Monday, September 13, 2021

" நானும் உம்மிடம் வரத் தகுதியற்றவன் எனக் கருதினேன். ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாகட்டும்."(லூக்.7.7)

" நானும் உம்மிடம் வரத் தகுதியற்றவன் எனக் கருதினேன். ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாகட்டும்."
(லூக்.7.7)

இயேசுவின் வாயிலிருந்து  வந்த வார்த்தைகள் மட்டும் அல்ல, அவரது வாழ்வின் போது நடந்த ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு  ஏதாவது ஒரு நற்செய்தியை அறிவித்து கொண்டிருக்கிறது.

இயேசுவை பற்றியோ,

 அவரது வார்த்தைகளை பற்றியோ,

 அவரது வாழ்வைப் பற்றியோ,

 அவரது வாழ்வின் போது நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியை பற்றியோ

 நாம் தியானிக்கும் போது நாம் இயேசு சர்வ ஞானம் உள்ள கடவுள் என்ற உண்மையை மனதில் இருத்திக் கொண்டு

 அதன் அடிப்படையிலேயே தியானிக்க வேண்டும்.

நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் மட்டுமல்ல

 அவரது வாழ்வில் அவர் அனுமதித்த ஒவ்வொரு நிகழ்வும் அவரது நித்திய கால திட்டத்தின் கீழ்தான் வரும்.

அவரது நித்திய கால அனுமதியின்றி ஒரு அணு கூட அசையாது.

நூற்றுவர் தலைவனின் ஊழியனை  இயேசு குணமாக்கிய நிகழ்விலிருந்து நாம் அறியவரும் நற்செய்தியை இங்கு தியானிப்போம்.

இந்நிகழ்வில் நாம் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள்:

1.நூற்றுவர் தலைவன் ஒரு யூதன் அல்ல. யூதர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த  ரோமைப் பேரரசின் படையில் பணியாற்றிய ஊழியன்..
நூறு படை வீரர்களுக்கு தலைவன்.

2. சுகம் இல்லாதிருந்தது அவனுடைய உறவினன் அல்லன், 
 அவன்  பற்றுக்கொணடிருந்த அவனுடைய.ஊழியன்.

3.தனது ஊழியனை சுகமாக்கும்படி  அவன் யூதரின் மூப்பரின் மூலம்  இயேசுவை வேண்டினான்.

4.இயேசு அந்த ஊழியனை சுகமாக்குவதற்காக அவனது இல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவன் தனது நண்பர்களை அனுப்பி,

" ஆண்டவரே, இவ்வளவு தொந்தரை வேண்டாம்:

 நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். 

அதனால்தான் நானும் உம்மிடம் வரத் தகுதியற்றவன் எனக் கருதினேன். 

ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாகட்டும்."

என்று வேண்டினான்.

தான் இயேசுவின் முன் வரவோ, இயேசு அவன் வீட்டிற்கு வரவோ தான் தகுதியற்றவன் என்பதை  மனதார உணர்ந்தான்.

ஆகவேதான் மற்றவர்கள் மூலம் தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்தான்.

இது அவனது ஆழமான தாழ்ச்சியை காண்பிக்கின்றது.

5. இயேசு,"இஸ்ராயேல் மக்களிடையிலும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்று கூறியதோடு அந்த ஊழியனை  இருந்த இடத்தில் இருந்து கொண்டே சுகமாக்கினார்.

இத்தனை உண்மைகளையும் அறிந்து நாம் என்ன செய்யப்போகிறோம்.

ஒவ்வொரு உண்மையையும் தியானித்து அதன் அடிப்படையில் வாழப் போகிறோம்.

நற்செய்தியை வாசிப்பது பொழுது போக்கிற்காக  அல்ல வாழ்வதற்காக.

1.இயேசு யூத குலத்தில் பிறந்தவர். ஆனால் யூதர்களுக்காக மட்டும் பிறந்தவள் அல்ல.

உலக மக்கள் அனைவருக்குமாகவும் பிறந்தவர்.

மீட்புப் பெற வேண்டியது யூதர்கள் மட்டுமல்ல மனித குலத்தை சேர்ந்த அனைவரும்தான்.

நூற்றுவர் தலைவன் யூத குலத்தில் பிறக்காதது மட்டுமல்ல, அவர்களை அடிமைத்தனத்தில் வைத்திருந்த ரோமையர்களின் ஒருவன். கிறிஸ்துவின்போதனைகளால் ஈர்க்கப்பட்டிருப்பது  கிறிஸ்துவின்போதனைகளுக்குக் கிடைத்த வெற்றி.

ஒரு ரோமயன் கிறிஸ்துவின்போதனைகளால்
ஈர்க்கப்பட்டிருக்கும் அளவிற்கு
நாம் ஈர்க்கப்பட்டிருக்கிறோமா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கிறிஸ்தவராக இருந்தால் மட்டும் போதாது, கிறிஸ்துவின் போதனைகள் நமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும் என்பது நூற்றுவர் தலைவனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.

2. நூற்றுவர் தலைவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது சுகத்திற்காக இயேசுவிடம் விண்ணப்பிக்கவில்லை. '

தனது ஊழியர்களில் ஒருவன் சுகம் பெற விண்ணப்பித்திருக்கிறான்.

 நமது குடும்பத்தினர் மட்டுமல்ல மனித குலத்தவர் அனைவருமே நம்மால் நேசிக்க படவேண்டியவர்கள் என்பதை நூற்றுவர் தலைவன் நமக்கு உணர்த்துகிறான்.

நம்மை படைத்த அதே இறைவனால்தான் உலகினர் அனைவரும் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்தால்

 மனுக்குலம் முழுவதுமே ஒரு குடும்பம் என்பதை உணர்வோம்.

 உனது அயலானை நேசி என்றால் உலகத்தினர் அனைவரையுமே நேசி என்பதுதான் பொருள். 

இதுவும் நூற்றுவர் தலைவனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.


3.தனது ஊழியனை சுகமாக்கும்படி  அவன் யூதரின் மூப்பரின் மூலம்  இயேசுவை வேண்டினான்.

நூற்றுவர் தலைவன் கிறிஸ்துவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது 

நிச்சயமாக அவன் இயேசு  போதித்த கூட்டங்களுக்கு உறுதியாக சென்றிருக்க வேண்டும்.

அவன் நேரடியாகவே சென்று இயேசுவின் உதவியை கேட்டிருக்க முடியும்.

அனேக நோயாளிகள் நேரடியாகவே இயேசுவிடம் வந்து வேண்டி சுகம் பெற்றிருப்பதை அவன் பார்த்திருப்பான்.

ஆனால் அவன் யூதரின் மூப்பரின் மூலம்  இயேசுவை வேண்டினான்.

இயேசு கடவுள் என்று அவன் முழுமையாக விசுவசித்தான்.

சாதாரண மனிதனாகிய தான் எப்படி இயேசுவின் முன்நின்று முகத்துக்கு முகம் பேசுவது என்று அவரது தாழ்ச்சி தடுத்திருக்கும்.

யார் மூலமாக வேண்டினாலும் இயேசு தனது கோரிக்கைக்கு செவிமடுப்பார் என்று உறுதியாக நம்பினான்.

ஆகவேதான் தான் நேரடியாக செல்லாமல் யூதரின் மூப்பரின் மூலம்  இயேசுவை வேண்டினான்.

அவர்களின் வேண்டுதலை ஏற்று இயேசு நூற்றுவர் தலைவனின் வீட்டிற்கு புறப்பட்டு போனார்.

இங்கே ஒரு மிக முக்கியமான உண்மையை நாம் குறிப்பிட வேண்டும்.

இன்றைய தினம் நம்மை விட்டு பிரிந்துசென்ற கிறிஸ்தவ சகோதரர்கள் இயேசுவை நேரடியாகவே அணுக வேண்டும், புனிதர்கள் மூலமாக அல்ல, என்று ஒரு கொள்கையை வைத்திருக்கிறார்கள்.

'அவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காகவே இயேசு இந்த நிகழ்வை அனுமதித்தார் என்று உறுதியாக நம்பலாம்.

அவர் நினைத்திருந்தால்

" நேரடியாக என்னிடம் வேண்டுபவர்களுக்கு மட்டுமே உதவுவேன்" 

என்று சொல்லி யூதர்களின் மூப்பர்களின் வேண்டுதலுக்கு  செவி சாய்க்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் இயேசு அவர்களுடைய வேண்டுதலுக்கு செவிமடுத்து நூற்றுவர் தலைவனின் இல்லத்திற்கு புறப்பட்டார்.

 இயேசு கடவுள். மாறாதவர்.

அதே இயேசு தான் இன்றும் விண்ணகத்தில் இருக்கிறார்.

அவர் மாறாதவராகையால் 

நூற்றுவர் தலைவனால் அனுப்பப்பட்டவர்களுக்கு செவிமடுத்ததுபோலவே 

இன்றும் நமது வேண்டுதலை சமர்ப்பிக்கின்ற புனிதர்களுக்கும் இயேசு உறுதியாக செவிமடுப்பார். 

பைபிளை மட்டுமே நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு திரிகின்ற நமது பிரிவினை சகோதரர்கள் பைபிளின் இந்த வரிகளை மட்டும் வாசிக்க மறந்து விட்டார்களோ என்னமோ!

வேண்டுதலை சமர்ப்பிக்கின்றவர்களின் இறை உறவின் நிலைக்கு ஏற்பதான் வேண்டுதலின் சக்தியும் இருக்கும்.

நமது வேண்டுதல் கேட்கப்பட வேண்டுமென்றால் இயேசுவுக்கும் நமக்கும் இடையே உள்ள ஆன்மீக உறவு நெருக்கமாக இருக்க வேண்டும்.

நெருக்கத்தின் அளவுக்கு ஏற்ப தான் நமது வேண்டுதல் சக்தி உள்ளதாக இருக்கும்.

புனிதர்கள் விண்ணகத்தில் இறைவனோடு இணைந்து வாழ்வதால் அவர்களின் இறையுணர்வு மிக மிக நெருக்கமானது.

ஆகவேதான் புனிதத்தன்மை குறைந்த நாம் புனிதர்களின் உதவியோடு இயேசுவை நாடுகின்றோம்.

நமது வேண்டுதலை விட புனிதர்களின் வேண்டுதலுக்கு சக்தி அதிகம், ஏனெனில் அவர்கள் இறைவனோடு மிக நெருக்கமானவர்கள்.

புனிதர்களின் முக்கியத்துவத்தை நூற்றுவர் தலைவனிடமிருந்து கற்றுக்கொள்வோம்.


4.நூற்றுவர் தலைவனின் இல்லத்திற்கு ஆண்டவர் சென்றுகொண்டிருந்தபோது 

நூற்றுவர் தலைவன் ஆண்டவரிடம் ஆள் அனுப்பி,

" என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாகட்டும்."

என்று கூறினான்

நூற்றுவர் தலைவனின்   வார்த்தைகள் அவனுடைய மிகுந்த தாழ்ச்சியையும், ஆழமான விசுவாசத்தையும் காட்டுகின்றன.

தான் ஒரு பாவி என்று ஏற்றுக் கொண்டதோடு, தன் இல்லம் ஒரு பரிசுத்தரின் வருகைக்கு  ஏற்றது அல்ல  என்று கூறியது அவனது தாழ்ச்சியை காண்பிக்கின்றது.

மேலும் இயேசுவின் நேரடி வருகை மட்டுமல்ல, அவரது வார்த்தையே நோயைக் குணமாக்க வல்லது என்று கூறியது அவனது ஆழமான விசுவாசத்தை காண்பிக்கின்றது.

அத்தகைய விசுவாசம் நமக்கு இருந்தால் 

ஆண்டவரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக உவரி, வேளாங்கண்ணி போன்ற தூரத்து திருத்தலங்களுக்கு பயணிப்பதற்குப் பதிலாக,

உள்ளூரில் உள்ள கோவிலுக்குச் சென்று ஆண்டவரை சந்திப்போம்.

வேளாங்கண்ணியில் உள்ள அதே ஆண்டவர் தான் நமது ஆலய திவ்ய நற்கருணை பேழையிலும் இருக்கிறார்.

உலகின் எந்தப் பகுதியிலிருந்து மரியன்னையை வேண்டினாலும் அவள் நமது  செபத்தைக் கேட்பாள். 

நமக்கு வேண்டியது ஆழமான விசுவாசம் மட்டுமே.

"நீர் எனது இல்லத்திற்குள் எழுந்தருள நான்  தகுதி அற்றவன். ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா குணமடையும்." 

என்று  திவ்ய நற்கருணை

 வாங்குமுன் நாம் சொல்லும்போதெல்லாம்   நூற்றுவர் தலைவனின் ஊழியன் குணமடைந்த புதுமை ஞாபகத்திற்கு வருகிறது.


5. இயேசு,"இஸ்ராயேல் மக்களிடையிலும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்று கூறியதோடு அந்த ஊழியனை  இருந்த இடத்தில் இருந்து கொண்டே சுகமாக்கினார்.

நூற்றுவர் தலைவனின் விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா என்பதை சுய பரிசோதனை செய்து பார்ப்போம்.

நாம் காணிக்கைகளாலும் நேர்ச்சைகளாலும் ஆண்டவரிடம் நமக்கு வேண்டியதைச் சாதித்துவிடலாம் என்று நம்புகிறோம்


"ஆண்டவரே நான் கேட்கும் வேலை கிடைத்துவிட்டால் முதல் மாத சம்பளத்தை முழுவதும் உண்டியலில் போட்டுவிடுகிறேன்.

ஆண் குழந்தை பிறந்து விட்டால் பதிமூன்று செவ்வாய்க்கிழமைகள் திருப்பலி  கண்டு ஒப்புக்கொடுக்கிறேன்."

விசுவாசம் இல்லாவிட்டால் இதுபோன்ற காணிக்கைகளாலும், நேர்ச்சைகளாலும் எதையும் சாதிக்க முடியாது.

ஆழமான விசுவாசம் இருந்தால் நடுக் காட்டில் இருந்து செய்யும் செபம் கூட கேட்கப்படும்.

விசுவாசம் இல்லாமல் எங்கிருந்து  கேட்டாலும் கிடைக்காது.

விசுவசிப்போம்.
 கேட்டது கிடைக்கும்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment