"கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கடைப்பிடிக்கிறீர்கள்"
(மாற்கு, 7:8)
இயேசுவின் சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் உண்பதைப் பார்த்த சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து,
"முன்னோர் பரம்பரையின்படி உம் சீடர் நடவாமல் தீட்டான கைகளால் உண்பதேன்?" என்று கேட்டார்கள்.
இயேசுவைப் பொறுத்தமட்டில் சாப்பிடுமுன் கைகளைக் கழுவ வேண்டுமா வேண்டாமா என்பது முக்கியமல்ல.
அவர் கடவுள்.
அவர் மனிதனாக பிறந்தது மக்களின் ஆன்மீக மீட்புக்காக,
ஆன்மீக மீட்புக்கான நற்செய்தியை அறிவிக்க,
உடல் சார்ந்த சுகாதார விதிகளைப் போதிக்க அல்ல
ஆகவே "கைகளை கழுவிட்டு சாப்பிடுங்கள்.
அப்போதுதான் உடல் நலமாக இருக்கும்'
என்று அறிவுரை கூறுவது அவரது வேலை அல்ல.
"கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள், அப்போதுதான் மீட்பு கிடைக்கும்." என்று சொல்லவே அவர் போதித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் பரிசேயரோ
கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு
மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
ஆகவே உடல் நலத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்மீக நலத்திற்குக் கொடுக்காததற்காக அவர்களைக் கண்டிக்கிறார்.
"கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கடைப்பிடிக்கிறீர்கள்"
(சாப்பிடும் முன் கை கழுவ வேண்டும் என்பது கடவுளுடைய கட்டளை அல்ல, மனிதருடைய பரம்பரை வழக்கம்)
"உங்கள் பரம்பரையைக் கடைப்பிடிக்கக் கடவுளுடைய கட்டளையை எவ்வளவு நன்றாக வெறுமையாக்குகிறீர்கள்!
என்கிறார்.
கை கழுவாமல் சாப்பிடுவதால்
புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே செல்லும் அழுக்கு நமது ஆன்மாவை மாசுபடுத்தாது,
ஆனால் மனதில் கெட்ட எண்ணங்கள் இருந்தால்,
அவை உள்ளே இருந்தாலும்,
வெளியே வந்தாலும்
ஆன்மாவை மாசுபடுத்தும்.
ஆசிரியர் பாடம் நடத்தி முடித்துவிட்டு மாணவர்களிடம்,
"ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்"
என்று சொன்னார்.
ஒரு மாணவன் எழுந்து,
"சார் வகுப்பிற்கு வெளியே ஏதோ வினோதமான சப்தம் கேட்கிறது, அது என்ன?
என்று கேட்டான்.
ஆசிரியர் என்ன சொல்லுவார்?
"அப்போ நீ நான் நடத்திய பாடத்தை கவனிக்க வில்லை.
வகுப்பிற்கு வெளியே கேட்கிற சப்தத்தை தான் கவனித்திருக்கிறாய்."
என்றுதானே சொல்லுவார்.
இயேசு நற்செய்தி அறிவிக்க வந்திருக்கிறார். பரிசேயர்கள் அவரிடம்,
"உமது சீடர்கள் ஏன் கைகழுவாமல் சாப்பிடுகிறார்கள்?"
என்று நற்செய்திக்கு சம்பந்தமில்லாத கேள்வியை கேட்கிறார்கள்!
இயேசு பரிசேயரை வெளிவேடக்காரர்கள் என்கிறார்.
மனதில் ஒன்றை வைத்துக் கொண்கொண்டு அதற்கு எதிர்மறையாய் வாழ்பவன் தான்
வெளிவேடக்காரன.
வெளிப்பார்வைக்கு மோயீசன் சட்டப்படி நடக்கும் ஆன்மீகவாதிகள் போல் காட்டிக்கொள்கிறார்கள்.
ஆனால் மனதளவில் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது ஆன்மீகம் இல்லாத உலக பரம்பரை வழக்கங்களுக்கு.
இசையாசின் கூற்றுப்படி
"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது."
அவர்கள் இறைவனை புகழ்வது உதடுகளால் மட்டுமே.
உள்ளத்தில் இறைவன் இல்லை.
நம்மைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் பூசைக்கு புறப்படுகிறோம்.
பல்தேய்த்து, குளித்துவிட்டு, சுத்தமான கவர்ச்சியான உடை அணிந்து, தலை சீவி, கண்ணாடியைப் பார்த்து நம்மை நாமே ரசித்துவிட்டு
கோவிலுக்குப் போகிறோம்.
உடல் ரீதியாக ரெடி.
கோவிலுக்கு போவது ஆன்மீக செயல். அதற்கு நாம் ஆன்ம ரீதியாக ரெடியா என்று நம்மை நாமே கேட்டிருக்கிறோமா?
ஆன்ம பரிசோதனை செய்து,
தேவைப் பட்டால்
ஆன்மாவைச் சுத்தப்படுத்துவதற்காக
பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறோமா?
உடல் சுத்தத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்ம சுத்தத்திற்குக் கொடுக்கிறோமா?
சிந்தித்துப் பார்ப்போம்.
சமய விழாக்கள் கொண்டாடும்போது நாம் உலக ஆடம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?
ஆன்மீக எளிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?
பிரபஞ்சத்துக்கே அதிபதியான கடவுள்
நித்திய காலமாக திட்டமிட்டு
ஒரு மாட்டுத் தொழுவத்தில்
மிக ஏழை குழந்தையாய்ப் பிறந்தார்.
நாம் ஏழ்மையை மதிக்க நமக்கு முன்மாதிரிகை காட்டுவதற்காக ஏழையாய்ப் பிறந்தார்.
நாம் ஏழை இயேசுவின் விழாவாகிய கிறிஸ்மசை ஆன்மீக எளிமையுடன் கொண்டாடுகிறோமா?
அல்லது,
பணக்காரத்தனமாகக் கொண்டாடுகிறோமா?
கிறிஸ்து பிறந்ததைவிட நமக்கு முக்கியம் விலை உயர்ந்த உடை, மட்டன் பிரியாணி சாப்பாடு, ஆடம்பரமான கொண்டாட்டம்!
கிறிஸ்மஸ் திருவிழாவை எளிமையாகக் கொண்டாடினால்தான்
நாம் ஏழை பாலகன் இயேசுவின் சீடர்கள்.
நமது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஆன்மீகத்தை விட உலக ஆடம்பரம்தான் அதிகம் இருக்கிறது.
அன்னை மரியாளுக்கு விழா எடுக்கும் போது நம் அன்னையை சப்பரத்தில் சுமக்கும் அளவிற்கு மனதில் சுமக்கிறோமா?
நம் அன்னையை நமது மனதில் சுமந்தால் அவளது அத்தனை நற்குணங்களும் நம்மிடமும் ஒட்டிக் கொள்ள வேண்டுமே!
அன்னையின் தாழ்ச்சி நம்மிடம் இருக்கிறதா?
அன்னை நம்மிடமிருந்து
எதிர்பார்ப்பது எளிமையை, ஆடம்பரத்தை அல்ல.
ஒவ்வொரு விழாவின் போதும் நமது ஆன்மீகம் வளரவேண்டும்.
ஆன்மீகம் வளரவேண்டும் என்றால் லௌகீகம் தேய வேண்டும்.
கல்யாண வீட்டிற்குப் போனால் வயிறார விருந்து கிடைக்கிறது.
அதுபோல கோவில் திருவிழாவிற்குச் சென்றால் ஆன்மாவிற்கு அருள் விருந்து கிடைக்க வேண்டும், பிரியாணி விருந்து அல்ல.
இறைவனுக்கு விழா எடுப்பது இறைவனை விளம்பரப்படுத்த அல்ல,
இறைவனை மற்றவர்களுக்குக் கொடுக்க.
நாம் வாழ்வது கடவுளுடைய கட்டளைகளை அனுசரிக்க.
மனிதர்களுடைய பரம்பரையைக் கடைப்பிடிக்க அல்ல.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment