Saturday, September 25, 2021

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."(லூக்.9:23)

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(லூக்.9:23)

 இயேசு முதன் முதல் சீடர்களை அழைக்கும்போது அவர் பயன்படுத்தியது இரண்டே வார்த்தைகள்,

"என்னைப் பின்செல்."

அவர்களும் மறுபேச்சின்றி தங்களுக்குரிய யாவற்றையும் விட்டுவிட்டு அவரை பின் சென்றார்கள்.

அவரைப் பின் சென்றால் தாங்கள் என்ன ஆவோம் என்று அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆனாலும் சொன்ன சொல்லுக்கு உடனே  கீழ்படிந்தார்கள்.

அக்காலத்தில் மெசியாவை பற்றி தவறான கருத்து ஒன்று நிலவி வந்தது.

அவர் யூதர்களுக்கு  
 உரோமையர்களிமிருந்து அரசியல் ரீதியான விடுதலை வாங்கித் தருவார், 

தனி யூத இராட்சியத்தை ஏற்படுத்துவார் என்று சிலர் நம்பினார்கள்.

ஒருவேளை அதில் தங்களுக்கு ஏதாவது உயர்ந்த பதவி கிடைக்கும் என்று நம்பி கூட அவரை பின்பற்றியிருக்கலாம்.

ஆனால் நாள் ஆக ஆக இயேசுவுக்கு அரசியல் ரீதியான எந்த நோக்கமும் இல்லை என்பது தெரிந்து விட்டது.

ஒரு நாள் இயேசு  அவர்களிடம் தனது வாழ்க்கையின் நோக்கத்தை கூறியதோடு 

அவர்கள் எப்படி தன்னை பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கினார்.

"மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று சொன்னார்."

 தான்  உலகிற்கு வந்திருப்பதன் நோக்கத்தைக் கூறினார். 

பாடுகள் பல பட வேண்டும்.

தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட வேண்டும்,

அவர்களால் கொலை செய்யப்பட வேண்டும்,

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும்

 என்று சொன்னார்.

அவர் சொன்னது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவர் நற்செய்தியை போதிப்பது ஒரு நாள் கொல்லப் படுவதற்காகத்தான் என்று சொன்னால் அது அவர்களுக்கு எப்படிப் புரியும்?

இயேசு அதோடு நிற்கவில்லை.

 தன்னை பின்பற்றுகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொன்னார்.


அவரைப் பின்செல்ல விரும்புகிறவர்கள்

, தங்களையே மறுக்க வேண்டும்.

 தங்கள் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு அவரைப் பின்பற்றவேண்டும்.

இதுவும் அவர்களுக்கு புரிந்திருக்காது.

தானும் கஷ்டப்பட வேண்டும்,
தன்னை பின்பற்றுகிறவர்களும் 
கஷ்டப்பட வேண்டும் என்று சொன்னால் எப்படி புரியும்.

ஆனாலும் தங்களுக்கு புரியாதது பற்றி அவர்கள் அவரிடம் விளக்கம் எதுவும் கேட்கவில்லை.

அதற்காக அப்போது அவரை விட்டு போகவும் இல்லை.

பெரிய வியாழன் இரவில் இயேசுவை அவரது விரோதிகள் கைது செய்தபோது அவரது சீடர்கள் 
 ஓடிப்போனது என்னவோ உண்மைதான்.

ஆனால் அவரைக் கைவிட்டு போகவில்லை.

அவர் மரித்து அடக்கம் செய்யப்பட்ட பின்பும் அவரைத்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

இயேசு நினைத்திருந்தால் அவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்திருக்க முடியும்.

ஆயினும் பரிசுத்த ஆவியின் வருகை வரை அவர்களை அப்படியே விட்டுவிட்டார்.

அவர் இராயப்பர் மீது கட்டிய திருச்சபையை இயங்கப் போவது

 சீடர்களின் திறமையினால் அல்ல,

 பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் 

என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது திட்டமாக இருந்திருக்க வேண்டும். 

இப்போதும் திருச்சபை இயங்கிக் கொண்டிருப்பது நம்முடைய திறமையால் அல்ல,

பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான்.

நாம் செயல்பட வேண்டியது அன்று இயேசு சீடர்களுக்குக் கொடுத்த அறிவுரையின்படி தான்.


நம்மை நாமே மறுக்க வேண்டும்..

தினமும் நமது சிலுவையை சுமந்து கொண்டு இயேசுவின் பின் செல்ல வேண்டும்,

இயேசுவைப் போலவே பாடுகள் பல படவேண்டும். 

நம்மை ஆள்பவர்களால் புறக்கணிக்கப்பட வேண்டும்,

 அவர்களால் கொலை செய்யப்பட வேண்டும்.

இவ்வளவும் நடந்தபின்பு உலக முடிவில்     உயிர்த்தெழ வேண்டும்.

கிறிஸ்தவர்கள்   என்ற முறையில்  நாம் பட்டுக் கொண்டிருக்கும் 

 அவமானங்களும், கஷ்டங்களும் இயேசுவின் விருப்பப்படிதான் நடக்கின்றன.

இயேசுவின் விருப்பப்படி நடப்பவற்றை பார்த்து உண்மையில் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

இயேசுவை நமது மீட்பராக ஏற்றுக்கொள்கிறோம்.

 மீட்பின் பாதையில் நாம் அவரது 
அருள்வர உதவியால் நடக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

 ஆனால் நமது மீட்பர் கொடுக்கும் 
வழிகாட்டுதலின்படி நடக்க மறுக்கிறோம்.

வழிகாட்டுபவர் காட்டும் திசைக்கு எதிர்த்திசையில் நடந்தால் எப்படி போக வேண்டிய இடத்திற்குப் போக முடியும்?

சிலுவை வரும்போது பயந்து ஓடுபவன் எப்படி தன்னை இயேசுவின் சீடன் என்று சொல்ல முடியும்?


Tailorடம் போய், 

"புதிதாக துணி வாங்கி வந்துள்ளேன். அதைக் கிழிக்காமல், ஊசி படாமல் சட்டையாய் தை"

 என்று சொன்னால் அவன் சிரிக்க மாட்டான்?


"புதிதாக தங்கம் வாங்கி வந்துள்ளேன். அதை உருக்காமல், சுத்தியால் அடிக்காமல் நகை செய் " என்று சொன்னால் ஆசாரிக்குச் சிரிப்பு வராது?

ஏர் படாமல், மண்வெட்டியால் வெட்டாமல் எப்படி விபசாயம் செய்ய முடியும்?

சைக்கிள் புதிது, மிதிக்காமல் ஓட்டு என்று சொன்னால் ஓட்டுபவன் என்ன சொல்வான்?

"சிலுவை எதையும் தராமல், மீட்பை மட்டும் தாரும்." என்று நாம் சொன்னால் இயேசு என்ன சொல்வார்?


"உங்களுக்கு மீட்பு தருவதற்காகத்தான் சிலுவையை சுமந்து அதில் மரிக்கும்படி

 நானே விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தேன்.

 உங்கள் மீட்புக்காக நீங்கள் சிலுவையைச்  சுமக்கக் கூடாதா?"
என்று கேட்பார்.

நாம் நித்திய காலம் பேரின்பத்தில் வாழ்வதற்காக கொஞ்ச நாள் சிலுவையைச் சுமக்கக் கூடாதா?

ஒரு தகப்பனார் தன் பையனுக்கு 
Admission போடுவதற்காக அவனை ஒரு பள்ளிக்கூடத்திற்கு கூட்டி வந்தார்.

தலைமை ஆசிரியரிடம்,

"சார், இவன் எங்களுக்கு ஒரே பிள்ளை. தவமிருந்து பெற்ற பிள்ளை. வீட்டில் மிக செல்லமாக வளர்க்கிறோம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் யாரும் இவனை அடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்."

"இதற்கு முன் எங்கேயாவது படித்திருக்கிறானா?"

"ஆம் சார். ஆனால் பாடம் படிக்காமல் போனால் வாத்தியார் அடிக்கார்னு பள்ளிக்கு போக மாட்டேன் என்று விட்டான். அங்கிருந்து T.C வாங்கிக் கொண்டு வந்து விட்டோம்."

"T.C யைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்."

"இங்கே Admission?''

"இங்கே Admission போட்டால் திரும்பவும் T.C எழுத வேண்டியிருக்கும். இங்கேயும் படிக்காமல் வந்தால் வாத்தியார் அடிப்பார்."

தகப்பனார் எழுந்து போய்விட்டார்.
பையன் அதன் பிறகு படிக்கப் போகவேயில்லை.

என்ன ஆகியிருப்பான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சிலுவையே சுமக்க முடியாது என்பவர்களுக்கும் இதே கதிதான்.

அப்போ நோய் வந்தால் குணமாக்கக் கூடாதா?

குணமாக்கலாம், ஆண்டவரே குணமாக்கியிருக்கிறாரே.

ஆன்ம வாழ்வுக்கு உடலின் உதவியும் தேவை.

உடலில் சீரான இயக்கத்தை நோய் பாதிக்கும். ஆன்மாவின் நலன் கருதி உடல் நோயைக் குணமாக்கலாம்.

ஆனால் வரும், நோயையும், அது குணமாகும் வரை அதனால் ஏற்படும் வலியையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கலாமே!

நோய் மட்டுமா சிலுவை?

வாழ்க்கையில் எத்தனையே கஷ்டங்கள் உள்ளனவே. எல்லாம் சிலுவைகள்தான். 

எல்லாவற்றையும் ஆண்டவருக்காகப்  பொறுமையாய் தாங்கிக் கொள்ளலாமே!

நமது முயற்சிகளில் ஏற்படக்கூடிய தோல்விகள், 

உலக வாழ்வில் நாம் செய்யாத தவறுகளுக்குக் கிடைக்கும் தண்டனைகள்,

நாம் சந்திக்கும் அவமானங்கள்  

போன்ற எத்தனையோ சிலுவைகளை தினமும் சந்திக்கிறோம்.

பேருந்தில் உட்கார இடம் கிடைக்காமல் நின்றுகொண்டு பயணிப்பதே ஒரு சிலுவைதான்.

ருசி இல்லாத உணவை சாப்பிட வேண்டியிருப்பதே ஒரு சிலுவைதான்.

அநேக சமயங்களில் கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் சிலுவையாகப் பயன்படுவார்கள்.

இதுபோன்ற நூற்றுக்கணக்கான சிலுவைகள் நம்மை தேடிவரும்.

அவற்றை ஆண்டவருக்காக சுமந்தாலே போதும்.

சிலுவை சிறியதோ, பெரியதோ ஆண்டவருக்காக தாங்கிக் கொண்டால் கிடைக்கும் விண்ணகப் பலன் பெரியதே.

சிலுவை இன்றி மகிமை இல்லை.
'
ஆண்டவர் சிலுவையைத் தேடி உலகிற்கு வந்தார்.

நாம் நம்மை தேடி வரும் சிலுவைகளை அனுபவித்தாலே போதும்.

விண்ணகத்தில மகிமை நமக்காக காத்திருக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment