Thursday, September 9, 2021

" கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு. உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே."(லூக்.6:29)

" கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு. உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே."
(லூக்.6:29)

உலகியல் வழக்கப்படி யாராவது ஒருவர் நமக்கு  தீங்கு இழைத்தால்,
அவர் மீது நாம் சட்டப்படியே நடவடிக்கை எடுக்கலாம்.

அவருக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுக்கலாம்.

உலகம் அதை தவறு என்று சொல்லாது.

ஆனால் இறைவனது இயல்பு நேர் எதிரானது.

இயேசு சொல்கிறார்:

"ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு. 

உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே.

 உன்னிடம் கேட்பவன் எவனுக்கும் கொடு. உன் உடைமைகளைப் பறிப்பவனிடமிருந்து திருப்பிக் கேட்காதே."

தீமைக்கு நன்மை என்ற ஆன்மீக ஒழுங்கின் அடிப்படையில் ஒருவர் நமக்கு ஏதாவது ஒரு தீங்கு செய்தால் எந்த வகையிலாவது அவருக்கு ஒரு நன்மை செய்துவிட வேண்டும்.

ஒருவர் நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால் பதிலுக்கு பதில் அவர் கன்னத்தில் ஒரு அறை கொடுப்பது உலகியல்.

அறை கொடுப்பதற்கு பதில், அடிப்பதற்காக மறு கன்னத்தையும் அவருக்கு காட்டினால்,

அவரை பதிலுக்கு அறையாதது அவருக்கு நாம் செய்யும் நன்மை. 

உலகியல் ரீதியாக இயேசுவின் இந்த அறிவுரைகள் ஏற்கப்படுவதற்கு  கடினமானவை.

ஆனால் கிறிஸ்துவின் நோக்கிலிருந்து  இவைதான் நம்மை விண்ணகம் நோக்கி அழைத்துச் செல்லும் வழி காட்டிகள்.

இயேசு இவற்றை வெறுமனே சொல்லிவிட்டு போய்விடவில்லை.

 அவரே சாதித்துக் காட்டினார்.

வியாழக்கிழமை இரவில்
அவரைப் பிடிக்க வந்திருந்தவர்கள்

 அவரைப் பிடித்து, தலைமைக்குருவின் இல்லத்திற்குக் கூட்டிச்சென்றபோது

மறுக்காமல்,

பலியிட படப்போகும் ஆட்டுக்குட்டிபோல் அவர்களுடன் அமைதியாக சென்றார்.

அவரைப்  பழித்துப்பேசிய போது
அவர்களை எதிர்த்துப் பேசவில்லை

   அவரைச்   சாட்டையால் அடிக்கும்போதும்,        காறி உமிழ்ந்தபோதும்   பதிலுக்கு  பதில்    செய்யவில்லை.

அவர் மேல் சிலுவையை ஏற்றும் போதும், அவரை சிலுவையில் அறைந்த போதும் தடுக்கவே இல்லை.

அவர்கள் கொடுத்த துன்பங்களை
 எல்லாம் ஏற்றுக் கொண்டதும் அல்லாமல்   அவர்களை மன்னிக்கும்படி பரம தந்தையிடம் வேண்டினார்.

அவர்கள் கொடுத்த துன்பங்களுக்கு அவர் பதிலாகக் கொடுத்தது மன்னிப்பு.

இவ்வகையில் நமது ஆன்மீகப் பணியில் ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும் காட்டும்போது 

முதலில் நாம் அவனை மன்னிக்கிறோம்.

பழிக்குப் பழி வாங்காமல் நாம் அளிக்கும் மன்னிப்பு நிச்சயமாக அவனது மனதில் மாற்றத்தை கொண்டு வரும்.

இந்த மனமாற்றம் அவரது ஆன்மீக இரட்சிப்புக்குக் காரணமாக இருக்கும், 

ஆக தீமை செய்தோருக்கு நாம் நன்மை செய்வதன் ஆன்மிக நோக்கமே

 அவர்கள் மனம் திரும்பி இரட்சிப்பின் பாதைக்கு வரவேண்டும் என்பதுதான். .

அவர்களுக்கு நாம் அளிக்கும் மனப்பூர்வமாக மன்னிப்பும், நாம் செய்யும் நற்செயலும் அவர்களை நல்வழிக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன.

இறைமகன் இயேசு உலகிற்கு வந்ததே ஆன்மாக்களின் இரட்சண்யத்துக்காகத்தான்.

தீர்ப்பு இடுவதற்காக அல்ல.

வழி தவறிப் போன ஆன்மாக்களை மீட்பதற்காக நாம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் அறிவுறுத்தியிருக்கிறார்.


ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு  மறு கன்னத்தையும் காட்டினால் நிச்சயமாக அவன் அறைய மாட்டான். 

நம் வழிக்கு வந்து விடுவான்.

அப்படியே அறைந்தாலும் அதற்காக மனம் வருந்துவான்.

செய்த தப்புக்காக மனம் வருந்துவது இரட்சிப்பு அடைவதற்கான அறிகுறி.

நமது மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் சேர்த்துக் கொடுத்தால் நமது தாராளகுணமே அவனை நம் பக்கம் இழுக்கும்.


நம்மிடம் கேட்பவர்களுக்கெல்லாம் தாராளமாகச் கொடுத்தால் நமது தாராள குணமே அவர்களை மனம்திருப்பும்.

அனைவரையும் மீட்பின் பாதைக்கு அழைத்துவர உதவும்படியாக வாழ இயேசு அளித்துள்ள அறிவுரைகள்படி நடப்போம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment