Thursday, September 16, 2021

"பின்னர் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இயேசு ஊர் ஊராய்ச் செல்லலானார். பன்னிருவரும் அவருடன் சென்றனர்." (லூக்.8:1)

"பின்னர் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இயேசு ஊர் ஊராய்ச் செல்லலானார். பன்னிருவரும் அவருடன் சென்றனர்." (லூக்.8:1)

இயேசுவின் நற்செய்தியால் ஈர்க்கப்பட்ட அனேக  சீடர்களுள் பன்னிரண்டு பேரை இயேசு தனது அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

அவர் விண்ணகம் எய்திய பின்  உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிப்பதற்காக அவர்களுக்கு விசேஷமான பயிற்சி அளிப்பதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

அவர்கள் மற்ற சீடர்களை விட விசேஷமான திறமை எதுவும் உள்ளவர்கள் என்று கூறிவிட முடியாது.

உண்மையில் குறைகள் நிறைய உள்ளவர்கள்.

குறைகளை நீக்கி அவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் பயிற்சி அளிப்பதற்காகத்தான் இயேசு அவர்களை தேர்ந்தெடுத்தார்.

ஆனாலும் புதுமையாய் எதுவும் செய்து அவர்களது குறைகளை நீக்க அவர் எண்ணவில்லை.

அவர் நினைத்திருந்தால் 
தனது வல்லமையால் அவர்களை நொடிப்பொழுதில் தலைசிறந்த போதகர்களாக மாற்றியிருக்க முடியும்.

ஆனால் அவர்களது மாற்றம் அவர்கள் முயற்சியால் இயல்பாக நடைபெற வேண்டும் என்று விரும்பினார்.

ஆனாலும் அவர்கள் இயேசு உலகில் இருக்கும் வரை முழுமையான மாற்றம் எதையும் அடைந்துவிடவில்லை.

அவர் பாடுகள் படுவதற்கு முந்திய நாள் இரவில் அவரை அவரது விரோதிகள் கைது செய்தபோது அவர்கள் எல்லோரும் அவரை விட்டு ஓடி விட்டார்கள் என்று நமக்கு தெரியும்.

'இராயப்பர் ஆண்டவரை மூன்று முறை மறுதலித்தார்.

தான் மரித்த பின் மூன்றாவது நாள்  உயிர்த்து எழுவதை அவர்களுக்குப் பல முறை அவர்கள் சொல்லியிருந்தும் அவர்கள் அதை நம்பியதாகத் தெரியவில்லை.

அவர் உயிர்த்தெழுந்து விட்டதை மரிய மதலேனாள் அவர்களிடம் சென்று அறிவித்தும் அதை நம்பாமல், அதை உறுதி செய்து கொள்வதற்காக இராயப்பரும், அருளப்பரும் அவரது கல்லறையை நோக்கி ஓடினார்கள்.

இத்தனை குறைகள் இருந்தும் இயேசு அவர்களைக் கைவிடவில்லை.

தான் பரலோகம் சென்ற பின் பரிசுத்த ஆவியானவரை அனுப்பி அவர்களைத் தைரியமுள்ள போதகர்களாக மாற்றினார்.

இன்றும் அதே பரிசுத்த ஆவியானவர் தான் திருச்சபையை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

இயேசுவும் இன்றும் திருச்சபையோடு தான் இருக்கிறார்.

நாம் ஒவ்வொரு நாளும் நற்செய்தி நூலை வாசிக்கும்போது இயேசுவோடு தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இயேசு போதிக்கும் ஒவ்வொரு நற்செய்தியும் நமது காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கிறது.

நாமும் அப்போஸ்தலர்களாக செயல்பட வேண்டும் என்ற ஆசை நம்மில் எழுந்திருக்கிறதா?

அந்த அளவுக்கு இயேசுவே நற்செய்தி நம்மை தொட்டிருக்கிறதா?

நற்செய்தியை வெறும் புத்தகமாக வாசிக்காமல், இயேசுவுடனே பயணித்து வாசித்திருந்தால், நிச்சயமாக நமது மனதைத் தொட்டிருக்கும்.

நாமும் நற்செய்தி அறிவிப்பவர்களாக மாற நமக்குள் ஆசை எழுந்திருக்கும்.

அந்த ஆசையை வெறும் ஆசை நிலையிலேயே வைத்திருக்காமல் செயலில் வெளிப்படுத்துவோம்.

நாம் நற்செய்தியை செல்லும் இடமெல்லாம்   அறிவிக்க வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை.

நாம் செல்லுமிடமெல்லாம் இயேசுவை அழைத்துச் செல்வோம்.

நம்மோடு இயேசுவின் நல் செய்தியையும் எடுத்துச் செல்வோம்.

பைபிள் புத்தகம் நம் கையில் இருக்கிறதோ இல்லையோ,

நற்செய்தி எப்போதும் நமது மனதில் இருக்க வேண்டும்,

எங்கு வாழ்ந்தாலும் இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்வோம்.

அவரது நற்செய்தி ஒவ்வொரு விநாடியும் நமது சொல்லாகவும் செயலாகவும் 
வெளிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

செல்லும் இடமெல்லாம் பிரசங்கம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ஒவ்வொரு வினாடியும் நற்செய்தியின் மதிப்பீடுகளை (Gospel Values) சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் வாழ்ந்தாலே போதும்.

நமது வாழ்வே சக்திவாய்ந்த ஒரு போதகமாக மாறிவிடும்.

நாம் போதகராக மாறாமலேயே நமது வாழ்வு போதகமாக மாறிவிடும்.

நற்செய்தியின் மதிப்பீடுகள் என்றால் என்ன?

கிறிஸ்துவின்  நற்செய்தியின் மூலம் நாம் அறியும் இறைவன்பு, பிறரன்பு சார்ந்த மதிப்பீடுகள்.

எப்படி ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை பிரிக்க முடியாதோ அதே போல இறையன்பையும்,  பிறரன்பையும் பிரிக்க முடியாது.

இறையன்பு இருப்பவரிடம் உறுதியாக பிறரன்பும் இருக்கும்.

நாம் மற்றவர்களோடு பழகும் ஒவ்வொரு வினாடியும் இறையன்பும் பிறரன்பும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இல்லத்தில் ஆரம்பமாகும் இந்த வெளிப்பாடு சமூக அளவிலும், நாட்டளவிலும், உலகளவிலும் விரிந்துகொண்டே செல்லும். 

உதாரணத்திற்கு ஒரு மதிப்பீடு: 

நற்செய்தியின்படி நமது அயலானுக்கு என்ன செய்கிறோமோ அதை இறைவனுக்கே செய்கிறோம்.

இறைவனுக்கு காணிக்கை கொடுக்க விரும்புகிறோம். அதை நமது அயலானுக்குக் கொடுத்தால் போதும், இறைவனுக்கே கொடுக்கிறோம். 

தேவையில் இருக்கும் அயலானுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினால், அது கோயில் உண்டியலில் ஆயிரம் ரூபாய் காணிக்கையாகப் போட்டதற்குச் சமம்.
 
நமது குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி,.

 வெளியே உள்ள உறவினர்களாக இருந்தாலும் சரி,

நாம் வாழும் சமூகத்தில்

 அல்லது நாட்டில்

 அல்லது உலகில் வாழும் யாராக இருந்தாலும்  சரி

அவர்களுக்கு அவசரத்தில் உதவுவது இறைவனுக்கு கொடுக்கும் காணிக்கை.

ஒரே நிபந்தனை அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என்ற உணர்வோடு கொடுக்க வேண்டும்.

தேவையில் இருப்போருக்கு நம்மால் இயன்றதை கொடுப்பது நமது பழக்கம் ஆகி விட்டால் நாம் நற்செய்தியை வாழ்கிறோம்.

நம்மை பார்ப்பவர்கள் நம்மில் வாழும் இயேசுவை பார்ப்பார்கள்.

மற்றொரு  மதிப்பீட்டை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்:

 தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது நற்செய்தியின் மதிப்பீடு.

இல்லத்தில் நமது சகோதரனோ அல்லது சகோதரியோ நம்மை காரணமின்றி அடித்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்கள் தந்த அடிக்குப் பதிலாக ஏதாவது ஒரு நன்மையை அவர்களுக்கு செய்தால் நாம் நற்செய்தியை வாழ்கிறோம்.

இல்லத்திற்குள் இது எளிது.

ஆனால் சமூக அளவிலோ, நாட்டு அளவிலோ இந்த மதிப்பீட்டை செயல்படுத்துவது கடினம்.

ஆனால்  செயல்படுத்திதான் ஆக வேண்டும்.ஏனெனில் அதைததான் நாம் போதிக்கிறோம். நாம் போதிப்பதை நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?

சமீபத்தில் கிறிஸ்தவர்களுடைய உரிமைகளை அழுத்தமாக கேட்ட ஒரு குருவானவரைக் கைது செய்துவிட்டார்கள்.

கைது செய்தவர்களுடைய ஆன்ம, சரீர நலனுக்காக நாம் செபித்திருக்க வேண்டும். 

இயேசு அதைத்தான் செய்தார். அவரைக் கைது செய்து, கொன்றவர்களை மன்னிக்கும் படி தந்தையை நோக்கி செபித்தார்.

கிறிஸ்தவர்களை துன்பப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஆன்ம சரீர நலத்தோடு வாழ எல்லோரும் செபிப்போம். 

மனிதர்கள் எல்லோரும் இறைவனுடைய பிள்ளைகள் என்பது நற்செய்தி மதிப்பீடு:

ஒரு தந்தையின் பிள்ளைகளிடையே சாதி வேறுபாடு இருக்க முடியாது.

அரசாங்கம் கிறிஸ்தவ மதிப்பீட்டின்படி அமைக்கப்படவில்லை.

ஆகவே அது சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்குகிறது.

நம்மிடையே சாதிகளே இல்லை எனும்போது அதனடிப்படையில் 
அரசிடம் சலுகைகள் கேட்பது நற்செய்தியின் மதிப்பீட்டிற்கு எதிராக செய்யும் செயல்.

 அரசின் கொள்கையால் நாம் பாதிக்கப்பட்டாலும் அதை ஆண்டவருக்காக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

வாழ்க்கையே பாதிக்கப்பட்டாலும் நற்செய்திக்காக அதை ஏற்றுக் கொள்ளும்போது  நமது வாழ்க்கையில் மூலம் நற்செய்தியைப் போதிக்கிறோம்.  

நமக்கு கெடுதல் செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்பதுவும் நற்செய்தியின் மதிப்பீடு.

கெடுதல் செய்வது 

ஆளாக இருந்தாலும், 

சமூகமாக இருந்தாலும்,

 நாடாக இருந்தாலும், உலகமாக இருந்தாலும் முழுமனதோடு மன்னிப்போம். 

நாம் செய்த பாவங்களையும் இறைவன் மன்னிப்பார்,

"மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள்." 

என்பது நற்செய்தியின் முக்கிய மதிப்பீடு.

அதன்படி வாழ்வோம்,
வாழ்வு அடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment