Saturday, September 18, 2021

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்." (லூக்.8: 8)

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்." (லூக்.8: 8)

விதை விதைப்பவன் உவமையின் இறுதியில் ஆண்டவர் கூறிய வார்த்தைகள்,

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்." 

இலக்கிய நயம் மிகுந்த வார்த்தைகள்.

விதைப்பவன் உவமை மூலம் ஆண்டவர் நமக்கு சொல்லும் நற்செய்தியின் வழியே நோக்கினால் இவ்வரிகளில் உள்ள இலக்கிய நயம் நமக்கு புரியும்.

உவமையில் நான்கு வகை நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன.

1.வழியோரம். 
2. பாறை.
3முட்செடிகளின் நடுவே.
4 நன்னிலம்.

இவற்றில் 'வழியோரம்' தன்மீது விதை விழும் என்று எதிர்பார்க்கவே இல்லை. 

காரணம் வழி நடப்பதற்கு உரியது.

ஆகவே விதையைப் பற்றிய அக்கறை அதுக்கு கொஞ்சம் கூட இல்லை. 

ஆகவேதான் அவை நடப்பவர்களால் மிதிபட்டு வானத்துப் பறவைகளால் தின்னப்பட்டன.

2. பாறையும் விதையை எதிர்பார்த்திருக்காது.

பாறையில் முளைத்த விதையால் வேர் ஊன்ற முடியாது.

பாறையில் முளைத்த விதையால் யாருக்கும் பயனில்லை. 

3.முட்செடிகளின் நடுவே உள்ள நிலம் விதை முளைப்பதற்கு ஏற்றதுதான். முட்செடிகளின் நடுவே முளைத்து வளர முடியாது.

4. நன்னிலம் விதைப்பதற்கென்றே பக்குவப்படுத்தப் பட்டிருப்பதால் முளைத்து, வளர்ந்து பலன் தரும்.

இயேசு கூட்டத்தில் நற்செய்தி விதையை விதைக்கிறார்.

கூட்டத்தில் நான்கு வகையான மக்கள் இருக்கலாம்.

முதல் வகையினர் நற்செய்தி கேட்பதற்கு என்று வந்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே வேறு வேலைக்காக அங்கு வந்திருப்பார்கள். அவர்கள்  காதில் நற்செய்தி விழுந்தும் பயனில்லை.

இரண்டாவது வகையினரும் நற்செய்தி கேட்கும் நோக்கோடு வந்திருக்க மாட்டார்கள். வந்த இடத்தில் கூட்டத்தில் மாட்டிக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் மனதில் நற்செய்தி வேரூன்றாது.

மூன்றாவது வகையினர் 
 நற்செய்தி கேட்க வந்திருப்பார்கள் ஆனால் பலவித கவலைகளுடன்.

கவலைகளுக்கு மத்தியில் நற்செய்தியால்  வளர முடியாது.

கவலைகள் நற்செய்தியை அமுக்கி விடும்.

நான்காவது வகையினர் வாழ்வதற்காக நற்செய்தியை கேட்பதற்கென்றே இயேசுவை தேடி வந்தவர்கள்.

இவர்களே கேட்க செவி உள்ளவர்கள். நற்செய்தியைக் கேட்பதற்கென்றே செவி உள்ளவர்கள்.

இவர்கள் கேட்கும் நற்செய்தி அவர்கள் வாழ்வில் நூறு மடங்கு பலன் கொடுக்கும். 

ஏனெனில் அவர்களுக்கு நற்செய்தியை கேட்பதற்கென்றே  செவியும் வாழ்வதற்கு வாழ்க்கையும்  இருக்கிறது.

இவர்களைத்தான் ஆண்டவர்,

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்." என்றார்.

ஒரு மூன்றாவது வகுப்பு மாணவி தேர்வில் 

"நமது காதுகள் எதற்கு பயன்படுகின்றன?"

என்ற கேள்விக்கு,

"கம்மல் போட!" என்று எழுதியிருந்தாள்.

காது கம்மல் போட, 
மூக்கு மூக்குத்தி போட, 
தலை பூ வைக்க, 
கால் செருப்பு போட 

என்ற பாணியில் சிந்திப்பவர்களுக்கு நற்செய்தி எப்படி பலன் தரும்!

காது நற்செய்தியை கேட்க,
 தலை இறைவனை வணங்க, கைகள் கடவுளே கும்பிட,
 கால்கள் கோவிலுக்கு போக,
 வாய் இறை புகழ்பாட 

என்ற பாணியில் சிந்திப்பவர்களுக்கு தான் நற்செய்தி பலன் கொடுக்கும்.

அவர்கள்தான் இறைவனுக்காக வாழும் ஆன்மீகவாதிகள்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் போது வாசகங்களும்,

 குருவானவர்  பிரசங்கத்தில் கொடுக்கும் வாசக விளக்கமும் 

யாருடைய வாழ்வில் பலன் கொடுக்கும்?

1 பூசைக்கு வந்திருப்பவர்களுள் ஒரு வகையினர் திருப்பலி மேல்   உள்ள பற்றினால் வந்திருக்க மாட்டார்கள்.

வாசிக்கப்படும் நற்செய்தியை பற்றி கவலைப்படவே மாட்டார்கள்.

2.இன்னொரு வகையினர் கடமைக்காக  வந்தவர்கள். 

நற்செய்தி இது காதில் விழும் ஆனால் பயன் இருக்காது. அவர்கள் உள்ளம் பாறையை போன்றது.


3 இன்னொரு வகையினர்
பூசை  சீக்கிரம் முடிந்து விடுமா,
 சாமியார் பிரசங்கத்தை நீட்டி விடுவாரா, 
பூசை முடிந்தவுடன் கசாப்புக் கடைக்கு போக வேண்டுமே, 
நல்ல கறி முழுவதும் விற்பனையாகும் முன்னே போக முடியுமா? 

என்ற கவலைகளுடன் பூசைக்கு வருபவர்கள். அவர்கள் காதில் விழுந்த நற்செய்தியை கவலைகள் அமுக்கி விடும் 

வாழ்வில் ஆன்மீகத்தை விட அதிகமாக உலகக் கவலைகளில் உழல்பவன் நற்செய்தியை கேட்டாலும் 

அது பலன் தராதபடி உலக கவலைகள் அதை அமுக்கி விடும்.

உலகத்தைப் பற்றி கவலைப்படாதவன்தான் ஆன்மீகத்தில் வளர முடியும்.

உலகக் கவலைகள் எதுவும் இல்லாமல்

நற்செய்தியை கேட்பதற்கென்றே காதுகளுடன் வருபவனுக்கு மட்டுமே நற்செய்தி வாசகமும், விளக்கமும் பலன் கொடுக்கும்.

நற்செய்தி வாசகங்களையும், சாமியாரின் பிரசங்கத்தையும் கேட்கச் செவியுள்ளவன் மட்டுமே கேட்டு பலன் பெறுவான்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அன்றய வாசகங்களை சாமியார் விளக்குகிறார்.அதை ஆர்வமுடன் கேட்பவர்கள் மனதில் விளக்கம் பதிந்து பலன் தரும்.

மற்ற நாட்களில்?

1.சிலர் வீட்டில் பைபிளே இருக்காது.

சிலர் வீட்டில் பைபிள் இருக்கும்.
புதுசாகவே இருக்கும். அவர்கள் விரலே பட்டிருக்காது.

2. கடமைக்காக  வாசித்துவிட்டு பைபிளை மூடும்போது வாசித்ததை மறந்து விடுவார்கள்.

அந்த வாசகம் அவர்களது வாழ்க்கையை தொடாது.

3. வாசிப்பதற்கு இஷ்டம் போல் பொருள் கொடுத்து, அதை வாதத்திற்கு  மட்டுமே பயன்படுத்துவார்கள்.

அவர்களது வாசிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது.

ஆன்மீக காரியங்களை  விட உலக கவலைகளை தீர்ப்பதில்தான் அதிக அக்கறை காட்டுவார்கள். 

 நற்செய்தி ஆன்மீக வாழ்வுக்கு மட்டுமே பயன்படும். உலக வாழ்வுக்கு அல்ல.

4. நற்செய்தியில் ஆர்வமுள்ளவர்கள் அதை வாசித்து விளக்கத்தை தேடி பெறுவார்கள்.

வாசித்ததை வாழ்வார்கள்.


ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் கத்தோலிக்க திருச்சபையின்  நாள் குறிப்பின்படி நற்செய்தியை வாசித்து,

வாசித்த நற்செய்தியை நமது
.நமது வாழ்க்கையாக மாற்ற வேண்டும்.

அன்றன்றய நற்செய்தியை கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

கேட்டபடி வாழட்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment