" அவளை நோக்கி, " உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்" (லூக்.7:48)
பரிசேயன் ஒருவன் இயேசுவை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தான்.
பெரும்பான்மையான பரிசேயர்கள் இயேசுவிடம் குறை காண்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
இயேசுவைப் பின் சென்ற சாதாரண மக்கள் அவர்மேல் விசுவாசம் கொண்டிருந்தார்கள்.
அதனால் இயேசு அவர்கள் மத்தியில் புதுமைகள் பல செய்து அவர்களில் நோயுற்றவர்களை குணமாக்கினார்.
அவர்மேல் விசுவாசம் கொண்டிருந்தவர்கள் அவரது நற்செய்தியை விரும்பி கேட்டார்கள்.
ஆனால் பரிசேயர்களுக்கு அவர் மேல் விசுவாசம் இல்லை.
அவர்களும் இயேசுவின் பின் சென்றார்கள், ஆனால் அவரது நற்செய்தியை கேட்பதற்காக அல்ல, அவரது பேச்சில் குறை கண்டு பிடிப்பதற்காகவே.
பரிசேயன் ஒருவன் அவரை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தான்.
அவன் விசுவாசம் அற்றவனாக இருந்தாலும் இயேசு அவனது அழைப்பை ஏற்று அவனது வீட்டிற்கு சென்றார்.
இயேசு எங்கு சென்றாலும் அவர் மீது விசுவாசம் உள்ள சாதாரண மக்களும் அவரை பின் தொடர்ந்தார்கள்.
அவ்வூரில் எல்லோராலும் பாவி என்று அறியப்பட்ட ஒரு பெண்
இயேசுவின் மீது கொண்ட விசுவாசத்தின் காரணமாக
தனது பாவங்களுக்காக வருந்தி, இனி பாவங்கள் செய்வதில்லை என்று தீர்மானித்து
செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதற்காக இயேசுவைத் தேடி பரிசேயனது வீட்டுக்கு வந்தாள்.
வந்தவள் தனது மனஸ்தாபத்தின் அடையாளமாக
அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து,
அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து
அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு
அப்பாதங்களில் தைலம் பூசினாள்.
அவரை அழைத்த விசுவாசம் இல்லாத பரிசேயன் இதைக் கண்டு,
"இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவளோ பாவி"
என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
அவனது நினைப்பிலிருந்தே அவனுக்கு இயேசுவின் மேல் விசுவாசம் இல்லை என்பது தெரிகிறது.
இயேசு அவனைப் பார்த்து,
"நான் உம் வீட்டுக்குள் வந்தபொழுது, நீர் என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை:
இவளோ என் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்தாள்.
நீர் எனக்கு முத்தமளிக்கவில்லை: இவளோ, நான் உள்ளே வந்ததுமுதல் என் பாதங்களை முத்தம் செய்து ஓயவில்லை.
நீர் என் தலையில் எண்ணெய் பூசவில்லை: இவளோ என் பாதங்களுக்குப் பரிமளத்தைலம் பூசினாள்."
அதாவது, இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயன் அவரை சரியாக உபசரிக்கவில்லை.
ஆனால் உபசரிப்புக்காக செய்ய வேண்டிய அத்தனை செயல்களையும் அவனால் பாவி என்று கருதப்பட்ட பெண் செய்து கொண்டிருந்தாள்.
இயேசு அப்பெண்ணை நோக்கி,
" உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
" பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தி அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
கடவுள் ஒருவருக்குதான் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.
பாவியான பெண்ணுக்கு இயேசுவின் மேல் விசுவாசம் இருந்ததால் தன் பாவங்களை மன்னிக்கும் படி தனது செயல்களால் கேட்டாள்.
இயேசுவும் அவளது பாவங்களை மன்னித்தார்.
ஆனால் பந்தியில் அமர்ந்திருந்த பரிசேயர்களுக்கு அவர் கடவுள் என்ற விசுவாசம் இல்லை.
ஆகவே
" பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?"
என்று ஒருவரை ஒருவர் வினவிக் கொண்டார்கள்.
இயேசுவோ அந்தப் பெண்ணை நோக்கி,
"உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப் போ" என்றார்.
இந்நிகழ்வில் இயேசுவின் மேல் விசுவாசம் இல்லாத பரிசேயன் அவரை உணவு விருந்தால் உபசரிக்கிறான்.
ஆனால் இயேசு முழுக்க முழுக்க ஆன்மீக பணிக்காகவே உலகிற்கு வந்தவர். அதிலும் பாவிகளைத் தேடி வந்தவர்.
ஆகவே பரிசேயனின் உபசரிப்பு அவருக்கு ஏற்றதாக இல்லை.
ஆனால் பாவியாகிய பெண் தனது கண்ணீரால் அவரை உபசரிக்கிறாள்.
கடவுளாகிய இயேசுவை பொறுத்தமட்டில் ஒரு பாவியின் கண்ணீரை விட உயர்ந்த உபசரிப்பு உலகில் எதுவுமே இல்லை.
ஏனெனில் இயேசு பாவிகளைத் தேடி வந்தது அவர்களை மனம் திருப்புவதற்காகத்தான்.
ஒரு பாவி தனது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு சிந்தும் கண்ணீர் தான் இறைவனுக்கு ஏற்ற காணிக்கை.
அப்படி சிந்தப்படும் கண்ணீர் இறைவனிடமிருந்து பாவமன்னிப்பையும், விண்ணக வாழ்வையும், நித்திய பேரின்பத்தையும் பெற்றுத் தரும்.
பரிசேயனின் உபசரிப்பையும், பாவியாகிய பெண் இந்த கண்ணீரையும் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப தியானிப்போம்.
அன்று யூத மக்களிடையே இருந்தது போலவே இன்று கிறிஸ்தவ மக்களிடையேயும் இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.
இரண்டு வகையினரிடமும் விசுவாசம் இருக்கிறது, ஆனால் வித்தியாசமான அளவில்.
ஒரு வகையினர் உள்ளரங்க
(Internal) விசுவாச வாழ்வை விட வெளியரங்க (External) ஆடம்பர விசுவாச வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
இன்னொரு வகையினர்
உள்ளரங்க விசுவாச வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
திருச்சபையில் திருவிழாக்கள் எதற்காக கொண்டாடப்படுகின்றன?
வெளியரங்க ஆடம்பரத்திற்காகவா அல்லது உள்ளார்ந்த ஆன்மீக வளர்ச்சிக்காகவா?
கிறிஸ்மஸ் விழாவை எடுத்துக்கொள்வோம்.
ஆடம்பர வாதிகளுக்கு
விலைமதிப்புள்ள புதிய உடை,
பார்த்தவர்கள் பாராட்டும்படி வீட்டை அலங்கரித்தல்,
வாழ்த்துக்கள் அனுப்புதல்,
புதிய design ல் Star தொங்கவிடல், அலங்காரமான கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் முடிந்தவுடன் Cake வெட்டுதல்,
கிறிஸ்மஸ் அன்று பிரியாணி விருந்து
இவற்றுக்காக லட்சக்கணக்காய் செலவழித்தல் ஆகியவை முக்கியம்.
உள்ளார்ந்த ஆன்மீகவாதிகளுக்கு.
செய்த பாவங்களுக்காக கண்ணீர் சிந்தி, பாவசங்கீர்த்தனம் செய்து திருப்பலியிலும் திருவிருந்திலும் கலந்து கொள்ளுதல்.
ஏழைகளுக்கு தர்மம் கொடுத்தல்.
இவை மட்டும்தான் முக்கியம்.
இயேசு பாலன் விரும்புவது எளிமையான, பரிசுத்தமான ஆன்மீகத்தை மட்டுமே.
பங்கு கோவிலில் திருவிழா என்றால் மின்விளக்குகளால் கோவிலும் தெருவும் அலங்காரம்,
புதுமாதிரி மேளம்,
சப்பரம்,
பட்டிமன்றம்,
பத்தாம் திருநாளில் அனைவருக்கும் மட்டன் சாப்பாடு,
செலவுக்கு அதிக வரி ஆகியவற்றில் மட்டுமே அதிக கவனம் செலுத்துபவர்கள் ஆடம்பர வாதிகள்.
ஆன்மீகவாதிகளுக்கு பாவசங்கீர்த்தனம், திருப்பலி, திருவிருந்து இவை மட்டுமே முக்கியம்.
கிறிஸ்தவ ஆன்மீகம் என்றால் ஆன்மா பரிசுத்தத்தனத்தோடு
விண்ணகம் நோக்கி பயணிப்பது மட்டுமே.
மனஸ்தாபக் கண்ணீர் பாவியை பரிசுத்தன் ஆக்குகிறது
கண்ணீர் விட்டு ஆன்மீகத்தை வளர்ப்போம்.
மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று இயேசு சொல்லுகிறார்.
(லூக்.15:7)
ஞாபகத்தில் கொள்வோம்:
உடலைக் கழுவ தண்ணீர்.
ஆன்மாவைக் கழுவ கண்ணீர்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment