" நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்.'' (மத்.24: 44)
ஒவ்வொரு நாளும் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று. கால அட்டவணை போடுவதும்,
நமது வாழ்வின் எந்தெந்த காலகட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போடுவதும் நமது இயல்பு.
திட்டம் போடுவது மட்டும்தான் நமது இயல்பு. நாம் போடும் திட்டப்படி எதுவும் நடக்குமா என்பது நமக்கு தெரியாது.
நாம் திட்டம் போட முடியாத நிகழ்ச்சிகள் இரண்டு நமது வாழ்வில் உண்டு. பிறப்பு, இறப்பு.
எந்த நாட்டில், எந்த ஊரில், எப்போது, எந்த பெற்றோருக்கு பிள்ளையாய் நாம் பிறக்க வேண்டும் என்று நம்மால் திட்டம் போட முடியாது.
பிறந்த பிறகுதான் அந்த விவரமெல்லாம் நமக்குத் தெரியும்
அதேபோல், எப்போது, எங்கு ,எப்படி இறப்போம் என்பதும் நமக்கு தெரியாது.
நமது பிறப்பும், இறப்பும் இறைவனின் நித்திய காலத் திட்டங்கள்.
எப்படி வாழ வேண்டும் என்று திட்டமிட நமக்கு முழு மன சுதந்திரம் உண்டு. ஆனால் எப்படி வாழ்வோம் என்பது நமக்கு தெரியாது.
நாம் எப்போது மரிப்போம் என்று இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
தெரியாதிருப்பது நல்லதும்கூட.
தெரிந்தால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. மரிக்கவேண்டிய காலம் நெருங்க, நெருங்க மன வேதனைதான் அதிகரித்துக் கொண்டே போகும்.
வாழ்வில் மரணம் என்பது பள்ளிக்கூட வாழ்வில் இறுதித் தேர்வு போல்.
பள்ளி இறுதித் தேர்வுதான் நமது முழு பள்ளி வாழ்வின் வெற்றியையோ, தோல்வியையோ நிர்ணயிக்கும்.
ஆண்டு முழுவதும் நன்கு படித்து விட்டு தேர்வின்போது எல்லாவற்றையும் மறந்து விட்டால் ஆண்டு முழுவதும் Waste!
ஆண்டு முழுவதும் படிக்காமல் இருந்துவிட்டு, தேர்வுக்கு முந்திய நாள் நன்கு படித்து, ஞாபகத்தோடு நன்கு தேர்வு எழுதினால் வெற்றிதான்.
அதேபோல் வாழ்நாள் முழுவதும் நன்கு வாழ்ந்து விட்டு இறுதியில் ஒரே ஒரு சாவான பாவத்தோடு மரித்தால் வாழ்ந்ததெல்லாம் Waste.
இறுதிவரை நிலைத்திருப்பனே மீட்புப் பெறுவான்.
வாழ்நாள் முழுவதும் பாவியாய் வாழ்ந்து விட்டு இறுதியில் மனஸ்தாபத்தோடு மரித்தால் நிலைவாழ்வு பெறுவான்.
பள்ளியில் இறுதித் தேர்வு நாளை முன்னால் அறிவித்து விடுவார்கள்.
Pass மட்டும் செய்தால் போதும் என்று எண்ணும் மாணவர்கள்
தேர்வு நாளன்று தயாராய் இருந்தால் போதும்.
முதல் தரமான மதிப்பெண்ணுக்கு ஆசைப்படுவோர் ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும்.
மரண நாளை முன்பே அறிவித்து விட்டால் மோட்சத்திற்குப் போனால் போதும் என்று எண்ணுவோர் மரணத்தின்போது தயாராக இருந்தால் போதும்,
புனிதர் ஆக விரும்புவோர் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு ஏற்றபடி வாழ வேண்டும்.
ஆனால் மரணம் எந்த வினாடி வரும் என்று யாருக்கும் தெரியாது.
நான் அடுத்த வரி எழுதுமுன் கூட எனது மரணம் வரலாம்.
மரணத்திற்கு முந்திய வினாடி கூட யாருக்கும் தெரியாது.
ஆகவே வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நாம் பாவம் இன்றி மரணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும்.
"திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால் அவன் விழிப்பாயிருந்து வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டான் அன்றோ?
இதை உணர்ந்து நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.
ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."
(மத். 24:43, 44)
எப்போதும் பாவ மாசின்றி இருப்பவன் மரணத்தைப் பற்றி கவலைப்படவே மாட்டான்.
எப்போதும் பாவ மாசின்றி இருப்பது எப்படி?
நாம் ஞானஸ்நானம் பெறும் போது நமது சென்மப் பாவமும், அதுவரை செய்த கர்மப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும்.
அடுத்து பாவம் செய்யாதபடி பரிசுத்த ஆவியின் அருள் வரங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.
ஆவியின் வரங்களை நாம் சரியாகப் பயன்படுத்தாமல் பாவம் செய்ய நேரிட்டால் அவற்றுக்கு மன்னிப்பு பெறவே
பாவசங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தை இயேசு ஏற்படுத்தியிருக்கிறார்.
அதை அடிக்கடி பயன்படுத்தி அவ்வப்போது செய்யும் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற வேண்டும்.
பாவம் செய்யாதிருக்கவும், புண்ணியத்தில் வளரவும் நமக்கு வேண்டிய தைரியம் வேண்டும் என்பதற்காக
ஆன்மீக பலத்தை அதிகரிக்க இயேசு தன்னையே நமக்கு ஆன்மீக உணவாக தந்திருக்கிறார்.
அந்த ஆன்மீக உணவை அடிக்கடி உண்டு நாம் பரிசுத்தத்தனத்தில் வளரவேண்டும்.
இயேசு நம்முள் இருக்கும்போது பாவம் நம்மை அணுகாது.
எப்படி பற்களை சுத்தமாக வைத்திருக்க பற்பசையை பயன்படுத்துகிறோமோ,
எப்படி உடலைச் சுத்தமாக வைத்திருக்க தண்ணீரைப் பயன்படுத்துகிறோமோ
அப்படியே ஆன்மாவைச் சுத்தமாக வைத்திருக்க
பாவங்களுக்காக உத்தம மனஸ்தாபத்தையும்,
பாவ சங்கீர்த்தனத்தையும் பயன்படுத்துவோம்.
நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்,
நாம் பாவமாசின்றி வாழ்வதற்காக.
நாம் அதைப் பயன்படுத்தி வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும் நம்மை பரிசுத்தமாக வைத்திருப்போம்.
ஆண்டவர் எப்போது அழைக்க வந்தாலும் அவரோடு செல்ல எப்போதும் தயாராக இருப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment