Thursday, September 23, 2021

1.இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்க.2.நோயாளிகளைக் குணமாக்க..(தொடர்ச்சி

1.இறையரசைப்பற்றிச்   செய்தியை அறிவிக்க.
2.நோயாளிகளைக் குணமாக்க..
(தொடர்ச்சி)

இயேசுவின் சீடர்களாகிய நமக்கு அவர் தந்துள்ள மிக முக்கியமான பணி,

"இறையரசைப்பற்றிச்   செய்தியை அறிவித்தல்."

சடப்பொருளால் (Matter) ஆகிய உடலும், ஆவிபொருளால்(Spirit) ஆகிய ஆன்மாவும் சேர்ந்தவன்தான் மனிதன்.

நாம் வாழும் உலகம் ஒரு சடப்பொருள். மனிதனைப் படைப்பதற்கு முன்பே இறைவன் உலகத்தைப் படைத்துவிட்டார்.

பிறகு உலகத்திலிருந்து நமது உடலை உண்டாக்கி,    ஆன்மாவை நேரடியாகவே படைத்து, உடலோடு சேர்த்து மனிதனைப் படைத்தார்.

மனிதனின் இவ்வுலக வாழ்வின் முடிவில் உடல் மண்ணுக்கே திரும்பிவிடும்.

ஆன்மா இறைவன் வாழும் விண்ணுலகிற்குச் சென்றுவிடும்.

நமது உடல் மண்ணக அரசைச் சேர்ந்தது,

 ஆன்மா விண்ணக  அரசைச் சேர்ந்தது.

மண்ணரசு நிலையற்றது.
விண்ணரசு நிலையானது.

மனித ஆன்மா நிலையாக விண்ணரசில் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டது.

விண்ணகத்தின் அரசர் இறைவன், ஆகவே அது இறையரசு எனப்படுகிறது.

நிலையற்ற இவ்வுலகில் நாம் வாழ்வதே நிலையான விண்ணரசில் வாழ்வதற்கு நம்மை நாமே தயாரித்துக் கொள்வதற்காகத்தான்.

இறைவன் மனுவுரு எடுத்ததே இறையரசை பற்றிய செய்தியை நமக்கு அறிவிக்கவும்,

 அங்கு செல்வதற்கான வாழ்க்கை நெறிமுறைகளை நமக்கு அறிவிக்கவும்தான்.

அவர் பாடுகள் பட்டு சிலுவையில் தன்னைத் தானே பலியாக்கியதும்,
நம்மை பாவத்திலிருந்து  விடுவித்து நம்மை பரிசுத்தர்களாக ஆக்குவதற்காகத்தான்.

ஏனனில் பரிசுத்தமான ஆன்மாக்கள்தான் விண்ணகம் செல்ல முடியும்.

இறையரசைப்பற்றிச்   செய்தியை உலகெங்கும் அறிவிக்கவே இயேசு அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.

இறையரசைப்பற்றிச்   செய்தியை உலகெங்கும் அறிவிக்கும் பொறுப்பு அவருடைய அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல,

அவருடைய சீடர்களாகிய நமக்கும் உண்டு.

இப்பொறுப்பு இயேசு நமக்குத் தந்த இரண்டாவது கட்டளையிலேயே அடங்கி இருக்கிறது.

நம்மை நாம் நேசிப்பது போலவே நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

நாம் நிலைவாழ்வு பெற நமக்கு ஆசை இருக்கிறது.

நாம் நம்மைப்போல் பிறரை நேசித்தால் மற்றவர்களும் நிலைவாழ்வு பெற நாம் ஆசைப்படுவோம்.

மற்றவர்கள் நிலைவாழ்வு பெற வேண்டுமென்றால், அவர்களுக்கும் இறையரசைப் பற்றிய செய்தி தெரிந்திருக்க வேண்டும்.

மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் அவர்களுக்கு இறையரசை பற்றிய செய்தியை தெரிவிக்க வேண்டும்.

எப்படி இந்த உலக அரசு நமது உடலை சார்ந்த அரசோ, 

அதேபோல இறையரசு நமது ஆன்மாவை சார்ந்த அரசு.


நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே நமது ஆன்மா நம்மிடம்தான் இருக்கிறது.

அப்படியானால் நமது ஆன்மாவை சார்ந்த அரசாகிய இறையரசு இப்போது நமக்குள்ளேயே இருக்கிறது.

"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" 
(லூக்.17:21)

அப்படியானால் இப்பொழுதே நாம் இறை அரசில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நமது அரசர் இறைவனே.

நாம் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவர்களே.

1.எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய்.

2. உன்னை நீ அன்பு செய்வது போல மற்றவர்களையும் அன்பு செய்.

இந்த இரண்டு கட்டளைகளும்தான் நாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டி கட்டளைகள்.

இவ்வுலகில் இந்த இரண்டு 
கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து  நடந்தால்தான் 

விண்ணகத்தில் நிலை வாழ்வுக்குள் நுழைய முடியும்.

அன்புக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து எப்படி வாழ்ந்தால் விண்ணகத்தில் இறை அரசுக்குள் நுழைய முடியும் என்பதைப் பற்றிய செய்திதான் ஒரே வார்த்தையில் "நற்செய்தி'' என்று அழைக்கப்படுகிறது.

ஆக உலகமெங்கும் நற்செய்தியை அறிவிப்பதுதான் நமது ஒரே பணி.

நற்செய்தியை நமது வாயினால் மட்டுமல்ல வாழ்க்கையாலும் அறிவிக்க வேண்டும்.

சுருக்கமாக சொல்வதானால்

 நாம் இயேசுவின் நற்செய்திப்படி வாழ வேண்டும்,

 மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்.


கிறிஸ்துவின்  சீடர்கள் என்ற முறையில் அடுத்து நமது முக்கியமான பொறுப்பு:

நோயாளிகளைக் குணமாக்குதல்.

நோய்களைக் குணமாக்குவதற்கும்,

 நோயாளிகளை குணமாக்குவதற்கும் என்ன வித்தியாசம்?

ஒருவனுக்கு ஏதோ ஒரு நோய் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

நோய்க்கு உரிய மருந்து கொடுத்தால் நோய் குணமாகிவிடும்.

 ஆனால் திரும்பவும் அந்த நோய் வராது என்பதற்கு உத்தரவாதமில்லை.

நோய் குணமாகி விட்டது. ஆனாலும் நோயாளி குணமாகவில்லை.

ஆனால் நோய் திரும்பவும் வராத அளவிற்கு அவனது உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடிய உணவு வகைகளைக்  கொடுக்கும்போது நோயாளியைக் குணமாக்குகிறோம்.

சத்துள்ள உணவு வகைகளை உண்டு உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கினால் திரும்பவும் அந்த நோய் வராது. 

மருந்து கொடுக்கும்போது நோய் குணமாகிறது.

 சத்துள்ள உணவு கொடுக்கும்போது நோயாளி குணம் ஆகிறான்.

ஆன்மாவிற்கு வரக்கூடிய நோய் பாவம்.

பாவசங்கீர்த்தனம் செய்யும் போது பாவம் என்ற நோய் குணமாகிறது.

ஆனால் அவன் திரும்பவும் பாவத்தில் விழாமலிருக்க வேண்டுமென்றால், அவனது ஆன்மா பாவத்திற்கு எதிராக திடப்படுத்தப்பட வேண்டும்.

செபம், தவம் போன்ற பக்தி முயற்சிகளும், உறுதிப் பூசுதல், திவ்ய நற்கருணை போன்ற திரு அருட்சாதனங்களும் ஆன்மாவை பாவத்திற்கு எதிராக திடப்படுத்தும்.

பாவசங்கீர்த்தனம் பாவம் என்ற நோயை குணப்படுத்தும்.

பக்தி முயற்சிகளும், மற்ற திரு அருட்சாதனங்களும் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியைக் கொடுக்கும்.

ஈடுபாட்டோடு  திருப்பலி காண்பதாலும், 

செபக் கூட்டங்களில் கலந்து கொள்வதாலும், 

பிறர் சிநேக முயற்சிகளில் ஈடுபடுவதாலும்,

துன்பங்களை ஆண்டவருக்காக பொறுமையாக சகித்துக் கொள்வதாலும்,

ஆன்மா திடமாக வளர்ச்சி அடைகிறது.

விபசாயி நிலத்தைப் பக்குவப் படுத்தினால் மட்டும் போதாது,

அதில் பயிர் செய்ய வேண்டும்.


அதேபோல்தான் பாவத்திலிருந்து விடுதலை பெற்றால் மட்டும் போதாது, ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டிருப்பவர்கள்  சாத்தானின் சோதனைகளை வெல்வார்கள், பாவத்தில் விழமாட்டார்கள். 

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் 

நாம் கிறிஸ்துவில் வளரவேண்டும்.

கிறிஸ்துவில் வளர்ந்தால்தான் அவரோடு நிலை வாழ்வு வாழ முடியும்.

நாம் மட்டும் கிறிஸ்துவில் வளர்ந்தால் போதாது,

 மற்றவர்களையும் வளர வைக்கவேண்டும். கிறிஸ்துவின் சீடர்கள் என்ற முறையில் இது நமது கடமை.

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம். மற்றவர்களையும் வாழ வைப்போம்.

எல்லோரும் நிலைவாழ்வில் இணைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment