற்செயல்கள் செய்வோம்.
விண்ணரசுக்குள் நுழைவோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment