Tuesday, September 14, 2021

"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்"(அரு. 19:25)



"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்"
(அரு. 19:25)

இயேசுவின் சிலுவையருகில் நின்றுகொண்டிருந்த மூவர்:

இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியாள்.

அன்னை மரியாளின் உடன் பிறந்த சகோதரியும், யாகப்பன்,  யூதா, சீமோன் (அப்போஸ்தலர்கள்) சூசை ஆகியோருடைய தாயுமான மரியாள்.

பாவியாக இருந்து மனம் திரும்பிய 
மதலேன் மரியாள்.

இயேசு நிறுவிய முழு திருச்சபையுமே சிலுவை அடியில் நின்று கொண்டிருந்தது போல் தோன்றுகிறது.

அன்னை மரியாள் திருச்சபையின் தாய் என்ற முறையில்.

அன்னை மரியாளின் சகோதரி மூன்று அப்போஸ்தலர்களின் தாயாகையால் திருச்சபையின்  ஆயர்கள் மற்றும் குருக்களின் சார்பில்.

மதலேன் மரியாள் பாவிகளாகிய நமது சார்பில்.

அன்னை மரியாள் ஆண்டவர் அவள் வயிற்றில் உற்பத்தியான நாளிலிருந்து அவரது சிலுவைப் பாதையில் கூடவே பயணித்தாள் என்பது நமக்குத் தெரியும்.

இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் திருச்சபையும் இயேசுவின் பாடுகளில் பங்கு பெற வேண்டும் என்பதற்கு அடையாளமாகவே அன்னை மரியாளின் சகோதரியும், மதலேன் மரியாளும் 

அன்னை மரியாளுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

இறை மகனுக்கு தேவ சுபாவத்தில் வருத்தப்படவோ, கஷ்டப்படவோ, துன்பப்படவோ முடியாது.

ஆனால் மனிதர் செய்த பாவங்களுக்குப்  பரிகாரமாக இவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே 

அதற்கான மனித பலவீனங்களை  மனமுவந்து ஏற்றுக்கொண்டு  மனிதனாக பிறந்தார். 

கெத்சமனி  தோட்டத்தில் இயேசு தான் படவிருக்கும் பாடுகளை நினைத்தவுடன் இரத்த வியர்வை வியர்த்ததலிருந்தும், 

அப்பொழுது அவர் தந்தையை நோக்கி செய்த செபத்திலிருந்தும் இதை அறிந்து கொள்கிறோம்.

இயேசு பாடுகளின்போதும் சிலுவை மரணத்தின்போதும் அனுபவித்த மன வேதனையை போலவே 

அன்னை மரியாளும் இயேசுவை கருத்தரித்த நாளிலிருந்து வாழ்நாள் முழுவதும் வியாகுலங்களை  அனுபவித்ததால்தான் அவளை வியாகுலமாதா என்கிறோம்.

இயேசுவைக் கருத்தரித்த பின் சூசையப்பரின் சந்தேகத்தால் ஏற்பட்ட வியாகுலம்,

அவருடன் நாசரேத்திலிருந்து பெத்லகேம் நகருக்கு பயணித்தபோது  பிரயாணக் களைப்பினால் ஏற்பட்ட வியாகுலம்,

'
பேறுகாலத்திற்கு இடம் கிடைக்காததால் ஏற்பட்ட வியாகுலம்,

உலகையே படைத்த இறைவனை மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் ஏற்பட்ட வியாகுலம்,

"உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" என்று சிமியோன் சொன்னபோது ஏற்பட்ட வியாகுலம்,

இயேசுவை ஏரோதுவிடமிருந்து காப்பாற்றுவதற்காக எகிப்தில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தபோது ஏற்பட்ட வியாகுலம், 

பன்னிரண்டு வயதில் இயேசு காணாமல் போன போது ஏற்பட்ட வியாகுலம்,

சூசையப்பரின் மரணத்தின் போது ஏற்பட்ட வியாகுலம்,

இயேசுவை சொந்த ஊர் மக்களே ஏற்றுக் கொள்ளாத போது ஏற்பட்ட வியாகுலம்,

இயேசுவின் சிலுவை பாதையின்போது ஒவ்வொரு வினாடியும் ஏற்பட்ட வியாகுலம்,

பெற்று வளர்த்த மகன் சிலுவையில் அறையப்பட்டு,

 அதில் தொங்கி மரணமடைந்ததை அருகிலிருந்து பார்த்தபோது ஏற்பட்ட அளவுகடந்த வியாகுலம்,

இறந்த தன் மகனை தன் மடியில் வைத்த போது ஏற்பட்ட வியாகுலம்,

இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்த போது ஏற்பட்ட வியாகுலம்,

  எல்லா  வியாகுலங்களும் சேர்ந்து அன்னை மரியாளை வியாகுல மாதாவாகவே ஆக்கிவிட்டன.


யாருக்காக நம் அன்னை இத்தனை வியாகுலங்களை அனுபவித்தாள்? 

தன்  மகனுக்காக.

நமது மீட்பருக்காக. அதாவது நமது மீட்புக்காக.

இயேசு எவ்வாறு 
வாழ்நாள் முழுவதும் நமது மீட்புக்காக துன்பங்களையும் பாடுகளையும் இறுதியில் மரணத்தையும் ஏற்றுக் கொண்டாரோ

 அதேபோல அன்னை மரியாளும் நமது மீட்புக்காக தனது வாழ்நாள் முழுவதும் வியாகுலங்களை  ஏற்றுக் கொண்டாள்.

நமது மீட்புக்காக இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.


அன்னை மரியாள் நமது மீட்புக்காக தனது வாழ்நாள் முழுவதும் வியாகுலங்களை  ஏற்றுக் கொண்டாள்.

நாம் நமது மீட்புக்காக நமது வாழ்நாளில் என்ன செய்கிறோம்?

இயேசுவைப்போல் சிலுவையை ஏற்றுக் கொள்கிறோமா?

அன்னை மரியாளைப் போல் வியாகுலங்கள் ஏற்றுக் கொள்கிறோமா?

அல்லது சிலுவைகள் வரும்போது அவற்றை நீக்கும்படி  இயேசுவிடமே வேண்டுகிறோமா?

அல்லது மனக்கவலைகள் வரும்போது அவற்றிலிருந்து விடுவிக்கும்படி வியாகுல மாதாவையே கேட்கிறோமா?

சிந்தித்துப் பார்ப்போம்.

பிரசவ வலியின்றி பிள்ளை பெற்ற முடியாது.

சிலுவையும், வியாகுலமும் இன்றி விண்ணகம் அடைய முடியாது.

நமக்கு சிலுவையும், வியாகுலமும் வரும்போது அவற்றிலிருந்து தப்பிக்க முயல்வதற்குப் பதிலாக 

அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுப்போம்.

 அதற்கான மனப்பக்குவத்தைத் தரும்படி  வியாகுல மாதாவை நோக்கி வேண்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment