Monday, September 27, 2021

"இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" (லூக்.9:58 )

"இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" (லூக்.9:58 )

இயேசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட ஒருவன் அவரிடம் வந்து,

"நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்வேன்" என்றான்.

அப்போஸ்தலர்கள் எப்போதும் அவரோடு இருப்பதைப் பார்த்திருப்பான்.

அவனுக்கும் அதைப்போல் இருக்க ஆசை வந்திருக்கும்.

இயேசு அவனுடைய ஆசையை ஏற்றுக் கொள்ளவில்லை.

எப்போதும் அவரோடு இருப்பது எவ்வளவு கடினம் என்பதை அவனுக்குப் புரியவைப்பதற்காக இயேசு 

"நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை"  என்றார்


இந்த உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து ஆள்பவர் அவரே.

 அனைத்தும் அவருக்கே சொந்தம்.

 ஆயினும் முழுநேரமாக இறைப்பணி ஆற்ற அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக அவரே வாழ்ந்து காண்பித்தார்.

நாசரேத்தூரில் சூசையப்பருக்கும், மரியாளுக்கும் சொந்தமாக வீடு இருந்தும்,

தான் பிறப்பதற்கு பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவைத் தேர்ந்தெடுத்தார்.

பொதுவாழ்க்கைக்கு வந்த பின் நற்செய்தி அறிவிப்பதற்காக பயணித்துக் கொண்டேயிருந்தார்.

தங்குவதற்கு சொந்தமாக ஒரு இடம் கூட இல்லை.

பகலில் நற்செய்தி அறிவித்துவிட்டு இரவில் தனிமையில் செபித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய சீடர்களும் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின் தொடர்ந்தனர்.

முழுநேர நற்செய்திப் பணியாளர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இயேசுவும் அவரைப் பின்பற்றிய சீடர்களும் முன்னுதாரணம்.

இறை ஊழியத்திற்கென்றே தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு

இவ்வுலகப் பொருட்கள் மீது கொஞ்சம் கூட பற்று இருக்கக் கூடாது.

இறைவனை முழுமையாக சொந்தம் ஆக்கிக் கொண்டவர்களுக்கு

இறைவனைத் தவிர எந்த பொருள் மீதும் சிறிதுகூட பற்று இருக்காது.

இப்போது கேட்கலாம்:

ஞானஸ்நானம் பெற்ற எல்லோருமே இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டவர்கள் தானே,

எந்த விதத்தில் அர்ப்பண ஊழியர்கள் சாதாரண விசுவாசிகளிடமிருந்து வித்தியாசமானவர்கள்?

உண்மைதான், 
எல்லோருமே இறைவனை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும்.

இருதயத்தை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்த பிற்பாடு மற்ற யாருக்கும், எதற்கும் அதில் இடமில்லை.

இதுவும் எல்லோருக்கும் பொதுவானதுதான்.

ஒரு சிறிய ஒப்புமை:

இரண்டு பேருக்குக் காய்ச்சல் இருக்கிறது.

ஒருவனுக்கு 99 degree F.
அடுத்தவனுக்கு 101degree F.

இருவருக்கும் காய்ச்சல்தான். ஆனால் அளவில் வித்தியாசம் இருக்கிறது.

அதேபோல் எல்லோருமே தங்கள் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

ஆனால் பொது நிலையினரின் அர்ப்பண அளவை விட

அழைக்கப்பட்டோரின்  அர்ப்பணத்தின் அளவு அதிகமானதாக இருக்கும்.

அழைக்கப்பட்டவர்களில் கூட

 அன்னை மரியாள் அருள் நிறைந்தவள்.

 மற்ற புனிதர்கள் அருள் மிகுந்தவர்கள்தான்.

 மிகுதி அளவிலும் ஆளுக்கு ஆள் வித்தியாசம் இருக்கும்.

இறைவன் தம்மை முழுமையாக நேசிப்பதற்காக நம்மைப் படைத்து  இந்த உலகத்தில் விட்டிருக்கிறார்.

இறைவனைத்தான் முழுமையாக நேசிக்க வேண்டும். இந்த உலகத்தை அல்ல.

ஆனாலும், நாம் இந்த உலகத்தைப் பயன்படுத்த வேண்டும், நமது திருப்திக்காக அல்ல, இறைவனது மகிமைக்காக.

நாம் இந்த உலகில் வாழ்வது இதன் மீது உள்ள பற்றினால் அல்ல. இறைவனது மகிமைக்காக.

இறைவன்மீது இருக்கவேண்டிய பற்று நூறு சதவீதம் என்றால்,

உலகின் மீது இருக்கவேண்டிய பற்று 0 சதவீதம்.

முழுநேர இறை ஊழியன் முழுக்க
முழுக்க இறைவன்மீது மட்டுமே பற்று கொண்டுருக்க வேண்டும்.

 'உலக பொருட்களின் மீது பற்று இல்லாமல் அவற்றை ஆண்டவருக்காக பயன்படுத்த வேண்டும்.

வங்கி ஊழியருக்கு வங்கி பணத்தின் மீது பற்று இருக்கலாமா?

அது போல. 

உலகத்தை இறை ஊழியத்திற்காகப்  பயன்படுத்த வேண்டும், தான் அனுபவிப்பதற்காக அல்ல.

ஆனாலும் மனிதன் குறைவுள்ளவன்.

குறைவுடைமை (Imperfection) காரணமாக ஆளுக்கு ஆள் பற்று சதவீத அளவு மாறுகிறது.

உலகத்தின் மீது உள்ள பற்றின் சதவீத அளவு கூடக் கூட இறைவன்மீது உள்ள பற்றின் சதவீத அளவு குறைந்து கொண்டே வரும்.

உலகத்தின் மீது முழுமையான பற்று உள்ளவன் இறைவனை முற்றிலும் மறந்து விடுவான்.

இறைவன்மீது முழுமையான பற்று உள்ளவன் உலகத்தைப் பற்றி சிறிதுகூட கவலைப் பட மாட்டான்.
 
முழுமையான அர்ப்பண உணர்வு உள்ளவன் தன்னிடம் உள்ள உலகப் பொருள்கள் அனைத்தும் கைவிட்டு போனாலும் கவலைப்பட மாட்டான்.

இறைவனது மகிமைக்காக பயன்படுத்தவே அந்த பொருட்களை அவன் வைத்திருந்தாலும் 

இறைவன் அவற்றை முழுமையாக அவனிடமிருந்து அப்புறப்படுத்தி விட்டால் 

அந்த இழப்பையும் இறைவனுடைய  மகிமைக்காக ஏற்றுக் கொள்வான்.

தன்னை முழுவதும் இறை பணிக்காக அர்ப்பணித்தவனுக்கு இத்தகைய மனப்பக்குவம் இருக்கும்.

இயேசுவின் நற்செய்தியை கேட்டு அநேகர்  அவருடைய சீடர்களாக இருந்தாலும் 12  பேரைத்தான் முழுநேர ஊழியர்களாக தேர்ந்தெடுத்தார்.


ஒருவன் அவனாக வந்து

"நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்வேன்"

என்று சொன்னபோதும் இயேசு அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை"

என்று கூறி தன்னுடன் வந்தால் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை விளங்க வைத்தார்.

 தனக்காக கஷ்டங்களை அனுபவிக்க முடிந்தவர்களைத்தான் அவரது பணிக்கு அழைக்கிறார்.

அழைக்கப்பட்டவர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்காகவே செலவழிக்கிறார்கள்.

 அவருடைய அழைப்பை ஏற்று வசதியாக வாழ்க்கையை விட்டு வந்தவர்கள் அவருக்காக வசதிகள் அற்ற, இன்னல்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

அவர்களது அர்ப்பண வாழ்வின் நோக்கம்வெற்றிபெற இறைவனை வேண்டுவோம்.

வாழ்க குருத்துவம்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment