"ஆண்டவரே, பாவியேனை விட்டு அகலும்" (லூக்.5:8)
தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப் படுவார்கள் என்பது இறைமகன் இயேசுவின் போதனை.
தங்களைத் தாங்களே மிகப் பெரிய பாவிகள் என்று ஏற்றுக் கொள்பவர்கள்
மிகப்பெரிய புனிதர்களாக மாறுவார்கள் என்ற உண்மையை இயேசுவின் போதனையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இயேசு நிறுவிய கத்தோலிக்க திருச்சபையில் மிக உயர்ந்த பொறுப்பு பாப்பரசர் பொறுப்பு.
திருச்சபையின் முதல் பாப்பரசராக
இயேசுவாலே நேரடியாக நியமிக்கப்பட இராயப்பர் எப்படி தகுதி ஆனார் என்பது இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்து புரிகிறது.
பெலவேந்திரர்தான் சீமோனை முதல்முதல் இயேசுவைப் பார்க்க அழைத்துச் சென்றார்.
இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். - கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள். (அரு. 1:42)
முதல் பார்வையிலேயே சீமோனை இயேசு இராயப்பர் என்று அழைத்ததற்கு காரணம் அந்த வசனத்தை வாசிக்கும் போது புரியவில்லை.
அந்த இராயப்பர் மேல்தான் தனது திருச்சபையை இயேசு கட்டப் போகிறார் என விஷயம் நமக்கு அப்போது தெரியாது.
ஆனால் இயேசுவைப் பொறுத்தமட்டில் அது அவரது நித்திய கால திட்டம்.
அந்த திட்டத்திற்கு எப்படி இராயப்பர் தன்னைத்தானே தகுதியாக்கிக் கொண்டார் என்ற உண்மை இன்றைய வாசகத்திலிருந்து புரிகிறது.
இயேசு கெனேசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். ,
.
திரளான மக்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர்.
இயேசு அங்கு இருந்த
சீமோனுடைய படகில் ஏறி,
கரையிலிருந்து சற்றே தள்ளச் சொல்லி,
படகிலிருந்தே கூட்டத்திற்குப் போதிக்கலனார்.
கத்தோலிக்க திருச்சபைக்கு "இராயப்பர் படகு" என்ற ஒரு செல்லப் பெயர் உண்டு.
சீமோனுடைய படகில் ஏறும்போதே இயேசுவுக்கு இந்த பெயர் மனதில் இருந்திருக்க வேண்டும்.
போதித்து முடிந்ததும் சீமோனிடம்,
"ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்று கூறினார்.
அதற்குச் சீமோன், "குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை: ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்" என்றார்.
"உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்" என்ற இராயப்பரின் கூற்றை கவனிக்க வேண்டும்.
இயேசுவின் வார்த்தைகளின் மேல் அவருக்கு இருந்த அசைக்கமுடியாத விசுவாசத்தை இது காண்பிக்கின்றது.
இயேசு தச்சுத்தொழில் செய்து வந்தவர்.
சீமோனோ மீனவ குடும்பத்தில் பிறந்து மீன் பிடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்.
சீமோன் இயேசுவை மெசியாவாகத்தான் பார்த்தார். தச்சுத் தொழிலாளியாக அல்ல.
அதுதான் அவரது விசுவாசத்திற்கு அடிப்படை காரணம்.
மெசியா சொன்னால் உறுதியாக நடக்கும் என்று உறுதியாக விசுவசிததார்.
விளைவு?
இரவு முழுவதும் பாடுபட்டும் மீன் ஒன்றும் கிடைக்காத கடலில்
இயேசுவின் புதுமையால்
வலைகள் கிழியக்கூடிய அளவிற்கு,
இரண்டு படகுகள் கொள்ளக்கூடிய அளவுக்கு மீன்கள் இராயப்பரது ஒரு படகிலேயே கிடைத்தன.
இயேசுவின் இப்புதுமை இராயப்பரது மனதில் வீசிய ஒளியில் அவரது அந்நாள் வரையிலான பாவங்களும்,
இயேசுவின் அளவுகடந்த பரிசுத்த தனமும் பளிச்சென்று தெரிந்தன.
இராயப்பர் இயேசுவின் காலில் விழுந்து, "ஆண்டவரே, பாவியேனை விட்டு அகலும்"
கத்தோலிக்க திருச்சபையில் முதல் முதல் இயேசுவிடமே தனது பாவங்களை ஏற்றுக்கொண்ட முதல் நபர் இராயப்பராகத்தான் இருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது!
பாவியாகிய தான் பரிசுத்தர் முன் நிற்பதற்கு தகுதி அற்றவர் என்பதை மனதார உணர்ந்தார்.
இங்கு என் மனதில் படும் இரண்டு கருத்துக்களை கூற வேண்டியுள்ளது.
இயேசு பாவிகளைத் தேடித்தான் உலகிற்கு வந்தார். ஆகவே இராயப்பர் தன்னை பாவி என்று ஏற்றுக் கொண்டது அவருக்கு மிகவும்பிடித்தமாக இருந்திருக்கும்.
பாவிகளைத் தேடி வந்ததே அவர்கள் தங்களது பாவங்களை ஏற்றுக்கொண்டு மனம் திரும்புவதற்காகதான்.
இராயப்பரின் கூற்று இயேசுவின் வருகைக்கு கிடைத்த,
பதிவு செய்யப்பட்ட,
முதல் வெற்றி என்று கூட கூறலாம்.
தன்னைப் பாவியென்று ஏற்றுக் கொண்டதன் மூலம் இராயப்பர் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டார்.
அந்த தாழ்ச்சியை தனது ஞானத்தின் மூலம் நித்திய காலமாகவே அறிந்திருந்த இயேசு
இராயப்பருக்குத் திருச்சபையில் மிகப்பெரிய பொறுப்பைக் கொடுப்பது என்று நித்திய காலமாக தீர்மானித்து விட்டார்.
இராயப்பரின் தாழ்ச்சிக்கு கிடைத்த வெற்றிதான் அவரது முதல் தலைவர் பொறுப்பு.
அடுத்து இயேசு பாவிகளை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதையும் இராயப்பரது செய்கை காண்பிக்கின்றது.
இப்பொழுது நாம் ஒரு உண்மையை உணர வேண்டும்.
ஒரு நோயாளி குணமடைவதற்கு அவன் செய்யவேண்டிய முதல் செயல் தனக்கு நோய் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்வது,
அதேபோல்தான் ஒரு பாவி பரிசுத்தனாக மாறுவதற்கு செய்யவேண்டிய முதல் செயல் தன்னை பாவி என்று ஏற்றுக் கொள்வதுதான்.
"ஆண்டவரே, பாவியேனை விட்டு அகலும்" என்ற இராயப்பரின் வார்த்தைகள் இயேசுவுக்கு மிகவும் பிடித்திருக்கும்.
ஏனெனில் பரிசுத்தத்தனம் இருக்கும் இடத்தில் பாவம் இருக்க முடியாது என்ற உண்மையை இராயப்பர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
"பாவியேனை விட்டு அகலும்"
என்ற வார்த்தைகளுக்கு
"அடியேனை பரிசுத்தமாக்கி ஏற்றுக்கொள்ளும்"
என்ற பொருளும் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.
ஆகவேதான் இராயப்பர்
"அகலும்" என்று சொன்னவுடனே இயேசு அகலவில்லை.
மாறாக சீமோனை நோக்கி,
"அஞ்சாதே, இன்று முதல் நீ மனிதர்களைப் பிடிப்பவன் ஆவாய்" என்றார்.
அவரும் தனது யாவற்றையும் துறந்து இயேசுவைப் பின்தொடர்ந்தார்.
இயேசுவை பின் தொடர்வதற்காக தனது படகுகளையும் கிடைத்த மீன்களையும் விட்டுவிட்டார்.
"இன்று முதல் நீ மனிதர்களைப் பிடிப்பவன் ஆவாய்"
என்று இயேசு இராயப்பரைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை
"நீ பாவி என்று ஏற்றுக் கொண்டதால் பரிசுத்தமாகிவிட்டாய்.
ஆகவே நீ என்னை விட்டு அகல வேண்டிய அவசியம் இல்லை.
என்னோடு வா.
நான் விண்ணிலிருந்து மண்ணுக்கு மனிதர்களை பிடிக்கவே வந்துள்ளேன்.
என் பணியை என்னோடு சேர்ந்து நீயும் செய்."
என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம்.
இராயப்பரது தாழ்ச்சிதான் அவரது
உயர்ந்த பொறுப்புக்கு அடித்தளம்.
பைபிளை வாசித்துவிட்டு,
பக்தியோடு அதற்கு ஒரு முத்தமும் கொடுத்து விட்டு
வைத்துவிடுவது நமது வேலை அல்ல.
வாசகம் நமது வாழ்க்கையாக வேண்டும்.
நாமும் நாம் பாவிகள் என்பதை முழுமனதோடு ஏற்றுக் கொள்வோம்.
பாவ சங்கீர்த்தனம் செய்து மன்னிப்பு பெற்று பரிசுத்தம் அடைவோம்.
நாம் நமது பாவங்களை ஏற்றுக்கொள்வதால் கிடைக்கும் பரிசுத்தத்தனம்தான் பரிசுத்தராகிய இயேசுவோடு நம்மை இணைக்கும்.
நமது பாவங்களை ஏற்றுக் கொள்ளும்போதுதான்
மன்னிப்பையும், அதைத் தரும் இயேசுவையும் ஏற்றுக்கொள்கிறோம்.
நாம் ஏற்றுக்கொள்ளும்போது இயேசுவும் நம்மை ஏற்றுக் கொள்கிறார்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment