Monday, August 30, 2021

நாசரேத் ஊரில் இயேசு.

நாசரேத் ஊரில் இயேசு.

இயேசு தனது நற்செய்திப் பணியைக் கலிலேயாவில் ஆரம்பித்தார். .

யூதர்களுடைய செபக்கூடங்களில் அவர் போதித்துவந்தார்.

கப்பர்நகூம் ஊரில் போதித்துவிட்டு,

 தான் பொது வாழ்வில் புகுந்த நாள் வரை வாழ்ந்த நாசரேத் ஊருக்கு வந்தார்.

ஓய்வுநாளன்று செபக்கூடத்திற்கு வந்து வாசிக்க எழுந்தார்.

இசையாஸ் எழுதிய இறைவாக்குகளின் ஏட்டுச் சுருளை அவரிடம் கொடுத்தனர். 

அதை விரித்ததும் பின்வரும் பகுதியைக் கண்டார்.
"ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷேகம் செய்துள்ளார்.

 "எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், 

சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், 

ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,

 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பினார் ".

என்ற தன்னைப்பற்றி எழுதப்பட்ட தீர்க்கதரிசன வரிகளை வாசித்தார்.

வாசித்துவிட்டு
" நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " என்று கூறினார்.

இயேசுவின் கூற்று மக்களிடையே இரண்டு விதமான எதிர் எதிர்வினைகளை (Opposite Reactions)
ஏற்படுத்தியது.

ஒரு சாரார் அவரை பாராட்டினார்கள்.

"இவர் சூசையின் மகனன்றோ?

இந்நாள்வரை நம்மிடையே வாழ்ந்து வந்திருந்த இவருக்கா இவ்வளவு ஞானம்?"

என்று ஆச்சரியப்பட்டார்கள்.

யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்து,

 ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் எகிப்தில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து விட்டு,

 அதன் பிறகு முப்பதாவது வயது வரை அவர்களிடையே தச்சு வேலை செய்து வாழ்ந்து வந்தவர் இயேசு.

அவர்களுக்கு அவர் இறைமகன் என்றோ, மெசியா என்றோ தெரியாது.

அவர்களை பொறுத்தமட்டில் அவர் சூசையின் மகன்.

அவரோடு தச்சு வேலை செய்தவர்.

ஆகவே அவரது ஞானம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மெசியாவை பற்றிய தீர்க்கதரிசன வாக்கியங்களை வாசித்துவிட்டு,

" நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " 

அதாவது,

"இந்த தீர்க்கதரிசன வசனங்கள் | என்னைப் பற்றியே."

இதைப்பற்றிய ஆச்சர்ய எதிர்வினையோடு அதற்கு  நேர் எதிர்மாறான எதிர்வினை ஒன்றும் எழுந்தது.

"இவற்றைக் கேட்டுச் செபக்கூடத்தில் இருந்த அனைவரும் வெகுண்டெழுந்து,

 அவரை ஊருக்கு வெளியே தள்ளி, அவ்வூர் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்."

இயேசுவின் வார்த்தைகள் ஜெபக்கூடத்தில் இருந்தவர்கள் அவரைக் கொல்லத் துணியும் அளவிற்குஅவர்கள் மனதில் கோபத்தை ஊட்டியிருக்கின்றன.


''சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாளைப் பார்த்து, "இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்: எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்." (லூக்.2: 34)

என்ற இறைவாக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

இயேசு ஒருவர்தான்.
அவர் கொடுத்த செய்தியும் ஒன்றுதான்.

அது ஏற்படுத்திய எதிர்வினைகள் இரண்டு,

ஆச்சர்யம்.
கோபம்.

நற்செய்தி அறிவிப்பின் ஆரம்பக்கட்டத்திலேயே
அவரது சொந்த ஊரிலேயே 

இறைச் செய்தியை மக்கள் எப்படி எப்படி ஏற்றுக் கொள்வார்கள்

என்பது தெளிவாகிவிட்டது.

இயேசு செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த மூன்று ஆண்டுகளுமே 

ஒரு சாரார் விசுவாசத்துடன் குணம் பெறவும், நற்செய்தியைக் கேட்டு  பயன் பெறவும், மீட்பு அடையவும் அவர் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள்.

மற்றொரு சாரார் அவரைக் கொல்வதற்காகவே அவர் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள்.

இதில் அடங்கியருக்கின்ற இன்னொரு அதிசயம்,

விஷமே மருந்தாகி விடுவதுபோல,

இரண்டாவது சாராரின் கொலை தான் முதல்  சாராரின் மீட்புக்கு காரணமாக இருந்தது.

ஆம், இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரித்துதானே மக்களுக்கு மீட்பு பெற்றுத் தந்தார்!

அவரது சிலுவை மரணத்திற்கு காரணமானவர்கள் அவரைத் கொன்றவர்கள்தானே!

ஆனாலும் அவர்கள் செய்த கொலையை நியாயப்படுத்த முடியாது.

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க இறைவனால் முடியும் என்பதே உண்மை. 

இயேசுவின் சொந்த ஊர்காரர்கள் அவரை கொல்வதற்கு தள்ளிக்கொண்டு போனார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் இயேசு 

அவர்களிடையே நடந்து தம் வழியே போய்விட்டார்.

ஏனெனில் தனது மரணத்திற்கு என்று தான் குறித்த நேரம் இன்னும் வரவில்லை.

அன்று இயேசு வாழ்ந்த காலத்தில் என்ன நடந்ததோ அதே தான் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. 

ஏனெனில் இன்றும் இயேசு நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!

இன்றும் நற்செய்தியை கேட்டவுடன் இயேசுவைகாகவே வாழ்ந்து அவருக்காகவே தங்கள் உயிரை தியாகம் செய்ய கிறிஸ்தவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

நற்செய்தியை கேட்டவுடன் கிறிஸ்தவர்களை கொல்லவும் கிறிஸ்தவத்தை ஒழிக்கவும் ஒரு கூட்டம் தயாராக காத்து கொண்டிருக்கிறது.

இன்றும் கிறிஸ்தவ சமயம் வேகமாக பரவ காரணமாக இருக்க போகின்றவர்கள் அதை அழிக்க எண்ணுபவர்கள் தான்!

இது ஒரு வரலாற்று உண்மை.

வேத சாட்சிகளின் இரத்தம் தான் கிறிஸ்தவத்தின் வித்து.

ஒரு பந்தை எந்த அளவிற்கு வேகமாக கீழ் நோக்கி அடிக்கிறோமோ அந்த அளவுக்கு வேகமாக அது மேல் நோக்கிச் செல்லும்!

இது விஞ்ஞான உண்மை.

இங்கு மற்றொரு உண்மையையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

  இறைவனுக்கு விரோதமான சாத்தானின் ஒவ்வொரு முயற்சியும்  சாத்தானுக்கு எதிராகவே திரும்பும்.

ஒரு பழத்தைக் காண்பித்து மனுக்குலத்தை இறைவனுக்கு எதிராக திருப்ப முயற்சி செய்தான்.

ஆனால் அந்த முயற்சியின் விளைவு கடவுளே மனிதனாக பிறந்தார்! சாத்தானின் பிடியிலிருந்து மனிதரை மீட்க.

மக்களை இரட்சிக்க பிறந்தவரை கொன்றுவிட்டால் மக்கள் இரட்சிக்கப்பட முடியாது என்று எண்ணி இயேசுவை கொல்ல திட்டமிட்டான். 

ஆனால் அதுதான் மக்கள் இரட்சிப்பு பெற காரணமாகவே ஆகிவிட்டது.

இன்றும் கிறிஸ்தவர்களை துன்புறுத்தினால் கிறிஸ்தவம் அழிந்து விடும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்

 ஆனால் அவனது இந்த செயலின் விளைவாகத்தான் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

அன்றும் சரி, இன்றும் சரி கிறிஸ்தவத்தின்  எதிரிகளால் அதை  அழிக்க முடியாது.

அந்த முயற்சியால் அதுதான் மேலும் மேலும் வளரும்.

 நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலை கிறிஸ்தவம் இங்கு வளர்வதற்கு ஏற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது.

வேதசாட்சிகளின் இரத்தத்தில்தான் கிறிஸ்தவம் வேகமாக வளரும்.

கிறிஸ்தவம் பிறந்ததே இறைமகனின் இரத்தத்தில்தான்.

அது வளர்ந்தது இறைமக்களின் இரத்தத்தில்.

நாம் இயேசுவின் இரத்தத்தைக் குடிப்பதே அவருக்காக அதை சிந்துவதற்காகத்தான்

திருச்சபையின் இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இதற்குச் சான்று.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment