(தொடர்ச்சி)
",மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவருக்கு மிகப்பெரிய சிலுவை.
இயேசுவின் சீடனாக இருப்பதற்காக யாரும் சுமப்பதற்காக சிலுவையைத் தேடி அலைய வேண்டியதில்லை.
அவரவருக்கு அவரவரே சிலுவைதான்."
"புரியவில்லை. என்னை நானே தூக்கிக் கொண்டு போக முடியுமா?"
"ஏன் முடியாது. நீ யார்?"
"இதென்ன கேள்வி? நான் நான்தான்."
", உன்னிடம் ஒரு ஆன்மாவும், ஒரு உடலும் உள்ளன. நீ என்று சொல்லப்படுவது உனது ஆன்மாவா? உடலா?"
"இரண்டும் சேர்ந்துதான்."
"உனக்குச் சிந்திக்கத் தெரியுமா?"
"தெரியும்."
", சிந்திப்பது உனது உடலா? ஆன்மாவா?"
"ஆன்மா பிரிந்துவிட்டால் உடலால் ஒன்று செய்ய இயலாது. ஆகவே சிந்திப்பது ஆன்மாதான்.
அப்படிப் பார்த்தால் நான் என்பது என் ஆன்மாதான்."
", நமது ஆன்மாதான் உடலை இயக்குகிறது.
Driver இறங்கிவிட்டால் Car நின்றுவிடுவது போல, ஆன்மா இறங்கிப் போய்விட்டால் உடல் அசையாது நின்று விடுகிறது.
நாம் ஒழுங்காக இயங்க வேண்டுமெற்றால் நமது உடல் ஆன்மாவின் கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும்.
ஆன்மா ஒழுங்காக சிந்தித்து, உடல் அது சொன்னபடி கேட்டால் நாம் ஒழுங்காக இயங்குகிறோம்.
ஆன்மா விண்ணைச் சார்ந்தது. உடல் மண்ணைச் சார்ந்தது.
விண்ணைச் சார்ந்த ஆன்மாவுக்கு
மண்ணைச் சார்ந்த உடல் சிலுவை."
"தொடர்வதற்கு முன்னே எனது சந்தேகத்தை கேட்டு விடுகிறேன்.
தனித்தன்மைகள் வாய்ந்த இரண்டு மனிதர்கள்
அன்புடன் தனித் தன்மைகளோடு, அனுசரித்து வாழவேண்டும்.
அப்படி வாழும்போது ஒருவருக்கொருவர் சிலுவையாகப் பயன்படுவர்.
விண்ணைச் சார்ந்த ஆன்மாவின் தனித்தன்மைகளும், மண்ணைச்
சார்ந்த உடலின்
தனித்தன்மைகளும் ஒன்றோடொன்று ஒத்துப்போக முடியுமா?"
", ஆன்மா விண்ணுக்காகப் பட்டதால் அன்பு முதலான இறைப் பண்புகள் அதன் தனித்தன்மைகள்.
உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால் உலகம் சார்ந்த சிற்றின்பம், வசதிகள் போன்றவற்றை நாடுவது அதன்
தனித்தன்மை.
சுருக்கமாக, விண்ணக வாழ்வைத் தேடுவது ஆன்மா, உலக வாழ்க்கைக்கு ஆசைப்படுவது உடல்.
மனிதன் படைக்கப்பட்டது உலக வாழ்க்கைக்காக அல்ல, விண்ணக வாழ்க்கைக்காக.
விண்ணகமே நமது வீடு, உலகம் வெறும் பயணப்பாதை.
ஆன்மா வீட்டிற்கு செல்ல விரும்புகிறது, உடல் பயணப் பாதையிலேயே தங்கிவிட ஆசைப்படுகிறது.
உடல் படைக்கப்பட்டதன் நோக்கம் ஆன்மீக வாழ்வில் ஆன்மாவிற்கு உதவிகரமாக இருப்பதற்காகத்தான்.
ஆன்மா படைக்கப்பட்டதன் நோக்கம் முழுக்க முழுக்க விண்ணகம் நோக்கி பயணிப்பதற்காகத்தான்.
இப்பயணத்தில் உலகைச் சார்ந்த உடல் ஆன்மாவிற்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.
இதற்கு உடல் ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
ஆன்மா இறைவனின் கட்டளைகளைகளின் உதவியோடு உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
உடலின் கட்டுப்பாட்டிற்குள் ஆன்மா வந்துவிட்டால் அதன் விண்ணுலக பயணம் தடைபட்டு விடும்.
ஆனாலும், விண்ணக வாசலை அடையும் மட்டும் உலகிலேயே பயணம் செய்ய வேண்டியிருப்பதால்
ஆன்மா இறைவனின் கட்டளைகளுக்கு உட்பட்டு, உடலின் சில உலகைச் சார்ந்த தனித்தன்மைகளுக்கும் ஆதரவு நல்க வேண்டும்.
உதாரணத்திற்கு உணவு இல்லாமல் உலகில் வாழ முடியாது.
ஆகவே உடல் உணவு உண்பதை ஆன்மா ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
அதேபோல்தான் உடை, இருப்பிடம், பணம் போன்றவையும் உலகில் வாழ்வதற்கு இன்றியமையாதவை.
இன்றியமையாத உலகத் தேவைகளை ஏற்றுக் கொள்ளும்போது,
ஆன்மீக வாழ்விற்கு இடைஞ்சலாக உள்ள
போசனப் பிரியம், வீண் அலங்காரம், வீண் ஆடம்பரம், ஊதாரித்தனம், கஞ்சத்தனம்
.
போன்ற தீமைகள் உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியதும் ஆன்மாவின் வேலை."
"தன்னைப் பாவத்திற்குள் உடல் இழுத்துச் சென்று விடாதபடி ஆன்மா கவனமாக இருக்க வேண்டும்."
", உடலின் தனித் தன்மைகளை ஆன்மீக வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் முறையில்தான் ஆன்மாவின் சிலுவையை சுமக்கும் திறமை இருக்கிறது"
" எப்படி செய்வது என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்."
",ஞாயிற்றுக்கிழமை பூசை காலை எட்டு மணிக்கு.
காலை ஐந்து மணிக்கு எழ வேண்டும். அலாரம் சரியாக அடித்துவிட்டது.
ஆன்மா எழ ரெடி.
ஆனால் உடல் கண்ணை மூடிக் கொண்டு,
"இன்னும் பத்து நிமிடங்கள்." என்கிறது.
ஆன்மா விடவில்லை.
உடல் வேறு வழியின்றி கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுகிறது..
ஆன்மா தூக்கிய முதல் சிலுவையோடு ஞாயிற்றுக் கிழமை விடிகிறது.
இதேபோன்று தொடர்ந்து ஒவ்வொரு வினாடியும் உடல் மக்கர் பண்ணும்போது ஆன்மா விழிப்பாக இருந்தால் ஒவ்வொரு வினாடியும் ஒரு சிலுவை கிடைக்கும்."
"உடல் ஒரு காபி குடிக்க ஆசைப்படும். ஆனால் ஆன்மா அதெல்லாம் பூசை முடிந்து தான் என்று சொல்லும். உடல் பணியும்.
ஒரு சிலுவை கிடைக்கும்."
", ஏழே முக்கால் மணிக்கு புறப்பட்டால் போதும். பூசைக்கு போய்விடலாம்' என்று உடல் சொல்லும்.
அதெல்லாம் முடியாது பூசை
துவங்க கால் மணிக்கு முன்னாலேயே கோவிலில் இருக்க வேண்டும், கிழம்பு." என்று ஆன்மா சொல்லும், ஒரு சிலுவையை எடுத்துக்கொண்டு."
" இதேபோல் செய்தால் பூசை நேரத்திலேயே நூற்றுக்கணக்கான சிலுவைகள் கிடைக்குமே.
ஒவ்வொன்றாக எழுதினால் ஒருநாள் கிடைத்த சிலுவைகளை எழுத இரண்டு நாள் வேண்டும்!
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெரிய பெரிய சிலுவைகளைச் சுமப்பதை விட சிறிய சிறிய சிலுவைகளை சுமப்பதில்தான் இறை அருள் அதிகம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்."
", ஒரு நாள் சிறு மலர் தெரசா வாழ்ந்த மடத்திற்கு ஒரு ஆயர் வந்திருந்தார்.
ஒரு சகோதரி தெரசாவிடம் வந்து,
"வாருங்கள். ஆயரின் மோதிரத்தை முத்தி செய்தால் 200 நாள் பலன் கிடைக்கும்" என்றார்.
ஆனால் தெரசா, கண்ணை மூடிக் கொண்டு,
"சேசு, மரி, சூசை துணை."என்று செபித்துவிட்டு,
"சிஸ்டர், எனக்கு இருந்த இடத்திலேயே முன்னூறு நாள் பலன் கிடைத்துவிட்டது." என்றார்களாம்.
நீண்ட செபங்களை விட சிறிய மனவல்லப செபங்களுக்கு தான் ஆன்ம சக்தி அதிகம்.
அதேபோல்தான் பெரிய தவ முயற்சி செய்து ஒரு சிலுவையை சுமக்கும் நேரத்தில்
ஆயிரக்கணக்கான சிறிய சிலுவைகளைச் சுமந்து அதிக பலன் அடையலாம்!
குறைந்த வேலை, நிறைந்த ஊதியம்!
ஒவ்வொரு விநாடியும் சிலுவைப்பாதையில் நடப்போம்.
சிலுவைப்பாதைதான் இயேசுவின் பாதை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment