Tuesday, September 28, 2021

"செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்."(லூக்.10:3)

"செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்."
(லூக்.10:3)

72 சீடர்களை நற்செய்தி அறிவிக்க  அனுப்பும்போது இயேசு கூறிய வாழ்த்துச் செய்தி:

"செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்."
(லூக்.10:3)

உலகத்தினர் யாரையாவது எந்த  பணிக்காவது அனுப்பினால்,

"செல்க, வென்று வருக" 

என்று சொல்லி வாழ்த்துவார்கள்.

ஆனால் கிறிஸ்து ,

" செல்க, ஓநாய்களால்  பலியாகுக" என்று வாழ்த்தியிருக்கிறார்.

ஓநாய்களுக்கு ஆட்டுக்குட்டிகளின் உடலை மட்டுமே சாப்பிட முடியும், ஆன்மாவை ஒன்றும் செய்யமுடியாது என்று இயேசுவுக்குத் தெரியும்.


தந்தை இறைவன் கூட மகனை உலகிற்கு அனுப்பும்போது,

"செம்மறியே, செல்க. சிலுவையில் பலியாகுக !"

என்று சொல்லிதான்  வாழ்த்தியிருப்பார்!

ஏனெனில் இயேசுவைப் பொறுத்த மட்டல் சிலுவை மரணம் தான் அவர் அடைய ஆசைப்பட்ட, அடைந்த வெற்றி.

ஒரு தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.

"பிறப்பு, இறப்பு, இரண்டில் எது மகிழ்ச்சி தரும் வார்த்தை?"

வரிசையாக மாணவர்கள் 'பிறப்பு'
என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

 ஒரு மாணவன் மட்டும் 'இறப்பு' என்றான்.

 ஆசிரியர், "எப்படி? என்று கேட்டார்.

 " பிறப்பு உயிர்மெய்யில் (ப் + இ) ஆரம்பிக்கிறது.

இறப்பு உயிரில் ஆரம்பிக்கிறது.

இறக்கும்போது மெய்யை விட்டு உயிர பிரிகிறது.

மெய் மண்ணுக்குள் போய்விடுகிறது.

 ஆனால் உயிர் உயிரோடு
 தான் இருக்கிறது. 
 
(ப்+இ)றப்பு, இறப்பு ஆக மாறிவிடுகிறது.

உயிரோடு இருக்கும் உயிர்  இறைவனோடு இணைய விண்ணுக்குப் போகிறது.

உயிர் விண்ணுக்குப் போக காரணமாய் இருப்பது இறப்பு தானே!

ஆகவே அதுதான் மகிழ்ச்சி தரும் வார்த்தை."

  இயேசுவைப் பொறுத்தமட்டில்

 ஓநாய்கள் போல் செயல்பட்ட பரிசேயர்கள் கையால் அவர்
 பலியாக்கப்பட்டதுதான் அவருக்கு வெற்றி.

அப்போஸ்தலர்களை நற்செய்தியை அறிவிக்க அனுப்பும் போது 

 ஓநாய்கள்களாக செயல்பட்ட மன்னர்களால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று அவருக்குத் தெரியும்.

இயேசு தனக்காக  அவர்கள்  உயிரை கொடுப்பதற்காகத்தான் அவர்களை அனுப்பினார்.

வேத சாட்சிகளின் இரத்தத்தால்தான் திருச்சபை வளர்ந்தது.

இயேசு என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது அவர் பாடுபட்டு மரித்த சிலுவை மரம்தான்.

இயேசுவின் சீடன் என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது அவன் சுமந்து செல்லவேண்டிய சிலுவைதான்.

ஆனாலும் சிலுவை என்ற உடன் நமக்கு ஞாபகத்திற்கு வர வேண்டியது நித்திய பேரின்ப வாழ்வு.

ஏனெனில் இயேசு சிலுவையில் மரித்ததற்கும், நாம் சிலுவையை சுமந்துகொண்டு போவதற்கும் ஒரே காரணம் நாம் நித்திய காலம் அனுபவிக்கவிருக்கும் நித்திய பேரின்பம் தான்.

இயேசு மண்ணிற்கு வந்தது பாடுகள் பட்டு சிலுவையில் மரணமடைவதற்குத்தான்.

ஆனால் சிலுவையில் மரணமடைந்தது நம்மை நித்திய பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்வதற்காக தான்.

இறைவன் நாம் எப்போதும் சிலுவையை சுமந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்மை படைக்கவில்லை.

அவரை அறிந்து, நேசித்து, சேவித்து நித்திய பேரின்ப வாழ்வு வாழவேண்டும் என்பதற்காகவே நம்மை படைத்தார்.

எப்படி பிரசவ வேதனைக்குப் பின் பிள்ளை பிறக்கிறதோ,

 அதுபோல 

சிலுவைக்குப் பின் நித்திய பேரின்ப வாழ்வு தொடர்கிறது.

இயேசுவுக்காக வேத சாட்சிகளாக மரித்த அத்தனை பேரும் இப்போது விண்ணகத்தில் அவரோடு பேரின்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது   நம்மை அனுப்பியிருப்பது ஓநாய்களுக்கு உணவாக மாறுவதற்கு அல்ல,

விண்ணகப் பேரரசைப் பரிசாகப் பெறுவதற்காகத்தான்.

நமக்கு முன் பிறந்து அவர்களது சிலுவையைச் சுமந்து மரித்த அத்தனை பேரும் நம்மை வரவேற்பதற்காக மோட்ச வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே  நம்மைக் கடிப்பதற்காக நம்மைச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும்  ஓநாய்களைப் பார்த்து  பயப்பட வேண்டாம்.

அதிகபட்சம் நமது உடலை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,

ஆனால் விண்ணக வாழ்விற்காக காத்துக் கொண்டிருக்கும் நமது ஆன்மாவை அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது.

நம்மால் சுமக்க முடியாத பெரிய சிலுவையை இயேசு அனுமதிக்க மாட்டார்.

வருகின்ற சிலுவையை பொறுமையுடன் ஏற்போம்.

'வரவிருக்கும் நிலை வாழ்வை நினைத்து மகிழ்ச்சி அடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment