Sunday, September 19, 2021

 "இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான்."(மாற்கு 9:37)

 "இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான்."
(மாற்கு 9:37)

ஒரு முறை, இயேசு தான் பாடுகள் படப்போவது பற்றியும், மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழப்போவது பற்றியும் தனது  அப்போஸ்தலர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் சொன்னது எதுவும் அவர்களுக்குப்  புரியவில்லை. 

அவர்கள் அதற்கு விளக்கம் கேட்காமல், அதோடு சம்மந்தமில்லாத விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

"பெரியவன் யார்?" என்பதைப்பற்றி வழியில் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களிடம்,

 "ஒருவன் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும், அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்" என்றார்.

கடவுள் எந்த நோக்கத்தோடு மனிதனைப் படைத்திருக்கிறாரோ அதை நிறைவேற்றுபவனே உண்மையில் பெரியவன்.

கடவுள் மனிதனைப் படைத்ததன் நோக்கம்:

 கடவுளை அறிய   வேண்டும்.

 அவரை நேசிக்க   வேண்டும்.

  அவருக்கு சேவை செய்ய    வேண்டும்.

  இவற்றைச் செய்வதன் மூலம் நித்திய பேரின்பத்தை அடைய வேண்டும்.

பிறரன்பின் அடிப்படையில் தன் அயலானுக்கு சேவை செய்பவன் இறைவனுக்கு சேவை செய்கிறான்.

ஆகவே பிறருக்குப் பணி புரிபவனே இறைவன் முன் பெரியவன்.

அவனே இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறான்.

தனது சீடர்களுக்கு முன்மாதிரிகை காண்பிக்கவே இயேசு கடைசி இரவு உணவன்று  சீடர்களின்  பாதங்களைக் கழுவினார்.

பணிபுரிவது இறைவன் முன் மகத்தான செயல்.

இயேசு இதை வாயினால் சொல்லி விட்டு போக வில்லை. வாழ்ந்தே காண்பித்தார்.

தனது வாழ்நாளில் 30 ஆண்டுகள் தனது பெற்றோருக்கு பணிந்திருந்தார்.

கடவுளாகிய இயேசு அவரால் படைக்கப்பட்ட  மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.

நற்செய்தி அறிவித்த மூன்று ஆண்டுகளும் தன்னால் படைக்கப்பட்ட மக்களுக்கே பணிபுரிந்தார்.

அவர்களுக்கு உதவிகள் செய்தார்.

இயேசுவுக்கு பெரியவர்களைவிட குழந்தைகளை மிகவும் பிடிக்கும்.

குழந்தைகள் யாரையும் அதிகாரம் செய்ய மாட்டார்கள்.

குழந்தைகளால் சுயேச்சையாக வாழ முடியாது. 

அவர்கள் மற்றவர்களை சார்ந்து வாழ வேண்டியிருப்பதால் மற்றவர்களுக்கு பணிந்திருப்பார்கள்.

ஆன்மீக வாழ்வில் இறைவனுக்கு ஏற்றவர்கள் 100% இறைவனையே சார்ந்து வாழ்பவர்கள்தான்,

மிகச்சிறிய காரியத்திற்கும் இறைவனை உதவி கேட்பவர்கள் இறைவனுக்கு பிடித்தமானவர்கள்.

இறைவனை சார்ந்தே வாழ வேண்டியி
ருப்பதால் அவர்கள் இறைவனுக்கு நெருக்கமாக  வாழ்வார்கள்.

ஆகவேதான் மற்றவர்களை சார்ந்தே வாழக்கூடிய குழந்தைகளை அவருக்கு பிடிக்கும்.

அது மட்டுமல்ல அவர்களுக்கு பாவம் செய்யத் தெரியாது.

எப்படி ஒரு குழந்தை தனது தாயை பிடித்துக்கொண்டே இருப்பது தாய்க்கு பிடிக்குமோ 

அதே போல நாமும் இறைவனை பற்றி கொண்டே இருப்பது அவருக்குப் பிடிக்கும்.

ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் இறைவனை நமது துணைக்கு அழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு சிறிய வேலையையும் மூவொரு தேவனின் பெயரால் நாம் ஆரம்பிப்பதே அவரின் உதவியைப் பெறுவதற்காகத்தான்.

பிறரைச் சார்ந்தே வாழும் குழந்தையை ஏற்றுக் கொள்பவன் அதற்கு உதவி செய்யும் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறான்.

பிறருக்கு உதவி செய்யும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்பவனை இயேசுவுக்கு மிகவும் பிடிக்கும்.

"குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான்."

விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்,

''பிறரை சார்ந்தே வாழும் ஒரு சிறு குழந்தைக்கு முழு உதவியும் செய்யும் பொறுப்பை என் பெயரால் ஏற்றுக் கொள்பவன் எவனும்

 தனக்கு முழு உதவியும் செய்யும் பொறுப்பாளராக என்னை ஏற்றுக் கொள்கிறான்."

அதாவது,

"ஒரு சிறு குழந்தைக்கு எல்லா உதவியும் செய்பவர்களுக்கு

நானும் எல்லா உதவியும் செய்வேன்."


 "என்னை ஏற்றுக்கொள்ளும் எவனும் என்னையன்று, என்னை
அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான்"

அதாவது,

"மகனை ஏற்றுக் கொள்பவன் தந்தையையும் ஏற்றுக் கொள்கிறான்."

இதில் ஒரு முக்கியமான இறையியல் உண்மை அடிப்படையாக அமைந்திருக்கிறது.

மகனும், தந்தையும் ஒரே கடவுள் தான்.

ஆகவேதான் மகனை ஏற்றுக் கொள்பவன்,  தந்தையையும் ஏற்றுக்கொள்கிறான்.

இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்:

பிறருக்கு பணி செய்து வாழ்பவன்தான் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.


ஒரு குழந்தை தன் பெற்றோரை முழுக்க முழுக்க சார்ந்து வாழ்வது போல நாமும் நம்மைப் படைத்த இறைவனையே முழுக்க முழுக்க சார்ந்து வாழ வேண்டும்.

ஒரு குழந்தையை நாம் ஏற்றுக்கொண்டு கவனிப்பது போல நம்மை சார்ந்தவர்களையும் நாம் கவனித்துக் கொண்டால்

இயேசுவை சார்ந்து வாழும் நம்மையும் அவர் நன்கு கவனித்துக் கொள்வார்.

ஆன்மீக வாழ்வு மற்றவர்களுக்கு பணிபுரிவதில்தான் அடங்கியிருக்கிறது.
 
பணிபுரிந்து வாழ்வோம்.
 ஆன்மீகத்தில் வளர்வோம்.

லூர்து செல்வம்


,

No comments:

Post a Comment