Tuesday, September 14, 2021

கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."(அரு. 3:17)

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
(அரு. 3:17)

உலக அரசின் நீதியும் இறையரசின் நீதியும் எதிரெதிராக செயல்படுபவை.

உலக அரசில் நீதிமன்றங்கள் குற்றவாளியை விசாரித்து தீர்ப்பு அளிக்கின்றன,

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை.

இல்லையென்றால் விடுதலை.

இறையரசில்,  இறைவன் அளவற்ற நீதியும்,  அன்பும் உள்ளவர்.

இறைவனது அளவற்ற அன்பும், நீதியும் இணைந்தே செயல்படுகின்றன.

நீதிப்படி பாவம் செய்த மனிதன்  மன்னிப்பு பெற வேண்டும் என்றால் பாவத்திற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

அளவற்ற அன்பு நிறைந்த 
தந்தையாகிய இறைவன் தனது ஒரே மகனை மனிதன் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய உலகிற்கு அனுப்பினார்.

மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரித்து நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

அதனால் தான் நமது பாவங்களுக்கு மன்னிப்பு சாத்தியமாயிற்று.

ஒரே வாக்கியத்தில்,

 இறைமகன் இயேசு தனது சிலுவை மரணத்தால் நமக்கு பாவத்திலிருந்து மீட்புப் பெற்றுத்தந்தார்.

ஆகவேதான் இறைவாக்கு சொல்கிறது 

தந்தை தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பியது பாவிக்கு தீர்ப்பளிக்க அல்ல, அவனை பாவத்திலிருந்து மீட்க.


இயேசு சிலுவையில் மரிக்கும் வரை அது உலகில் தண்டனையின் சின்னமாக இருந்தது,

 ஏனெனில் பெரிய குற்றவாளிகளை சிலுவையில் அறைந்துதான் கொன்றார்கள்.

இயேசு தண்டனையின் சின்னமாக இருந்த சிலுவையை மீட்பின் சின்னமாக மாற்றிவிட்டார். 

அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவையை சந்தோஷத்தின்  சின்னமாக மாற்றிவிட்டார். 

தண்டனை பயத்துக்கு காரணமாக 
இருந்த சிலுவையை நித்திய பேரின்ப மகிழ்ச்சிக்கு காரணமான கருவியாக மாற்றிவிட்டார்.

இயேசுவின் கைபட்டால் கெட்டவை யாவும்  நல்லவையாக மாறும் என்பதற்கு சிலுவையே சான்று.

யூதர்கள் இயேசுவைக் கொலை செய்தது பாவம், ஆனால் அதையே மீட்பின் காரணமாக மாற்றியவர் இயேசு.

எவ்வளவு பெரிய தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க இயேசுவால் முடியும்.

நமது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த சாத்தானையே, 

நமது மீட்புக்கு இயேசு பயன்படுத்திக் கொண்டார் என்றால் நம்ப முடிகிறதா?

நம்பித்தான் ஆகவேண்டும்.

இயேசுவின் சிலுவை மரணத்தால் தான் நமக்கு மீட்பு கிடைத்தது.

இயேசுவை சிலுவையில் அறைய யூதர்களை தூண்டிவிட்டவனும்,

 இயேசுவை அவர்களுக்கு காட்டிக்கொடுக்க யூதாசை தூண்டிவிட்டவனும் சாத்தான்தானே!

எந்த சிலுவையில் இயேசுவை அறைய சாத்தான் தூண்டி விட்டானோ அதே சிலுவையைக் கண்டு இன்று அவன் பயந்து   நடுங்குகிறான்!

சாத்தானின் சோதனைகளிலிருந்து நமக்கு பாதுகாவலாய்  இருப்பது சிலுவை தானே!

பாவம் நம்மை நெருங்காமல் இருக்க வேண்டுமா?

ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு வேலையையும் சிலுவை அடையாளத்தோடு ஆரம்பிப்போம்.

நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு அடையாளமாக இருப்பது சிலுவை தானே.

சிலுவையைப் பார்க்கும்போதும்,

 நினைக்கும்போதும் 

 இயேசுவும், அவர் பட்ட பாடுகளும், சிலுவை மரணமும் நமது ஞாபகத்திற்கு வர வேண்டும். அந்த ஞாபகமே நாம் பாவத்தில் விழாதபடி நம்மைக் காப்பாற்றும்.

நமக்கு அன்றாட உணவைத் தந்து காப்பாற்றும் இயேசுவுக்கு நன்றியாக சாப்பிடும் முன்னும், சாப்பிட்ட பிறகும், சாப்பாட்டின் மேலும் சிலுவை அடையாளம் வரைவோம்.

 சிலுவை அடையாளம் வரைந்து தான் நமக்கு ஞானஸ்நானம் கொடுத்து குருவானவர் நம்மை கிறிஸ்தவர்களாக ஏற்றுக்கொண்டார்.

ஒவ்வொரு தேவ திரவிய அனுமானத்திலும் சிலுவை அடையாளம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிலுவை  அடையாளத்தால்தான் நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. 

ஒவ்வொரு வினாடியும் கிறிஸ்தவர்களையும் சிலுவையையும் பிரிக்க முடியாது.

கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்று அதிலேயே மரணம் அடைந்தது போல 

ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிலுவையை இயேசுவுக்காக பொறுமையோடு சுமக்க வேண்டும். 

தனது சிலுவையை சுமக்க மனம் இல்லாதவன் இயேசுவின் சீடனாக இருக்க முடியாது.

நமது வாழ்வில் நமக்கு ஏற்படும் துன்பங்களையும், கஷ்டங்களையும்தான் நாம் சிலுவை என்று அழைக்கிறோம்.

இயேசு சுமந்த சிலுவை அவரது மகிமையாக மாறியது போல,

இயேசுவுக்காக நாம் சுமக்கும் சிலுவையும் நமது விண்ணக மகிமையாக மாறும்.

உலகில் நாம் சுமக்கும் சிலுவை நமது மரணத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

ஆனால் அதன் காரணமாக நமக்கு கிடைக்கும் விண்ணக மகிமை முடிவின்றி என்றென்றும் நம்மோடு இருக்கும்.

உலக வாழ்வின் போது இறைவன் நமக்கு தரும்  சிலுவையை இறைவனுக்காக சுமப்போம்.

நிலைவாழ்வு பெற்று மகிழ்வோம்.

சிலுவையே நமது செல்வம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment