Monday, September 6, 2021

"மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அவரிடம் குற்றம் காணும்படி, ஓய்வு நாளில் குணமாக்குவாரா என்று பார்த்துக் கொண்டே இருந்தனர்."(லூக்.6:7)

"மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அவரிடம் குற்றம் காணும்படி, ஓய்வு நாளில் குணமாக்குவாரா என்று பார்த்துக் கொண்டே இருந்தனர்."
(லூக்.6:7)

பல வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு நிகழ்வு.

ஒரு ஆள்.  எங்கள் ஊர்க்காரர்தான். ஆனால் ஒரு முறை கூட முன்பின் பார்த்து பேசி பழகாதவர்.

ஒரு நாள் நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவர் என்னை வழியில் கண்டு என் முன் வந்து நின்றார்.

", வணக்கம், சார்." புன்முறுவலோடு சொன்னார்.

நானும் புன்முறுவலோடு "வணக்கம்" சொன்னேன்.

"பள்ளிக்கூடத்திற்கு போகிறீர்களா?"

"ஆமா."

"சரி.போய்விட்டு வாருங்கள்."

ஒருநாளும் ஏறிட்டு பார்க்காத நபர் ஏன் வணக்கம் சொன்னார், ஏன் விசாரித்தார் என்பது எனக்கு புரியவில்லை.

அவரது இந்த விசாரிப்பு பல நாட்கள் தொடர்ந்தது, எனக்கு காரணம் புரியாமலே.

 ஒரு நாள் வணக்கம் சொல்லிவிட்டு சொன்னார்,

"ஒரு வீடு கட்டலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்."

" சந்தோசம்."

"உங்களது சாமியார் அது விஷயமாக இலவசமாக கோதுமை கொடுப்பதாக கேள்விப்பட்டேன்."

" ஆமா உங்களது விண்ணப்பத்தை சாமியாரிடம் கொடுங்கள். தகுதி இருந்தால் தருவார்."

"இது பற்றி சாமியாரிடம் சொல்கிறீர்களா?"

"இதற்கு சிபாரிசு தேவையில்லை.
சிபாரிசு செய்தால் தப்பாக நினைப்பார்கள்.  நீங்களே விண்ணப்பத்தை கொடுக்கலாம்."

இப்போதுதான் புரிந்தது முன்பின் பழக்கம் இல்லாதவர் திடீரென்று ஏன் வணக்கம் போட்டார் என்பதற்கான காரணம்.

வணக்கத்திற்கான காரணம் நட்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் அதன் நோக்கம் என்ன என்று போட்டவருக்கு தான் தெரியும்.

உள்ளொன்று வைத்துக்கொண்டு புறமொன்று தெரியும்படி நடிப்பவர்கள் வெளி வேடக்காரர்கள் எனப்படுகிறார்கள்.


இயேசு நற்செய்தி அறிவிக்கும் பொருட்டு எங்கு சென்றாலும் அவர் பின்னால் ஒரு பெரிய கூட்டம் செல்லும்.

அக்கூட்டத்தில் இரு வகை மக்கள் இருப்பார்கள்.

 பெரும்பான்மையோர் தங்களது  வியாதிகளுக்குக் குணம் கிடைக்கும் பொருட்டும், இயேசுவின் நற்செய்தியை கேட்கும் பொருட்டும் செல்லும் உண்மையான பக்தர்கள்.

இன்னொரு வகையினர் நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டிருந்த  பரிசேயர்களும். சதுசேயர்களும்.


இவர்கள் இயேசுவின் பின்னால் சென்றது 

அவரது நற்செய்தியை கேட்பதற்கு அல்ல.

 மாறாக அவரது பேச்சில் குறை கண்டுபிடிக்கவும், 

அவரை தீர்த்துக் கட்டுவதற்கு வழிவகைகளை தேடவும் மட்டுமே.

ஒரு ஓய்வு நாளில் செபக்கூடத்திற்குப் போய்ப் போதித்துக் கொண்டிருந்தார்.

வலது கை சூம்பிப்போன ஒருவன் அங்கு இருந்தான்.

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அவரிடம் குற்றம் காணும் 
உள்நோக்குடன் அங்கு வந்திருந்தார்கள்.

ஓய்வு நாளில்  சூம்பிப்போன கையோடு இருந்தவனைக்   குணமாக்குவாரா என்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.

அவர்கள் மோயீசனுடைய சட்டத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தவர்கள்.

அவர்களுடைய கருத்துப்படி ஓய்வுநாளில் குணமாக்குவது சட்டப்படி குற்றம்.

அவர்களது உள்நோக்கம் இயேசுவுக்கு தெரியும்.


அவர் சூம்பிய கையனை நோக்கி, "எழுந்து நடுவில் நில்" என்றார்.

 அவன் எழுந்து நின்றான்.

இயேசு அவர்களிடம், 

"உங்களை ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் எது செய்வது முறை?

 பிறருக்கு நன்மை செய்வதா, தீமை செய்வதா?

 உயிரைக் காப்பதா, அழிப்பதா?" என்று கேட்டார்.

அவர் எல்லாரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தபின், 

அவனை நோக்கி, "கையை நீட்டு" என்றார். 

அப்படியே செய்தான்: கை குணமாயிற்று.

தான் ஓய்வுநாளில் குணமாக்கியது அவர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணும் என்று அவருக்குத் தெரியும்.

அவர்  அன்பு செயல் செய்வதையும்,

 மக்களுக்கு நற்செய்தியை, அறிவிப்பதையும், 

நமக்கு பாடம் கற்பிப்பதையும்  மட்டுமே முக்கியமாகக் கருதினார்.

ஆகவேதான் பரிசேயர்கள் சட்டத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை பற்றி கவலைப்படாமல் 

ஒரு உயிரைக் காப்பாற்றும் அன்பு செயலை செய்தார்.

இது பரிசேயர்களுக்குக் 
 கோபவெறியை ஊட்டியது.

அவர்கள் இயேசுவை என்ன செய்யலாமென்று கலந்து பேசினார்கள்.


 ஓய்வுநாளில் செய்த இந்த புதுமை நமக்கு கற்பிக்கும் பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசு போதித்த இறையன்புக்குள் பிறர் அன்பும் அடங்கியிருக்கிறது.

இறை அன்பிலிருந்து பிறர் அன்பை பிரிக்க முடியாது.

நமது அயலான் நம்மைப்போலவே கடவுளின் பிள்ளை.

கடவுளை உண்மையிலேயே நேசிப்பவன் அவரது பிள்ளையையும் கட்டாயம் நேசிப்பான்.

இறைவனின் பிள்ளையை நேசிக்காதவன்  இறைவனை உண்மையான அன்போடு நேசிக்க முடியாது. 

தகப்பனை நேசித்து விட்டு அவரது மகனை நேசிக்காதவன் தகப்பனையும் மகனையும் பிரிக்கிறான்.

ஓய்வுநாளில் இறைவனுக்கு 

 செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அயலானுக்கு சேவை செய்யாவிட்டால்

 இறைவனுக்கு சேவை செய்கிறேன் என்று சொல்வது எப்படி உண்மையாகும்?

தகப்பனும் மகனும் அருகருகே இருக்கின்றார்கள். 

நாம் தின்பண்டம் வாங்கிக்கொண்டு போய் தகப்பனிடம் கொடுத்து,

"நீங்கள் மட்டும் சாப்பிடுங்கள் மகனுக்கு கொடுக்க வேண்டாம்"

என்று சொன்னால் தகப்பன் ஏற்றுக் கொள்வாரா?

இறைவனுடைய சட்டம் பிறரன்பு சேவையை தடுக்காது.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு செல்ல வேண்டும் என்பது சட்டம்.

 திருப்பலிக்கு புறப்பட்டு போய்க் கொண்டிருக்கும் போது வழியில் நமக்கு முன்பின் பழக்கமில்லாத ஒரு நபர் மயங்கி கிடக்கிறார்.

 அவருக்கு முதல் உதவி செய்தாலோ, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலோ திருப்பலிக்குப் போக முடியாது.

 இப்போது அவரை அப்படியே விட்டு விட்டு சட்டப்படி திருப்பலிக்கு போக வேண்டுமா?

 அல்லது 

"உனது அயலானை உன்னைப்போல் நேசி என்ற இயேசுவின் அறிவுரையின்படி

 திருப்பலிக்கு போகாமல் அவனுக்கு உதவி செய்ய வேண்டுமா? 

பிறரன்பு சேவைதான் சட்டத்தை விட முக்கியமானது.

 இப்படி சந்தர்ப்பத்தில் பூசைக்கு போவதைவிட அயலானுக்கு உதவி செய்வதே முக்கியம். 

அயலானுக்கு உதவி செய்யும்போது இயேசுவுக்கே உதவி செய்கிறோம்.

"ஓய்வு நாளில் எது செய்வது முறை?

 பிறருக்கு நன்மை செய்வதா, தீமை செய்வதா?

 உயிரைக் காப்பதா, அழிப்பதா?" என்று கேட்டார்."

என்ற இயேசுவின் கேள்வி நமக்கு  வழிகாட்டும்.

"நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
(அரு. 13:35)

நாம் பிறரோடு பழகும்போது அன்பு என்னும் நோக்கோடு பழகுவோம்'

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment