விசுவாச வாழ்வு.
நம்மில் சிலர் விசுவாசப் பிரமாணத்தில் கூறப்பட்டிருக்கும் விசுவாச சத்தியங்களை உண்மை என்று ஏற்றுக் கொள்வதுதான் விசுவாசம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி சொல்லப் போவதாக இருந்தால் நம்மைவிட சாத்தானுக்குதான் அவற்றைப் பற்றி அதிகமாக தெரியும்.
அவனும் விசுவாசப் பிரமாணத்தில் உள்ள எல்லா சத்தியங்களையும் உண்மை என்று ஏற்றுக் கொள்கிறவன்தான்.
நம்மைவிட சாத்தானுக்கு தான் பைபிளைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் அதிகமாகத் தெரியும்.
ஆனால் ஐயோ பாவம் சாத்தான் நரகத்தில் இருக்கிறான்!
இதிலிருந்து ஒன்று புரிகிறது.
விசுவாச சத்தியங்களை உண்மை என்று ஏற்றுக் கொள்வதால் மட்டும் நம்மால் மீட்பு அடைய முடியாது.
விசுவாச சத்தியங்களை ஏற்றுக்கொள்கின்ற அனைவரும் விசுவாசிகள் அல்லர்.
பள்ளிக் கூடத்தில் Admission கிடைத்திருப்பவர்கள் எல்லோரும் உண்மையான மாணவர்கள் அல்லர்.
Admission Register ல் பெயர் எழுதிய உடனே சான்றிதழ் கொடுத்துவிட மாட்டார்கள்.
வகுப்புகளுக்குச் சென்று, படித்து, தேர்வு எழுதி, வெற்றி பெற்றால் மட்டும் அதற்கான சான்றிதழ் கிடைக்கும்.
அதேபோல்தான் விசுவசிப்பதால் மட்டும் மீட்பு பெற்றுவிட முடியாது.
விசுவாசத்தை வாழ்பவன் மட்டுமே விசுவாசி.
விசுவாசத்தை வாழ்பவர்களுக்கு மட்டுமே மீட்பு கிடைக்கும்.
அமெரிக்கா செல்ல Ticket வாங்கி விட்டதால் மட்டும் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டதாக பொருள் இல்லை.
Ticket டன் ஆகாய விமானத்தில் ஏறி முழுமையான தூரத்தையும் பயணம் செய்தால் மட்டுமே அமெரிக்காவிற்கு செல்ல முடியும்.
விசுவாசத்தை வாழ்வது என்றால் என்ன பொருள்?
"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம்
விண்ணரசு சேரமாட்டான்.
வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."
(மத். 7:21)
"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவன்."
---- என்னை ஆண்டவர் என்று
விசுவசிப்பவன்.
"என் தந்தையின் விருப்பப்படி நடப்பவன்."------- விசுவாசத்தை வாழ்பவன்.
"விசுவாசத்தை வாழாதவன் விண்ணரசில் சேரமாட்டான்." என்று நம் ஆண்டவரே சொல்கிறார்.
"செயல் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம்."
"செயலற்ற விசுவாசமும் உயிரற்றதே." (வியாக. 2:26)
அதாவது
"வாழப்படாத விசுவாசம் செத்த விசுவாசம்."
உண்மையில் விசுவாசத்தை வாழாமல் உலகில் வாழ்பவர்கள் நடை பிணங்கள்.
நமது ஆண்டவர் ஜெபம் சொல்ல கற்றுக் தந்தபோது நாம் விசுவசிக்க வேண்டிய சத்தியத்தையும் வாழவேண்டிய வழியையும் ஜெபத்தில் அமைத்து தந்தார்.
"விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே."
இறைவனை நமது தந்தை என்று விசுவசித்து ஏற்றுக் கொள்கிறோம்
"உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக"
தந்தையின் சித்தத்தை நமது வாழ்வாக்க வாக்கு கொடுக்கிறோம்.
இயேசு போதித்த நற்செய்தியை முழுவதும் ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால்:
''இறைவனை தந்தையாக ஏற்றுக்கொண்டு அவரது சொற்படி நடக்க வேண்டும்."
"ஏனெனில், என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்." (அரு. 6:38)
தந்தையும் மகனும் ஒரே கடவுள் என்று நமக்கு தெரியும்.
தந்தையின் சித்தமே மகனின் சித்தம் என்பதும் நமக்குத் தெரியும்.
(தமதிரித்துவத்தில் மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் என்பது நாம் விசுவாசிக்கும் சத்தியம்.)
அப்படி இருக்கும்போது ஏன் இயேசு
"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று,
என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை "
என்று சொல்கிறார்?
நமது விசுவாச வாழ்வில் நமக்கு இருக்க வேண்டிய மனப்பக்குவத்தை சுட்டிக் காண்பிக்கவே அவ்வாறு சொல்கிறார்.
நாம் உலகில் இருப்பது நமது இஷ்டப்படி வாழ்வதற்காக அல்ல,
நம்மை படைத்தவருடைய இஷ்டப்படி வாழ்வதற்காகத்தான்
என்ற கருத்தை நமது மனதில் பதிய வைப்பதற்காக தான் அவ்வாறு சொல்கிறார்.
நமது அப்பாவும் அம்மாவும் சேர்ந்து தான் நம்மை பெற்றிருக்கிறார்கள்,
ஆனாலும் அப்பா நமக்கு புத்திமதி சொல்லும் போது,
"உன்னைப் பெற்றவள் உன் அம்மா.
அவள் மனதை நோகச் செய்து விடாதே." என்று சொல்வது போல.
நமது விண்ணகத் தந்தையின் இஷ்டப்படி வாழவிடாதடி உலகம் நமக்கு பல இடைஞ்சல்களை தந்து கொண்டுதானிருக்கும்.
அவற்றைப் பொருட்படுத்தாமல் நாம் இறைவனது சித்தத்தை நமது வாழ்வில் நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்க வேண்டும்.
இறைவனது சித்தத்தை நிறைவேற்றுவதையே வாழ்வாக கொள்வதில் நமக்கு முன்மாதிரியாக விளங்குவது நமது அன்னை மரியாள்.
"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" (லூக். 1:38)
முதலாளியின் சித்தத்தை நிறைவேற்றுவது மட்டுமே அடிமையின் பணி.
அடிமைக்கும், வேலைக்காரனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
வேலைக்காரன் சம்பளத்தை எதிர்பார்த்து, அதற்காக மட்டுமே வேலை செய்கிறான்.
ஆனால் அடிமை எதையும் எதிர்பார்த்து அல்ல,
முதலாளியின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே
பணி (வேலை அல்ல) புரிகிறான்.
நமது அன்னை தன்னை முற்றிலுமாக இறைப் பணிக்கு அர்ப்பணித்தாள்.
அந்த அர்ப்பண வாழ்வே விசுவாச வாழ்வு.
அத்தகைய வாழ்வைத்தான் இயேசு நம்மிடமும் எதிர்பார்க்கிறார்.
அன்னை மரியாளைப் போலவே அப்போஸ்தலர்களும் தங்களது வாழ்க்கை முழுவதையும் இறை பணிக்கு மட்டுமே அர்ப்பணித்தார்கள்.
அதற்காக மட்டுமே வாழ்ந்தார்கள். அதற்காகவே மரித்தார்கள், வேத சாட்சிகளாக.
நாமும் இயேசுவுக்காக மட்டுமே வாழ்ந்து வேத சாட்சிகளாக மரிக்க நம்மை நாமே தயார் செய்து கொள்வோம்.
இயேசு நமக்கு துணையாக இருக்கிறார்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment