சிலுவைப் பாதையில் நடப்போம்.
"ஏங்க, கொஞ்சம் நில்லுங்க."
",ஏண்டி, பகல் முழுவதும் வகுப்பில் நின்று கொண்டுதான் பாடம் நடத்துகிறேன். வீட்டிற்கு வந்த பிறகாவது கொஞ்சம் உட்காரலாம் என்று பார்த்தால், இங்கேயும் நிற்க சொல்கிறாயே!"
என்று கேட்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால் கேட்கமாட்டேன்."
"ஏன் கேட்க மாட்டீங்க?"
",சிலுவைப்பாதை வழியே நடந்தால்தான் ஈஸ்டர் ஞாயிறுக்கு வரமுடியும் என்று நினைக்கிறேன்."
"சொல்வதைப் புரியும்படியாக. சொல்லுங்களேன்."
",நம் ஆண்டவர் சிலுவைப்பாதை வழியே நடந்துதானே வெள்ளிக்கிழமை மரித்து ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார்.
நாம் ஆண்டவரின் சீடர்கள். ஆண்டவரின் வழியே பின்பற்ற வேண்டாமா?"
"அதாவது நமது சிலுவையை சுமந்துகொண்டு ஆண்டவர் சென்ற வழியே செல்ல வேண்டும் என்று சொல்லுகிறீர்கள், அப்படித்தானே!"
",ஆமா."
"சிலுவையைச் சுமந்து செல்வதற்கும் சொல்ல விரும்பியதை சொல்லாததற்கும் என்னங்க சம்பந்தம்?"
", நீ தவசு காலத்தையே கடந்து வந்ததில்லையா?
ஆசையை அடக்கும் ஒறுத்தல் முயற்சி நமக்கு சிலுவை என்பது உனக்குத் தெரியாதா?"
"இப்போது நான் சொல்லுவதை கேட்பதற்காக நீங்கள் தொடர்ந்து பேசும் ஆசையை கொஞ்சம் அடக்கிக் கொள்கிறீர்களா?"
", சொல்லு, கேட்கிறேன்."
"எதற்காக நம் ஆண்டவர் சூசையப்பரைத் தனது வளர்ப்பு தந்தையாக தேர்ந்தெடுத்தார்?''
", ஏண்டி, ஏதோ சொல்லப் போகிறேன் என்று சொன்னாய், ஆனால் கேள்வி கேட்கிறாய்?"
"கேள்வியைச் சொன்னேன். பதிலைத் தான் கேட்கிறேன்."
", சூசையப்பர் ஒரு தச்சர் என்பதற்காகத்தான் அவரை தனது வளர்ப்பு தந்தையாக தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன்.
அதற்கும் காரணம் கேட்பாய்.
கேட்கும் முன் நானே சொல்லிவிடுகிறேன்.
மரத்தினால் செய்த சிலுவையில் மரணித்து நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது இறைமகனின் நித்திய திட்டமாக இருந்திருக்கும்.
அதற்காக மரவேலை செய்யும் தச்சனாகவே தானும் வளர வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார்.
அதற்காகத்தான் ஒரு தச்சனை தனது வளர்ப்புத் தந்தையாக தேர்ந்தெடுத்திருப்பார்.
இதற்கு ஆதாரம் என்ன என்று கேட்க விடாதே. சொந்த அனுமானம்தான்."
"இதே போல இன்னொன்றையும் அனுமானிக்க முடியுமா?
ஏன் ஆண்டவர் மரத்தினால் செய்த சிலுவையில் மரணிக்க ஆசைப் பட்டிருப்பார்?"
",நமது முதல் தாய் விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்று பாவம் செய்ததால்தான் என்று நினைக்கிறேன்."
"சரி. நாம் நினைத்தது நம்மோடேயே இருக்கட்டும்.
இப்போது உங்கள் சிலுவைப் பாதையை தொடருங்கள்."
",ஆண்டவர் தமது சிலுவைப் பாதையை எப்போது தொடங்கினார் என்று சொல் பார்ப்போம்."
"பிலாத்து அளித்த தீர்ப்பிலிருந்து."
", ஒரு வேலையைச் செய்யவேண்டுமென்றால் முதலில் திட்டமிடவேண்டும்.
பிறகு செயல்படுத்த வேண்டும்.
திட்டமிடும்போதே வேலை ஆரம்பித்துவிட்டது."
"அப்படிப் பார்த்தால் சிலுவைப்பாதை நித்திய காலத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது."
",கரெக்ட். இறைமகனின் மனதில் இருந்த நித்திய திட்டம்
அவர் அன்னை மரியாளின் வயிற்றில் கருத் தரித்ததிலிருந்து செயல்பட ஆரம்பித்துவிட்டது.
நீ மரத்தினால் செய்தது சிலுவை என்கிறாய், ஆண்டவர் மரணமடைந்த சிலுவை மரத்தினால் செய்யப்பட்டதுதான்.
ஆனாலும் ஆண்டவர் நம்மைப் பார்த்து
தனது சீடனாக இருக்க விரும்புகிறவன் தனது சிலுவையைச் சுமந்து கொண்டு வரவேண்டும் என்று சொன்னபோது
மரத்தினாலான சிலுவையை அவர் குறிப்பிட்டிருக்க மாட்டார்.
சிலுவை அவர் பட்டது வேதனை.
கொஞ்சமாகவோ, அதிகமாகவோ வேதனை தரக்கூடிய எதையுமே சிலுவை என்றுதான் நினைத்திருப்பார்.
சிலுவைப்பாதை வழி நடக்க வேண்டும் என்ற இறைமகனின் நித்தியத்திட்டம்
கன்னி மரியின் வயிற்றில் மனித உரு எடுக்க ஆரம்பித்த உடனே உலகில் செயல்பட ஆரம்பித்தது.
இயேசுவுக்கு மட்டுமல்ல, அன்னை மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கூட சிலுவைப் பாதைதான்.
கருத்தரிக்க விரும்பாத மரியாள் உலக மீட்புக்காக தனது விருப்பத்தைத் தியாகம் செய்து,
தன்னையே இறைவனின் அடிமையாக்கி,
இறை மகனுக்கு மனுவுரு கொடுக்க சம்மதிக்கிறாள்.
மரியாளைப் பொறுத்தமட்டில் இது ஒரு சிலுவைதான்.
சூசையப்பர் மரியாளை ஏற்றுக்கொண்டது ஒரு சிலுவைதான். கபிரியேல் தூதரின் அறிவுரைப்படி சிலுவையை ஏற்றுக் கொண்டார்.
சர்வ வல்லபராகிய இறைமகன்,
உலக துன்பங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள்,
துன்பங்கள் நிறைந்த மனுவுரு எடுத்ததே அவருக்கு ஒரு சிலுவைதான்.
ஆக திருக் குடும்பமே சிலுவைப் பாதையில் தான் நடை போட்டது.
இயேசுவை பெற்று எடுப்பதற்கென்று நசரேத்திலிருந்து பெத்லகேமுக்குப் போகவேண்டியிருந்தது.
குழந்தை இயேசுவை ஏரோதுவிடமிருந்து காப்பாற்ற எகிப்தில் மூன்று ஆண்டுகள் நாடோடி வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.
நசரேத்துக்குத் திரும்பியபின் தச்சு வேலை செய்து பிழைக்க வேண்டியிருந்தது.
இவையெல்லாம் சிலுவைப் பாதையில் நடக்கும் போது பெற்ற அனுபவங்கள்.
மரத்தினாலான சிலுவையில் இயேசு வெள்ளிக்கிழமை மட்டுமே சுமந்தார்.
ஆனாலும் இயேசுவின் வாழ்க்கை முழுவதும் சிலுவைப் பாதைதான்.
நாம் இயேசுவின் சீடர்கள்.
அவர் சென்ற பாதை வழியே செல்ல வேண்டியவர்கள்.
நமது வாழ்க்கைப் பாதையும் சிலுவைப்பாதையாக இருந்தால்தான் நாம் உண்மையான கிறிஸ்தவர்கள்."
"நமது வாழ்க்கையை எப்படி சிலுவைப்பாதையாக மாற்றுவது?"
",மாற்றவேண்டிய அவசியமே இல்லை.
நமது வாழ்க்கைப் பாதையே சிலுவைகள் நிறைந்ததுதான்.
சிலுவைகளை மகிழ்ச்சியோடு சுமந்தால் மட்டுமே போதுமானது.
இப்போது கேட்கப் போகிற கேள்விக்கு மறைக்காமல் உண்மையை சொல்ல வேண்டும்.
என்னுடைய குணத் தன்மைகள் எல்லாம் உனக்கு பிடித்தமானவையா?"
"மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.
நீங்கள் சொல்லவருவது எனக்கு புரிகிறது.
தனித்தன்மைகள் வாய்ந்த இருவர் கணவன் மனைவியாக வாழும்போது ஒருவருக்கு ஒருவர் சிலுவைதான்.
இருவரும் ஒருவர் ஒருவரிடம் உள்ள தனித்தன்மைகளை ஏற்றுக்கொள்வதுதான் சிலுவை.
நான் நீங்கள் சுமக்க வேண்டிய சிலுவை. நீங்கள் நான் சுமக்க வேண்டிய சிலுவை.
ஒருவரையொருவர் சுமந்து கொண்டுதான் விண்ணை நோக்கி பயணிக்கிறோம்.
நான் மறைக்காமல் சொல்லும் உண்மை இது.
போதுமா. விளக்கம் வேண்டுமா."
",கணவன் மனைவி மட்டுமல்ல,
சமூகத்தில் உள்ள அனைவருமே தனித்தன்மை வாய்ந்தவர்கள்தான்.
ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே நமது ஆண்டவரின் விருப்பம்.
ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய தனித்தன்மைகளை ஏற்றுக்கொண்டு
அவர்களோடு ஒற்றுமையாக வாழ்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
கடினமான சுமையை கடவுளுக்காக சுமப்பதுதான் சிலுவை.
எல்லோரையும் ஒரே மாதிரியாக இறைவன் படைத்திருந்தால் நமக்கு சுமப்பதற்கு சிலுவையே கிடைத்திருக்காது.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினரும்
மற்றவர்களது தங்களுக்கு பிடிக்காத தனித்தன்மையோடு
கடவுளுக்காக அவர்களை ஏற்றுக்கொண்டு
வாழ்வதுதான் கடவுளுக்காக குடும்ப சிலுவையை சுமப்பது.
ஒரு சிறிய உதாரணத்திற்கு.
அண்ணனுக்கு சாம்பார் பிடிக்காது,
தம்பிக்கு சாம்பார்தான் பிடிக்கும்.
அம்மா ஒவ்வொருவருக்கும் தனித்தனி குழம்பு வைக்க முடியாது.
அண்ணன் தம்பியோடு சேர்ந்து தனக்கு பிடிக்காத சாம்பாரை சாப்பிட்டால்
அவன் வெற்றிகரமாக தனது சிலுவையைச் சுமக்கிறான்."
''நமது அரசியல்வாதிகளை பொறுமையோடு சுமந்து கொண்டு போவதே நாம் சுமக்கும் மிகப் பெரிய சிலுவை.
நாம் நமது அயலானை நேசித்தால் அவனுடைய குறைகளைப் பொருட்படுத்தாமல் இயேசுவுக்காக ஒற்றுமையோடு உதவி செய்து வாழ்வோம்.
ஒவ்வொரு அயலானையும் நாம் மீட்புப் பெற கடவுள் தந்த சிலுவை என எண்ணி அவருக்கு நன்றி கூறுவோம்."
',நமது பங்கில் பங்கு மக்கள் அனைவரும் பங்கு சாமியார். சுமக்க வேண்டிய சிலுவைகள்."
"பங்கு சாமியார்?"
",பங்கு மக்கள் அனைவரும் சுமக்க வேண்டிய சிலுவை.
அனைத்து கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் அன்புடன் சுமந்து ஆண்டவரை நோக்கி பயணிக்க வேண்டும்.
அன்புடன் சுமக்கும் போது சிலுவையை விட பேரானந்தம் தருவது வேறு எதுவும் இல்லை."
"நீங்கள் நமக்கு வெளியே உள்ள சிலுவையைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்
நமக்கு நாமே சிலுவை என்ற விவரம் தெரியுமா?"
",மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவருக்கு மிகப்பெரிய சிலுவை.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் நமது உடல் ஆன்மா சுமக்க வேண்டிய சிலுவை.''
(தொடரும்)
லூர்து செல்வம்.
கருத்து நிறைந்த சரளமான உரையாடல் நடை சிறப்பு. வாழ்த்துகள்!
ReplyDelete