Friday, August 27, 2021

"ஐயா! நீர் என்னிடம் ஐந்து தாலந்து ஒப்படைத்தீர். இதோ! இன்னும் ஐந்து தாலந்து சம்பாதித்துள்ளேன்"(மத். 25:20)

"ஐயா! நீர் என்னிடம் ஐந்து தாலந்து ஒப்படைத்தீர். இதோ! இன்னும் ஐந்து தாலந்து சம்பாதித்துள்ளேன்"
(மத். 25:20)

"ஏங்க, bed coffee ready."

'ஏண்டி, நான் bed ஐ விட்டு எழுந்து அரைமணி ஆகிறது. இப்போ
bed coffee ready ங்கிற?

இப்போ அது table coffee. Table ல்ல coffee ஐ வை."

" coffee ஐ ஊற்ற தான் முடியும். வைக்க  முடியாது."

", குடிக்க முடியுமா?"

" முதலில் எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள். அதற்குள்ள காபி ஆறிவிடும். குடிப்பது எளிது."


", முதல்ல சந்தேகத்தை சொல்லு."

"தாலந்துகள் உவமை வாசித்தீங்களா?"

", வாசித்துவிட்டேன். அதைப் பற்றிதான் எழுதப்போகிறேன்."

"எனது சந்தேகம் நீங்கள் எழுதுவதற்கு உதவியாக இருக்கும்."

",ரொம்ப சந்தோஷம். முதல்ல சந்தேகத்தை சொல்லு."

"அந்த உவமையில் வருகிற பெரியவர் தனது ஊழியர்களுக்கு தாலந்துகள் கொடுத்து உதவுகிறார்.

அதேபோல கடவுளும் நமக்கு தருகிறார் என்பதைத்தானே உவமை மூலம் இயேசு நமக்கு சொல்ல விரும்புகிறார்!"

", ஆமா, அதில் என்ன சந்தேகம்?"

"நான் யோசித்து, யோசித்து பார்க்கிறேன். எனக்கு எதையுமே தந்ததாக தெரியவில்லை."

",கர்த்தர் கர்ப்பித்த ஜெபத்தில் தந்தையை நோக்கி 

"எங்கள் அன்றாட உணவை, இன்று எங்களுக்குத் தாரும்."
என்று கேட்கிறாயா?"

"ஆமா. அதனால்தான் தினமும் உணவு குறைவில்லாமல் கிடைக்கிறது."

",நீ எந்த உணவை சொல்கிறாய்?"

"சாப்பிடுகிற உணவைத்தான்." 

",அதாவது வாய்வழியாக சாப்பிடுகிற உணவையா?"

"வாய்வழியாகத்தானே சாப்பிட முடியும்!''

",நமது உடலுக்கு வேண்டிய உணவை வாய்வழியாக தான் சாப்பிட முடியும்.

நமக்கு ஆன்மா என்று ஒன்று இருக்கிறது, தெரியுமா?''

"இது என்னங்க கேள்வி இது.
இதுகூட தெரியாம இருப்பாங்களா?"

", தெரிந்திருந்தால் இந்த சந்தேகமே வந்திருக்காதே!
எப்போதாவது உனது ஆன்மாவிற்கு வேண்டிய உணவை கேட்டிருக்கிறாயா?"

" அப்படி தனியாக எந்த உணவையும் கேட்கவில்லை.
இயேசு கற்றுத்தந்த செபத்தை அப்படியே சொல்கிறேன். அவ்வளவுதான்."

",  ஆன்மாவின் வளர்ச்சிக்கு வேண்டிய உணவு எது என்றாவது தெரியுமா?"

" ஆன்மாவுக்கு உருவமே இல்லை. அது எப்படிங்க வளரும்?"

", ஆன்மாவின் வளர்ச்சி  என்றால் ஆன்மீக வாழ்வில் நாம் பெறும் வளர்ச்சி.

ஆன்மீக வாழ்வில் நாம் வளர வேண்டிய உணவு எது?"

"திவ்ய நற்கருணை என்று நினைக்கிறேன்."

", Correct. ஆனாலும் புதுநன்மை வாங்கிய பிறகுதான் நற்கருணை வாங்க முடியும்.

எட்டு வயதில் சிறுவர்கள் புதுநன்மை வாங்குகிறார்கள்.

அதுவரையிலும் ஆன்மிகத்தில் வளர உணவு வேண்டாமா?"

" புரிகிறது. ஆன்மீக வாழ்வில் வளர வேண்டிய உணவு இறைவனது அருள்.

ஆன்மீக வாழ்வையே அருள் வாழ்வு என்றுதான் அழைக்கிறோம்.

இப்பொழுது சிறுவயதில் ஞான உபதேச வகுப்பில் படித்தது ஞாபகத்திற்கு வருகிறது.

தேவ இஸ்டப்பிரசாதம் (Sanctifying grace)
எனப்படும் அருள் நமது ஆன்மாவிற்கு உயிர் அளிக்கிறது.

இறைவனோடு நமக்கு உறவை ஏற்படுத்துகிறது.

உதவி வரப்பிரசாதம் (Actual grace)
நற்செயல்கள் புரிய உதவியாக இருக்கிறது."

",நாம் ஞானஸ்நானம் பெறும்போது நமக்கு இறைவனால் அளிக்கப்படுகின்ற  
தேவ இஸ்டப்பிரசாதம்தான் நமக்கும் இறைவனுக்கும் உறவை ஏற்படுத்துகிறது.

நாம் பெற்ற தேவ இஸ்டப்பிரசாதத்தை நமது வாழ்நாள் முழுவதும் இழக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நாம் சாவான பாவம் செய்ய நேரிட்டால் தேவ இஸ்டப்பிரசாதத்தை இழந்து விடுவோம்.

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து இழந்த தேவ இஸ்டப்பிரசாதத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

நாம் மரணிக்கும் போது நம்முடன் 
தேவ இஸ்டப்பிரசாதம் இருந்தால்தான் விண்ணரசுக்குள் நுழைய முடியும்.

நாம் நற்செயல் புரிய 
உதவி வரப்பிரசாதம் உதவியாக இருக்கிறது."

"தாலந்துகளுக்கும், அருளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?"

",நாம் ஆன்மீக வாழ்வை ஆரம்பிக்கும்போது இறைவன்  நமக்கு இலவசமாக தனது அருளைத் தருகிறார்.

நாம் பெற்ற அருளை இழக்காமல் பாதுகாப்பதோடு அதில் வளரவும் வேண்டும்.

அருளில் வளர்வதில்தான் நமது ஆன்மீக வளர்ச்சி இருக்கிறது."

"அருளில் வளர்வது எப்படி?"

",அருளுக்கு உரிமையாளர் இறைவன் மட்டுமே.  அவரிடமிருந்து கேட்டு, பெற்று நம்மிடம் உள்ள அருளின் அளவை அதிகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை நற்செயல் புரியும் போதும் அதற்கு வேண்டிய அருளை இறைவனிடம் கேட்க வேண்டும்.

இறை அருளின் உதவியால் நாம்  புரிந்த நற்செயலும் நமக்கு இறை அருளைப் பெற்றுத் தருகிறது. 

நாம் தினமும் செய்ய வேண்டிய நற்செயல்களை செய்ய வேண்டிய அருளைத்தான் 

ஒவ்வொரு முறை கர்த்தர் கற்பித்த செபத்தில் கேட்கிறோம்.

அந்த அருள்தான் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு வேண்டிய அன்றாட உணவு.
 
நாம் செய்யும் நற்செயல்கள்தான் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகின்றன.

நற்செயல் புரிய தேவையான உணவாகிய அருளைக் கேட்டுப் பெறுகிறோம்.

ஒவ்வொரு நற்செயலுக்கும் சன்மானமாக இறையருள் கிடைக்கிறது.

நமது செபத்தின் மூலமும், நற்செயல்களின் மூலமும் நாம் அருளில் வளர்கிறோம். 

தாலந்துகளை பெற்றவர்கள் அதன் அளவை அதிகரிப்பது போல,

நாம் இறைவனிடமிருந்து பெற்ற அருளையும் அதிகரித்துக்கொண்டே வாழ வேண்டும்.

உண்மையில் நாம் வாழ்வதே இறையருளில் வளர்வதற்காகத்தான்."

"அதாவது ஆன்மீக வாழ்வில் நாம் வளர்வதற்குத் தேவையான அருளை

 அருளின் ஊற்றாகிய ஆண்டவரிடமிருந்தே பெறவேண்டும்.

வேறு எந்த வழியில் இறையருளை ஈட்டலாம்?"

", நமது செபம், தவம், தர்மம், தேவத் திரவிய அனுமானங்கள்  மற்றும் நமது நற்செயல்கள் மூலமே இறையருளை ஈட்டலாம்.

காலையில் எழும்போது நம்மிடம் எவ்வளவு அருள் இருந்ததோ அதைவிட பன்மடங்கு அதிகமாக இரவில் படுக்கப் போகும்போது இருக்க வேண்டும்.

நாம் வாழ்வதே அருளை ஈட்டுவதற்காக தான்."

"ஆனால் நாம் பொருளை ஈட்டுவதில் அல்லவா குறியாக இருக்கிறோம்!"

", பொருளை ஈட்டுவதில் தவறு ஒன்றும் இல்லை.

சரியான முறைப்படி பொருளீட்டுவதே நமக்கு அருளைக் கொண்டு வரும்.

ஈட்டிய பொருளை பிறரன்பு செயல்களுக்கு  பயன்படுத்தும்போது சன்மானமாக மிகுதியான இறையருள் கிடைக்கும்."

"அதாவது உலக வாழ்வை கூட அருளுக்காக வாழ்ந்தால் அது ஆன்மீக வாழ்வாக மாறிவிடுகிறது. சரியா?"

", சரி.  சிலர் தாலந்து திறமைகளை (Talents) மட்டுமே குறிக்கும் என்று எண்ணுகிறார்கள்.

நமக்கு கடவுள் தருவது எல்லாமே தாலந்துகள் தான்.

ஆன்மீக வாழ்வின் ஆரம்பத்தில் நமக்கு ஆண்டவர் தருகின்ற அவரது அருளை  

அவரது உதவியாலே பன்மடங்கு பெருக்கி 

விண்ணகத்துக்கு போகும்போது நம்முடன் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வுலகில் நாம் ஈட்டுகிற பொருள் எதுவும் நம்மோடு வராது.

அருள் மட்டுமே நம்மோடு வரும்.

 ஆண்டவர் தந்த அருளை பன்மடங்கு பெருக்கி அவரிடம் கொண்டு போகும்போது அவர் மிகவும் மகிழ்வார்.

மோட்சத்தில் பன்மடங்கு சன்மானம் தருவார்."

"சரி, இதுவரை நாம் பேசியதை அப்படியே எழுதி விடுங்கள்.

நான் உங்களுக்கு உதவியதற்கு நன்றியாக ஆறிப்போன காபியைக் குடிச்சிடுங்க."

''அது ஒரு ஒறுத்தல் முயற்சி. அதற்கும் இறையருள் பரிசாகக் கிடைக்கும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment