"அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு யாவரையும் குணமாக்கியதால், அங்குத் திரண்டிருந்த யாவரும் அவரைத் தொடுவதற்கு முயன்றனர்."
(லூக்.6:19)
இயேசு இரவு முழுவதும் மலை மேல் ஜெபம் செய்துவிட்டு பொழுது புலர்ந்ததும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார்.
அதன்பின் மலையிலிருந்து இறங்கி வந்து சமதளமான ஓரிடத்திலே நின்றார்.
யூதேயா முழுவதிலிருந்தும் யெருசலேமிலிருந்துமான யூதர்கள் மட்டுமல்லாமல்,
, யூதர் அல்லாதோர் வாழும் தீர், சீதோன் கடற்கரையிலிருந்தும்
மாபெரும் திரளாக மக்கள் வந்திருந்தனர்.
அவர் சொல்லுவதைக் கேட்கவும், தங்கள் நோய்கள் நீங்கிக் குணமாகவும், அவர்கள் வந்திருந்தனர்.
அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு யாவரையும் குணமாக்கியதால்,
அங்குத் திரண்டிருந்த யாவரும் அவரைத் தொடுவதற்கு முயன்றனர்.
இயேசுவைத் தேடி திரளான கூட்டத்தினர் எதற்காக வந்தார்கள்?
1.இயேசு போதித்த நற்செய்தியை கேட்க.
2தங்கள் நோய்கள் நீங்கிக் குணமாக,
3.அசுத்த ஆவிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை பெற.
மூன்றுமே ஆன்மீக நோக்கங்கள்தான்.
இயேசு அளித்த நற்செய்தி அவர்களது ஆன்மீக வாழ்வுக்கு வழி காட்டியது.
அவர்கள் நோய்களிலிருந்து குணமாகும்போது பாவ மன்னிப்பையும், விசுவாசத்தையும் பெற்றார்கள்.
அசுத்த ஆவிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை பெற்றபின் பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களின்படி அவர்களால் வாழ முடிந்தது.
நாம் வாசித்த நற்செய்தி வாசகங்களைத் தியானித்து
அவை காட்டும் பாதையில் நமது ஆன்மீக பயணத்தை தொடர வேண்டும்.
இன்றும் நாமும் இயேசுவைத் தேடித்தான் கோவிலுக்கு வருகிறோம்.
திருப்பலி நிறைவேற்றும் குருவின் வாய் வழியே இயேசுவின் நற்செய்தியை கேட்கிறோம்.
இயேசுவை நமது ஆன்மீக உணவாக நமது நாவில் பெறும்போது அவரை தொடுகிறோம்.
இயேசுவைத் தொடும்போது
அவரிடமிருந்து புறப்படும் வல்லமை வெளிப்பட்டு யாவரையும் குணமாக்கியது.
அவர்கள் விசுவாசத்தோடு தொட்டார்கள்.
நாமும் நாவினால் திவ்ய நற்கருணை வாங்கும்போது அவரைக் தொடுகிறோம்.
அவரிடமிருந்து வல்லமை புறப்படுகிறதை உணர்கிறோமா?
இயேசுவின் வல்லமையால் நமது ஆன்மீக வியாதிகள் அத்தனையும் குணமடையும்.
இயேசுவின் வல்லமையை உணராவிட்டாலும் நமது ஆன்மீக வியாதிகள் குணமடையாவிட்டாலும்
நம்மிடம் போதுமான விசுவாசம் இல்லை என்றுதான் அர்த்தம்.
நாம் நமது ஆன்மீக நோய்களை குணமாக்குவதில் ஆர்வமாக இருக்கிறோமா?
அல்லது
நமது உடல் நோய்களை குணமாக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறோமா?
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கொரோனா காலத்தில் நம்மை
கொரோனாவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம்!
கொரோனா தொற்றிக்கொள்ளும் என்று பயந்து தானே நற்கருணையை நேரடியாக நாவில் வாங்காமல் இடது கையில் வாங்குகிறோம்!
பெரியவர்களிடமிருந்து நமது நெற்றியில் சிலுவை வாங்கவே பயப்படுகிறோமே!
இக்காலத்தில் நாம் ஆண்டவரிடம் போக நேர்ந்து,
அவர் நம்மைப் பார்த்து,
"நான் கொரோனா நோயினால் சுகமில்லாதிருந்தேன், என்னை பார்க்க வந்தாயா?"
என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்?
-நற்கருணை நாதர் நமது நாவில் இருக்கும்போது
நாம் நமது உடல் நோய்களிலிருந்து குணம் பெற எத்தனை வேண்டுதல்கள் செய்கின்றோம்! எத்தனை நேர்ச்சைகள் நேர்கிறோம்!
ஆனால் நமது ஆன்மாவை பிடித்துக் கொண்டிருக்கும் தலையான பாவங்களான
1. ஆங்காரம்
2. கோபம்
3. மோகம்
4. லோபித்தனம் ( கஞ்சத்தனம்)
5. போசனப்பிரியம்
6. காய்மாகாரம் (வஞ்சம் )
7. சோம்பல்
ஆகியவற்றிலிருந்து விடுதலை
பெற உதவ இயேசுவிடம் வேண்டுகிறோமா?
1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. உதாரம் (தாராளம்)
5. மட்டசனம் ( குறைவாக சாப்பிடுதல்)
6. பிறர்சினேகம்
7. சுறுசுறுப்பு.
ஆகிய புண்ணியங்களை நமது ஆன்மாவில் பதிக்க வேண்டுகிறோமா?
ஆண்டவரை நாம் விசுவாசத்தோடு தொட்டால் தலையான பாவங்கள் அனைத்தும் பறந்துவிடும்,
புண்ணியங்கள் அனைத்தும் தளிர்விட்டு வளர ஆரம்பிக்கும்.
நமக்கு விருப்பம் இருந்தால் நற்கருணை நாதர் நம்மை பாவ நோய்களிலிருந்து விடுவித்து,
புண்ணியங்களில் வளரச் செய்வார்.
நாம் எத்தனை முறை நற்கருணை நாதரை நாவில் வாங்கியிருப்போம்!
ஏதாவது ஆன்மீக பயன் அடைந்திருக்கிறோமா?
சிந்தித்துப் பார்ப்போம்.
உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதற்காக ஜெபிப்பதில் தவறில்லை.
ஆனால் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்,
ஜெபம் சொல்லும்போது நமது ஆன்மா இறை உறவில் இருக்க வேண்டும்.
அதாவது ஆன்மா பாவநிலையிலிருந்து விடுதலை பெற்றிருக்கவேண்டும்.
பாவ நிலையோடு செபிப்பது சேற்றில் முக்கிய கையுடன் சாப்பிடுவதற்குச் சமம்.
கையைக் கழுவிவிட்டு சாப்பிடுவது போல பாவமன்னிப்பு பெற்றுவிட்டு செபிக்க வேண்டும்.
இறைவன் நமது உடல் சுகத்தை விட ஆன்மாவின் சுகத்தையே அதிகம் விரும்புகிறார்.
பைபிள் வாசிப்பின் முதல் நோக்கம்
ஆன்ம சுத்தம்தான்.
யாராவது உணவை வாங்கி மண்ணில் போடுவார்களா?
பரிசுத்தமான பைபிள் வசனங்களை பாவம் நிறைந்த
இருதயத்தில் போடுவது
உணவை வாங்கி மண்ணில் போடுவதற்குச் சமம்.
எத்தகைய ஆன்மீக முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்றாலும் முதல் முதலில் தேவை நமது ஆன்மா பாவம் இன்றி இருக்க வேண்டும்.
சாவான பாவம் இல்லாதிருந்தால்தான் நமது ஆன்மா இறைவனோடு உறவுடன் இருக்கும்.
இறையுறவுடன் செய்யும் ஆன்மீக முயற்சிகள் மட்டுமே வெற்றி தரும்.
ஆகவே எப்போதும் நமது இறையுறவு கெடாமல் பார்த்துக் கொள்வோம்.
இயேசுவிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு நம்மைக் குணமாக்க வேண்டுமா,
ஆன்மீக உறவுடன் எப்போதும் அவரோடு தொடர்பில் இருப்போம்.
Let us keep in touch with Him.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment