Monday, August 2, 2021

விசுவாச வாழ்வு. (தொடர்ச்சி)

விசுவாச வாழ்வு. 
(தொடர்ச்சி)

நாம் நமது விசுவாசத்தை வாழ்வதற்காகத்தான் இந்த உலகை இறைவன் நமக்கு தந்திருக்கிறார்.

தந்திருப்பது மட்டுமல்ல அதில் நமது விசுவாசத்தை வாழ்வதற்கு சகல விதமான உரிமைகளையும் தந்திருக்கிறார்.

நமது மறை வாழ்விற்கான உரிமைகள் இறைவனால் நமக்கு தரப்பட்டவை.

இந்த உரிமைகளை மறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

மறுப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

நமது விசுவாச வாழ்வு உரிமைகளை நமக்கு மறுக்க முயற்சி செய்கிறது நாம் வாழும் இந்த உலகம்.

உலகம் என்று நாம் சொல்லும்போது ஆன்ம வாழ்வுக்கு எதிராக செயல்படும் உலகத்தின் சக்திகள்:

1. நமது உடல்.
2. நமது சூழ்நிலை.
3. இவ்வுலக அரசு.

1. நமது உடல்:
நமது உடல் நமது ஆன்மீக வாழ்வில் துணை நிற்பதற்காக இறைவனால் தரப்பட்டது.

உடல் இறைவனால் படைக்கப்பட்ட பூமியிலிருந்து எடுக்கப்பட்டது.

 பஞ்சபூதங்கள்  என்று அழைக்கப்படு.கிற நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் ஆகிய உலகியல் பொருள்களால் ஆனது.

மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட இது நமது உலக வாழ்வின் முடிவில் மண்ணுக்கே திரும்பிவிடும்.

நமது வாழ்நாளின் போது நமது ஆன்மாவிற்கு உதவிகரமாய் இருப்பதற்காக இறைவனால் நமக்கு தரப்பட்டது.

ஆனால் இது விண்ணோக்கி பறக்க விரும்பும் ஆன்மாவை மண் நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும்,

அது நாம் செய்த பாவத்தின் விளைவு.

நமது ஆன்மா பேரின்பத்தை நாடும் போது நமது உடல் சிற்றின்பத்தை நாடும்.

நமது ஆன்மீக வாழ்வில் நமக்கு உதவிகரமாக இருக்க தரப்பட்ட உடலே நமது ஆன்மாவை பாவம் செய்வதற்காக தூண்டிக் கொண்டே இருக்கும்.

நமக்கு சிற்றின்ப ஆசையை தூண்டும்.

நமது ஆன்மா நமது உடலை, 

தவ முயற்சிகளின் உதவியோடு,

 தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

 உடலின் கட்டுப்பாட்டிற்குள் ஆன்மா வந்துவிடக்கூடாது.

நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத் தின்றது 
அவர்களுடைய உடலுக்கு திருப்தி அளித்திருக்கலாம்.

ஆனால் ஆன்மாவை பாவத்திற்குள் தள்ளிவிட்டது.

நமது உடலை ஒறுத்து  வாழ்ந்தால்தான் நமது ஆன்மா இறையருளால் வளர முடியும்.

நமது ஆண்டவரே நாற்பது நாட்கள் 
 நமக்கு முன்மாதிரிகையாக   நோன்பு இருந்தார். 

அவருக்கு நோன்பு அவசியம் இல்லை,  ஆனால் நமக்கு முன்மாதிரி காண்பிப்பதற்காக நோன்பிருந்தார்.

சிலுவைப் பொறியில் தனது
ஐம்பொறிகளையும் பலியாக்கிய இயேசுவை மகிழ்ச்சிப்படுத்த நமது ஐம்பொறிகளையும் அடக்கி ஆள்வோம்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்."

சிலுவை பொறிவழியே தனது ஐம்பொறிகளையும் பலியாக்கிய இயேசுவின் ஒழுக்க நெறி நின்றவரே  நிலை வாழ்வு வாழ்வர்

என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம். 

2. நமது சூழ்நிலை:

சில சமயங்களில் நம்மை சுற்றி வாழ்வோரே நமது ஆன்மிக வாழ்வுக்கு இடைஞ்சலாக இருப்பர்.

 சூழ்நிலையில் முதலில் நமது குடும்பம், அப்புறம் சமூகம்.

குடும்பத்தில் அனைவரும் பக்தி உள்ளவர்களாகவும் ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்தால் பிரச்சனை இல்லை.

ஆனால் ஐவர்   உள்ள குடும்பத்தில் இருவர் இஷ்டம்போல் வாழ்பவர்களாக இருந்தால்  

மீதி மூவர் தாங்களும் ஒழுங்காக வாழ வேண்டும்,

 இஷ்டம்போல் வாழ்பவர்களையும் திருத்த வேண்டும்.

மோனிக்கம்மாள்  ஒரு புனிதவதி.

ஆனால் அவளது கணவரும் மகனும் இஷ்டம் போல் வாழக்கூடியவர்கள்.
 '
 அவள் மகனை மனம் திருப்ப பதினேழு ஆண்டுகளும்,

 கணவனை மனம் திருப்ப 30 ஆண்டுகளும் செபிக்க வேண்டியிருந்தது.
 

 சில சமயங்களில் நம்மிடையே சிலர் மகளைப் பிற சமயத்தை சார்ந்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள்.

மாப்பிள்ளை திருமண சமயத்தில் ஞானஸ்நானம் பெறவும், தாலி கட்டவும் கோவிலுக்கு வருவான்.

அப்புறம் மனைவி கோவிலுக்கு வர வாழ்நாள் முழுவதும் Tug of  war தான்.

பிள்ளைகளுடைய ஞான வாழ்வும் கஷ்டத்திற்கு உள்ளாகி விடும்.

நாம் வாழக்கூடிய சமூகத்தாலும் நம்முடைய ஆன்மிக வாழ்விற்கு இடையூறுகள் ஏற்படுவது உண்டு.

சகலவிதமான இடையூறுகளையும் சமாளித்து விசுவாச வாழ்வில் உறுதியாக இருக்க வேண்டும்.

3. இவ்வுலக அரசு:

நமது நாட்டை பொறுத்தமட்டில் ஒன்றிய அரசு கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவத்தையும் நாட்டிலிருந்து அழித்துவிடவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் மாநிலத்தில் மாற்று அரசு அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டு  

நாம் நமது ஆயர்களின் ஆலோசனைப்படி தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போட்டோம்.

ஆனால் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை கொண்டு பார்க்கும்போது நம்முடைய எதிர்பார்ப்பு நடைபெறும் என்ற நம்பிக்கை போய்விட்டது.

இப்போது நாம் கடவுளை மட்டுமே நம்பியிருக்கிறோம்.

நமது சமயத்தை பின்பற்றவும்,
 பரப்பவும் உரிமைகள் மறுக்கப்படுகின்ற சூழ்நிலையில்,

கி.பி முதல் நூற்றாண்டில் திருச்சபை இருந்த நிலைக்குச் சென்று விட்டது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.

கிறிஸ்துவுக்காக வேத சாட்சிகளாக  மரிக்க ஒவ்வொரு வினாடியும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஏற்கனவே அருள்திரு ஸ்டேன் சுவாமி அடிகளார் வேத சாட்சியாக மரித்துவிட்டார்.

இனி மறுக்கப்படும் உரிமைகளுக்காக போராடுவதை விட்டுவிட்டு ஆண்டவருக்காக வாழ்வதை மட்டும் நோக்கமாகக் கொள்வோம்.

கிறிஸ்தவர்களை பொறுத்தமட்டில் மரணம்கூட வாழ்வுதான்.

அதிலிருந்துதான் நமது நித்திய பேரின்ப வாழ்வு ஆரம்பிக்கிறது.

உரிமைகளுக்காக அல்ல,

இயேசுவுக்காக மட்டும் வாழ்வோம்.

உரிமைகள் இவ்வுலகில் முடிந்துவிடும்,  இயேசு நித்திய காலம் நம்மோடு இருப்பார்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment