Tuesday, September 28, 2021

" வேறொருவனை நோக்கி, "என்னைப் பின்செல்" என, அவன், "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர விடைகொடும்" என்றான்" (லூக். 9:59)

" வேறொருவனை நோக்கி, "என்னைப் பின்செல்" என, அவன், "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர விடைகொடும்" என்றான்" (லூக். 9:59)

ஒருவன் அவனாகவே இயேசுவிடம் வந்து,

 "நான் உம்மைப் பின்பற்ற வருகிறேன்" என்று சொன்னான்.

 இயேசு தனது வாழ்வின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லி அவனது விருப்பத்தை மறுத்துவிட்டார்.

ஆனால் இயேசு,

வேறொருவனை நோக்கி, "என்னைப் பின்செல்"  என்றார்.

ஆனால் அவன் உடனே வராமல் இருப்பதற்கு குடும்பத்தில் தனது கடமையை சுட்டிக் காட்டி சாக்கு போக்கு சொல்கிறான்.

"ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர விடைகொடும்" என்றான்.

ஆனால் இயேசு,

"இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும். நீ போய் கடவுளுடைய அரசை அறிவி" என்றார்.

அவனது சாக்கு போக்கை இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசுவால் அழைக்கப்பட்டவனுக்கு அழைப்புதான் உயிர்.

அவனது குடும்பத்தில் மற்றவர்கள் அழைக்கப்படவில்லை.
ஆகவே அழைப்பு இல்லாதவர்கள்.

ஆகவே அடக்க வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அழைப்பு இல்லாதவர்கள் அழைப்பு இல்லாதவர்களை கவனித்துக் கொள்வார்கள்.

 அழைக்கப்பட்டவர்கள் இறைவனது பணியை மட்டும் முழுநேர பணியாகச் செய்ய வேண்டும்.


ஆகவேதான் ஆண்டவர் சொன்னார்,

"இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும். நீ போய் கடவுளுடைய அரசை அறிவி."

தேவ அழைத்தல் பெற்றவர்கள் குடும்பத்தில் உள்ள ஆன்மீகம் சாராத கடமைகளிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்படுகிறார்கள். 

அவர்களுக்கு இறையரசை அறிவிப்பது மட்டுமே முழுநேர வேலை.

தாங்கள் பிறந்த குடும்ப விவகாரங்களில் தலையிடுவது அல்ல.

அழைக்கப்பட்டவர்கள் 

ஆன்மீக விஷயங்களில் மற்றவர்களுக்கு  சேவை செய்வது போலவே தாங்கள் பிறந்த குடும்பத்திற்கும்  செய்வார்கள்.

ஆனால் ஆன்மீகம் சாராத பண வரவு செலவு, நிர்வாகம் போன்ற காரியங்களில் அழைக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் தலையிட மாட்டார்கள்.

தங்களது உடல் பொருள் ஆவி அனைத்தையும் இறைப் பணிக்காக கொடுத்தவர்களால்

அவர்கள் பிறந்த குடும்பத்திற்கு நிறைந்த இறை ஆசீர் இருக்கும்.

இயேசு அவர்களுக்கு சொல்வதெல்லாம்,

'நீ போய் கடவுளுடைய அரசை அறிவி" 

என்பதை மட்டும்தான்.

அவர்கள் இறையரசை பரப்பும் பணியில் முழு நேரமும் ஈடுபடும்போது 

அவர்களை பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும்  இறைவன் கவனித்துக்கொள்வார்.

அவர்களின் ஆன்மீகம் சாராத விஷயங்களில் தலையிடாதிருப்பதே அவர்களுக்கு பெரிய ஆசீர்வாதம்.

இன்னொருவன்,

 "ஆண்டவரே, உம்மைப் பின்செல்வேன்: ஆனால் முதலில் வீட்டில் சொல்லிவிட்டுவர விடைதாரும்" என்றான்.

62 இயேசுவோ அவனை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன்" என்றார்

இன்னொருவன் ஆண்டவரின்  அழைப்பை ஏற்றுக்கொண்டான்.

 ஆனால் வீட்டில் உள்ளவர்களின் அனுமதியை பெற்ற பின்பு வருவேன் என்கிறான்.

ஆனால் அப்படிப்பட்டவன் இறை அரசுக்கு தகுதி அற்றவன் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

அழைத்திருப்பவர் ஆண்டவர்.
உடனே கீழ்ப்படிய வேண்டியது அழைக்கப்பட்டவனின் கடமை.

வீட்டில் உள்ளவர்களின் அனுமதியை பெற்றபின் வருவேன் என்றால் அவர்களை ஆண்டவரை விட மேலானவர்களாக கருதுகிறான் என்பது பொருள்.

இது ஆண்டவரை அவமதிப்பது போலாகும்.

இன்று வாசித்த வசனங்களில் அழைக்கப்பட்ட இருவரும் தங்கள் வீட்டில் உள்ளவர்களை காரணம் காண்பித்து தங்களுடைய அழைப்பை நிறைவேற்றுவதைத் தாமதப் படுத்துகிறார்கள்.

முதலாமவன் இறந்த தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன் என்கிறான்.

 இரண்டாமவன் வீட்டில் சொல்லிவிட்டு வருகிறேன் என்கிறான்.

 இருவருமே அழைப்பை மறுக்க வில்லை,

 ஆனால் தாமதப் படுத்துகிறார்கள். அதற்கு அவரவர் குடும்பங்களையே காரணமாக காண்பிக்கிறார்கள்.

 இதிலிருந்து இயேசு ஏதோ ஒரு முக்கிய செய்தியை சொ.ல்ல விரும்புகிறார் போல் தோன்றுகிறது.

குடும்ப அமைப்பை படைத்தவர் இறைவன்.

தனது முழு நேர பணிக்கு வேண்டியவர்களை குடும்பங்களிலிருந்துதான் ஆண்டவர் அழைக்கிறார்.

அவர்கள் தங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வதற்கும், ஏற்ற பின் அதன்படி வாழ்வதற்கும்

 குடும்பங்கள் எந்த விதத்திலும் தடங்கலாக இருந்துவிடக்கூடாது.

பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும்போது அவர்களை இறைப்பணிக்கு ஏற்றவர்களாக வளர்க்க வேண்டும்.

இல்லறவாழ்க்கை வழியாகவும் துறவற வாழ்க்கை வழியாகவும் இறைப்பணி செய்யலாம்.

இரண்டுவித பணிகளுக்கும் தகுதி ஒன்றே, இறையரசை அறிவிப்பதில் உள்ள ஆர்வம்.

இந்த ஆர்வத்தை ஊட்டியே பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

துறவற வாழ்க்கை வழியே இறைப்பணி ஆற்ற அழைக்கப்பட்டால் பிள்ளைகள் அதை உடனே ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அழைக்கப்பட்டவர்களை உடனே அனுப்ப குடும்பத்தினருக்கு மனப்பக்குவம் இருக்க வேண்டும்.

தேவ அழைத்தலை ஏற்றுக்கொண்டவர்கள் அதன்பின் அவர்கள் பிறந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் அல்ல.

திருச்சபை என்னும் பொதுக் குடும்பத்தை சார்ந்தவர்கள். 

தேவ அழைத்தலை ஏற்றவர்கள் திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் உழைக்க வேண்டியவர்கள், தாங்கள் பிறந்த வீட்டிற்காக அல்ல.

அவர்களது பணி ஆன்மீகப் பணி மட்டுமே, பொருளாதார பணி அல்ல. அதாவது சம்பளத்திற்காக உழைக்கும் பணி அல்ல.

தாய்த் திருச்சபை அவர்களுக்கு அளிக்கும் பொருளாதாரம் ஆன்மீக பணிக்காக மட்டுமே பயன்படுத்த பட வேண்டும்.

அவர்கள் பிறந்த குடும்பத்தினர் அவர்களிடமிருந்து ஆன்மீக சேவையை மட்டுமே பெறலாம்.

 பொருளாதார உதவி எதையும் எதிர்பார்க்க கூடாது.

ஏனெனில் அவர்கள் உழைப்பது இறைவனுக்காக மட்டுமே.

ஆன்மாக்களை இறைவனுக்காக ஈட்டுவது மட்டுமே அவர்களுடைய பணி, பொருளை அல்ல.

தங்கள் பிள்ளைகளிடமிருந்து ஜெபம் மூலமாக ஆன்மிக உதவி எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம்.

குருக்களின் நலனுக்காக செபிக்க வேண்டியது குடும்பங்களின் கடமை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment