Friday, September 3, 2021

" புதுத்திராட்சை இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைக்க வேண்டும்." (லூக்.5:38)

" புதுத்திராட்சை இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைக்க வேண்டும்." (லூக்.5:38)


இயேசு சுங்கத் துறையில் அமர்ந்து வரி வசூலித்துக் கொண்டிருந்த லேவி என்ற ஆயக்காரனைக் கண்டு,

 "என்னைப் பின் செல்" என்றார்.

அவர் எழுந்து, 

அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்.

யூதர்கள் ரோமையர்களின் அடிமைத்தனத்தில் வாழ்ந்த காலம் அது.

யூதர்களிடம் வரி வசூலித்து அதை ரோமை அரசுக்கு கொடுக்க வேண்டியது மத்தேயுவின் பணி.

அந்நியரிடம் கொடுப்பதற்காக தாய் நாட்டில் வரி வசூலித்ததால் பரிசேயர்கள் அவரைப் பாவி என்று அழைத்தார்கள்.

வரி கொடுப்பதைத் தவிர   வேறு எந்த உறவையும் அவர்கள் அவரோடு வைத்துக் கொண்டதில்லை.

பாவி என்று கருதப்பட்ட 
மத்தேயுவைத்தான் தனது நற்செய்தி பணிக்காக இயேசு தேர்ந்தெடுத்தார். 

மத்தேயுவின் பழைய பணி பணம் சம்பந்தப் பட்டது.

பணத்திற்கு ஊழியம் செய்து கொண்டிருந்த மத்தேயுவை இறை ஊழியத்திற்கு இயேசு அழைத்தார். 

"என்னைப் பின் செல்" என்று .இயேசு அழைத்தவுடன் மத்தேயு தனது பொருளீட்டும் ஊழியத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு

அருள் ஈட்டும் பணிக்குத் தன்னை முற்றிலுமாக கையளித்து விட்டார.


மத்தேயு தம் வீட்டில் இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்து செய்தார்.

 ஆயக்காரரும் பிறரும் பெருங்கூட்டமாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தனர்.

இது பரிசேயருக்கும் அவர்களைச் சார்ந்த மறைநூல் அறிஞருக்கும்  பிடிக்கவில்லை.

"ஆயக்காரரோடும் பாவிகளோடும் நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?"
சீடர்களிடம் கேட்டனர்.

ஆனால் இயேசு,

"நான் பாவிகளை தேடித்தான் உலகிற்கு வந்தேன்." என்றார்.

பரிசேயர்கள் விடவில்லை.

"அருளப்பருடைய சீடர்களும், பரிசேயர்களின் சீடர்களும் அடிக்கடி நோன்பு இருக்கின்றார்கள்.

உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே" என்று அவரிடம் சொன்னார்கள்.

அவர்களுக்கு பதில் அளிக்கும் போது சொன்ன வாக்கியம்தான்:

" புதுத்திராட்சை இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைக்க வேண்டும்."
என்பது.

திராட்சை ரசத்தை எப்படி பக்குவப்படுத்த வேண்டும் என்று இயேசு இங்கு பாடம் எடுக்கவில்லை.

அதைப்பற்றி பேச அவர் மனு உரு எடுக்கவில்லை.

அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும் ஆன்மீகம் மட்டுமே இருந்தது.

அவரது ஆன்மீகக் கருத்துக்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக

 நமக்குத் தெரிந்த உவமைகள், ஒப்புமைகள் மூலம் அவற்றை விளக்கினார்,


திராட்சை ரசத்தையும், சித்தையையும் என்ன ஆன்மீக கருத்தை விளங்கவைக்க பயன்படுத்தினார்?

பரிசேயர்கள் கேட்டது நோன்பு இருத்தலை பற்றி.

இதை விளக்க தான் திராட்சை ரசத்தை  ஆண்டவர் பயன்படுத்தினார்.

நோன்பு உடலை வருத்தக் கூடிய செயலாக இருந்தாலும் அது ஆன்மீகச் செயல்.

உடலை வருத்தும் நோன்பில்  என்ன ஆன்மீகம் இருக்கிறது?

எதற்காக நோன்பு இருக்கிறோமோ அதுதான் நோன்பின் ஆன்மீகம்.


எதற்காக நோன்பு இருக்கிறோம்?

இறைவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக நாம் நோன்பு இருக்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்கள் என்ன என்ன ஆன்மீக சம்பந்தப்பட்ட செயல்கள் செய்ய வேண்டும் என்று மோயீசன் சட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.

சட்டங்களை வகுத்துக் கொடுத்ததில் தவறு இல்லை. 

இயேசு கூட நாம் இரட்சண்யம் அடைவதற்கென்று நாம் அனுசரிக்க வேண்டிய   இரண்டு கட்டளைகளைக் கொடுத்திருக்கிறாரே.

சட்டங்களை அனுசரிக்கும்போது எதற்காக அனுசரிக்கிறோம் என்பதில்தான் நமது ஆன்மீகம் இருக்கிறது.

பாவங்களுக்கு பரிகாரமாக நோன்பு இருக்க வேண்டும் என்பது சட்டம்.

நாம் நோன்பு இருக்கும்போது

 நாம் சட்டத்திற்கு கீழ்ப்படிவதற்காக நோன்பு இருக்கிறோமா?

அல்லது 

பாவங்களுக்கு பரிகாரமாக நோன்பு இருக்கிறோமா? 

என்று நம்மையே கேட்டு 

கேள்விக்கான விடையைக் காண வேண்டும்.

சட்டத்திற்காக மட்டும் நோன்பு இருந்தால் அதில் எதிர்பார்க்கப்படுகிற ஆன்மீக பயன்பாடு ஏதும் இல்லை.

பாவங்களுக்கு பரிகாரமாக 
நோன்பு இருந்தால்தான் அது ஆன்மீகம்.

பாவங்களுக்கு பரிகாரமாக மட்டும்
நோன்பு இருந்தால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன,

வெறுமனே சட்டத்திற்காக மட்டும் நோன்பு இருந்தால் சட்டம் மீறப்படவில்லை.  அவ்வளவுதான்.

  பழைய பாவம் எதுவும் மன்னிக்கப்பட  வில்லை.

 ஏனென்றால் அதற்கான பரிகாரம் செய்யப்படவில்லை.

பரிசேயர்கள் சட்டத்தின் எழுத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.அதன் நோக்கத்திற்காக அல்ல,

They gave more importance to the letter of the law, not to its spirit.

சட்டத்தின் நோக்கமாகிய பாவப் பரிகாரத்துக்காக நோன்பு இருப்பவன் 

சட்டத்தை எடுத்து விட்டாலும்

 நோன்பு இருப்பதை விட மாட்டான்.

ஏனெனில் அவன் நோன்பு இருப்பது பாவப் பரிகாரமாக, ,

சட்டத்திற்காக அல்ல.



"அருளப்பருடைய சீடர்களும், பரிசேயர்களின் சீடர்களும் அடிக்கடி நோன்பு இருக்கின்றார்கள்.

உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே" என்று அவரிடம் சொன்னார்கள்.

அதற்கு இயேசு, "மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?

 மணமகன் அவர்களை விட்டுப்பிரியும் நாள் வரும்,

 அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்" என்றார்.

பரிசேயர்களின் சீடர்கள் பழைய ஏற்பாட்டு வழக்கப்படி சட்டத்திற்கு உட்பட்டு நோன்பு இருந்தார்கள்.


இயேசு சட்டத்தை சட்டத்திற்காக அனுசரிப்பதை விரும்பாதவர்.

நோன்பு இருக்க வேண்டும் என்ற சட்டத்திற்கு கட்டுப்பட்டு, 

எதற்காக நோன்பு இருக்க வேண்டும் என்பதை மறந்தவர்கள் 

பழைய சித்தையில் ஊற்றப்பட்ட திராட்சைரசம் போன்றவர்கள் 

பாவங்களுக்கு பரிகாரமாக இயேசுவே பாடுகள் பட்டு மரணிக்கும் காலம் வரும்.

அது புதிய ஏற்பாட்டின் காலம்.

இயேசு யாருடைய சட்டத்திற்கும் உட்பட்டு ரத்தம் சிந்தி பாவப் பரிகாரம் செய்யவில்லை.

பாவப் பரிகாரம் செய்வதற்காக அவராகவே ரத்தம் சிந்தி மரணத்தை தழுவினார்.

இயேசுவின் மரணத்திலிருந்துதான் புதிய ஏற்பாட்டின் நோன்புகள் மற்றும் தவ முயற்சிகளுக்கான அருள் வரங்கள்  நமக்கு வருகின்றன.

இயேசுவின் மரணம் அன்பிற்கு உட்பட்டது, சட்டத்திற்கு அல்ல.

அதிலிருந்துதான்  அன்பின் நிமித்தம்,  சட்டத்திற்காக அல்ல, பாவப் பரிகாரம் 
செய்வதற்காகவே சீடர்கள் நோன்பு இருக்க ஆரம்பிப்பார்கள்.

ஏனெனில் இயேசுவும் அதைத்தான் செய்தார்.

அதுவரை அவர்கள்  கடவுளாகிய 
இயேசுவோடு இருப்பதே நோன்பு மாதிரிதான்.

இரவும் பகலும் இயேசுவுடனே  இருந்ததால் இயேசு நடக்கும்போது அவர்களும் நடந்தார்கள்,

 இயேசு தூங்காது இருந்தபோது அவர்களும் தூங்கவில்லை,

 இயேசு பசியாக இருந்தபோது அவர்களும் பசியாக இருந்தார்கள்,.

 தவ வாழ்க்கையே வாழ்ந்தவரோடு வாழ்ந்தவர்களுக்கு தனியாக தவ முயற்சி தேவையில்லை.

 அவரோடு வாழ்ந்ததே ஒரு தவ முயற்சிதான்.

 ஒருமுறை காயாத  அத்தி மரத்தில் காயைத் தேடும் அளவிற்கு இயேசு பசியாக இருந்தார் 

 அப்போது சீடர்களும் பசியாகத்தான் இருந்திருப்பார்கள்.

இதெல்லாம் சட்டத்திற்குப் பயந்தா?
அன்பினால் ஈர்க்கப்பட்டா?.

 அதனால்தான் இயேசு

" மணமகன் உடன் இருக்கும் போது,
 அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?" என்று கேட்டார்.

மணமகன் அவர்களை விட்டுப்பிரியும் நாள் வரும், அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்" என்றார்.

அதாவது 

இயேசு சிலுவையில் மரணிக்கும் நாளிலிருந்து நோன்பு இருக்க ஆரம்பிப்பார்கள்,

 சட்டத்திற்கு பயந்து அல்ல

 அன்பினால் ஈர்க்கப்பட்டு.

பழைய ஏற்பாட்டில் மக்கள் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

சட்டத்திற்கு கட்டுப்பட்டு செய்யப்படும் தவ முயற்சிகள் பழைய சித்தையில் ஊற்றப்பட்ட திராட்சரசம்.

புதிய ஏற்பாட்டில் அன்பினால் ஈர்க்கப்பட்டு செய்யப்படும் தவ முயற்சிகள் புதிய சித்தையில்
 ஊற்றப்பட்ட திராட்சரசம்.

இன்றும் திருச்சபையில் சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் நமது செயல்கள் சட்டத்திற்கு பயந்து அல்ல,

 அன்பினால் ஈர்க்கப்பட்டு செய்யப்படுபவையாய் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி காண வேண்டும் என்பது சட்டம்.

ஆனால் நாம் சட்டத்திற்கு பயந்து அல்ல,

இயேசுவின் அன்பினால் ஈர்க்கப்பட்டு திருப்பலிக்கு செல்ல வேண்டும்.

திருச்சபை அந்த சட்டத்தை அகற்றிவிட்டாலும் கூட நாம் திருப்பலிக்கு அன்பினால் ஈர்க்கப்பட்டு செல்ல வேண்டும்.

முன்பு நடுச்சாமம் துவக்கி நன்மை வாங்கு மட்டும் ஒன்றும் சாப்பிடவும் குடிக்கவும் கூடாது என்று சட்டம் இருந்தது.

இப்போது அதை ஒரு மணி நேரமாக சுறுக்கி விட்டார்கள்.

ஆனால் இன்றும் நற்கருணை மீது குறையாத மரியாதை வைத்திருப்பவர்கள்,

 பழைய முறையையே பின்பற்றுகிறார்கள், சட்டத்திற்காக அல்ல, பக்தி கலந்த மரியாதைக்காக.

இன்றும் யாராவது சட்டத்திற்காக மட்டும்  பக்தி முயற்சிகளைச் செய்தால் 

அவன் பக்தி முயற்சியாகிய திராட்சை ரசத்தை சட்டத்திற்காக மட்டும் என்கிற பழைய சித்தைக்குள்  ஊற்றி குடிக்கிறான்.


சட்டத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு

 கடன் பூசை என்பதற்காக மட்டும் ஞாயிறு திருப்பலிக்கு வந்து

 கோவிலுக்கு வெளியே நின்று அரட்டை அடித்துவிட்டு 

நன்மை வாங்க மட்டும் உள்ளே வருகிறார்களே, அவர்கள் பழைய ஏற்பாட்டினர். 

அவர்கள் பூசைக் கடனை நிறைவேற்றி விட்டார்கள்,

ஆனால் சட்டத்திற்காக மட்டும் அவர்கள்  குடித்த திராட்சரசம் அவர்களுக்கு பயன்தராது.

புதுத்திராட்சை இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைப்போம். 

அதாவது, நமது பக்தி முயற்சிகளையும், தவ முயற்சிகளையும் உண்மையான இறையன்பினால் ஈர்க்கப்ட்டு செய்வோம், 

சட்டத்திற்கு கட்டுப்பட்டு அல்ல.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment