Friday, August 20, 2021

"திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை"

"திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை" (மத்.22:40)

படிப்பு அறிவற்ற சாதாரண மக்கள் இயேசுவின் நற்செய்தியைக் கேட்கவும், 

அவரில் விசுவாசம் கொள்ளவும்,

 விசுவாசத்தின் காரணமாக தங்களுடைய நோய்களிலிருந்து குணமடையவும் அவர் பின் சென்றார்கள்.

ஆனால் பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும், சட்ட வல்லுனர்களும் 

இயேசுவின் பேச்சில் குறை காண்பதற்காகவும், 

அவரைக் கொல்வதற்கு காரணங்கள் தேடுவதற்காகவுமே அவரைப் பின் சென்றார்கள்.

சட்டவல்லுநர்  ஒருவன்,
இயேசுவைச் சோதிப்பதற்காக ஒரு கேள்வி கேட்கிறான்.

அதற்கு உரிய பதில் அவனுக்குத் தெரியும் என்றும்,

 தன்னை சோதிப்பதற்காகவே கேட்கிறான் என்றும் இயேசுவுக்குத் தெரியும்.

 ஆனாலும் அவரைப்  பின்சென்ற மற்ற மக்களுக்காகவும், நமக்காகவும்  இயேசு மிகப் பொறுமையாக பதிலைச் சொல்கிறார்.

 "போதகரே,  திருச்சட்டத்தின் பெரிய கட்டளை எது ?" 

 இயேசு அவனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு 

முழு உள்ளத்தோடும்,

 முழு ஆன்மாவோடும்,

முழு மனத்தோடும் 

அன்பு செய்வாயாக.


இதுவே எல்லாவற்றிலும் பெரிய முதன்மையான கட்டளை.

இரண்டாவது இதை யொத்ததே:

 உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."

 என்று இயேசு பதில் சொல்கிறார்.

சீனாய் மலையில் அவர் கொடுத்த பத்து கட்டளைகளையும், இரண்டு
கட்டளைகளாகச் சுருக்கிவிட்டார்.

பதிலைக் கூர்ந்து வாசிப்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழும்.

நமக்கு இருப்பது ஒரு ஆன்மா, ஒரு உள்ளம்.

இவை இரண்டையும் முழுவதுமாக இறைவனுக்கு கொடுத்துவிட்டால் நமக்கும், நமது அயலானுக்கும் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?

இந்த கேள்விக்குரிய பதிலை கண்டுபிடித்து அதை ஆழமாக தியானிக்க வேண்டும்.

நாம் நமது ஆன்மாவையும்  மனத்தையும் முழுமையாக இறைவனுக்கு கொடுக்க வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும்போது,

 அந்த உண்மைக்குள் மறைந்திருக்கும் மற்றொரு உண்மையையும்   ஏற்றுக் கொள்கிறோம்.

அது என்ன உண்மை?

நாம் உட்பட, படைக்கப்பட்ட அனைத்து மக்களும் இறைவனின் பராமரிப்பின் கீழேதான் உள்ளனர் என்பதே அந்த உண்மை.

குடும்ப அட்டையில் உள்ள தலைவர் பெயருக்கு கொடுக்கப்படும் அனைத்து பொருளும் குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுக்கப்பட்டவைதானே.

அதுபோலவே கடவுளுக்கு கொடுக்கப்படுவது அவரது பாதுகாப்பில் உள்ள அனைவருக்கும்  கொடுக்கப்படுவதுதான். 

ஆகவே நாம் எதையும் கடவுளுக்கு முழுமையாக கொடுக்கும்போது படைக்கப்பட்ட அனைத்து மக்களும் ஒரே குடும்பத்தினர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறோம்.

நமது வீட்டில் சமையலறையில் குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு இருந்தாலும் 

நமது அம்மா ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாத்திரத்தில்தானே உணவு கொடுக்கிறார்.

அதே போல் தான் நமது அன்பை முழுவதும் இறைவனுக்கு கொடுத்து விட்டாலும் 

அவர் நம்மைப் பார்த்து 

அந்த அன்பிலிருந்து குடும்பத்தார் அனைவருக்கும் பங்கு கொடுங்கள் என்று சொல்கிறார்.

எந்த அன்பினால் இறைவனை 
நேசித்தோமோ  அதே அன்பினால் நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

 நமது குடும்பத்தில் நமது அப்பா அம்மாவை நேசிப்பது போல உடன் பிறந்தவர்களையும் நேசிக்கிறோம் அல்லவா, அதேபோல்,

ஆகவேதான் ஒரே குடும்பத்தை சேர்ந்த நாம் 

 நம்மை நேசிப்பது போலவே .

  நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

 நம்மை நாம் நேசிக்க வேண்டும் என்பதற்கு கட்டளை தேவையில்லை.

 பிறரை நேசிப்பதற்கு இறைவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.

இறை குடும்பத்தின் தலைவரான  கடவுளிடம் 

நமது முழு அன்பையும் கொடுத்து விட்டபடியால் 

கடவுள் மூலமே  நமது பிறரன்பையும் கொடுக்க வேண்டும்.

 கடவுள் மூலமே பிறரன்பை பகிர்ந்து கொள்வதால்தான்  பிறருக்கு செய்வதெல்லாம் கடவுளுக்கே செய்வது ஆகிறது.
 
கடவுள் மூலம் பகிர்ந்து கொள்ளாமல் உலகத்தின் மூலம் பகிர்ந்து கொண்டால் பிறருக்கு செய்வது கடவுளுக்கு செய்வது ஆகாது.

நமது அயலான் கடவுளின் பிள்ளை  என்பதற்காகத்தான்  அவனை நாம் நேசிக்கிறோம்.

கடவுளை நேசிப்பவனால் அயலானை நேசிக்காமல் இருக்க  முடியாது.

உண்மையான அன்பு தன்னிலும் பிறரிடமும் ஆன்மீக நலனையே நாடும்.

கடவுளை மறுப்பவர்களுடைய அன்பு உண்மையான அன்பு அல்ல.

   ஏனெனில் அது முழுக்க முழுக்க உலகையே சார்ந்தது.

 ஆன்மீக நலனை நாடாது

உண்மையான பிறரன்பு இறையன்பை உயிராகக் கொண்டது.

திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை.

   பைபிள் இந்த இரண்டு கட்டளைகளையே மையமாகக் கொண்டது.

இறை அன்பையும் பிறர் அன்பையும் நீக்கிவிட்டால் பைபிள்  இல்லை.

பைபிள் வாசிக்கத் தெரியாதவன்கூட 

தன் சிந்தனையிலும், சொல்லிலும்,  
செயலிலும் இறைவனையும் அயலானையும் நேசித்தால் மீட்புப் பெறுவான்.
 
வாசிப்பதைவிட வாழ்வதே முக்கியம்.

இறையன்பையும், பிறரன்மையும் வாழ்வோம்.

நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment