Sunday, August 8, 2021

கடவுளால் செய்ய முடியாதவை.(தொடர்ச்சி)

கடவுளால் செய்ய முடியாதவை.
(தொடர்ச்சி)

" நீ நம்மை விட்டுவிடு, நமது கோபம் அவர்கள் மேல் மூண்டு அவர்களை அழித் தொழிக்கும். உன்னை ஒரு பெரிய இனத்திற்குத் தலைவனாக்குவோம்."
(யாத். 32:10)


ஏங்க, இவை கடவுள் மோயீசனிடம் கூறிய வார்த்தைகள்.

கடவுளுக்குக் கோபம் வரும் என்பதற்கான பல பைபிள் சான்றுகளுள் இதுவும் ஒன்று.

இப்போ சொல்லுங்கள், கடவுளுக்கு கோபம் வருமா? வராதா?"

", என் கேள்விக்கு முதலில் பதில் சொல்.

கடவுளால் பாவம் செய்ய முடியுமா? முடியாதா?'"

"உறுதியாக சொல்கிறேன் ,

 கடவுளால் பாவம் செய்ய முடியாது."

",தலையான பாவங்கள் எவை?"

"1. ஆங்காரம்
2. கோபம்
3. மோகம்
4. லோபித்தனம் ( கஞ்சத்தனம்)
5. போசனப்பிரியம்
6. காய்மாகாரம் (வஞ்சம் )
7. சோம்பல்"

",கடவுளுக்கு வருமா? வராதா? ன்னு கேட்டியே, கோபம், அது இந்த பட்டியலில் இருக்கா?"

''இருக்கு"

",இப்போ சொல்லு கடவுளுக்குக் " கோபம் வருமா? வராதா?"

"கடவுளால் பாவம் செய்ய முடியாது.
கோபம் ஒரு தலையான பாவம், அதாவது பல பாவங்களுக்கு காரணமான பாவம். 

அப்படி பார்க்கும்போது கடவுளால் கோபப்பட முடியாது.

ஆனால் பைபிள் வசனம்?"

",மனித மொழியில் உள்ள ஒரு பெரிய குறைபாடு என்ன தெரியுமா?''

"குறைபாடுகள் நிறைய இருக்கு. நீங்கள் எதை கேட்கிறீர்கள்?"

",ஒரே சொல்லுக்கு இடத்துக்கு ஏற்ற படி பொருள் மாறுவது.''

"அது எப்படிங்க குறைபாடாகும்?"

",ஒரு வீட்ல hall, சமையல் அறை, store room, படுக்கை அறைகள் என்று ஒவ்வொரு உபயோகத்திற்கும் தனித்தனியே அறைகள் இருக்கின்றன.

இன்னொரு வீட்ல எல்லா பயன்பாட்டிற்கும் ஒரே ஒரு அறைதான் இருக்கிறது.

இந்த ரெண்டுல உனக்கு எந்த வீடு பிடிக்கும்?".

"ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனித்தனியே அறைகள் உள்ள வீடுதான் பிடிக்கும்."

",அப்படியானால் எல்லா பயன்பாட்டிற்கும் ஒரே அறை மட்டும் இருந்தால் அது குறைபாடுள்ள வீடு தானே!"

"அதற்கும் பல பொருள் உள்ள ஒரு வார்த்தைக்கும் என்ன சம்பந்தம்?"

", ஒரு பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தார்கள்.

 பார்ப்பதற்கு அழகாக இருந்தான். அவனுக்கு நல்ல வேலை இருந்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிடலாம் என்று தீர்மானித்தார்கள். 

அவன் என்ன வேலை பார்க்கிறான் என்று பலரிடம் விசாரித்தார்கள்.
 
கிடைத்த பதில்: அவன் தினமும் காலையில் தண்ணீர் போடுவான்.

அநேகம்பேர் இந்த பதிலையே சொன்னதால் திருமண எண்ணத்தை விட்டுவிட்டார்கள்.

சில நாட்கள் கழித்து வேறொரு பெண்ணுக்கு அதே மாப்பிள்ளையே ஏற்பாடு செய்தார்கள்.

ஏற்பாடு செய்தவரிடம் முதலில் மாப்பிள்ளை பார்த்தவர் போய்,

 'அந்தப் பையன் தினமும் காலையில் தண்ணீர் போடுவானாமே , அவனையா மாப்பிள்ளையாகப் பார்த்தீர்கள்?'

என்று கேட்டார்கள்.

அப்பொழுது அந்த நபர் சொன்ன பதில் முதலில் மாப்பிள்ளை பார்த்தவர்களை செவிட்டில் அடிப்பது போல் இருந்தது."

"அப்படி என்ன பதில் சொன்னார்?"

",தண்ணீர் போடுவதில் என்ன தப்பு? 

என் வேலை தினமும் வீடு வீடாகச் சென்று பால் பாக்கெட் போடுவதுதான், 

எனது மகன் தினமும் பேப்பர் போடுகிறான்,

என் மகள் தினமும் காலையில் முற்றத்தில் கோலம் போடுகிறாள்.

என் மனைவி எங்களுக்குச்  சாப்பாடு போடுகிறாள்.

தண்ணீர் போடுவது தப்பு என்றாள் இவையெல்லாம் தப்புதானே!''

"என்ன சொல்லுகிறீர்கள்?"

"மாப்பிள்ளை பார்ப்பது தண்ணீர் வியாபாரம். நமது ஊரிலுள்ள எல்லா கடைகளிலும் விற்பனைக்கு உள்ளது அவர் போடுகின்ற தண்ணீர் பாட்டில்கள் தான்."

"போடு என்பதற்கு இத்தனை பொருள்களா? 

நான் தண்ணீர் போடுகிறான் என்றால் அவன் ஒரு குடிகாரன் என்று நினைத்தேன்.

ஒரு நல்ல மாப்பிள்ளை கைநழுவி போய்விட்டது."

"இதற்கும் பைபிள் வசனத்திற்கும் என்னங்க சம்பந்தம்?"

", பொறு. அரிசியை கையில் எடுத்தவுடன் சோத்த எங்கே என்று கேட்பது போல் இருக்கிறது உனது கேள்வி.

படிப்படியாக ஏறிதான் மேல் மாடிக்கு செல்ல முடியும்.

முதல் படியில் கால் வைத்தவுடன் மாடியை எங்கே என்று கேட்கக்கூடாது."

"சரி. கேட்க மாட்டேன். படிப்படியாக சொல்லுங்கள்."

",நமது பையன் தவறு செய்யும்போது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கண்டிக்கிறோம். 

எதற்காக?

 அவனைத் திருத்துவதற்காக.

ஆனால் பையன் சொல்லுவான் நான் தப்பு செய்தேன் அப்பா கோபப் பட்டார் என்று.

உண்மையில் நாம் பட்டது 
பாவமாகிய கோபம் அல்ல.

தவற்றின் மேல் உள்ள எதிர்ப்பு உணர்வு.

சிலர் எதிரியை பழிவாங்கும் உணர்வோடு அதற்கான தருணத்தை எதிர்பார்த்து.

பழிவாங்க துடிக்கும் உணர்வுதான் தலையான பாவமாகிய கோபம்.

தாய்க்கு எதிராக என்ன தப்பு செய்தாலும் தாய் மகனை பழிவாங்க எண்ணவே மாட்டாள்.

ஆனாலும் மகனின் தவற்றின் கனா கனத்தைப் அவனுக்கு புரிய வைப்பதற்காக, 

புரிய வைத்து திருத்துவதற்காக மிக மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவாள்.

'இனிமேல் இதே தவற்றை மீண்டும் செய்தால் கொன்று போடுவேன். 
இப்படிப்பட்ட பிள்ளை இருப்பதைவிட சாவதே மேல்.'

தாயின் இந்த வார்த்தைகளுக்கு அகராதிப்படி அர்த்தம் பார்ப்பவன் பைத்தியம்.

மகனைத் திருத்தத் துடிக்கும் உணர்வை மட்டும் பார்ப்பவன்தான் மனிதன்."

"உண்மைதான் ஆசிரியர்கள் கூட மாணவர்களை நன்கு படிக்க வைப்பதற்காக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது உண்டு.

உதாரணத்திற்கு 

'வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டால். கையை ஒடித்து விடுவேன்.'

இப்போ புரிகிறது."

",நாம் எல்லாப் படிகளையும் இன்னும் ஏறவில்லையே அதற்குள் மாடி வந்துவிட்டது என்கிறாய்!"

"சரி, சொல்லுங்கள்."

",வார்த்தைகளின் பொருள் அகராதியில் இல்லை. சொல்பவரின் உணர்வில் இருக்கிறது.

சொல்பவரின் குணத்தை பொறுத்து சொற்களின் பொருள் அமையும்.

பெரிய தவறு செய்த மாணவனை பார்த்து ஆசிரியர்,

'Get out and get lost."

என்று சொன்னால் மாணவன் உடனே வெளியே போய்விட கூடாது.

'தெரியாமல் செய்துவிட்டேன். இந்த தடவை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன்.'
என்று சொல்லவேண்டும்.

தவற்றை நினைத்து வருத்தப்பட வைப்பதற்காக 'Get out' நன்று ஆசிரியர் சொல்கிறாரே தவிர மாணவன் வெளியே போகவேண்டும் என்பதற்காக அல்ல.

ஒரு நாள் மேற்பார்வை படிப்பின் போது ஒரு பையன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து,

'ஏல, எழுந்திரு நீ படித்துக் கிழித்தது போதும். வீட்டைப் பார்த்துப் போ.' என்றேன்.

அவன் உடனே எழுந்து வீட்டுக்குப் போய்விட்டான்.

கொஞ்ச நேரம் பொறுத்து அவனது அப்பா அவனை மறுபடி பள்ளிக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்.

"சார் இவனைக் கிணற்றுக்குள் விழச் சொல்லுங்கள், விழுகின்றானா என்று பார்ப்போம்"
என்றார். அவரும் ஒரு ஆசிரியர்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

இஸ்ரேல் மக்கள் பாவ வாழ்க்கையில் உழன்றபோது

 அவர்களைத் திருத்துவதற்காக அவர்களை அடிமைகளாக வேற்றுநாட்டு மன்னர்கள் அள்ளிக் கொண்டு போக அனுமதித்திருக்கிறார்.

 இது அவர்கள் மீது உள்ள கோபத்தினால் அல்ல, அவர்களை திருத்துவதற்காக.

சீனாய் மலை அடியில் குழுமியிருந்த இஸ்ரயேல் மக்கள் தங்கத்தினால்

கன்றுக்குட்டி ஒன்று ஒன்று செய்து அதை வழிபட ஆரம்பித்தார்கள்.

விக்கிரக ஆராதனையின் பாவக் கனத்தன்மையை பைபிள் வாசிக்கும் நமக்கு உணர்த்த மோயீசனுக்கு கடவுள் தூண்டுதல் கொடுக்கிறார். (Inspires)

மோயீசன் இறைச் செய்தியை மனித மொழியில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதர் எப்படிப் பேசுவார்களோ அந்த பாணியில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் எழுதுகிறார்.

இறைச் செய்தியைத் தூண்டுபவர் இறைவன். எழுதுபவர் மோயீசன்,
மனித மொழியில்

'God inspires, Moses writes in human language.
 
தன் மக்களை திருத்துவதற்காக கடவுள் கடினமான வார்த்தைகளை பயன்படுத்துவதாக மோயீசன் எழுதினார்:

"நீ நம்மை விட்டுவிடு, நமது கோபம் அவர்கள் மேல் மூண்டு அவர்களை அழித் தொழிக்கும். உன்னை ஒரு பெரிய இனத்திற்குத் தலைவனாக்குவோம்."

ஒரு தாய் தன் மகன் செய்யும் தப்பின் கனத்தை புரிய வைப்பதற்காக,


"இனிமேல் இந்த தப்பை செய்தால் நானே உன்னைக் கொன்று விடுவேன்" என்று சொல்வது போல.

கடவுளும் தன் மக்களை திருத்துவதற்காக கடினமான வார்த்தைகளை பயன்படுத்துவது போல் மோயீசன் எழுதியிருக்கிறார்.

உண்மையில் கடவுள் தன் மக்களை அழித்து ஒழிப்பதற்காக எகிப்திலிருந்து அவர்களை விடுவித்து கூட்டி வரவில்லை.

கடவுளின் வார்த்தைகளுக்கு அப்படியே பொருள் கொடுக்க கூடாது.

அவர் எதற்காக அப்படி சொன்னார் என்பது விளங்கும் வகையில் பொருள் கொடுக்க வேண்டும்.

கடவுளின் வார்த்தைகளுக்கு ஒரே அர்த்தம்:

"விக்கிரக ஆராதனை கடவுளுக்கு எதிரான மிகப் பெரிய பாவம்."

என்பது மட்டும்தான்.

இறைவனால் மாறவே முடியாது.

கோபம் கொள்ளுவதும், கோபம் தணிவதும் இறைவனது சுபாவத்திற்கு பொருந்தாத செயல்கள்.

"என்று மன்றாடினார்.
14 அப்பொழுது ஆண்டவருக்குக் கோபம் தணிய, தாம் மக்களுக்கு எவ்விதக்கேடும் செய்வதாகச் சொல்லியிருந்தாரோ அதைச் செய்யாமல் விட்டு விட்டார்."

என்றும் மோயீசன் எழுதியிருக்கிறார்.

உண்மையில் கடவுளுக்கு  கோபம் ஏற்படவும் இல்லை, தணியவும் இல்லை.

ஆனாலும் பக்தர்கள் மன்றாட்டை கடவுள் கேட்பார் என்ற  உண்மையை இந்த வசனம் விளக்குகிறது. அவ்வளவுதான்."

"புரியவில்லை. கடவுள் நமது மன்றாட்டை கேட்டு கேட்டதைத் தருவார் என்றாலே அவர் மாறுகிறார் என்றுதானே அர்த்தம்.

உதாரணத்துக்கு,

இறைவனது திட்டத்திற்கு எதிராக எதுவும் உலகில் நடக்காது.

 மனிதன் திருந்தி வாழ கொரோனாவை அனுமதிப்பது என்பது இறைவனின் திட்டம். 

நாம் இப்போது கடவுளிடம் கொரோனாவை நீக்கும்படி கேட்கிறோம். 

நாம் கேட்டபடி அவர் 
கொரோனாவை நிறுத்திவிட்டால்

 தனது திட்டத்தை மாற்றிவிட்டார் என்றுதானே அர்த்தம்.

நினிவே நகரத்தையே அழிப்பதாகச் சொல்லி பிறகு அழிக்காமல் விட்டுவிட்டாரே,

அப்போது அவர் மாறவில்லையா?

கடவுளால் மாற முடியாது என்று எதைவைத்து சொல்கிறீர்கள்?''

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment