Sunday, September 26, 2021

"உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு. இரண்டு கைகளோடு நரகத்திற்கு, அணையாத நெருப்பிற்குப் போவதைவிடக் கை ஊனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்." (மாற்கு9:43,44)

"உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு. இரண்டு கைகளோடு நரகத்திற்கு, அணையாத நெருப்பிற்குப் போவதைவிடக் கை ஊனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்." (மாற்கு9:43,44)

"என்னை விசுவசிக்கும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ,

 அவனுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்.

 உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு.

 இரண்டு கைகளோடு நரகத்திற்கு, அணையாத நெருப்பிற்குப் போவதைவிடக் 

கை ஊனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்."

பாவம் பற்றி நம் ஆண்டவரின் அறிவுரைகள்.

1. நாம் பாவம் செய்யக் கூடாது.

2.பிறர் பாவம் செய்ய நாம் காரணமாய் இருக்கக் கூடாது.

3.நம்மை பாவம் செய்ய 
தூண்டுவோருடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது.


1. நாம் இறையன்பு, பிறரன்பு சார்ந்த கட்டளைகளைக் கண்டிப்புடன் கடைப் பிடிக்க வேண்டும்.

உடன்பாடும், எதிர்மறையும் சேர்ந்து இருக்காது.

அன்பு சார்ந்த கட்டளைகளுடன் நாம் உடன்பாட்டுடன் இருந்தால் எதிர்மறையான பாவம் நம்மை எட்டிக் கூடப் பார்க்காது.

நாம் இறைவனின் அன்பு கட்டளைகளின்படி வாழ்ந்தால், நம்மை சார்ந்து வாழ்பவர்களும் நம்மைப் பின்பற்றிக் கட்டளைகளின்படியே வாழ்வார்கள்

கட்டளைகளின்படி வாழ்பவன் தனது வாழ்க்கை மூலம் மற்றவர்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கின்றான்.

வார்த்தையை விட வாழ்க்கைக்கு சக்தி அதிகம்.

இயேசு நற்செய்தியை வாழ்க்கை மூலமும், வார்த்தை மூலமும் அறிவித்தார்.

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர்"  என்ற நற்செய்தியைத் தனது ஏழ்மையான வாழ்க்கையின் மூலமும்  அறிவித்தார்.

சென்ற இடமெல்லாம் நோயாளிகளின் நோய்களை குணமாக்கும் மூலம் பிறரன்பு நற்செய்தியை அறிவித்தார்.

சிலுவையில் தொங்கும்போது தன்னை கொன்றவர்களை மன்னித்தன் மூலம்

' தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் "
 என்ற நற்செய்தியை அறிவித்தார்.

"உலகிற்கு ஒளி நீங்கள். மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது.

15 மேலும், விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்: மாறாக, வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்பொருட்டு, விளக்குத் தண்டின்மீது வைப்பார்கள்.

16 அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக." (மத்.5:14-16)

இந்த வார்த்தைகளின் மூலம் நமது நற்செயல்கள் நிறைந்த வாழ்வு மற்றவர்களுக்கு ஒளிபோல் பயன்படவேண்டும் என்று இயேசு கூறுகிறார்.

2.முன்மாதிரியான வாழ்க்கையை பாராட்டும் இயேசு,

மற்றவர்களுக்கு இடறலாக வாழ்பவர்களை கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறார்.


"என்னை விசுவசிக்கும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ,

 அவனுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்."

பிறருக்கு துர்மாதிரிகையாய் வாழ்பவன் வாழத் தகுதி அற்றவன்.

சில பெற்றோர் தங்களது பிள்ளைகளது நடத்தையைப் பற்றி குறை கூறுவதை கேட்டிருக்கிறோம்.

அவர்கள் முதலில் தங்களது நடத்தையைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

 பிள்ளைகளது வேண்டாத நடத்தைக்கு அவர்கள்தான் காரணம் என்பது புரியும்.

 தங்களிடையே ஒற்றுமை இல்லாது சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு சமாதானமான பிள்ளைகள் பிறக்காது.

பெற்றோரை போல்தான் பிள்ளைகள் இருக்கும்.

பிள்ளைகள் கெட காரணமாய் இருக்கும் பெற்றவர்களை  

அவர்களுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளினாலும் தகும்!

3.மற்றவர்களுக்கு இடறலாக வாழ்பவர்களை கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பது போலவே

.
தங்களுக்கு  இடறலாக இருப்பவர்களோடு தொடர்பில் இருப்பதையும் இயேசு கண்டிக்கிறார்.

சிலர் தாங்கள் பாவம் செய்ய தூண்டுபவர்களைத் தங்களது நெருங்கிய நண்பர்களாக வைத்திருப்பார்கள்.

"உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு."

என்று இயேசு கூறுகிறார்.

நாம் பாவம் செய்ய தூண்டுபவர்களோடு உள்ள தொடர்பைத் துண்டித்துக் கொண்டால்தான் நாம் பாவத்தில் இருந்து தப்பிக்க முடியும்.


குடிகாரர்களோடு சேர்ந்து குடிப்பவன் அவர்களோடு சேராமல் இருந்தால்தான் குடியிலிருந்து தப்பிக்க முடியும்.

பாவம் செய்யத் தூண்டுபவன் நண்பன் மட்டுமல்ல,

  சந்தர்ப்பம், பொருட்கள், இட ங்கள், சூழ்நிலைகள் ஆகியவையும் நாம் பாவத்தில் விழக் காரணமாக இருக்கலாம்.
அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும். 

சிலருக்கு சினிமா தியேட்டர்களில் பாவம் காத்துக்கொண்டிருக்கும்.

 பொழுது போக்கிற்காக சினிமா பார்க்க செல்வார்கள். 

ஆனால் சினிமா தயாரிப்பாளர்களும், திரையிடுபவர்களும்  வியாபாரத்திற்காக செயல்படுபவர்கள்.

கீழ்த்தர ரசனைக்காக தயாரிக்கப்பட்ட படங்கள்  திரையிடப்பட்டால் வியாபாரிகளுக்கு பணம் பிரியும்.

பார்ப்பவர்கள் மனதில் பாவம் குவியும்.

Cell phoneபோன்ற சமூக தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவோர் கவனமாக இல்லாவிட்டால் பாவக் கடலில் மூழ்க நேரிடும்.

"எனது சூழ்நிலை என்னை கெடுத்து விட்டது" என்று சூழ்நிலை மீது பழியை போடுபவர்கள்

அதிலிருந்து நல்ல சூழ்நிலைக்கு மாறிக் கொள்ள வேண்டும்.

பிறருக்குத் துர்மாதிரிகையாய்  இருக்கக்கூடாது.

துர்மாதிரிகையாய் இருப்பவர்களிடம் சேரக்கூடாது.

கட்டளைகளைக் கடைப்பிடித்து நல்லவர்களாய் வாழ்வோம்.

 மற்றவர்களையும் நல்லவர்களாய் வாழவைப்போம்.

எல்லோரும் விண்ணரசை நோக்கி பயணிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment